24/09/2025                                                                            
                                    
                                    
                                                                        
                                        தன் பொக்கிஷத்தை விற்ற துறவி
-------------------------------------------------------------
(The Monk Who sold his Ferrari by Robin Sharma)
எப்பொழுதும் ஒரு புத்தகம் படித்தால் அதில் எனக்கு பிடித்த வரிகளை Highlight செய்வது வழக்கம். ஆனால் இந்த புத்தகம் படித்து முடித்த பிறகு தான் பார்த்தேன் புத்தகத்தில் 70% Highlight செய்துள்ளேன் என்று......
ஒரு புத்தகம் என்பது அடுத்தவர்களுடைய வாழ்க்கையையோ அல்லது கற்பனைக் கதையைத்தான் சார்ந்திருக்கும். ஆனால், முழுக்க முழுக்க நமது வாழ்க்கையை முற்றிலும் மாற்றக்கூடிய நம் வாழ்க்கை மீதான அக்கறையை சார்ந்தது தான் இந்த " #தனது  #பொக்கிஷத்தை  #விற்ற  #துறவி" புத்தகம்.
✒️இந்த புத்தகத்தின் சிறப்பம்சமே, இதை "படிப்பது" போல அல்லாமல் ஒரு ஞானியும், சீடனும் நம் அருகில் அமர்ந்து உரையாடுவது போலவும், நாம் அதை கேட்பது போலவும் ஒரு பிம்பத்தை நமக்குள் ஏற்படுத்தியது தான்.
"ஜூலியன் மாண்டில்" மற்றும் "ஜான்" இந்த இருவர் தான் அந்த ஞானி, சீடன் முறையே..
ஜூலியன் மாண்டில் 50 வயதை கடந்த  நாட்டிலேயே மிக பிரபலமான, பெயரும், புகழும் கொண்ட திறமையான ஒரு வழக்கறிஞர். கூடவே மிகப் பெரிய செல்வந்தர், 18 மணி நேரம் கூட உழைக்கும் கடின உழைப்பாளி.  தனி விமானம், தனி தீவு , விலை உயர்ந்த ஃபெர்ராரி ரக கார்கள், கோடி கோடிகளாய் பணம் இவற்றுக்கெல்லாம் சொந்தக்காரர். பரம்பரை பணக்காரர்.
"ஜான்"  ஜூலியன் மாண்டிலைப் போல மிகப் பெரிய ஆளாக வர வேண்டும் என்ற அவாவில் உள்ள நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு இளம் வழக்கறிஞர். மாண்டிலின் ஜுனியர்.
வெற்றி, வெற்றி என வெற்றிகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் அவரின் வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. கடிவாளமில்லாத வாழ்க்கைமுறையில் சிக்கித்த விக்கும் ஜூலியனுக்கு ஒருநாள் நீதிமன்றத்தில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு விழுந்துவிடுகிறார். 
அதுவரை, பணிவாழ்க்கையில் வெற்றிகளை மட்டுமே சுவைத்துக்கொண்டிருந்த அவர், ஆரோக்கியத்தில் தோல்வியடைந்துவிட்டதை முதன்முறையாக உணர்கிறார்.
 53 வயதிலேயே 70 வயது தோற்றத்தைப் பெற்றுவிடுகிறார் அவர். மருத்துவமனையில் சேர்க்கப்படும் அவர், நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் என அனைவரையும் சந்திக்க மறுத்துவிடுகிறார். அதற்குப் பிறகு, சில நாட்களில் தன் பணிவாழ்க்கையை விட்டு விலகி, தன் சொத்துகள் அனைத்தையும் விற்றுவிட்டு யாருக்கும் சொல்லாமல் எங்கோ சென்றுவிடுகிறார் அவர்.  ஜூலியனின் இந்தக் கதையை அவருடன் பணியாற்றும் சக வழக்கறிஞரான ஜான் விளக்குகிறார். 
மூன்று ஆண்டுகள் ஓடிவிட்ட பிறகும், ஜூலியனிடமிருந்து யாருக்கும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. 
இப்படியிருக்க, ஒரு நாள் ஜூலியன் யாரிடமும் சொல்லாமல் திடீரென காணாமல் போகிறார். சில மாதங்கள் கழித்து , ஒரு மென்மையான மாலை வேளையில், ஜானின் இல்லத்திற்கு ஜூலியன் வருகின்றார்.
