01/03/2023
குழந்தைகளை கொல்லும் வயிற்றுப் போக்கு.
Dr PM Arshath Ahamed MBBS MD PAED PGPN ENS
Key facts.நம்மட நாட்டு ட்ரான்ஸ்லேசன் படி "திறப்பு உண்மைகள்" 🙂🙂
*ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு வயிற்றுப்போக்கு நோய் இரண்டாவது முக்கிய காரணமாகும்.
*வயிற்றுப்போக்கு தடுக்கக்கூடியதும் மற்றும் சிகிச்சையளிக்கக்கூடியதுமான ஒரு நோய்.
*இப்போதும், ஒவ்வொரு ஆண்டும் வயிற்றுப்போக்கினால் ஐந்து வயதுக்குட்பட்ட 525,000 குழந்தைகள் இறக்கின்றனர்.
*பாதுகாப்பான குடிநீர் மற்றும் போதுமான மலசலகூட வசதிகள் (Sanitation) மற்றும் துப்புரவு பழக்க வழக்கங்கள் (Hygiene) மூலம் வயிற்றுப்போக்கு கணிசமாக தடுக்கப்படலாம்.
*உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் குழந்தை பருவ வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் கிட்டத்தட்ட 1.7 பில்லியன்கள்.
*ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வயிற்றுப்போக்கும் முக்கிய காரணமாகும்.
அதெல்லாம் சரி, விஷயத்துக்கு வாங்க
வயிற்றோட்டம் diarrhoea எனும் சொல் , பண்டைய கிரேக்க சொல்லான διά-ρροια from (διά) dia "through" and (ρροια) rheo "flow". என்பதில் இருந்து பிற்நதிருக்கிறது. வழக்கம் போல அமெரிக்கர்கள், எல்லாம் வெளியே போனபின் எதற்கு அந்த O என்று அதையும் எடுத்துவிட்டு' diarrhea என்று எழுதி வருகிறார்கள்.
வயிற்றோட்டம் மனித வரலாற்றில் பல்வேறு சம்பவங்களை நிகழ்த்தி இருக்கிறது. அரசுகளை கவிழ்த்திருக்கிறது. யுத்தங்களை இடைநடுவில் முடித்து வைத்திருக்கிறது. சில வேளைகளில், முடிக்குரிய இளரவரசர்களையும் மாற்றி அமைத்திருக்கிறது. (அரசுகளை கவிழ்த்த வயிற்றுப் போக்கு!! சாம்ராஜ்யங்களை சரித்த வயிற்றோட்டம் என்ற தலைப்பில் யூடியுபர்கள் வீடியோ செய்யலாம். அவ்வளவு கென்டன்ட் இருக்கிறது.)
அறிவியல் வளர்ச்சிக்கு முன்னைய காலங்களில் பிறந்த குழந்தைகளில் மூன்றில் ஒன்று, 5வயதை அடைவதற்கு முன்னரே இந்த கொடிய வயிற்றோட்டத்தினால் இறந்து போயிருக்கிறது. வயிற்றோட்டம் வந்தால், கடைசியாக ஒரு தடவை கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் என்று சொல்வதை தவிர வேறெந்த மருந்தும் அப்போது இல்லை. பாரம்பரிய வைத்தியம், இயற்கை வைத்தியம் எல்லாமே அப்போது இந்த சாவுகளை கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தது என்பதை முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்பவர்கள் விளங்கி கொள்ள வேண்டும்.
அறிவியல் வளர்ச்சி, சுத்தமான குடிநீர் நீர், வியாபித்த மலசல கூடங்களின் பாவனை, உணவுப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு(Food Safety), வக்சீன்களின் நோய்த் தடுப்பு போன்றன வயிற்றோட்ட நோய்களை பெருமளவு குறைத்திருக்கின்றன. இதனால் டயறியா, தற்போது பல் பிடுங்கப்பட்ட பாம்பாக மாறி இருக்கிறது.
