25/01/2023
தங்களுக்கு ஒரு நோய் இருக்கிறது
என்று மருத்துவர் கூறினால்
பெரும்பான்மை மக்கள் முதலில்
அதை நம்புவதில்லை
குறிப்பாக ஒரு சிறிய உதாரணம் கொண்டு விளக்குகிறேன்
ஒரு முப்பது வயது நபருக்கு
ரத்த அழுத்தம் சோதிக்கும் போது மிக அதிகமாக எ.கா. 160/100 mm Hg என்று இருக்கிறது
அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதை மருத்துவர் உறுதி செய்து
சிகிச்சை ஆரம்பிக்கிறார்
உயர் ரத்த அழுத்தம் கண்டறியப்பட்ட நபரோ தனக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பதை முதலில் ஏற்க மறுப்பார்.
அது எப்படி எனக்கு இந்த சின்ன வயசில் பிரஷர் வரும்
இருக்காது.
சில நாட்கள் ஒழுங்காக தூங்கவில்லை அதனால் தான் இப்படி இருக்கும் என்று சமாதானம் கூறிவிட்டு அவரே தனக்கு ரத்த அழுத்தம் இருப்பதை மறந்து விடுவார்
சில மாதங்கள் கழித்து மீண்டும்
வேறு ஒரு பிரச்சனைக்கு மருத்துவரை சந்திக்கும் போதும் பிரஷர் அதிகமாக இருப்பதை இன்னொரு மருத்துவர் அறிவுறுத்தும் போது இவருக்கு ஒரு பதட்ட உணர்வு மற்றும் கோபம் வரும்.
என்னதிது எங்க போனாலும் பிரஷர் அதிகம்னு சொல்றாங்க.
எதுக்கு இந்த வயசுல எனக்கு பிரஷர் வரப்போகுது
ஒருவேளை பிரஷர் அதிகமா இருந்தா என்ன ஆகும்?
பயமா இருக்கே? பதட்டமா இருக்கு...
என்ற நிலைக்கு வருவார்
ஆனாலும் அதற்குண்டான மருத்துவ சிகிச்சையை ஆரம்பிக்க மாட்டார்.
அடுத்து தானாக ஒரு பிரஷர் பார்க்கும் கருவியை வாங்குவார் அல்லது அருகில் இருக்கும் ஒரு லேபில் பிரஷர் அடிக்கடி சோதித்துப் பார்ப்பார்.
அப்போதும் பிரஷர் அளவுகள் சில நேரம் சரியாகவும் பல நேரம் அதிகமாகவும் இருப்பதைக் காண்பார்
இப்போது பல யூடியூப் சேனல்களில் இதைப்பற்றி எண்ண கூறியிருக்கிறார்கள்?
இதைப் பற்றி சக நண்பர்கள் , ஆஃபீஸில் வேலை செய்பவர்கள் , சொந்தங்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்பார்.
அதில் ஒவ்வொருவர் ஒவ்வொரு கமெண்ட் கொடுக்க அதை எல்லாம் பரீட்சார்த்தமாக செய்து பார்ப்பார்.
சிலர் ஓடினால் குறையும்
சிலர் எடை குறைந்தால் குறையும்
சிலர் தூங்கினால் குறையும்
சிலர் பிரஷர் பார்ப்பதையே நிறுத்தி விடு .. அது நோயே அல்ல என்று நினைத்து விடு என்று நம்பினால் குறையும்
சிலர் ஆன்மீக நாட்டத்தினால் குறையும்
சிலர் இந்த கசாயத்தை தினசரி குடித்தால் குறையும்
என்று கூற அனைவரின் கூற்றுகளையும் முயற்சித்து பார்ப்பார்
இதற்கடுத்த கட்டமாக
அவ்வப்போது தலைசுற்றல்
குமட்டல் தலை வலி மண்டை மந்தமாக இருப்பது
நடக்கும் போது கொண்டு போய் தள்ளுவது போன்ற அறிகுறிகள் தென்பட மீண்டும் மருத்துவரை அணுகுவார்
அப்போது பிரஷர் 200/100 என்று இருக்கும்.
உடனே மனத்தாழ்வு நிலைக்குச் செல்வார்.
