15/07/2021
உயிரினங்களுக்குள் உழைத்து வாழ்பவன் மனிதன். உழைப்பு இல்லையெனில் உயர்வு இல்லை. ஊக்கமும், இடைவிடா முயற்சியுடன் உழைப்பவன் எதிலும் வெற்றி பெறுவான். உழைப்பு உயர்வு தரும். ஒருவன் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்புடன் செய்ய பாடுபடுவதே உழைப்பு. எந்த ஒரு மனிதனும் தன் வாழ்க்கை, ஒரு நல்ல பாதையில் செல்ல வேண்டும் என விரும்பினால், அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். எந்தளவிற்கு உழைக்கிறோமோ அந்தளவிற்கு முன்னேற்றம் கிடைக்கும்.அத்தகைய உழைப்பை நாம் புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால் வெற்றி நமக்கு தான். சிலர் வாழ்வில் முன்னேற வேண்டும் எனக் கூறிக்கொண்டு இருப்பார்கள். ஆனால், அவர்களிடம் செயல்பாடு எதுவும் இருக்காது. அதற்கு காரணம் உழைக்கும் நோக்கமே அவர்களிடம் இல்லாமல் இருப்பது தான்.
செயல்படுத்தும் உழைப்பு
நாம் ஒரு செயலை எண்ணுவதை விட, அதை செயல்படுத்துவதற்காக அதிகளவில் உழைக்க வேண்டும். அந்த உழைப்பிற்கு பலன் நிச்சயம். எந்த ஒரு செயலும் உழைப்பினால் தான் சிறப்பு அடைகிறது. வெற்றியை உருவாக்குவதில் உழைப்பு மிகப் பெரிய மூலதனம் ஆகும். அறிவு சார்ந்த உழைப்பு என்பது முடியாததை கூட நம் கையில் கொண்டு வந்து சேர்க்கும். கடின உழைப்பு ஒன்றுதான் ஒருவனை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும். வெற்றி பெறுவதற்கு ஒரே வழி உழைப்பு தான். ஒருவன் தான் விரும்பும் எதையும், உழைப்பின் மூலம் சுலபமாக பெற முடியும். உழைக்க முற்படும் போதே வெற்றி மற்றும் அதன் பலனை நினைக்கவே கூடாது. அயராது, கடினமாக உழைப்பது தான் ஒருவருடைய உயிர் மூச்சாக இருக்க வேண்டும். அதுதான் லட்சியமாக திகழ வேண்டும்.
பெர்னாட்ஷாவின் உழைப்பு
இருபது வயது கூட நிரம்பாத இளைஞன் ஒருவன் ஒன்பது ஆண்டு கதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றை எழுதி குவித்தான். அவன் எழுதிய அத்தனை படைப்புகளும் பத்திரிகையில் வெளிவராமல் வீட்டிற்கே திரும்பின. ஆனாலும் மனம் தளராமல் எழுதி மீண்டும் அனுப்பினான். அவனது விடா முயற்சியால், படைப்புகள் இதழ்களில் வெளியாகின. கோடிக்கணக்கில் பொருள் ஈட்டி உலகப்புகழ்பெற்றான். அவன்தான் உலகம் புகழும் ஆங்கில இலக்கிய மேதை பெர்னாட்ஷா.ஏழை வீட்டு மகனாக பிறந்து, வறுமையில் வாடிய தாமஸ் ஆல்வா எடிசன், படிப்பிற்கு வழியின்றி ரயிலில் செய்தித்தாள் விற்று வாழ்ந்து வந்தான். தன் கூரிய அறிவு, விடா முயற்சி, உழைப்பால் தானே செய்தித்தாளை அச்சிட்டு வளர்ச்சி பெற்றான். உணவு, துாக்கத்தை மறந்து 21 நாட்கள் இரவு, பகலாக கடுமையாக உழைத்து தான் மின் விளக்கு' கண்டுபிடித்து நமக்கு தந்தார்.உருளைக்கிழங்கை வெயிலில் உலர்த்தும் கூலியாக வாழ்ந்த ராக்பெல்லர் தம் தளராத உழைப்பால் உலகின் மிகப்பெரிய பணக்காரராக விளங்கினார். அவரிடம் தங்கள் முன்னேற்றத்திற்கான ரகசியம் என்னவென்று கேட்டபோது அவர் சொன்ன பதில் கடுமையான உழைப்பு, என்பது தான்.
ஒரு கதை
அரசன் ஒரு நாள் வேட்டையாட சென்றிருந்தான். பயண வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் ஓரிரவு தங்கினான். அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என எண்ணிக்கொண்டு, வீட்டில் தங்க அனுமதி அளித்தனர். அரசன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி நுால் நுாற்க தொடங்கினான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியிடம், 'இது என்ன உனது இடது கையில் கயிறு' என்று கேட்டான். 'தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது; குழந்தை அழுதால் இதை இழுப்பேன்' என்றான் நெசவாளி நுால் நூற்றுக்கொண்டே. அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. “இந்த குச்சி எதற்கு” எனக் கேட்டான் அரசன். 'வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள். இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்புக் கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது' என்றான்.
இடுப்பில் மணி
அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். “இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்” எனக் கேட்டான் அரசன். 'வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க. இந்த மணியை ஒலித்தால் போதும் ஓடிவிடும்' என்று பதில் சொன்னான். அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது. நெசவாளியைப் பார்த்து, “அவர்கள் என்ன செய்கிறார்கள்” என்று கேட்டான் அரசன். 'நுாற்பு வேலை செய்யும் போது வாய் சும்மா தானே இருக்கிறது. அதனால் அவர்களுக்கு எனக்கு தெரிந்த பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்' என்றான். “அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்? உள்ளே வரலாம் தானே” எனக் கேட்டான் அரசன். அதற்கு நெசவாளி சொன்னான், “அவர்கள் காது தான், நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது”, ஆகவே அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணைக் குழைத்து தரும்படி செய்திருக்கிறேன். என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றைக் குழைத்துக் கொண்டு இருப்பார்கள் என்றான். ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்ய முடியுமா? என அரசனுக்கு வியப்பு தாங்க முடியவில்லை.நெசவாளி சொன்னான், “இது மட்டுமல்ல என் மனைவி கிரேக்கத்துப் பெண். ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்க சொற்களை சிலேட்டில் எழுதி வைப்பாள். வேலை செய்து கொண்டே அதையும் கற்று வருகிறேன்.
”நிம்மதியான வாழ்வு
ஒருவன் விரும்பினால் ஒரே நேரத்தில் கற்றுக் கொள்ளவும், கற்றுத்தரவும், வேலை செய்யவும், வீட்டைக் கவனிக்கவும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி. நமது சோம்பேறி தனத்திற்கு எப்போதும் காரணம் கற்பித்துக் கொண்டிருக்காமல், தொடர்ச்சியான உழைப்பை தந்து, தோல்விகளை துரத்துவோம்.உழைப்பே உயர்வினைத் தரும். அதுவே நிம்மதியான, நிலையான, சந்தோஷமான வாழ்க்கையை தரும்.