
17/05/2025
“குபேரன் குஞ்சுமணி”(சிறுகதை)
எழுதியவர் ஏ.எல்.சூர்யா
பகுதி-11
Disclaimer : இக்கதையில் வரும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே..யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல.இது புனைந்து எழுதப்படும் கதை.அதே வேளையில் தனியார் கோயில் நடத்தி நன்றாக கல்லாக் கட்டும் போலி ஆசாமிகளை இக்கதை விவரிக்கும்.
விஜய் பணக்கார கடவுள் கோயிலில் பணி புரிந்த போது தீபாவளி வந்தது.சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு கோயில் தொடங்கிய புதிதில் அப்போது தீபாவளி பண்டிகை அன்று பணக்கார கடவுளை தரிசிக்க கூட்டமே இருக்காது மற்றும் யாருக்கும் சென்னைக்கு வெகு தொலைவில் கோயில் இருப்பதால் அவ்வளவாக மக்கள் மத்தியில் பெரியதாக பிரசித்தம் பெறவில்லை.அதற்குப் பின் கோயிலை பற்றி பல பத்திரிகைகளில் எழுதி மற்றும் பல சினிமா பிரபலங்கள் வந்து சென்ற பின்பு பண்டிகை நாட்களில் கோயிலில் ஏகமாக கூட்டம் எக்கித் தள்ளியது.
குறிப்பாக புதிய வருடம் தொடங்கும் நாள்,தீபாவளி,அட்சய திருதியை போன்ற விசேஷ நாட்களில் குபேரன் குஞ்சுமணியின் கோயிலுக்கு வந்து பணக்கார கடவுளை தரிசித்தால் செல்வம் பெருகும் என மக்கள் நம்பத் தொடங்கினர்.மக்கள் கூட்டம் வந்து அலை மோதினாலும் கோயில் சிறியதாக இருந்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் மக்கள் கூட்டத்தை சமாளிக்கத் திணறினர்.அதனால் அது போன்ற விசேஷ நாட்களில் போலீஸ் பந்தோபஸ்த் போடப்பட்டது.விஜய் பணி புரிந்த வருடம் தீபாவளி அன்று விடியற் காலை முதலே சமாளிக்க முடியாத கூட்டம் குவியத் தொடங்கியது.
சன் டிவியில் இருந்து ஒரு குழுவினரும் வந்து பணக்கார கடவுளுக்கு செய்யப்பட்டிருந்த பண அலங்காரத்தை படம் பிடித்து சென்றனர்.தீபாவளி அன்று பணக்கார கடவுள் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தார்.நான்கு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு இடம் கிடைக்காமல் பலர் திணறினர்.இந்து மத மரபுப்படி மார்வாடிகள் போன்றவர்கள் தீபாவளி அன்று புதிய கணக்கு தொடங்குவர்.அதே போல பலரும் தீபாவளி அன்று மகாலட்சுமிக்கு உகந்த பூஜைகள் செய்வார்கள்.இங்கே பணக்கார கடவுளுக்கு அதிதேவதை மகாலட்சுமி என்பதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டியும் வருவார்கள்.
பணக்கார கடவுள் கோயில் தொடங்கி மக்கள் மத்தியில் பிரசித்தம் அடைந்த பின்பு அதன் அருகில் உள்ள நிலத்தின் விலையும் பன்மடங்கு உயர்ந்தது.பலர் அங்கு நிலத்தை வாங்குவதற்கு முண்டியடித்தனர்.கோயில் தொடங்கிய போது அந்த இடம் ஒரு கிராமத்தைப் போலவே காட்சியளிக்கும்.ஆனால் அதன் அருகில் இப்போது பல வீடுகள் கட்டி குடி பெயர்ந்து உள்ளனர்.அதே போல விசேஷ நாட்களில் கோயில் அருகில் பலர் ரோட்டு கடை போடுவார்கள்.
