13/03/2023
கண்நீர் அழுத்த உயர்வு குழந்தைகளுக்கும் ஏற்படுமா?
( உலக கண்நீர் அழுத்த உயர்வு வாரம் - மார்ச்சு 12 - 18 )
---
இராசேந்திரனுக்கு அடிக்கடி தலைவலி. அப்போதைக்கு தலைவலி மாத்திரை போட்டுவிட்டு வேலையைப் பார்ப்பார். தினசரி கூலி வேலை கடுமைதான். அதிக களைப்பின் காரணமாக தலைவலி வருவதாக நினைத்துக் கொள்வார். ஆனால் இந்த தலைவலி வரவர அவருக்கு பெரிய தலைவலியாக மாறியதால் வேறு வழியில்லாமல் அவர் ஊர் கிராம செவிலியரிடம் சொல்லவே அவர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரச் சொல்லி மருத்துவரிடம் பார்க்கச் செய்தார்.
கிராம சுகாதார நிலையத்தில் அவருக்கு கண்ணில் அழுத்தத்தை சோதித்து பார்த்ததில் அழுத்தம் அதிகரித்திருந்தது தெரிய வந்தது. பார்வையும் குறைவாகவே இருந்தது. எனவே மேல் பரிசோதனைக்கு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு செல்லும்படி மருத்துவர் பரிந்துரைத்தார். கண்நீர் அழுத்த அதிகரிப்பால் ( Glaucoma ) பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு ஏற்கனவே 40 விழுக்காடு அளவுக்கு பார்வையிழப்பு ஏற்பட்டு விட்டதாக தலைமை மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள். இதில் பிரச்சினை என்னவென்றால் இழந்த பார்வையிழப்பினை மீண்டும் சரிசெய்ய முடியாது. இனிமேல் மருத்துவம் செய்து கண்நீர் அழுத்தத்தை கட்டுப்படுத்தி மேற்கொண்டு பார்வை பாதிக்காமல்தான் செய்ய முடியும். சுயமாக வலி நிவாரண மாத்திரையை நீண்ட நாட்கள் சாப்பிட்டுக் கொண்டு இருந்ததால் தொடக்க நிலையிலேயே அழுத்தத்தை கண்டுபிடிக்கும் வாய்ப்பினை அவர் இழந்துவிட்டார்.
கண்நீர் அழுத்தத்தில் உள்ள சவால்கள்
பிற நோய்கள் போன்று கண்நீர் அழுத்தம் எந்தவித அறிகுறிகளையும் பொதுவாக வெளிப்படுத்துவதில்லை. இதுதான் இந்நோய் முன் இருக்கும் மிகப்பெரிய சவாலே. எனவே ஆரம்ப நிலையில் இந்நோய் இருப்பதை கண்டறிவதில் பிரச்சினை இருக்கவே செய்கிறது. இதனால் நோய்த்தாக்கம் ஏற்பட்டு பார்வை பாதிக்கப்பட்ட பின்னரே மருத்துவமனையை நாடும் நிலை ஏற்படுகிறது.
கண்நீர் அழுத்த உயர்வு பிரச்சினை பெரும்பாலும் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே ஏற்படுகிறது. எனவே இந்த வயதில் கண்ணில் எந்த பிரச்சினை இல்லாவிட்டாலும் ஒருவர் தாமாக முன்வந்து கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இது ஆண்டுக்கு ஒருமுறை தொடர வேண்டும். ஒருவேளை அழுத்த அதிகரிப்பு இருந்தால் தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை செய்ய வாய்ப்பாக இருக்கும். உடலில் இரத்த அழுத்த பரிசோதனை பார்ப்பதுபோல் இதனையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
இருந்தாலும் விளக்கினைச் சுற்றி ஒளிவட்டம் தெரிந்தாலோ, அடிக்கடி தலைவலி வந்தாலோ, கண்கண்ணாடி லென்சு பவர் அடிக்கடி மாறி, கண்ணாடியை மாற்றும் நிலை ஏற்பட்டாலோ ஒருவர் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. பக்கப்பார்வையில் தடுமாற்றம் அடைந்தாலும் மருத்துவரிடம் செல்வது நல்லது.
கண்நீர் அழுத்தம் அதிகரித்து சிகிச்சை செய்து கொள்ளாமல் இருக்கும்போது பக்கப்பார்வை கடுமையாக பாதிக்கப்படும். குழாய் வழியாக பார்த்தால் எந்த அளவுக்கு பார்வை தெரியுமோ அந்த அளவுக்கு பார்வை தெரியும் நிலைகூட ஏற்படலாம் ( tubular vision ). ஒரே நாளில் இந்த நிலை ஏற்படாது. சிகிச்சை செய்யாது அலட்சியம் செய்யும்போதுதான் இந்த அளவு பாதிப்பு ஏற்படும். தொடக்க நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை செய்வதன் மூலம் இதை தடுத்துவிடலாம்.