ஜானுக்கு மிகப்பெரிய ஆச்சரியம். ஏனென்றால் தன் முன்னால் நிற்பது அந்த வயதான, நரைமுடியுடைய, விலையுயர்ந்த கோட் சூட் அணிந்த பழைய ஜூலியன் இல்லை. அதற்கு மாறாக சாதாரண உடை அணிந்த தோற்றத்தில்  30 வயதே அடைந்திருக்கும் ஒரு புதிய இளம் ஞானமடைந்த ஜூலியனை ஜான் அங்கு காண்கிறார். 
"இமயமலையின் மத்தியில் அமைத்திருக்கும், 100 வயதை சாதாரணமாக கடந்த ஞானிகள் பலரும் வாழ்ந்து வரும் "சிவானா" என்ற கிராமத்தில் சில மாதங்கள் தங்கி கழித்து வந்ததாக தனது கதையை சொல்லத் துவங்குகிறார்.
👉  தான் ஏன் சிவானாவிற்கு சென்றார்?
👉 சிவானா ஞானிகளின் ஆன்மீக முறைகள், அவர்களின் அன்றாட பழக்கங்கள் என்ன?
இப்படி சிவானாவில் தான் கற்றுக் கொண்ட மேன்மையான பண்புகளை  பற்றி ஒரு இரவு முழுவதும் தனது உதவியாளர் ஜானிடம் பகிர்ந்துகொள்ளும் கற்பனைக் கதை தான் இது. நிச்சயம் ஒரு நாள் இரவின் கதை நம் வாழ்க்கைக்கு அவர் போதிக்கும் பாடங்களே. மேலும் இந்த புத்தகம் முற்றிலும் மாறுபட்ட நம் வாழ்க்கைக்கு தோள் கொடுக்கும் நண்பனாக இந்த புத்தகம் நமக்கு இருக்கும்.
தோல்விகளை எப்படி எதிர்கொள்வது எனத் தொடங்கி சுயமேம்பாடு, சுயதிறன் வளர்த்தல், குடும்பம் மற்றும் மகிழ்ச்சி னு பேசாத விசயமே இல்ல இந்த புத்தகம். அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் நாம் இந்த புத்தகத்தை படித்தால் போதும். நிச்சயம் வாழ்வின் மீதான புரிதலும், நம் மீதான மதிப்பும் காதலும் கூடும்.
"கவலையானது மனதின் பெருமளவு சக்தியை விரயம் செய்து விடுகிறது. காலப்போக்கி்ல் அது ஆன்மாவையே காயப்படு்த்தி விடும். வாழ்க்கை என்பது முற்றிலும் ஒருவரது தேர்வுகளைப் பொறுத்தது. ஒருவர் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து அவர்களது தேர்வுகளைப் பொறுத்து தான் தலைவிதி படிப்படியாக உருவாகிறது. உனக்குள்ளே முதலீடு செய்வது தான் நீ செய்யப்போகும் மிக முக்கிய முதலீடு ஆகும். உனது புற உலகம் தான் அக உலகத்தின் நிலையைப் பிரதிபலிக்கிறது"
"பலவீனமான மனங்கள் பலவீனமாக செயல்களுக்கு காரணமாகின்றன. ஒரு கனவு அல்லது ஆசை உன்னிடம் இருக்கிறது என்றால், அதற்கேற்ற திறமையும் உன்னிடம் இருக்கிறது என்று தான் அதற்குப் பொருள் என்று சிவானாவின் முனிவர்கள் தனக்கு போதித்ததாக ஜீலியன் ஜானிடம் கூறிக்கொண்டிருப்பார். இவ்வாறாக அந்த முனிவர்கள் போதித்த கற்பித்த 7 அடிப்படை கொள்கைகள் மற்றும் பத்து சடங்குகளை பின்பற்றினால் நிச்சயம் மாற்றம் வரும் என்று நினைக்கிறேன்"
இப்படி புத்தகம் முழுக்க முழுக்க நம் வாழ்க்கைக்கு தேவையான சில விடைகளும், தெளிவுகளும் இருக்கிறது இந்த புத்தகத்தல்... ஆனால், சில இடங்களில் ஒரு முறைக்கு இரு முறை படித்தால் தான் புரியும் என்றளவிற்கு உள்ளது. 
கடைசியாக அந்த இரவு முடிந்து காலைபொழுது வருகையில், ஜீலியன் தனது அனுபவங்களை "மரங்களைப் பார்த்துக் கொண்டு காட்டைக் காணத் தவறிவிடாதே, மகிழ்ச்சி என்பது ஒரு பயணம், சென்றடைய வேண்டிய இடம் அல்ல. இன்றைக்காக வாழ். இதேப்போன்றதொரு மற்றொரு நாள் திரும்ப வரப்போவதில்லை" என்று கூறி ஜீலியன் விடைபெறுகிறார். 