தீபாவளியன்று குபேரன் குஞ்சுமணியின் முகம் மிகுந்த மகிழ்ச்சி அலையில் வீசியது.கோயிலுக்கு வெளியே ஒரு தெரு நெடுக பெருங்கூட்டம் பணக்கார கடவுளை தரிசிக்க காத்துக் கொண்டிருந்தது.பலர் கைக் குழந்தையுடன் வந்து உள்ளே அனுமதிக்குமாறு அங்கிருந்த போலீஸ்காரர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.விஐபிக்களும் சினிமா பிரபலங்களும் அங்கு அமைக்கப்பட்டிருந்த தனி வழியில் அனுமதிக்கப்பட்டனர்.கோயில் உள்ளே உள்ள கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் விற்று தீர்ந்து கொண்டே இருந்தது.குபேரன் குஞ்சுமணிக்கு நெருக்கமான நடன மாஸ்டரே ஒரு முறை கோயிலுக்கு வரும் கூட்டத்தை பார்த்து வாயைப் பிளந்தார்.
அவர் குபேரன் குஞ்சுமணியிடம் கோயில் இப்போது மிகுந்த வளர்ச்சி அடைந்து விட்டது என பாராட்டினார்.பணக்கார கடவுளை தீபாவளி அன்று பார்க்க வரும் கூட்டம் அடுத்து இரண்டு மூன்று நாட்கள் கழித்துத் தான் ஓயும். பணக்கார கடவுளுக்கு அர்ச்சனை டிக்கெட்டுகள் கொடுக்க முடியாத அளவிற்கு விற்றுத் தீர்ந்தன.அன்று விஜய் கண்களுக்கு பணம் எல்லாம் வெறும் காகிதத்தை போல காட்சியளித்தன.இப்போது எப்படி சினிமாவில் நகைச்சுவை நடிகராக நுழைந்த பரோட்டா சூரிக்கும் யோகி பாபுவுக்கும் பல கோடிகளில் சம்பளம் வாங்கும் அளவிற்கு ஜாக்பாட் அடித்ததோ அதைப் போல குபேரன் குஞ்சுமணிக்கு அவர் கனவிலும் எண்ணிப் பார்க்காத ஜாக்பாட் அடித்தது.
மூளைக்காரன் விஜய் அவனுடைய மாமா குஞ்சுமணியுடன் இருந்திருந்தால் கிட்டத்தட்ட குஞ்சுமணி சுமார் 2000 அல்லது 3000 கோடி ரூபாய்க்கு அதிபதியாகி இருப்பார்.ஆனால் விதி யாரை விட்டது.நடிகர் யோகி பாபு அடிக்கொரு முறை பணக்கார கடவுளை தரிசனம் செய்ய வருவார்.2012ஆம் ஆண்டு விஜய் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்தபோது நடிகர் யோகி பாபு கோயிலுக்கு வந்திருந்தார்.அப்போது யோகிபாபு சில படங்களில் மட்டுமே நடித்து கொண்டிருந்தார்.யாருக்குமே அவரை அவ்வளவாக தெரியவில்லை.
யோகி பாபுவும் குஞ்சுமணியை போலவே சினிமாவில் பெரிய இடத்திற்கு நாம் வருவோம் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.நீ எல்லாம் ஒரு ஆளு என்று பலர் அவர் மூஞ்சியில் அடித்தாற் போல கூட பேசி இருப்பார்கள்.அது தான் யாருக்கு தெரியும் ஒரு நாள் குப்பையும் கோபுரமாகும் என்பது.தீபாவளி அன்று விஜய் கோயிலில் சேரும் பணத்தை சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மூட்டை போல கட்டி அங்கு வீட்டில் உள்ள ஒரு அறையில் பத்திரப்படுத்தினான்.இரண்டு நாட்களுக்குப் பின் குபேரன் குஞ்சுமணியை அந்த அறைக்கு அழைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த பண மூட்டையை காண்பித்தான்.
இயல்பாகவே குஞ்சுமணி நக்கல் செய்வதில் வல்லவர்.அந்த மூட்டைகளை பார்த்து இதெல்லாம் அழுக்கு மூட்டை அழுக்கு மூட்டை என சிரித்தார்.அந்த அழுக்கு மூட்டைகளில் கிட்டதட்ட 10 லட்சம் ரூபாய் பணம் இருக்கும்.அந்த மூட்டைகளில் உள்ள பணத்தை விஜய் மேற்பார்வையில் கோயில் ஆட்களை வைத்து எண்ணிக் கொடுத்தான்.உண்டியல் பணத்தை எண்ணும் போது அவர்களை எவரேனும் ஒருவர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.அப்படி இல்லாதபட்சத்தில் சந்தடி சாக்கில் சிலர் ஆயிரம் 2000 ரூபாயை லவட்டி விடுவார்கள்.
