18/06/2021
சயரிக்கா இடுப்பு வலியை முழுமையாகப் போக்கும் ஊசி வர்மம் (அக்குபஞ்சர்)
உங்களுக்கு இடுப்பின் நாரிப் பகுதியில் தாங்க முடியாத வலி, காலில் எரிச்சல் அல்லது விறைப்பு, பாதத்தில் தாங்க முடியாத வலி அல்லது விறைப்பு, கால் கட்டைவிரல் பகுதியில் கொதிப்பது போன்ற கடுமையான வலி, உட்காரும் போது ஒரு பக்க வலியுடன் எழுந்தால் உயிர் போகுமளவில் குத்து வேதனை, நிற்க முடியாமல் நடக்க முடியாமல் காலின் கணைக்கால்ப் பகுதியில் வலி போன்ற இவை எல்லாம் உங்களுக்கு இருக்கின்றதா? அப்படி என்றால் அது கண்டிப்பாக சயரிக்கா வலியாகும் (Sciatica pain). அதிக உபாதையான வலி உணர்வை உண்டாக்கும் இத்தீவிர சயரிக்கா நோயினால் திடீரென்று கால் மரத்துப் போகவும் வாய்ப்புகள் உண்டு. தொடைப்பகுதியில் ஆரம்பிக்கும் இவ்வலியானது கீழ்க் கால்வரை பரவக்கூடும்.
இத்தகைய சயரிக்கா வலிக்கு அக்குபஞ்சர் மூலம் எளிய முறையில் நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் மசாஜ் திரபி, எலக்ட்ரிக் திரபி, பிராணிக் கீலிங், மொக்சா திரபி, ரெய்கீ திரபி, யோகா திரபி போன்ற பக்கவிளைவுகளற்ற சிகிச்சை முறைகளையும் ஒருங்கிணைத்து பூரணமாக குணப்படுத்தபட முடியும்.
சயரிக் நரம்பு (Sciatic Nerve) எனப்படும் பெருநரம்பு இடுப்பு முள்ளந்தண்டுகளில் இருந்து புறப்படுகின்றது. இடுப்பு பெருநரம்பு என்பது உடலில் இருக்கும் மிக நீளமான நரம்பு ஆகும்; இந்த நரம்பு கைவிரல் அளவு பெரியது. இது இடுப்பு முதுகெலும்புக்கு அடியில் இருந்து தொடங்கி இடுப்பு மற்றும் பின்பகுதியில் பிட்டம் வழியாக ஒவ்வொரு கால்களிலும் கிளைகளாகப் பிரிகிறது. முழங்கால்ப் பகுதியில் கிளைகளாகப் பிரிந்து காலின் பின்புறமாக சென்று குதிக்கால் பாதத்தினூடாகச் சென்று காலின் கட்டைவிரலில் முடிவடைகிறது. இந்த நரம்பானது கால்களைக் கட்டுப்படுத்தகூடிய முக்கிய நரம்பாகும். இந்த நரம்பியல் நோயின் அறிகுறி “சயரிக்கா” எனப்படுகிறது. இது குறித்து ஒவ்வொருவரும் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.
ஆரம்பக் கட்டத்தில் இவ்வலியானது இடையிடையே விட்டு விட்டு முதுகின் கீழ்ப் பகுதியில் வந்துபோவதை அவதானிக்க முடியும். ஒருசிலருக்கு இடுப்பில் இருந்து பக்கவாட்டிலும் வலி இருக்கும். பலர் இந்த வலி வாய்வினால் ஏற்படும் வாயுப்பிடிப்பு என்றே ஆரம்பத்தில் கருதுகின்றனர். பெரும்பாலும் பலர் இதனைக் கவனிக்காது அலட்சியமாகவிருந்து பின்னர் அதன் தீவிரம் அதிகமாகும் வேளையில்தான் வைத்தியரை நாடுகின்றனர். ஒரு நாள் திடீரென்று இந்த வலி கடுமையாகும். அவ்வேளை, இடுப்பு முள்ளந்தண்டில் ஊசியால் குத்துவதுபோல் ஒரு வலியை உணரலாம்; இதைத் தொடர்ந்து காலில் வலி தொடர ஆரம்பிக்கும். இதன் பிறகு இந்த சயரிக்கா எனப்படும் நரம்பு செல்லும் பாதை முழுவதும் வலி இருந்துகொண்டே இருக்கும். அதாவது நரம்பை இழுப்பது போன்ற உணர்வு முதுகு பகுதி முதல் காலின் கீழ்ப் பகுதி வரை இருக்கும். நரம்பு, இழுத்து இழுத்து வலி ஏற்படுத்துவதால் இது “Sciatica Pain” என குறிப்பிடப்படுகிறது. இதையும் அலட்சியம் செய்யும் போது தொடைப்பகுதி, கணைகால் பகுதி மரத்து கல்லுப்போன்று மாறி விடும். இது ஆரம்பத்தில் ஒரு காலில் மட்டுமே உண்டாகக் கூடும். சிலருக்கு பின்னர் இந்த அறிகுறி இரண்டு கால்களிலும் ஏற்படும்.
