27/11/2025
புதிய எண்ணங்களையும் சிந்தனைகளையும் உருவாக்குங்கள்
இது எவ்வளவு சாத்தியம்? இளமையில் ஆழ்மனம் என்கிற ஒன்று பெரியதாக உருவாகாமல் இளமையின் பொலிவோடு இருக்கையில் புதிய பல ஆக்கங்கள் தோன்றுகின்றன. புத்துயிர்ப்போடு வரும் கலைஞர்கள், சிந்தையாளர்கள் ஏராளம். ஆனால் பலரும் வயது ஆக ஆக எதோ ஒன்றை இழக்கிறார்கள். புதியதாக எதோ செய்வதாக, கற்பதாகக் கருதுகிறார்கள். ஆனால் அவர் அனுபவம் எனும் பெயரில் பழையதை தனது உள்தன்மையில் தனது அடையாளத்தோடு ஆழமாகப் பொருத்திக்கொண்டு அப்பிடியிலிருந்து, அப்போதிருந்த ஏதோவொரு அறியாமையிலிருந்து, அறிதல் பாங்கிலிருந்தும், கற்றல் பாங்கிலிருந்தும் வெளியேறாமல் புதியதைக் கற்க முயலும்பொழுது புதியதுபோலத் தெரிந்தாலும், பழைய மனதின் மொழியாகவே அது இருக்கும். அந்த இடைவெளியைக் குறைத்தவர்களே சிறந்த படைப்பாளிகள்.
ஒருவர் கற்கும் செய்தி,தகவல் இவையெல்லாம் புதியதுதான். ஆனால் கற்கும் அல்லது முயலும் ஆள்? ஆழம்? அடர்த்தி? உணர்வு வளம்? அகவிழிப்பு? இதனையெல்லாம் பலரும் கவனிக்காததால்தான் monotonous ஆகி வழக்கொழிகிறார்கள். திறமையாளர்கள் பலர் எடுபடாமல் போக இதுவே காரணம். சோசியல் மீடியா பிரபல்யத்திற்காக, அறிவியல் உலகு கொடுக்கும் வெளிச்சத்திற்காக, சினிமா புகழுக்காக என ஒருவர் புதியதாக ஒன்றை கண்டுபிடிக்கிறார், அல்லது உருவாக்குகிறார்.
நாம் இரண்டு வகையான காலத்தில் வாழ்கிறோம். ஒன்று க்ஷண காலம் (kṣaṇa kālam) - விரைவாக மாறும், trends-ஐ உருவாக்கும் நொடிகளின் காலம். மற்றொன்று மஹா காலம் (mahā kālam) - ஆழமான மாற்றத்தின், சத்யத்தின் காலம். சில நாட்கள், மாதங்கள், சில வருடங்கள், பல வருடங்கள் என் நீளும். 2000 வருடங்களாக புதியதாய் நிற்கும் இலக்கியங்கள், பாடல்கள், இசை இவை இதன் காட்டுகள்.
குறுகிய காலப் பிரபல்யங்கள் (10 வருடங்களுக்கு உள்ளானவை என நான் கருதுகிறேன்) க்ஷண காலத்தில் இயங்குகின்றன. ஆனால் உண்மையான கற்றல், சாதனை, தவம் - இவை மஹா காலத்தில் பழுக்கின்றன. இந்நிலையில் உள்ளோர் தனக்குள்ளே தன்னை புதுப்பிக்கும் ஒரு பண்பினை பெற்றுள்ளனர். அப்படியான மன அமைப்பு அவர்களிடம் இருப்பதை நாம் ஊன்றிப்பார்த்தாலொழியத் தெரியாது.
கர்ம யோகத்தின் பார்வை:
பகவத் கீதை சொல்கிறது: "கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன" - உங்கள் உரிமை செயலில் மட்டுமே, பலனில் அல்ல.
Trending, பிரபல்யம், பணம் இதெல்லாம் ஒரு பலன், ஒரு வெளிப்புற அங்கீகாரம். திறமை வளர்ப்பது, கற்றல் என்பது செயல். பலனை எதிர்பார்த்து செயல் செய்யும்போது, நாம் வெளி உலகத்தின் அலைகளில் அலையும் படகாக மாறுகிறோம். இது போக்கிடம் இல்லாமல் அல்லாடும். மக்கள் எளிதில் இதனை விட்டு நகர்ந்து விடுவர்.
பெரும்பாலும் ரஜோ குணம் - அதிக இயக்கம், உணர்ச்சி, உந்துதல், இலட்சியம், உத்வேகம் என எதனைக்கொண்டேனும் வெளிமுகமாக, பலனைக் கருதி நகரும். ஆனால் ஆழமான கற்றல்/கல்வி என்பது சத்வ குணம் - அமைதி, நிலைத்தன்மை, உண்மை, பலன்களில் மையங்கொள்ளாமை என நிற்கும். இன்றைய உலகம் ரஜஸை வணங்குகிறது. சத்வம் "boring" ஆகத் தெரிகிறது, ஏனென்றால் அது உடனடி உணர்ச்சிக் கிளர்ச்சியை, அகந்தை வருடலைத் தருவதில்லை.
நீங்கள் உங்கள் கலையில், உங்கள் கற்றலில் மூழ்கி இருக்கும்போது, நீங்கள் ஏற்கனவே பரம்பொருளுடன் இணைந்திருக்கிறீர்கள். Trendக்கு, புகழுக்கு, ஆசைக்கு, அச்சத்துக்கு அலைபாய்வது, ஏங்குவது என்பது அந்த இணைப்பை மறந்து, மாயையை நோக்கி திரும்புவது.
தற்காலிகப் புகழ் என்பது காற்று போல - வந்து போகும். திறமை என்பது வேர் - ஆழமாக, நிலையாக வளரும். மரம் தனது வேர்களை பற்றி கவலைப்படுவதில்லை, வெளியே காட்டிக்கொள்ளவதில்லை. அது தனது தர்மத்தை செய்கிறது, பருவத்தில் பூக்கிறது. மரத்தை அதன் தன்மையறிந்து புகழ்வோர் சிலரேயாயினும் மரம் தனது வேர்களை பற்றி கவலைப்படுவதில்லை, வெளியே காட்டிக்கொள்ளவதில்லை.