(அதெல்லாம் செரி,
வயிற்றோட்டம் என்றால் என்ன? அத சொல்லுங்க மொதல்ல… )
ஒரு நாளைக்கு மூன்று தடவைகளுக்கு மேல், தண்ணீர் போலவோ அல்லது இளக்கமாகவோ மலம் வெளியேறுதல் வயிற்றோட்டம் என்று அழைக்கப்படும். இது வைரஸ், பக்றீரியா, பங்கஸ், அல்லது ஒட்டுண்ணிக் கிருமிகள் (பரசைட்), போன்ற நோய்க் கிருமிகள் உணவுக் கால்வாயில் தொற்றுவதால் ஏற்படும். எனினும் இந்த டெபினிஷன் பாலூட்டும் சிறிய கைக் குழந்தைகளுக்கு பொருந்தாது. அவர்கள் ஒரு நாளைக்கு சில வேளைகளில் பத்து தடவைக்கு மேல் மலம் கழிப்பார்கள். அது அவர்களின் வயதிற்கு நோர்மலானது. சாதாரணமானது.
பெரும்பாலும், வைரஸ் தொற்றுக்களே குழந்தைகளில் அதிகளவான வயிற்றோட்டம் ஏற்பட காரணமாக அமைகின்றது. இந்த தொற்றுக்கள் சாதாரணமாக சுகமாகிவிடும். நீர் இழப்பை சரி செய்தாலே போதுமானது. இருந்தாலும் Rota Virus தொற்றுக்கள் கொஞ்சம் வீரியமானவை
குழந்தைகளில் அதிக நீரழப்பை ஏற்படுத்தக் கூடியவை. சில வேளைகளில் மரணத்தை கூட சம்பவிக்க வைக்கும் அளவுக்கு பாரதூரமானதும் கூட. இந்த ரோட்டா வைரஸ் தொற்றை தடுக்கும் வக்சீன்கள் எல்லா இடங்களிலும் தற்போது பரவலாக பாவனையில் உண்டு.
இது போல, மாசடைந்த உணவுகள், சுத்தமற்ற குடிநீர் மூலம், பக்றீரியா மற்றும் ஒட்டுண்ணிக் கிருமிகளின் தொற்றுக்கள் பெரும்பாலும் ஏற்படுகிறது. வயிற்றோட்டத்திற்கு மேலதிகமாக மலத்துடன் சளி, இரத்தம் வெளியேறுதல், வயிற்றுளைவு- நோவு Dysentry போன்றன இதன் பிரதான
அறிகுறிகளாகும். இது வைரஸ் தொற்றுக்கள் போல் அல்லாது கொஞ்சம் பாதிப்பானது. எனவே காலம் தாழ்த்தாமல் உடனடி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
இந்த வகை Dysentery அறிகுறிகளாக அடிக்கடி வயிற்று வலியுடன், சளி கலந்து +/- இரத்தம் போகும். Escherichia coli (E. coli), Salmonella, Shigella போன்ற கிருமிகளால் இவ்வாறான தொற்றுக்கள் ஏற்படும். இந்த தொற்றுக்கள் feco - oral route (மலசலகூட கழிவுகள் குடி நீரில் கலப்பதால், உணவுப் பொருட்களை கையாளும் போது கைகள் மூலமாகவும் ) கடத்தப்படும். எனவே உரிய பாதுகாப்பு முறைமைகள் மூலம், சுகாதார பழக்கவழக்கங்கள் மூலம், இவ்வாறான தொற்றுக்களை தடுக்கலாம். இதில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களின் பங்கு மிகவும் அத்தியாவசியமானது.
தண்ணீரை கொதித்து ஆற வைத்தால் , பில்டர் பண்ணி குடித்தால் அதில் உள்ள உயிர் போய்விடும், செத்த தண்ணீரை தான் குடிக்க வேண்டி வரும், ஆகவே மண்பானையில் ஊற்றி வைத்த தண்ணீரை, வெண்கல கோப்பையில் ஊற்றிக் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும். உயிர் உள்ள தண்ணீர் கிடைக்கும் என்ற ஹீலர் ஜீவன்களின் பிரச்சாரத்தை நம்பிய பலர் கடைசியில் சல்மனல்லா இன்ஃபெக்ஷன் வந்து ஐசியு வில் இருந்த கதைகள் உண்டு. கவனம் மக்காள்.