சயரிக்கா நோய்க்கான அறிகுறிகள்
ஓரிடத்தில் இருந்தால் எழுவதற்கு அதிக சிரமத்தைக் கொண்டிருப்பார்கள். எழுந்த பின்னர் மீண்டும் இருப்பதற்கு அதிக சிரமம் அடைவார்கள். நிற்பதைவிட இருக்கும்போது வலி உணர்வு அதிகமாகக் காணப்படும். காலின் பின் பகுதியில் வலி, எரிச்சல் உணர்வு உண்டாகக் கூடும். வெகு அரிதாக சில நேரங்களில் இரண்டு கால்களிலும் வலி உண்டாகலாம். முதுகு எலும்பு முடியும் இடத்திலும் கால்களின் பின்புறத்திலும் குத்துவது போன்ற உணர்வு காணப்படும். இடுப்பு மூட்டுக்குரிய சயரிக்கா நரம்பு எந்த இடத்தில் பாதிப்பை கொண்டிருக்கிறதோ அதைப் பொறுத்து வலியானது கால் அல்லது கால்விரல்களுக்குப் பரவக்கூடும். சிலருக்கு கால் பலமிழந்து காணப்படும். உணர்வின்மை, பாதத்தை எடுத்து வைப்பதில் சிரமம் போன்றவை காணப்படும். முதுகுப்புறத்தில் நிலையான வலி இருப்பதனால் வழமையான நடைகூட அவர்களுக்குக் கடினமானதாக இருக்கும்.
சயரிக்கா நோய்க்கான காரணங்கள்
முள்ளந்தண்டு எலும்புகள் தான் நிமிர்ந்த நடைக்கு ஊன்று கோல்போல் உள்ளது. இடுப்புப் பகுதில் காணப்படும் முள்ளந்தண்டுகள் பிரதானமாக உடலின் மேற்பகுதியை தாங்கும் வேலையை மேற்கொள்கின்றன. இவற்றுக்கு ஆதரவாக வயிற்றுத் தசைகளும் இடுப்புத் தசைகளும் தொழிற்படுகின்றன. பணி நிமித்தமாகத் தொடர்ந்து பல மணி நேரத்துக்கு உட்கார்ந்தே இருப்பது, கூன் விழுந்த நிலையில் இருப்பது, தொடர்ச்சியாகக் கணினி திரை முன்னால் உட்கார்ந்தே இருக்க வேண்டிய சூழல், தினமும் இருசக்கர வாகனங்களில் நெடுந்தூரம் பயணிப்பது, குண்டும் குழியுமாக உள்ள வீதிகளில் அடிக்கடி வேகமாகப் பயணம் செய்வது, குனிந்து பாரமான பொருட்களைத் தூக்குவது, உடற்பயிற்சி செய்யாதது, உயரமான இடத்திலிருந்து குதிப்பது, கீழே விழுந்து முள்ளந்தண்டில் அடிபடுவது, திடீரெனக் குனிவது அல்லது திரும்புவது போன்ற முள்ளந்தண்டைப்பாதிக்கும் செயல்கள் நேரிடுவதால், இடுப்பின் முள்ளந் தண்டுகளிற்கிடையில் விரிசல்கள் ஏற்படுகின்றன (Disc prolapse). மேலும், அதிக உடற்பருமன் போன்ற காரணங்களாலும் முள்ளந்தண்டில் அழுத்தம் அதிகமாகி நரம்பு முறையாக இயங்க முடியாமல் வலி ஏற்படுகிறது. அத்துடன் முள்ளந்தண்டுகளிற்கிடையில் இருக்கும் முள்ளந்தண்டென்பிடைத் தட்டுக்கள் சக்தித்தடைகள் மற்றும் சத்துக் குறைபாடுகளால் நலிவடைவதாலும் (Disc degeneration), பெருநரம்பு இடுப்பு வலி ஏற்படுகிறது. சர்க்கரை வியாதியில் ஏற்படும் நரம்பு சேதத்தாலும் சயரிக்கா ஏற்படும். இரத்தக் கட்டிகள், வீக்கங்கள், அழற்சி முள்ளந்தண்டுப் புற்றுநோய் இவைகளையும் காரங்களாகச் சொல்லலாம். இவை தவிர வேறு காரணகளும் இருக்கலாம்.