குழந்தைகளுக்கு வருமா?
சில சமயங்களில் பிறந்த குழந்தைக்கு கண் பெரிதாக இருக்கலாம். பார்த்தாலே தெரியும். கண்ணின் கருவிழி இயல்புக்கு மாறாக பெரிதாக இருக்கும். இதற்கு புப்தால்மஸ் ( buphthalmos ) என்று பெயர். கண்ணின் கருவிழி ( cornea ) வெளிறிப்போயும் இருக்கலாம். கண்பரிசோதனை செய்து அழுத்த உயர்வு இருப்பதை உறுதிப்படுத்துவார்கள். கண் பெரிதாக இருப்பதால் முன் கண் அறையில் உற்பத்தியாகும் திரவம் வெளியாவதில் தடை ஏற்பட்டு தேக்கம் அடைந்து அழுத்தம் அதிகமாகும். இதற்கு ஒரு எளிய அறுவை சிகிச்சை செய்து திரவம் எளிதில் வெளியேற வழி செய்யப்படும். இதன் மூலம் அழுத்தம் குறைக்கப்படும். தேவைக்கு ஏற்ப சொட்டு மருந்தும் போட வேண்டிவரும்.
மருத்துவமனையில் அந்த குழந்தையின் அம்மா சோகமாய் இருந்தார். பக்கத்தில் மூன்று வயதில் குழந்தை. ‘சார், இடையில் இரண்டு மாதமாக சொட்டுமருந்து போட முடியவில்லை, தற்போது பிள்ளைக்கு பிரச்சினை அதிகமானதுபோல் இருக்கிறது’ என்று மருத்துவரிடம் வருத்தப்பட்டார்.
பிறந்ததில் இருந்தே அந்த குழந்தைக்கு பிரச்சினைதான். ஆனால் முறையான தொடர் பராமரிப்பு கவனிப்பு கிடையாது. பாதிப்பு கடுமையாகும்போது பதறிக் கொண்டு மருத்துவரிடம் ஓடுவார்கள். அப்போது மட்டும் வருந்துவதோடு சரி. அப்புறம் அவ்வளவுதான்.
பிள்ளைகள் வளர வேண்டியவர்கள். பெற்றோர், பிரச்சினையின் தீவிரத்தை முழுவதுமாக புரிந்துகொண்டு மருத்துவர் சொல்கிறபடி பிள்ளைக்கு மருந்து போடவேண்டும். பிள்ளைகளை தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரவேண்டும். வாழ்நாள் கவனிப்பு தேவை. குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினையை பொறுத்த வரையில் தொடக்க நிலை கண்டுபிடிப்பு, முறையான தொடர் சிகிச்சை, கவனிப்பு அவசியம்.
பெரிய கருவிழி இருந்தால் கண்நீர் அழுத்த உயர்வு இருக்க வேண்டும் என்பதில்லை. புப்தால்மஸ் போன்று மெகலோ கருவிழி ( Megalocornea ) என்ற நிலையிலும் கருவிழி பெரிதாகத்தான் இருக்கும். ஆனால் கண் பரிசோதனை செய்து பார்த்தால் அழுத்த பாதிப்பு ஏதும் இருக்காது. மருத்துவர் பரிசோதித்து உறுதிப் படுத்துவார். எனவே மெகலோ கருவிழியைப் பற்றி கவலைப்படவேண்டியதில்லை.
நாம் ஒரு பொருளைப் பார்க்கிறோம். இந்த செய்தியை மூளைக்கு கடத்துவது கண்ணின் பார்வை நரம்புகள்தாம். கண்நீர் அழுத்த உயர்வில் பார்வை நரம்புகள் கெட்டுப்போய்விடும். இது செடி பட்டுப்போவதற்கு சமம். எப்படி செடி பட்டுப்போனால் அதை ஒன்றும் செய்ய முடியாதோ, அதேபோல் பார்வைநரம்புகள் ஒருமுறை கெட்டுப்போனால் மீண்டும் சரி செய்ய முடியாது. எனவே அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முக்கியம்.
பிறந்த குழந்தை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் சில நாட்களுக்கு பிறகு கண்ணில் பிரச்சினை ஏதாவது இருப்பதாக அய்யப்பட்டால் உடனே மருத்துவரிடம் செல்வது நல்லது. மூன்று வயதில் ஒருமுறையும் பள்ளியில் சேர்க்குமுன் ஒருமுறையும் குழந்தைக்கு கண்பரிசோதனை கட்டாயம் செய்வது நல்லது. ஏதாவது பிரச்சினை இருந்தால் தொடக்க நிலையிலேயே கண்டறியவும், முறையான சிகிச்சை செய்து கொள்ளவும் வாய்ப்பாக இருக்கும்.மேலும் தொடர்புக்கு . 9884119900