23/06/2025                                                                            
                                    
                                                                            
                                            *நிறைவு பெற்றது..  2100 ஆன்மாக்களுக்கு இறுதி பயண உதவி...*
2017ம் வருடம் ஒரு மாலை நேரம் ஆதரவற்ற ஒருவர் இறந்து போய்...
எந்த உதவியும் இல்லாமல் வாடிய ஒரு ஏழை மூதாட்டிக்கு இறுதி சடங்கை செய்ய தாய்மை அறக்கட்டளை உதவியது...
101 இலவச டெங்கு காய்ச்சல் முகாம் கோவை முழுவதும் நடத்தி முடித்த நம்பிக்கை பெற்று இருந்தது தாய்மை அறக்கட்டளை. அந்த மாதத்தில் நடந்த தாய்மை அறக்கட்டளை ஆலோசனை கூட்டத்தில் ஏழைகள் வீட்டில் ஏற்படும் இறப்பு நிகழ்விற்கு முற்றிலும் இலவசமாக உதவிகள் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றினாலும், நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய உறுப்பினர்களை கொண்ட தாய்மை அறக்கட்டளை நண்பர்கள் கையில் நயா பைசா கூட இல்லாத சூழலிலும் நம்பிக்கை நிறைய இருந்தது.
அறக்கட்டளைக்கு நம்பிக்கை கொடுத்த பல அன்பர்களையும், உதவி செய்வார்கள் என்று தோன்றிய பல தனவான்களையும் பார்த்து சோர்ந்து போய்...
"பணம் கேட்காமல் பொருளாய் கேட்டு பெறுவோம்" என சொந்த வேலையையும் செய்து விட்டு, மாலை நேரங்களில் பலரையும் சந்தித்து இலவச நீத்தார் சேவை செய்ய இருக்கிறோம் என சொல்லி உதவியை  பொருளாய் கேட்டோம்.
கேட்ட விஷயத்தில் உண்மை நிறைந்து இருந்ததாலும், ஏற்கனவே செய்திருந்த "டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்" பற்றிய சேவைகளை அறிந்து கொஞ்சம் கொஞ்சமாய் உதவிகள் கிடைத்தது.
தாய்மை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சிறு தொகையை சந்தாவாக வழங்கி பொருள் வாங்க உதவி செய்தார்கள்.
அரிமா மற்றும் ரோட்டரி சங்கங்கள் ஒரு சில பொருட்களை வாங்கி தந்து உதவினார்கள்..
ஒருவழியாக ஒரு இறந்த வீட்டிற்கு வழங்க தேவையான "நீத்தார் சேவை" பொருட்களை சிறுக சிறுக வாங்கியது...பொருட்கள் தயார்...ஆனால்
துணி பந்தல் அமைக்க நாம் கற்று கொள்ள வேண்டுமே..?
அதற்காக துணி பந்தல் அமைப்பதில் சிறந்த ஒருவரை வர செய்து கூலி கொடுத்து கற்றுக்கொண்டோம்.
இலவச நீத்தார் சேவை குறித்த தகவல்கள் கொண்ட புதிய சுவரொட்டி அடித்து ஊரெங்கும்.. 
"ஏழை வீடுகளில் ஏற்படும் இறப்பு நிகழ்விற்கு நீத்தார் சேவை வழங்கப்படுகிறது.. பயன்படுத்தி கொள்ளவும்..! "என அறிவிப்பு செய்யப்பட்டது.
அறிவிப்பு செய்த ஓரிரு நாளில் ஒண்டிபுதூர் ராமசந்திரா ரோட்டில் உள்ள முதியவர் இறந்து விட்டதாகவும், நீத்தார் சேவையாக சாமியானா,சேர்கள், டீ பிளாஸ்க் ஆகியன வேண்டும் என கேட்க..
ஒவ்வொருவரும் சொந்த வேலைகளை விட்டுவிட்டு உடனே ஓடி சென்று மிகுந்த பொறுப்போடு இறந்த வீட்டில் வேண்டிய உதவிகள் செய்து கொடுத்தோம்.
வாடகை ஆட்டோவில் சென்று நீத்தார் சேவைகள் கொடுத்தாலும்..,  தாய்மை அறக்கட்டளை ஒருபோதும் ஆட்டோ வாடகையை பொது மக்களிடம் கேட்டது கிடையாது.
1.....100 நீத்தார் சேவை நிறைவு பெற்றது.
கொஞ்சம் கொஞ்சமாய் தேவையான நீத்தார் சேவை பொருட்கள் கூடுதலாக வாங்கி கொண்டோம்.
