03/01/2017
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நிப்மெட் NIEPMD :
National Institute for Empowerment of Persons with Multiple Disabilities’ (NIEPMD).
மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக, மத்திய அரசால், சென்னை அருகில் முட்டுக்காடில் நடத்தப்பட்டு வரும் தேசிய நிறுவனம்தான், ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுடையோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம். அது ’National Institute for Empowerment of Persons with Multiple Disabilities’ (NIEPMD).
மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கென அரசு சார்பாகவும், அரசு சாராத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வாயிலாகவும் பல்வேறு நிகழ்ச்சிகளை நமது அரசு நடத்தி வந்தபோதும், ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுடையோரின் நலனுக்காகவும் அரசு ஏதேனும் செய்யவேண்டும் என்று தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தவண்ணம் இருந்தன. இதனை கவனத்தில் கொண்ட மத்திய அரசின் மாற்றுத் திறனாளி விவகாரங்கள் துறை, சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சகத்தின் சார்பில் 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் இந்த NIEPMD.
இந்தியாவிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுடையோரின் மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்ட முதல் நிறுவனம் இதுதான். அவர்களின் தேவைக்கான பயிற்சிகள் இங்கே வழங்கப்படுவதோடு, ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு பற்றிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முழுக்க முழுக்க மத்திய அரசு நிறுவனம் என்பதால், தங்களின் குழந்தைக்கு ஏதோவொரு குறைபாடு இருப்பதாக சந்தேகிக்கும் பெற்றோர், இங்கே ஒரு விசிட் அடித்து மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளலாம்.
பத்து ரூபாய் பதிவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அவ்வளவுதான்! மருத்துவ ஆலோசனைகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஏனைய பயிற்சி வகுப்புகள் எல்லாமே இலவசம்! இரத்தப் பரிசோதனை, சிடி ஸ்கேன் மாதிரியான வேறு வகையான பரிசோதனைகள் தேவைப்பட்டால், அதற்கும் குறைந்த அளவு கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அதுவும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள், வருமானச் சான்றிதழின் நகலைக் கொடுத்தால், பரிசோதனைகளுக்கன கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
அது என்ன ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு?
பொதுவாக மாற்றுத் திறனாளிகள் என்றால் – காது கேளாதவர், நடக்க முடியாதவர், பேச இயலாதவர் போன்றவர்களைத்தான் நம்மில் பெரும்பாலோர் நினைத்துக்கொண்டிருக்கிறோம். மாற்றுத் திறனாளிகள் என்ற ஒரே குடைக்குள் இவர்கள் வந்தாலும், குறைபாடுகள் பல்வேறு கிளைகளைப் பரப்பி நிற்கின்றது. அதில் ஒரு பிரிவினர்தான், ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகளுடையவர்கள் என்ற வகையினர். அதாவது, இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட குறைபாடுகள் ஒருவருக்கு இருந்தால், அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகளுடையவர்கள் பிரிவில் வருவார். இன்னும் எளிமையாகச் சொல்வதானால், கண் பார்வையின்மையோடு காது கேளாமை, மூளை முடக்குவாதத்துடன் கண் பார்வையின்மை, மனவளர்ச்சி குன்றியதுடன் பேசமுடியா நிலைமை, ஆட்டிசம், மூளை முடக்குவாதம் இப்படியான குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்போரை ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாட்டாளர்கள் என்று சொல்கிறார்கள். இவர்களின் மேம்பாட்டிற்கான பணிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது.
என்னென்ன துறைகள் உள்ளன?
ஆலோசனை மையம்.
மறுவாழ்வு மருத்துவம் (Rehabilitation Medicine)
பேச்சு, கேட்டல் மற்றும் தொடர்புக்கான பயிற்சி
கண் பார்வையோடு இணைந்த காது கேளாமை குறைபாட்டுக்குப் பயிற்சி
இயன்முறை மருத்துவம் மற்றும் செயல்வழி மருத்துவம்
0-3 வயதுடையோருக்கான ஆரம்பகால பயிற்சிகள்
புலனுணர்வு குறைப்பாட்டினைப் போக்கும் பயிற்சி
மாற்றுத் திறனாளிகளுக்கான சுயதொழில் பயிற்சி – ஆகிய பிரிவுகளின் கீழ், பாதிக்கப்பட்டோருக்கான பயிற்சி வகுப்புகள் தேர்ந்த நிபுணர்களைக் கொண்டு நடத்தப்படுகின்றன.
