11/12/2015
சென்னை: வெள்ள நிவாரண நிதியாக யாருக்கு ரூ.10 ஆயிரம், யாருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு: மழை வெள்ளத்தால் முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.5 ஆயிரமும், பகுதி சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.4,100ம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த நிவாரண நிதி உதவிகளை உயர்த்தி, முழுமையாக மற்றும் பகுதி சேதமடைந்த குடிசைகளுக்கு நிவாரண தொகையாக ரூ.5 ஆயிரமும், துணிகள், பாத்திரங்கள் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் இழப்புக்கான நிவாரண தொகையாக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
மேலும், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, சேலையும் வழங்கப்படும். பகுதி சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.4,100 நிவாரண தொகை ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு கூடுதலாக ரூ.900 கிடைக்கும். பாதிக்கப்பட்ட குடும்பங்களை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு முடிந்தவுடன் நிவாரண தொகை வழங்கப்படும்.
நிவாரண தொகை பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். வங்கி கணக்கில்லாதவர்களுக்கு உடனடியாக வங்கி கணக்கு துவக்கப்பட்டு, அந்த கணக்கில் நிவாரண தொகை வழங்கப்படும். அரிசி, வேட்டி, சேலை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும். நிவாரண தொகை, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.