இறப்பிற்கு இலவசமாய் 3 நாட்கள் வழங்கிய பின்னர் அதற்கு பிறகு வரும் கருப்பு நிகழ்வு, 7ம் நாள் நிகழ்வு, 16ம் நாள் நிகழ்வு, மற்றும் மங்கள நிகழ்வு போன்றவைகளுக்கு பொருட்கள் வழங்கி அதற்கு மட்டும் சிறு  சேவை தொகையை கேட்டு பெற்று செலவுகளை சமாளித்து வந்தது அறக்கட்டளை.
 தாய்மை அறக்கட்டளையின் உண்மையான சேவையை அறிந்த ROTARY CLUB OF VAGARAYANPALAYAM அவர்கள் சார்பாக "Freezer Box" ஒன்றை வாங்கி அறக்கட்டளைக்கு அர்ப்பணித்தார்கள்.
நீத்தார் சேவை 500ஐ கடந்து 1000 ஆனது..
சோர்வில்லாமல் இரவு பகல் குளிர் வெயில் பொருட்படுத்தாமல் குடும்பமாய் அறக்கட்டளை சேவை செய்வதை அறிந்து மகிழ்ந்து... 2023-ல் Rotary Club of Coimbatore MetroPolis சார்பாக சொந்தமாய் புதிய ஆட்டோ வாகனம் வாங்க ரூ 4 லட்சம் வழங்கி உதவி செய்து ஊக்கம் அளித்தார்கள்.
தாய்மை அறக்கட்டளை மீது மாறாத அன்பு கொண்ட நலம் விரும்பி..
"திருமதி மங்கையற்கரசி-திரு சேவாகுரு தம்பதியினர்" ஆட்டோ வாங்க ரூ 1 இலட்சம் வீட்டிற்கு வர செய்து மகிழ்ந்து நன்கொடை வழங்கினார்கள். 
மஹிந்திரா ஆட்டோ வாகன விற்பனை மேலாளர் திரு சந்திர மௌலி அவர்கள் சார்பாகவும், அங்கு பணி புரியும் பணியாளர்களிடம் தாய்மை அறக்கட்டளை செய்து வரும் அளப்பறிய சேவைகள் குறித்து மேலாளர் எடுத்து கூறி அவர்கள் சார்பாகவும் குறிப்பிட்ட நன்கொடையை பெற்று தந்து பெரூதவி செய்தார்.
மீதம் தொகையை தாய்மை அறக்கட்டளை ஏற்று கொண்டு புதிய ஆட்டோ வாகனம் சொந்தமாக வாங்கியது. ஒருவழியாக வாடகை ஆட்டோ செலவுகள் குறைந்தது.
ஒவ்வொரு வருடமும்..
ஒவ்வொரு நாளும்..
ஒவ்வொரு இறந்த வீட்டில் மட்டுமல்லாமல்,
உறுப்பினர்கள் தத்தம் சொந்த வீட்டிலும்..
நட்பு வட்டத்திலும்..
 பல்வேறு கேலி கிண்டல்களை கடந்து சேவை செய்தோம்.
பற்பல அனுபவங்களை,
பற்பல வாழ்த்துக்களை,வரவேற்புகளை, விருதுகளை, அங்கீகாரங்களை, விமர்சனங்களை பெற்று வந்தாலும்,
நீத்தார் சேவையை தங்கு தடையின்றி வழங்கி வந்தோம்...
உறுப்பினர்களில் முக்கியமாக கார்த்தி, மேனகா, ஸ்டாலின், பூரணி,முத்துக்குமார்(மாற்றுத்திறனாளி),மயில்சாமி VR,  ஹேமலதா,முருகேஷ், மயில்சாமி ராதா,ரிஷி, தீபா, சிறுவர்கள் ஆதர்ஷ், சுதர்சன், லெனின்,பாரதி, பூமிகா,சஞ்சனா ஆகியோர் சிறப்பான பங்களிப்பு அளித்துள்ளார்கள்.
பொதுவாய் எல்லாருக்கும் செய்யும் வேலைக்கு விடுப்பு உண்டு... ஆனால் இந்த நீத்தார் சேவைக்கு விடுப்பு ஏது..?
பூமியில் மனிதர் இறப்பிற்கு விடுமுறை நாள் ஏது..?
அப்படி விடுமுறை நாள் கூட எங்களால் விடுப்பு எடுக்க முடியாத நாட்களாக..,
ஒரு நீத்தார் சேவைதானே வேண்டிய உதவிகளை வழங்கி விட்டு திரும்பி விடலாம்..!" என பல் கூட துலக்காமல் வீட்டிலிருந்து மனைவி மகனோடு புறப்பட்டு, வேண்டிய சாமியானா, சேர்கள், Freezer box, டீ பிளாஸ்க் ஆகியன எடுத்து கொண்டு விரைந்து செல்ல, வரிசையாக  இறப்பு அழைப்புகள் வந்து வந்து, மாலை 4 மணிவரை 10 நீத்தார் சேவைகள் வழங்கிய தாய்மை அறக்கட்டளை நண்பர்களுக்கு அன்றைய நாள்...
