02/11/2024
நேற்றைய தினம் 75 வயது உள்ள அம்மா ஒருவர் நாடியில் ஒரு காயத்துடனும் (இரண்டு தையல் இடப்பட்டுள்ளது) வலது கையில் வீக்கத்துடனும் வலியுடனும் வந்திருந்தார். 3 நாட்களுக்கு முன் கீழே விழுந்ததாகவும் அதன் பின்னர் நாடியில் காயமும் கையில் வலியும் வந்ததாக கூறினார். தனியார் மருத்துவமனையில் காயத்திற்கு மருந்திட்டதாகவும் கைவலிக்கு கடுப்பு மருந்து தந்ததாகவும் அரசாங்க வைத்தியசாலை சென்று கையை காட்டுமாறும் கூறியதாக கூறினார்.
அவரது கையை அசைக்கும் போதே அதிகவலி உள்ளதாக கூறினார். கையை தன்னால் அசைக்கமுடியவில்லை எனவும் கூறினார். அவரது கையை பரீட்சித்த போது வலது தோள்மூட்டு கீழே இறங்கி இருந்தது (Anterior Dislocation)
மூன்று நாட்களாக இவ்வாறு இருப்பதால் உடனடியாக சரிப்படுத்த வேண்டும். உடனடியாக x-ray எடுக்க வேண்டுமென கூறினேன். X-ray எடுத்து வந்ததும் தோள்மூட்டு இறங்கிஇருப்பது உறுதிசெய்யப்பட்டது.
வலது தோள்மூட்டினை மீண்டும் பொருத்தியவுடன் வலி உடனடியாக குறைவடைந்தது. இதுவே மூட்டு சரியாக பொருந்தி உள்ளது என்பதற்கான அறிகுறியாகும் இருந்தபோதும் அதனை உறுதி செய்ய மீண்டும் ஒருமுறை x-ray எடுக்கப்பட்டது.
(Traction) இழுவை முறையில் சரிப்படுத்த முயன்றோம் ஆனால் வயதானவர் என்பதால் அதனை பயன்படுத்த முடியவில்லை.
இறங்கிய தோள்மூட்டினை சரிப்படுத்த இன்னுமொரு இலகுவான முறை ஒன்று உள்ளது. (Dr.L.Prakash's method of reducing shoulder dislocation)
இது எனக்கு பல தடவை நல்ல விளைவினையே தந்துள்ளது. அந்த முறையினை உங்களுக்கும் அறிமுகப்படுத்துகிறேன். இதனை வைத்தியர்கள் மாத்திரம் பயன்படுத்தி கொள்ளவும்.
பிற்குறிப்பு -
கீழே விழுந்து தோள்மூட்டு விலகினால் எலும்பில் உடைவுகள் ஏதும் உள்ளதா என்பதை x-ray எடுத்து உறுதிப்படுத்திய பின்னர் மீண்டும் பொருத்த வேண்டும்.
கையில் வலி எதுவும் இல்லாமலும் உணர்வு இல்லாமலும் வருகை தந்தால் சிகிச்சிப்பது சிறந்ததல்ல அரச வைத்தியசாலைக்கு அனுப்புவதே சிறந்தது.