ஏழு நற்பண்புகள்
-------------------------------
                       தன் சொத்துகள் அனைத்தையும் விற்றுவிட்டு, வாழ்க்கையில் நிம்மதியைத் தேடி இந்தியாவுக்குப் பயணம் சென்றதாகச் சொல்கிறார் ஜூலியன். அங்கே, இமயமலையில் வாழும் துறவிகளிடம் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக, தன்னிறைவுடன் வாழ்வதற்கான ரகசியங்களைக் கற்றுகொண்டதாகச் சொல்கிறார் அவர். 
தான் கற்றுவந்த வாழ்வின் ரகசியங்களை ஜானுடன் பகிர்ந்துகொள்கிறார் அவர். அவற்றை மற்றவர்களுக்கும் கற்றுகொடுக்கும்படி ஜானிடம் கேட்டுக் கொள்கிறார் அவர்.
உள்ளார்ந்த அமைதி, மகிழ்ச்சி, ஆன்மிக நிறைவுடன் வாழ்வதற்கு ஏழு நற்பண்புகள் தேவை என்று விளக்குகிறார் ஜூலியன். 
(1) மனம், 
(2) நோக்கம், 
(3) நிலையான மேம்பாடு, 
(4) ஒழுக்கம், 
(5) நேரம், 
(6) சேவை, 
(7) இக்கணத்தை ஏற்றுக்கொள்வது 
                 ஆகிய ஏழு நற்பண்புகளை இந்தப் புத்தகத்தில் முன்வைக்கிறார் அவர்...... 
இந்தப் பண்புகளை வளர்த்துகொள்ளும்போது தன்னிறைவான வாழ்க்கை சாத்தியப்படும் என்று அவர் விளக்குகிறார்.
அதில் வரும் சில தத்துவங்கள்:
--------------------------------------------------------
(1) நல்லதை செய்ய வேண்டும் என்றால் முதலில் தீயது எது என தெரிந்து கொள்ள வேண்டும்.
(2)  இறந்த காலத்தின் கைதியாய் இருக்காதே வரும் காலத்தின் சிற்பியாய் இரு.
(3) வாழ்க்கை என்பதே ஒரு அனுபவம் தான்.
(4) இது தான் உலகம் என சுருக்கிக் கொள்ளாதே 
(5) நீ செய்யும் செயலை பார்த்து கேலி செய்யலாம் அதை பொருட்படுத்தாதே.... உன்னளவில் மேம்படுத்த உதவியதா என்பதே முக்கியம்.
(6) உன் ஓட்டத்தை நீ ஓடு யார் பின்னாலும் ஓடாதே....
(7) புத்தகம் உனக்கு எதுவும் கற்றுத் தராது ஆனால் நீ உலகத்தை பார்க்கும் பார்வையை மாற்றும்.
(8) பொது அறிவு அனைவருக்கும் பொதுவாய் இருக்காது.
(9) நாளையை உன் முன்னேற்றம் இன்றைய தவறை திருத்திக் கொள்வதில் தொடங்குகிறது.
(10) இங்கு ஒரு செயல் இரு நிலையில் நடக்கிறது ஒன்று உன் மனதில் இன்னொன்று நிஜத்தில்.
மேலே குறிப்பிட்டவை சில துளிகளே......
தன்னை அறிதலுக்கான உத்திகள்:-
                                 மனதை ஒருநிலைப் படுத்துவதற்கான பல்வேறு எளிமையான உத்திகளை இந்தப் புத்தகம் விளக்குகிறது. 
ரோஜாவின் இதயத்தைக் கவனிப்பது, 
ஓடும் நதியைக் கவனிப்பது, 
கனவுப் புத்தகம் எழுதுவது, 
எந்தப் பயிற்சியையும் 21 நாட்கள் செய்து அதைப் பழக்கமாக மாற்றிக்கொள்வது 
           என்பது போன்ற பல்வேறு உத்திகளை யதார்த்தமான முறையில் இந்தப் புத்தகம் விளக்குகிறது.
தன்னை அறிந்துகொள்வதுதான் அமைதியான வாழ்க்கைக்கான முதல் வழி என்பதை இந்தப் புத்தகம் முன்வைக்கிறது.
 "சாதனைகள் புரிவதற்காக மகிழ்ச்சியைத் தொலைக்கத் தேவையில்லை. இந்தக் கணத்தில் வாழ்வதிலேயே வாழ்வின் ரகசியம் அடங்கியிருக்கிறது" என்ற கருத்தை இந்தப் புத்தகம் உதாரணங்களுடன் பதிவுசெய்கிறது.
இந்த நாவலில் எனக்கு பிடித்த சில வரிகளை இங்கு குறிப்பிடுகிறேன்.....