சமறி என்னவென்றால், பெரும்பாலும் வைரஸ் தொற்றுக்கள் காரணமாக ஏற்படும் வயிற்றோட்டம் சிகிச்சையின்றியே குணமாகக் கூடியது. சிறுவர்களில் பொதுவாக 2-4 நாட்களுக்குள் தானாகவே குணமாகிவிடும். சிறு குழந்தைகளில் சற்று அதிகமாக 5-7 நாட்கள் வரை எடுக்கலாம். கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் டிசன்றி வகை தொற்றுக்கள் கொஞ்சம் தீவிரமானவை. உரிய சிகிச்சையை உடனடியாக வேண்டி நிற்பவை. என்ன தான் இருந்தாலும், எந்த வகை வயிற்றோட்டமாக இருந்தாலும், உடலிலிருந்து நீரிழப்பு நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். இது தான் அடிப்படை.
வயிற்றோட்டம் ஏற்பட்டவர்களுக்கு முடியுமான அளவு, அதிக நீராகாரங்களை அருந்தக் கொடுக்க வேண்டும். செவ்விள/ இளநீர், அரிசி/சோற்றுக் கஞ்சி, ஜீவனி (ORS - Oral Rehydration Solution) போன்றன இதற்கு மிகவும் பொருத்தமானவை. இவை தவிர, அதிக செறிவும், அடர்த்தியும் உள்ள குளுக்கோஸ் மற்றும் பழச்சாறுகள், அதிலும் குறிப்பாக போத்தலில் அடைக்கப்பட்ட பானங்கள், கொடுப்பது வயிற்றோட்டத்தை தீவிரப்படுத்தும். ஆகையால் இவை கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
வயிற்றோட்டம் ஏற்பட்டவர்களுக்கு, அவர்களாக விரும்பி உண்டால், வழமை போல உணவுகளை உண்ண கொடுக்கலாம். ஆனாலும் அதற்கு மேலதிகமாக அதிக நீராகாரங்களை கொடுப்பது அவசியம் என்பதை மறக்க வேண்டாம்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக, இப்போது ஜீவனி போன்ற ORS (Oral Rehydration Solutions) பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே இதற்கு பதிலாக கொஞ்சமாக உப்பும், சிறிதளவு சீனியும் சேர்த்த இளநீர் , சோற்றுக் கஞ்சி போன்றவற்றை பயன்படுத்த முடியும். (வீட்டிலே ஜீவனி செய்வது எப்படி என்று வீடியோ ஒன்று போட்டால் நிறைய லைக் எடுக்கலாம்.)
கொலாரா, சல்மனெல்லா போன்றவைகள் ஒரு காலத்தில் பெரும் சம்பவங்களை நிகழ்த்திய ஜாம்பவான்கள். ஊரே நடுங்கும் அளவுக்கு கடுமையான பீதியைக் கிளப்பிய சண்டியர்கள். இப்போது மருத்துவ வளர்ச்சி, அன்டிபயாட்டிக் பாவனை மூலம் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இருந்தாலும், தற்போதைய தேவையற்ற , அதீத ஆன்டிபயாட்டிக் பாவனை காரணமாக (Antibiotic Resistance மூலம் மீண்டும் இவர்கள் சண்டித்தனம் காட்ட ஆரம்பித்துள்ளனர். வீரியம் பெற தொடங்கி உள்ளனர் என்பதையும் நாங்கள் மனதில் கொள்ள வேண்டும். எனவே சாதாரணமாக சுகமடையும் வைரஸ் தாக்க வயிற்றோட்ஙகளுக்கு இந்த வகை ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுப்பது தேவையில்லாத ஆணி. தவிர்க்கப்பட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட எல்லோரும் இயுக்குவல் குற்றவாளிகளே. அவர்கள் வைத்தியராக இருந்தாலும் சரியே.
மேற்குறிப்பிட்ட இரண்டு வகையான Acute வயிற்றோட்டங்கள் தவிர்ந்த, பல்வேறு நெடுநாள் வயிற்றோட்டங்களும் Chronic Diarrhoea உள்ளன. இவைகள், பெரும்பாலும் வேறு வகை நோய்களின், பகுதியான அறிகுறிகளாக வெளிப்படும். இவை பெரும்பாலும் நீண்ட நாட்களுக்கு, இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும்.