முள்ளந்தண்டென்பிடை தட்டுக்கள் அதிர்ச்சிகளைத் தாங்கிக்கொள்ளும் தாங்கிகளாகத் தொழிற்படுகின்றன. இவற்றுக்குள்ளே ஒரு ஜெலி போன்ற திரவம் இருக்கின்றது இது nucleus pulposus (உட்கரு ஊன்மம் (கணிகம்)) எனப்படும். முள்ளந்தண்டுகளிற்கிடையில் விரிசல் ஏற்படுகின்றபோது அத்திரவம் வெளித்தள்ளப்பட்டு (Herniated Disc) நரம்பை நெரிக்கின்றது அல்லது உறுத்தலை ஏற்படுத்துகின்றது. நரம்புகள் முள்ளந்தண்டுகளிலிருந்து புறப்படும் இடங்களில் மிகவும் மென்மையாக இருக்கும். இவற்றில் ஏற்படும் ஒரு சிறிய உறுத்தலும் இடுப்புப் பகுதியிலும் இந்த நரம்பு செல்லுமிடங்களிலும் விறைப்பையும், வலியையும் ஏற்படுத்தும்.
நரம்புக் கணத்தாக்கங்கள் சரியாகத் தசைகளைச் சென்றடையாமையால் தசைகளில் காற்றின்றிய சுவாசம் நடைபெற்று லக்ரிக் அமிலம் உருவாகும். இதனால் தசைப்பிடிப்பு ஏற்படுவதுடன் அவை கல்லுப்போன்று இறுகத் தொடங்கும். இதனால் தசைகளில் கடுமையான வலி ஏற்படும். இந்த வலி கால் கட்டைவிரல் பகுதி வரை சென்று இழுத்து இழுத்து வலிக்கும், இதனை குணப்படுத்த வேண்டும் இல்லாவிடின் நிரந்தர நரம்புச் சேதம் ஏற்பட நேரிடும்.
முதுகு வலியைத் தடுக்க என்ன வழி
நீங்கள் வேலை செய்யும்போது முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும். நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போதும், வாகனங்களில் பயணம்செய்யும்போதும் கீழ் முதுகுக்குச் சிறிய தலையணை அல்லது ஒரு சிறிய துவாயை உருட்டி வைத்துக் கொள்ளுவதால் அழுத்தம் குறைக்கப்படும். முதுகுப்புறத்தில் அதிகளவு அசைவை ஏற்படுத்தும் நாற்காலிகளை பயன்படுத்தக்கூடாது. நடக்கும்போது எப்போதும் கூன் விழாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும். வேலைச் செய்யும்போது ஒரே நிலையில் உட்கார்ந்து வேலை செய்ய கூடாது. அவ்வப்போது உடலை திருப்பிக் கொள்ள வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் மணிக்கணக்கில் அமர்ந்து இருக்கக் கூடாது. ஓய்வு அவசியம். தொலைக்காட்சி பார்க்கும்போது கூட கால்களின் நிலையை மாற்றிக் கொண்டே இருங்கள். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனத்தில் உள்ள பின்புறமாக வளையும் ஆசனங்களான சக்கராசனம், தனுராசனம், புஜங்காசனம், சேதுபந்தம், Plank, போன்றவற்றை செய்வது முதுகு வலியை குறைக்கும்.
பாரமான எடைகளைத் தூக்கக்கூடாது. எந்த ஒரு பொருளையும் தூக்கவேண்டி இருந்தால் குனிந்து தூக்காமல், முழங்காலை மடித்து அமர்ந்துதான் தூக்க வேண்டும். முக்கியமாக பின்புறமாக வளையும் உடற்பயிற்சிகளை அடிக்கடி செய்யவேண்டும். கைகள் இரண்டையும் மேலே உயர்த்தியபடி பின்புறமாக வளையவேண்டும். வயிற்றுத் தசைகளை இறுக்கக் கூடிய பயிற்சிகளைச் செய்யவேண்டும். மென்பானங்கள், சோடாக்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் பொஸ்போரிக் அமிலத்தைச் சேர்ப்பார்கள். இது கால்சியம் சத்து குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும். இதனால் இளமையிலேயே எலும்புகள் வலுவிழந்துவிடும். எனவே, இவற்றை முழுமையாகத் தவிர்ப்பதன் மூலம் முதுகு வலியிலிருந்து எம்மைப் பாதுகாக்க முடியும். தொடர்ச்சியாக சில அக்குபஞ்சர் மருத்துவத்தை பெற்றுக்கொள்வதன் மூலம் இடுப்பு வலியை முழுமையாக குணப்படுத்த முடியும். அக்குபஞ்சர் மூலம் நீரிழிவு, ஒற்றைத்தலைவலி, அதிக இரத்தஅழுத்தம், ஆஸ்துமா, மூட்டுவாதம், பக்கவாதம், ஒவ்வாமை, வயிற்றுப்புண், வலிப்புநோய், மாதவிடாய்க் கோளாறுகள் ஆரம்ப நிலை சிறுநீரக நோய் போன்ற இன்னும் எராளமான நோய்கள் குணமாக்கப்பட முடியும்.
ஆக்கம்: கு. தினேஷ் பெர்னாட் (அக்குபஞ்சர் மருத்துவர்) (GDA- New Zealand, DMM- Malaysia, DACU- Sir Lanaka) Surabe Power Acupuncture Clinic, Kopai Road, Urumpirai East, Urumpirai, Jaffna, Sri Lanka. Contact: 0094766998906.