சிறப்புக் கல்விக்கான படிப்புகள்
இந்திய மறுவாழ்வு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்புக் கல்விக்கான படிப்புகள் இங்கே பயிற்றுவிக்கப்படுகின்றன. அஞ்சல் வழியான படிப்புகள் இல்லை. நேரடி வகுப்புகள் மட்டும் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள், தங்கிப் படிப்பதற்கு ஏதுவாக தங்கும் விடுதிகளும் கேம்பஸ் வளாகத்தினுள்ளேயே இருக்கிறது.
பி.எட் (சிறப்புக் கல்வி)
எம்.பில் (மருத்துவ உளவியல்)
சிறப்புக் கல்விக்கான பட்டயப்படிப்பு (ஆட்டிசம்)
சிறப்புக் கல்விக்கான பட்டயப்படிப்பு (காது மற்றும் பார்வைக் குறையுடையோர்)
சிறப்புக் கல்விக்கான பட்டயப்படிப்பு (மூளை முடக்குவாதம்)
சிறப்புக் கல்விக்கான பட்டயப்படிப்பு (ஆரம்பகால பயிற்சிகள்)
சான்றிதழ் படிப்பு: செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கு சாதனங்கள் பொருத்துதல்
மற்றும் குறுகியகால பயிற்சிகள் இங்கே கற்றுக்கொடுக்கப்படுகிறது.
தங்கும் வசதி உண்டு
சில குறைபாடுகளுக்கு, நீண்ட பயிற்சி வகுப்புகள் ஆரம்ப காலத்தில் தேவைப்படலாம். உள்ளூரில் இருப்பவர்கள் தினமும் வந்துசெல்லும் வாய்ப்பினைப் பெறுகின்றனர். ஆனால் வெளியூரில் இருந்து வரும் பெற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் இதே கேம்பஸில் தங்கியிருந்து பயிற்சிகள் பெற்றுக்கொள்வதற்கான தங்கும் குடில்களை அரசு அமைத்துக் கொடுத்திருக்கிறது. பிற இடங்களோடு ஒப்பிட்டால், மிகக்குறைந்த வாடகையே வசூலிக்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் வருபவர்கள் வருமானச் சான்றிதழின் நகலைக் காட்டினால், தங்குமிடமும் இலவசமாகவே ஒதுக்கப்படுகிறது.
இலவசப் பள்ளி
ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுடைய குழந்தைகளுக்கு என ஒரு சிறப்புப்பள்ளியும் இந்த கேம்பஸில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, அவரவர் தகுதியும் திறமைக்கும் ஏற்ப பாடதிட்டங்கள் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டு போதிக்கப்படுகின்றன. நகரத்திற்கு வெளியே இருப்பதால், பள்ளிக்கு மாணவர்களை அழைத்துவர இலவச வாகன வசதியும் இங்கே உண்டு. இவ்வாகனம் தற்போது வேளச்சேரி வரை வந்து செல்கிறது.
மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சிறந்த இணையதளம் உருவாக்கியதற்கான தேசிய விருதை 2011ம் ஆண்டும், மாற்றுத் திறனாளிகள் தங்கு தடையின்றி செல்லும் வகையில் சிறந்த உட்கட்டமைப்பில் கட்டிடங்கள் உருவாக்கியதற்கான தேசிய விருதினை 2012ம் ஆண்டும் பெற்றுள்ளது NIEPMD.
குழந்தைகளுக்குப் பயிற்சிகளும், வாழ்க்கையில் பிழைத்துக்கொள்ள தொழிற்கல்வியும் அளிப்பதோடு நின்றுவிடாமல், சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்க்கு ஆலோசனைகளையும், வீட்டில் வைத்து குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டிய பயிற்சிகளையும் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பது உண்மையில் மிகப்பெரிய காரியம்!
முகவரி:-
ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுடையோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் (NIEPMD)
ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுடையோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் (NIEPMD)
National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)
கிழக்கு கடற்கரைச் சாலை, முட்டுக்காடு, கோவளம் அஞ்சல், சென்னை- 603112.
தொலைபேசி எண்கள்: 044 – 27472113, 27472046
தொலை நகல்: 044 – 27472389
மின்னஞ்சல்: niepmd@gmail.com
இணையதளம்: www. niepmd.tn.nic.in
வேலை நாட்கள்: திங்கள் முதல் வெள்ளி வரை
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை.
விடுமுறை நாட்கள்: சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள்.
———————-
நன்றி: செல்லமே மாத இதழ்(பிப்ரவரி 2015)
படங்கள்: நிப்மெட் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது
This entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம் and tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், நிப்மெட், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, educational therapies, NIEPMD, sensory problems, speech therapy. Bookmark the permalink.