03/08/2021
Covid 19 & Diabetes:
( கோவிட் தொற்றும், சர்க்கரை நோயும்)
1. சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக அளவில் கோவிட் தொற்று வருமா?
இல்லை. அவ்வாறு வரும் என்று எந்த ஆய்வு முடிவுகளும் இல்லை. ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு கோவிட் தொற்று வந்தால், அதிக பாதிப்பு வரும் என தெரிகிறது. அதுவும் சர்க்கரை அளவு கட்டுப்பாடு அற்று இருக்கும் நோயாளிகளுக்கு பாதிப்பு அதிகம். அதிக அளவு சர்க்கரையானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, வைரஸ் உடன் போராடி வெற்றி பெறும் ஆற்றலை குறைத்துவிடுகிறது. அதோடு மட்டுமில்லாமல், கட்டுப்பாடற்ற சர்க்கரையானது Diabetic ketoacidosis மற்றும் Sepsis போன்ற சிக்கல்களையும் உருவாக்குவதால், அதிதீவிர நோய் தொற்றும் அதனால் உயிரிழப்புகளும் அதிகமாகிறது.
2. எனக்கு சக்கரை நோய் இருந்தால், கோவிட் நோய் தொற்று வராமல் எப்படி தற்காத்துக் கொள்வது?
a. சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். (HbA1C அளவு 6க்கு கீழ் இருக்க வேண்டும்)
b. தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம். டைப் 1& 2 என இருவகையான டயாபட்டீஸ் உள்ளவர்களும் தடுப்பூசி கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும்.
c. சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது மற்றும் சுத்தமான நடைமுறைகள் ஆகியவற்றை கவனமாக பின்பற்ற வேண்டும். மற்றவர்களைவிட சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் முக்கியம்.
3. சர்க்கரை நோயாளிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? அதில் ஏதாவது சிக்கல் வருமா?
கிடைக்கும் 3 தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றை சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும். அதில் எந்தவித சிக்கலும் இல்லை.
4. சர்க்கரை நோயாளியான எனக்கு கோவிட் வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?
a. உடனே உங்களுடைய மருத்துவரை அணுகுதல் வேண்டும். கோவிட் மட்டுமல்ல, எந்தவொரு நோய்த்தொற்றும் சர்க்கரை அளவை கட்டுப்பாடு இல்லாமல் ஆக்கும் தன்மை கொண்டது. ஆகவே அதற்கேற்றார்போல் சர்க்கரை மருந்தின் அளவை மாற்றுதல் வேண்டும். தேவைப்பட்டால் இன்சுலின் ஊசி எடுத்துக் கொள்ளும் நிலை வரலாம். சிறிது நாட்களுக்குப் பிறகு சர்க்கரை அளவைப் பொறுத்து மறுபடியும் மாத்திரைகளுக்கு மாறிவிட முடியும்.
b. தொடர் கண்காணிப்பும், சர்க்கரை அளவு கட்டுப்பாடும், கோவிட் நோய் தொற்றை வேகமாக குணப்படுத்திவிடும். எனவே முறையான கண்காணிப்பு அவசியம்.
5. கோவிட் தொற்றினால் சர்க்கரை வியாதி வருமா?
கோவிட் வைரஸானது இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை தாக்குகிறது என எந்த ஆய்வுகளும் இல்லை. நோய்த்தொற்றின் தீவிரத்தாலும்(stress of covid), அதி தீவிர நோய் தொற்றில் செலுத்தப்படும் ஸ்டீராய்டு ஊசிகளாலும் சிலர் pre-diabetes நிலையிலிருந்து diabetes நிலைக்கு செல்லலாம்(unmasking of previous diabetic phase).
ஆகவே நோய்த் தொற்றில் இருந்து வெளிவரும் நபர், முறையான உணவுக் கட்டுப்பாடுகளும், மிதமான உடற்பயிற்சியையும் எவ்வளவு விரைவில் தொடங்க முடியுமோ அவ்வளவு விரைவில் தொடங்க வேண்டும். உடல் எடையை பராமரித்தல் அவசியம். சிலருக்கு நோய்த்தொற்று சமயத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்து, டிஸ்சார்ஜ் சமயத்தில் சர்க்கரை அளவு நார்மலாக இருக்கும். அவ்வாறு நோய்த் தொற்றில் இருந்து வெளிவந்த நபர், ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது சர்க்கரை அளவை டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய் கட்டுப்பாடுடன் இருக்கும் நபருக்கு, கோவிட் நோய் தொற்றினால் ஏற்படும் பாதிப்பானது சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை போலவே மிதமாக இருக்கும் என்று உறுதியாக கூறமுடியும். எனவே சர்க்கரை அளவை கட்டுப்பாடுடன் வைத்திருப்பதில் கவனமாக இருங்கள். வெளியில் செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணியுங்கள். தடுப்பூசி தவறாமல் செலுத்தி கொள்ளுங்கள்.
மரு. கதிரவன்
3.8.21
Dr. Kathiravan MD(Gen Med), CCDiab, CCEBDM