ஒரு நீண்ட நெடிய நாளாக மாறிய சோர்வான நாட்களும் உண்டு..
 3ம் நாள் சேவை நிறைவு பெற்று பொருட்கள் திரும்ப பெறும் போது அவர்கள் கண்களில் காணும் நன்றி பெருக்கில் சோர்வும்சுகமாகி போகும்.. மீண்டும் சுறுசுறுப்பு பிறக்கும்.
இறந்த வீட்டில் நெஞ்சில் அடித்து அழும் மனைவி, துக்கம் தொண்டை அடைக்க தந்தையின் பேர் சொல்ல முடியாமல் அழுத அன்பு மகன்,கூட்டமாய் வட்டமாய் கூடி இறந்த சடலம் முன்பு ஒப்பாரி பாடும் பெண்கள்,வானத்தை வெறித்து பார்த்தபடி இருக்கும் மகளை இழந்த தந்தை, தாத்தாவை பறிகொடுத்த சோகத்தில் உடலை கட்டி கொண்டு அழும் பேரன், குடித்து குடித்து மனதையும் உடலையும் ரணமாக்கி இறந்து போன கணவனின் இறப்பில் வாழ்க்கை வெறுத்து போய் குழந்தைகளை கட்டி கொண்டு அமர்ந்திருக்கும் தாய்..
மருத்துவர் நம்பிக்கை கொடுத்ததால் லட்ச கணக்காய் செலவு செய்தும் காப்பாற்ற முடியாமல் போன தாயை நினைத்து வாடும் மகன்.. வீட்டு செலவை சமாளிக்க முடியாத நேரத்தில் வீட்டில் இருந்த பாட்டி இறந்து போக கையில் காசு இல்லாமல் யாரிடம் கடன் வாங்குவது..? " என தத்தளிக்கும்  சராசரி குடும்பஸ்தன் என இப்படி தினம் தினம் பல்வேறு வீடுகளுக்கு உதவ சென்று திரும்பும் எங்களுக்கு பலப்பல நெகிழ்வான சம்பவங்கள் அனுபவமாகும்.
"உண்மையிலேயே.. நயா பைசா இல்லாம இருந்தேன்... வெளிய கேட்கவும் கூச்சமா இருந்துச்சு..அந்த நேரத்துல நீங்க அறக்கட்டளை மூலமா செஞ்ச இந்த பெரிய உதவிய... எங்களுக்கு சொந்தக்காரங்க கூட செய்யமாட்டாங்க தம்பி...!" என்று கைபிடித்து தழுதழுக்க சொன்ன வார்த்தைகள், எங்களுக்கு பல தடைகள் வந்தாலும், தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற உந்துதலை வழங்குகிறது.
வெயில் காலத்தில் மாதம் முழுவதும் இலவச நீர் மோர் பந்தல், பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள்,உலக புகையிலை ஒழிப்பு தினம் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு ஓவிய போட்டிகள் நடத்துவது, தாய் தந்தை இழந்த குழந்தைகள், மாற்றுத்திறனாளி, மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு வருடந்தோறும் தீபாவளி புத்தாடை கூப்பன்கள் வழங்குவது,மலை வாழ் மக்களக்கான போர்வைகள், உடைகள், ஸ்கூல் பைகள் வழங்குவது, ரத்த தானம், கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவித்தொகை வழங்குவது போன்ற சேவைகளும் சத்தமில்லாமல் செய்து வருகிறது தாய்மை அறக்கட்டளை.
2100 வது நீத்தார் சேவையை இரவு 8 மணிக்கு  கோவை ஆஞ்சநேயர் காலனி அருகே தெய்வத்திரு நாராயணன் என்ற முதியவரின் இறப்பு நிகழ்விற்கு உதவி வழங்கிய திருப்தியோடு அவரவர் வீடு திரும்பிய எங்களுக்கு மனம் நிறைய அகமகிழ்ச்சி பொங்கியதில் ஆச்சர்யமில்லை..
நன்றி 
  ServiceCompletion
 #2100நீத்தார்சேவைநிறைவு
 #இலவசநீத்தார்சேவை
 #தாய்மைஅறக்கட்டளை
  
 
  
  
🙏🏼🙏🏼🙏🏼