ஐயோ.. இன்னும் பிரஷர் குறையாம இருக்கே... என்று வருந்துவார்
இப்படியாக பல படிநிலைகளைக் கடந்து வரும் போது சில முதல் பல வருடங்களைக் கடந்திருப்பார்
இந்த வருடங்களில்
உயர் ரத்த அழுத்தமானது அவரது
இதயத்தின் தசைகளை வீக்கமடையச் செய்திருக்கக்கூடும் இதனால் இதயத்தின் துடிக்கும் திறன் குறைந்து அதனால் ஏற்படும் பாதிப்புகள் ஆரம்பித்திருக்கக்கூடும் (CONCENTRIC LEFT VENTRICULAR HYPERTROPHY)
அவரது கண்களின் விழிப்படலத்தில் நுண் ரத்தக் கசிவுகள் தோன்றி கிட்டத்தட்ட நிரந்தரமாக பார்வை இழப்பு நேர்ந்திருக்கக்கூடும் (HYPERTENSIVE RETINOPATHY)
இத்தகைய அதிக ரத்த அழுத்தத்தில் ரத்தம் தனக்கு கிடைப்பதை விரும்பாத சிறுநீரகத்தின் நெஃப்ரான்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து சிறுநீரக அழற்சி நோய்க்கு வித்திட்டிருக்கக் கூடும்( HYPERTENSIVE NEPHROPATHY)
இவ்வாறாக
தனக்கு இருக்கும் நோயைப் பற்றி
முதலில் நம்பாமல் அது இல்லை என்று மறுத்து
பிறகு அந்த நோய் தனக்கு ஏன் இருக்கிறது என்று கோபம் கொண்டு
அதற்கடுத்த நிலையாக அறிவியல் மருத்துவம் கூறும் வழிகளைப் பின்பற்ற எத்தனிக்காமல் பல்வேறு அறிவியலுக்குப் புறம்பான வழிகளை முயன்று பார்த்து அதில் வெற்றி கிடைக்காததில் மனச்சோர்வு அடைந்து
இறுதியாக தனக்கு இந்த பிரச்சனை இருக்கிறது என்று ஏற்றுக்கொண்டு மீண்டும் மருத்துவர் கூற வருவதைக் கேட்க வரும்போது
காலம் கடந்திருக்கக் கூடும்.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு
குப்ளர் ராஸ் துன்பியல் சுழற்சி தத்துவத்தை நோயுடன் ஒப்பிட்டுப் பார்த்து எழுதியிருக்கிறேன்
நோய்க்குறி தோன்றினால்
மருத்துவரை அணுகி
அதற்குரிய சிகிச்சையும் வாழ்வியல் மாற்றமும் பேணி
அந்த நோயின் நீண்ட கால ஆபத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொண்டு
அந்த நோய் தரும் நிகழ்கால பிரச்சனைகளில் இருந்தும் தற்காத்துக் கொள்வதே சிறந்த யுக்தி.
இங்கு நோய் கண்டறியப்பட்ட நாளில் இருந்தும்
அந்த நோய்க்குண்டான முறையான சிகிச்சை மற்றும் வாழ்வியல் மாற்றத்தை ஆரம்பிக்கும் நாளுக்கும்
இடையே நீண்ட காலம் ஆகிறது
இது சரியான போக்கன்று.
ஆபத்தான போக்காகும்
நோய்க்குறி கண்டறியப்பட்டால் உடனடியாக நோய் குறித்த அறிவை முறையான வழியில் பெற்று அதன்குண்டான சிகிச்சையை எடுக்கத் துவங்குவதே நன்மை பயக்கும் செயல்
இங்கு ரத்த அழுத்தத்தை ஒரு எடுத்துக்காட்டாக கூறியுள்ளேன்
அதற்கு பதிலாக எந்த நோயையும் நாம் அங்கு பொருத்திப் பார்க்க இயலும்
நோய் சிகிச்சையியலில்
விரைவாக வரும் போது வெற்றி எளிதாகிறது.
தாமதம் என்பது வெற்றியை தூரமாக்குகிறது
நன்றி
Dr.அ.ப .ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை