17/09/2020
#ஒரு_பைசா கூடவாங்காமல் #ஏழைக்_குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிட்சை வழங்கும் மதுரை மருத்துவத் தம்பதியினர்!
கோபி நல்லையன் ராசிபுரம் அருகே, சிறு கிராமத்தில் பிறந்தவர்.அந்த ஊரிலுள்ள அரசுப் பள்ளியில் படித்தார்.பொறியாளர் ஆக வேண்டும் என்பதே இவரது ஆசை.
தபால் நிலைய ஊழியரான அப்பா , மருத்துவம் படித்தால் நாலு பேருக்கு நல்லது செய்யலாம் எனச் சொல்ல, மருத்துவம் படித்தார். எம்.பி.பி.எஸ்., முடித்ததும், அரசு வேலை கிடைத்தது.
ஆனாலும் நமக்கான படிப்பு இது அல்ல என்று உள்ளம் சொல்லிக்கொண்டே இருந்தது. அரசு மருத்துவர் வேலையைத் துறந்துவிட்டு, மேற்கொண்டு படிக்க முனைந்தார்.
வீட்டில் படிக்க வைக்க அந்த அளவு வசதி இல்லை. பல பேரிடம் கடன்கள் வாங்கியும், அரசின் உதவித்தொகை பெற்றும், எம்.எஸ்., மற்றும் எம்.சி.எச்., - 'கார்டியாக் சர்ஜன்' என, 11 ஆண்டுகள் படித்து முடித்தார்.
படிப்புக்காக வாங்கிய கடனை அடைக்க, ஐதராபாத், பெங்களூரு, சென்னை என, பெரிய பெரிய மருத்துவமனைகளில் பணிபுரிந்தார்.
இதற்கிடையே மருத்துவக் கல்லுாரியில், தன்னுடன் படித்த, மதுரையைச் சேர்ந்த ஹேமாவை, காதலித்து ஜாதி எதிர்ப்புப் பிரச்னையுடன், திருமணம் செய்தார்.
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை கிடைக்க, அங்கு சென்றார்கள் இருவரும். மருத்துவ விழிப்புணர்வு, போதிய தொழில்நுட்ப வசதி, பணம் இல்லாமல், இதய நோயால் குழந்தைகள் இறந்து போவதை, அவர்கள் அங்கு கண்டார்கள்.
'வசதியற்ற இவர்களுக்கு நாம் ஏன் இலவசமாக சேவை செய்யக்கூடாது?' என்று மனைவியிடம் கேட்டார் கோபி.
'நிச்சயமாகச் செய்யலாம்; ஆனால், இதற்கு, 'பவுண்டேஷன்' ஆரம்பிக்க வேண்டும். நம்மை யார் எனத் தெரியாத ராய்ப்பூர் ஆன இந்த ஊரில், அது முடியாது. இங்குள்ள குழந்தைகள் போலவே, தமிழகத்திலும் நிறைய பேர் உள்ளனர். அங்கு போய், சேவைகள் செய்யலாம்' எனக் கூற தமிழகக் குழந்தைகள் இதயத்தைக் காக்க தமிழகம் புறப்பட்டு உடனே வந்து சேர்ந்தார்கள் இருவரும்.
சத்தீஸ்கரில், 200 பேருக்கும் மேல் அறுவை சிகிச்சை செய்ததால், சிறந்த மருத்துவ சேவைக்காக, அம்மாநில முதல்வர், ரமண்சிங்கிடம் இடையில் விருதும் கிடைத்தது கோபிக்கு!
இந்தியாவில் மருத்துவ சேவை கிடைப்பது விலை உயர்ந்ததாகவே உள்ளது. அரசு மருத்துவமனைகள் ஆதரவளித்து மலிவான விலையில் சிகிச்சைகள் அளித்து வந்தாலும் ஒவ்வொரு வருடமும் CHD எனப்படும் பிறவி இருதய நோயினால் 78,000 குழந்தைகள் இறக்கின்றனர்.
இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளபோதும் இந்த நோய் குறித்து பலர் அறியவில்லை. போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும் அறுவைச் சிகிச்சைக்கு அதிகம் செலவழிக்க நேர்வதாலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தினருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் சென்றடைவதில்லை. இதனால் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இப்படிப்பட்ட பல இறப்புகளைக் கண்ட குழந்தைகள் இருதய அறுவைச்சிகிச்சை நிபுணரான டாக்டர் கோபி நல்லையன், குழந்தைகள் உயிரிழப்பைத் தவிர்க்க ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவெடுத்தார். அவரது மனைவி டாக்டர் ஹேமப்ரியா நடேசன் உதவியுடன் பிறவி இருதய நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் பணம் மற்றும் மருத்துவ உதவியளிக்க ’லிட்டில் மொபெட் ஹார்ட் ஃபவுண்டேஷன்' (Little Moppet Heart Foundation) என்ற ஒரு அமைப்பை இதற்காக ஆரம்பித்தார்.
அமெரிக்க தேசிய அறிவியல் மருத்துவ ஆய்வகம் வெளியிட்டுள்ள பல்வேறு ஆய்வுகளின்படி இந்தியாவில் நூற்றில் இரண்டு குழந்தைகளுக்கு பிறவி இருதய நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தையின் இருதய அமைப்பில் இருக்கும் இந்தக் குறைபாடு பரவலாக பலருக்கு ஏற்படுகிறது. இதற்கான சிகிச்சை செலவு 1.5 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரையாகும். மேலும் விழிப்புணர்வு இல்லாத காரணம் மற்றும் அரசு சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காரணம் இவற்றால் குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் முறையான சிகிச்சை தர முடியாமல் பெற்றோர்கள் தடுமாறி தத்தளித்து அல்லல்படுகின்றனர்.
”பிறவி இருதய நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உடனே முறையாக சிகிச்சையளிக்கப்பட வேண்டியது முக்கியமாகும். ஏனெனில் அவர்களது குடும்பத்திலுள்ளவர்கள் தினக்கூலிகள் என்பதால் அவர்களது வருமானத்தைக் கொண்டு ஒரு வேளை உணவுத் தேவையை பூர்த்திசெய்து கொள்வதற்கே அதிக சிரமப்படுவார்கள்,”
என்கிறார் 40 வயதான டாக்டர் கோபி.
"பெரும்பாலான கிராமப்புற சுகாதார மையங்களில் வெளிநோயாளிகள் பிரிவிற்கும் சிறு அறுவை சிகிச்சைகளுக்கும் போதிய வசதிகள் இருக்கும். ஆனால் இப்படிப்பட்ட இருதய நோய் போன்ற சிக்கலான நோய்க்கான சிகிச்சைக்கு மாவட்ட அளவிலுள்ள சுகாதார மையங்களுக்கு நோயாளிகள் பரிந்துரைக்கப்படுவார்கள். எனினும் பெரும்பாலான மூன்றாம் நிலை மற்றும் மாவட்ட அளவிலான சுகாதார மையங்கள் கூட இந்நோயைக் கையாள முடிவதில்லை" என்கிறார் நாடெங்கும் 500-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்ட டாக்டர் கோபி.
போதிய உள்கட்டமைப்பு மற்றும் சிறப்பான மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் பெற்றோர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கிடையே அலையவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் சிகிச்சை தாமதமாகி குழந்தைகள் உயிரிழக்க நேரிடுகிறது.
மேலும் மருத்துவ நிபுணர்களையும் இலவச சிகிச்சை கிடைக்கும் இடத்தையும் தேடுவதற்காக பெரும்பாலான குடும்பங்கள் தங்களது வேலைநாட்களைச் செலவிட முடிவதில்லை.இதனால் குழந்தைகளைக் காப்பாற்ற வழியின்றி அவர்களது இறப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.
இது குறித்து டாக்டர் கோபி மேலும் விவரித்தார். "விரைவில் உயிரிழக்கும் நிலையிலிருந்த ஆறு வயது சிறுமி ஒருவர் என்னிடம் கொண்டு வரப்பட்டார். சோதனை செய்தபோது, அந்தச் சிறுமி ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோதே அவருக்குப் பிறவி இருதய நோய் இருந்ததைக் கண்டறிந்தேன். இருந்த போதும் அவரது பெற்றோர்களுக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் சிகிச்சை செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அறிய சென்னை சென்றிருக்கின்றனர்.அறுவை சிகிச்சை மேற்கொள்ள செலுத்தப்படவேண்டிய கட்டணம் குறித்து அறிந்ததும் அவர்கள் அதிர்ந்து போனார்கள். அந்தச் சிறுமியை கடைசியாக அவர்கள் என்னிடம் அழைத்து வந்தபோது அறுவை சிகிச்சை மூலம் குணமாக்கக் கூடிய நிலையைக் கடந்துவிட்டிருந்தார். உயிர் பிழைக்க வைப்பதற்கான சாத்தியக் கூறுகளும் மிகமிகக்குறைவாகவே இருந்தது. என்ன செய்வது? அந்தக் குழந்தையின் நிலையை அறிந்து என்னால் வருத்தப்படத்தான் முடிந்தது"
இரு சிறு குழந்தைகளுக்கு அப்பாவான டாக்டர் கோபி இதே போன்ற நிலை பலருக்கு ஏற்பட்டிருப்பதைக் கண்டார். அவரது மனைவி டாக்டர் ஹேமாவுடன் இணைந்து ’லிட்டில் மொபெட் ஹார்ட் ஃபவுண்டேஷன்’ என்கிற அரசு சாரா அமைப்பை அதனால்தான் தொடங்கினர்.
”நல்ல சம்பளத்துடன் கூடிய ஒரு பணியைத் துறந்துவிட்டு ஒரு அரசு சாரா அமைப்பை துவங்குவது அவ்வளவு எளிதான முடிவு அல்ல. இருப்பினும் பிரகாசமான, அழகான சிறு குழந்தைகளின் வாழ்க்கையை, பிறவி இருதய நோய் முடக்குவதை பார்த்துக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு செயலில் ஈடுபட முடிவெடுத்தேன்,” என்றார் அவர்.
2016-இல் நிறுவப்பட்ட லிட்டில் மொபெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் இதுவரை 30-க்கும் மேற்பட்ட ஊர்கள், கிராமங்கள் சென்று முகாம்கள் அமைத்து, 24,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளைச் சோதித்து 250 குழந்தைகளின் பிஞ்சு இதயங்கள் பழுதை நீக்கி உள்ளது.
பிறவி இருதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான மருத்துவ உதவியும் அறுவை சிகிச்சையும் அளிப்பதே அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.
தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு பிறவி இருதய நோய் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான ஸ்க்ரீனிங் செய்வதற்காக இந்த அமைப்பு பல இடங்களிலும் முகாம்களை அமைத்தது. இலவச சிகிச்சை அளிப்பதுடன் இந்தத் தம்பதிகள் அப்போது குழந்தையின் குடும்பத்தினருக்கு ஆலோசனையும் வழங்கினர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு குறித்தும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ளச் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
”பிறவி இதய நோய் குணப்படுத்தக்கூடிய ஒன்றே என்றும் விரைவாக அதனைக் கண்டறியப்படுவது, சிகிச்சையளிப்பது முக்கியம் என்கிற தகவலை எங்கும் மக்களிடையே பரப்பினோம்.” என்கிறார் மை லிட்டில் மொபெட் நிறுவனரான 38 வயது டாக்டர் ஹேமா.
ஏழையாக இருந்தாலும் செல்வந்தராக இருந்தாலும் ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையும் விலைமதிப்பற்றது என்று நம்புகிறது இந்த அமைப்பு."தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் நெடுநாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாய்ப்பு, சிகிச்சைக்காக செலவழிக்க இயலாத காரணத்தால் மறுக்கப்படக்கூடாது." என்கின்றனர் இந்தத் தம்பதியினர்.
ஒரு ரூபாய் கூட பெற்றாரிடம் வாங்காமல் காப்பீடு, நண்பர்கள் உதவியோடு சிகிட்சைகள் வழங்கப்படுகிறது..அது அறுவை சிகிச்சையாக இருந்து ரூபாய் மூன்று லட்சம் செலவாக இருந்தாலும் அதை இந்த அமைப்பு பார்த்துக் கொள்கிறது!
எப்படியும் நிதி பெற்று சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள் உயிர் காக்க மருத்துவத் தம்பதி தயார்.
பாராட்டுக்கள்!!!