உதாரணமாக "எரிச்சலடையும் குடல்" ( என்னைய்யா இது எரிச்சலடையும் மனம் கேள்விப்பட்டிருக்கோம் புதுஷா குடல் வேற இருக்கா??) Irritable Bowel Syndrome(IBS), Crohn’s Disease (CD), Ulcerative Colitis(UC), Lactose/Galactose/Fructose Intolerance (Food Intolerance) போன்ற பல நோய்கள் உள்ளன. இந்த வகை Glucose - Galactose Malabsorption காரணமாக மூன்று வேளையும் மாட்டிறைச்சி மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் பாடசாலை மாணவி ஒருவரை நான் LRH ல் இருந்த போது கண்டிருக்கிறேன். இவர் பற்றி ஆவணப்படம் மீடியாக்களிலும் ஒளிபரப்பானதாக ஞாபகம். அவர் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. கொஞ்சம் கண்களை மூடி, ஒவ்வொரு நாளும் மூன்று வேளையும் இறைச்சி மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்றால் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அந்த கஷ்டம் புரியும்.
இவற்றைத் தவிர நீரிழிவு, உணவுக் கால்வாய் புற்றுநோய்கள், போன்றவையும் நீண்ட நாள் வயிற்றோட்டத்தை ஏற்படுத்தலாம். எனவே ஒரு வாரத்திற்கு மேலாக வயிற்றோட்டம் இருந்தால் கட்டாயம் விடய ஞானம் உள்ள வைத்தியரை ( நோட் த பாயிண்ட் யுவர் ஆனர்) அவசரமாக, அவசியம் சந்தித்து உரிய சிகிச்சைகளை பெற்று கொள்ள வேண்டியதும், இது எதனால் ஏற்படுகின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டியதும் கட்டாயம். ஏனெனில் இவ்வாறான சந்தர்ப்பங்களில் தாமதித்தால் சிகிச்சை பலனின்றி போக கூடும்.
உணவு ஒவ்வாமைகளாலும் Food Allergy, அதிலும் குறிப்பாக Cow's Milk protein Allergy காரணமாகனவும் பலருக்கு வயிற்றோட்டம் ஏற்படுவதுண்டு. இதற்கு தீர்வு, அவ்வாறான ஒவ்வாத உணவுகளை முற்றாக தவிர்ப்பது மாத்திரமே.
இதுபோல, சில வகை மருந்துகளும் வயிற்றோட்டத்தை ஏற்படுத்துலாம். அன்டிபயோடிக் மருந்துகள், வலிநிவாரணிகள், வயிற்று எரிவிற்கு உபயோகிக்கும் மக்னீசியம் கலந்த மருந்துகள், புற்றுநோய்கான மருந்துகள், போன்ற பல மருந்துகள் வயிற்றோட்டத்தை ஏற்படுத்தும். அது குறித்தும் கவனம் அவசியம்.
இது போல, இத்தகைய தீவிர நோய்களால் மட்டுமின்றி, சாதரணமாக ஏற்படும் பதகளிப்பு, மனப் பதற்றம் Anxiety, Stress போன்ற காரணங்களாலும் பலருக்கு வயிற்றோட்டம் ஏற்படுவதுண்டு. காலையில் வேலைக்கு அல்லது பாடசாலைக்கு புறப்படத் தயாராகும்போது , எக்ஸாம்களுக்கு போகும் போது அடிக்கடி டொயிலட் செல்பவர்களும், சாப்பிட்ட பின்னர் டாய்லட்டுக்கு ஓட்டுபவர்களும் இதில் அடங்குவர். இது குறித்து அச்சப்பட வேண்டியதில்லை. நாளைடைவில் சரியாக விடும். டாய்லட்டை அந்த நேரம் மூடி வைத்தால் இது தானே சரியாகிவிடும். இது போல சிறுவர்களில்
Toddler Diarrhoea எனும் ஒரு வகை வயிற்றோட்டம் உண்டு . அதுவும் நாளடைவில் தானாகவே சரியாகிடும். அச்சப்பட வேண்டியதில்லை.