அப்படி லவட்டி விடுபவர்களை வேலையை விட்டு குபேரன் குஞ்சுமணி தூக்கி விடுவார்.பத்து ரூபாய் நோட்டுக் கட்டுகள் தான் அதிகமாக சேரும்.அந்த ரூபாய் நோட்டுக்களை பணம் எண்ணும் எந்திரத்தில் எண்ணி கட்டு கட்டாக வைத்து விடுவார்கள்.உண்டியலில் போட்ட பணம் முழுவதையும் எண்ணி முடித்தவுடன் வங்கியில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு அவற்றை குபேரன் குஞ்சுமணி தொடங்கிய டிரஸ்ட்டில் சேர்த்து விடுவார்கள்.விஜய் குபேரன் குஞ்சுமணியின் கோயிலில் பணி புரிந்த போது ஆன்மீக ரீதியாக ஒன்றை உணர்ந்தான்.
கோயிலில் கிடைக்கக் கூடிய பணத்தால் அவன் மகிழ்ச்சியாக இல்லை.இலட்ச இலட்சமாக கோயிலில் கொட்டப்படும் பணம் ஒரு விதமான கெட்ட அதிர்வலையை அவனுக்கு ஏற்படுத்தியது.இதனால் சில சமயங்களில் கோயிலில் வேலை பார்ப்பதை வெறுப்பான்.விஜய் ஓரளவிற்கு நன்றாக படித்தவன்.அதே வேளையில் நல்ல கலைநயமும் கற்பனை வளமும் மிக்கவன்.அவனுடைய உலகம் பறந்து விரிந்தது.அவனுக்கு வாழ்க்கையில் புதுமையாக ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும்.பலர் போற்றும் அளவிற்கு வாழ்க்கையில் உயர்ந்து காட்ட வேண்டும் என்கிற முனைப்புடன் இருந்தான்.
இப்போது கிளி எப்படி கூண்டுக்குள் அடைக்கப்பட்டு பறக்க முடியாமல் தவிக்குமோ அதை போலவே அவன் உணர்ந்தான்.அவனுக்கு கோயிலில் இருந்து கொடுக்கப்படும் பணத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் போது வீட்டினில் அவனுக்கும் அவன் மனைவிக்கும் மிகப் பெரிய சண்டைகள் வெடிக்கத் தொடங்கியது.இதனால் முற்றிலுமாக அவன் மன நிம்மதியை இழந்தான்.இது ஏன் என சிந்தித்த போது கோவிலில் காணிக்கையாக சில செல்வந்தர்கள் போடலாம்.ஆனால் பெரும்பாலும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பலர் தான் காணிக்கை போடுவார்கள்.
அதாவது அந்த பணத்தை காணிக்கையாக அவர்கள் போடும் போது என்ன நினைத்துக் கொண்டு போடுவார்கள்.?இறைவா நான் கஷ்டத்தில் இருந்தாலும் பரவாயில்லை.ஆனால் இந்த பணத்தை நான் என்னுடைய கஷ்டத்திலும் உனக்கு காணிக்கையாக போடுகிறேன்.இந்த பணத்தைப் பெற்றுக் கொண்ட நீ என் வாழ்விற்கு ஒரு நல்வழியை காட்டு என வேண்டுவார்கள்.(தொடரும்)
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்.இக்கதை உங்களுக்கு பிடித்திருந்தால் பலருக்கும் பகிரவும்..வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
விரைவில் எங்களுடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சி அமையும்பட்சத்தில் இவர்களைப் போன்ற போலி ஆசாமிகளின் முகத்திரைகள் கிழித்து எறியப்படும்.பாரத் மாதா கி ஜெய்.மோடி கி ஜெய்..ஜெய்ஹிந்த்..