உனக்குள்ளே பார்க்கும் பொழுது மட்டுமே உனது உயர் நோக்கமும், உள் பார்வையும் தெளிவாகும். வெளியிலே பார்க்கிறவன், கனவு காண்கிறான். உள்ளே பார்க்கிறவனோ, விழிப்படைகிறான்.ஒரு சராசரி மனிதன், ஒரு சராசரி நாளில் தனது மனதில் சுமார் அறுபதாயிரம் எண்ணங்களை ஓட விடுகிறான் என்று துறவிகள் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இதில் என்னை உண்மையில் வியப்படைய வைத்தது என்னவென்றால், அந்த எண்ணங்களில் தொண்ணூற்றி ஐந்து சதவிகிதம், முந்தைய தினம் எண்னமிட்ட அதே எண்ணங்கள் தான்.
உனது மிகப் பெரிய எதிரியின் முகமே, எனது மிகச்சிறந்த நண்பனின் முகமாக இருக்கக் கூடும். ஒருவருக்கு பேரிடராகத் தென்படும் ஒரு சம்பவம், வேறு ஒருவருக்கு எண்ணற்ற வாய்ப்புகளின் விதைகளை வெளிக்காட்டக்கூடும். நீ எண்ணுகிற எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதன் வாயிலாகவும். உனது வாழ்வில் நிகழும் சம்பவங்களைப் பற்றி நீ பதில் செயல்படும் விதத்தினாலும், உனது தலைவிதியை நீ கட்டுப்படுத்த தொடங்குகிறாய்.
வாழ்க்கையில் தவறுகள் என்று எதுவுமே இல்லை, பாடங்கள் மட்டுமே உள்ளன. எதிர்மறை அனுபவம் என்று ஒன்றுமே கிடையாது. வளரவும், கற்றுக் கொள்ளவும், சுய கட்டுப்பாடு, தன்னறிவு ஆகியவற்றுக்கான பாதையில் முன்னேறிச் செல்லவுமான வாய்ப்புகள் மட்டுமே அங்கு உண்டு. போராட்டத்திலிருந்து வலிமை கிடைக்கிறது. ஒவ்வொரு வலியும், வேதனையும் ஒரு அற்புதமான ஆசானாக அமையக் கூடும்.
குறிப்பு:-
                 ராபின் ஷர்மா இவர் கனடாவின் டொராண்டோ நகரில் 1965-ம் ஆண்டு பிறந்தார். டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்த இவர், தன் பணிவாழ்க்கையை நிறுவன விவகாரங்களுக்கான வழக்கறிஞராகத் தொடங்கினார். பின்னர், வாழ்வின் அமைதி, மகிழ்ச்சிக்கான தேடல் பயணத்தில் வழக்கறிஞர் பணியை விட்டுவிலகி, ஒரு வெற்றிகரமான எழுத்தாளராக, தலைமைப்பண்புத்துவ நிபுணராகத் தன் பாதையை அமைத்துகொண்டார். தனிநபர் வளர்ச்சிக்கான பல்வேறு வெற்றிகரமான வழிமுறைகளை தன் புத்தகங்களில் முன்வைத்திருக்கிறார்.
இவரது புத்தகங்கள் 96க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.5 கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கின்றன. "யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்" (Who Will Cry When you Die?), "பெருவாழ்வு" (Megaliving), "ரகசியக் கடிதங்கள்" (The Secret Letters), "The Leader Who had no Title", "The Greatness Guide" போன்றவை இவரது பிரபலமான படைப்புகளில் சில.....
சுய முன்னேற்ற புத்தகத்தை நீங்கள் விரும்பி படிப்பவர்களாக இருப்பின், இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது,  உங்களுக்குள்ளும் ஒரு நேர்த்தியான காலை பொழுது விடிவதாக நீங்கள் உணர்வீர்கள். வழிபாட்டு தலங்களுக்கு சென்று பிரார்த்தித்து விட்டு வீடு வந்து சேரும் வரை, நமக்குள்ளே ஏதோ ஒரு இறைதன்மை  ரீங்காரம் இட்டபடியே இருக்குமே, அதுபோல இந்த புத்தகத்தை நீங்கள் வாசித்து முடிக்கும் போது ஒரு அமைதியான ரீங்காரம் என் மனதுக்குள் ஒடிக்கொண்டே இருந்தது. எனக்கு ஏற்பட்ட அந்த ரீங்காரம் தான் இந்த புத்தகத்தை பற்றி இன்று  உங்களிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பளித்திருக்கிறது....
         - சித்தர்களின் குரல்.  Shiva Shangar