03/06/2024
கலைஞரின் தொலை தூரப் பார்வை!
தமிழ்மகன்
கலைஞரின் தொலைநோக்குப் பார்வைக்கு பல உதாரணங்கள் சொல்லலாம். தொலை தூரத்தை அவர் பார்த்த பார்வை ஒன்றையே அவருடைய தொலை நோக்குப் பார்வைக்கு சான்றாக சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நகர விரிவாக்கம் குறித்து அவருடைய தொலைநோக்குப் பார்வை அதிலே முக்கியமானது. பூக்கடை பேருந்து நிலையம் இன்றைய உலகில் பலருக்கும் நினைவில் இருக்காது. அப்போதெல்லாம் அங்கிருந்துதான் தமிழகம் முழுமைக்கும் பேருந்துகள் புறப்படும். கொத்தவால் சாவடி, உயர் நீதிமன்றம், சைக்கிள் செல்வதற்கு வழியில்லாத குறுகிய சாலைகளில் நடக்கும் நெரிசல் வர்த்தகம் போன்றவை இன்றைக்கும் மலைப்பாக இருக்கும். மக்கள் எறும்பு போல ஊர்ந்து செல்லும் போக்கை அங்கே பார்க்கலாம். அங்கிருந்துதான் தமிழகம் முழுக்க பேருந்து புறப்படும். பேருந்து நகர்ந்து சென்று ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். பேருந்துகளை சற்றே வேகமாக செலுத்த வேண்டுமானால் அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர்களைக் கடக்க வேண்டும்.
இந்தக் கொடுமையைக் காண்கிறார் கலைஞர். பெரு நகர வளர்ச்சிக் கழகத்தை அணுகி, கோயம்பேடு என்ற பகுதியில் புதிய பேருந்து நிலையத்தையும் காய்கறி மொத்த விலை கடையையும் தொடங்குவதாக கலைஞர் முடிவு செய்தார்.
அப்போது பலரும் கேட்ட கேள்வி எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
``கோயம்பேடு என்ற ஊர் எங்கே இருக்கிறது?’’
``அங்கே பேருந்து நிலையத்தை வைத்தால் எப்படி செல்வது, அங்கு செல்வதற்கு பஸ் வசதி உண்டா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் சென்னைக்கு அருகே உள்ள கோயம்பேடு கிராமத்தில் குறுங்காலீசுவரர் கோயில் பற்றி ஒரு கட்டுரை வெளியானது. `சுற்றிலும் வயல்களும் எரிகளும் குளங்களும் சூழ்ந்த இயற்கையான சூழலின் நடுவே அமைந்திருக்கிறது குறுங்காலீசுவரர் கோயில்’ என்று தொடங்கும். அங்குதான் புதிய பேருந்து நிலையத்துக்குத் திட்டமிட்டார் கலைஞர்.
கலைஞர் இந்த திட்டத்துக்கு வித்திட்டது 1974 ஆம் ஆண்டு. அடுத்த ஆண்டிலேயே அவருடைய ஆட்சி எமர்ஜென்சி காலத்தில் கலைக்கப்பட்டது. அடுத்த 13 ஆண்டுகள் எம்ஜிஆர் தமிழகத்தில் முதலமைச்சராக இருந்தார். அந்தத் திட்டம் அப்படியே கைவிடப்பட்டது. மீண்டும் 1989 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி வந்ததும் பூக்கடை பேருந்து நிலையத்தின் பரிதாப நிலையை கணக்கில் கொண்டு மீண்டும் கோயம்பேடு பேருந்து திட்டத்தை வேகமாகத் தொடங்கினார். திட்டம் தொடங்கிய அடுத்த ஆண்டிலேயே மீண்டும் ஆட்சி கலைப்பு. அடுத்து ஜெயலலிதா ஆட்சி. அவரது ஆட்சியில் கோயம்பேடு பேருந்து நிலையமும் காய்கறி மொத்த வியாபார நிலையமும் தொடங்கப்பட்டன.
கலைஞர் 74 இல் தொடங்கிய திட்டம் 94 இல் ஒரு வழியாக நிறைவேற்றி முடிக்கப்பட்டது. கோயம்பேடுக்கு எங்கே இருக்கிறது அந்த கிராமத்துக்கு எப்படி செல்வது என்று கேட்டவர்கள் எல்லாம் இப்போது கிளாம்பாக்கம் எங்கே இருக்கிறது அந்த ஊருக்கு எப்படி செல்வது என்று கேலி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு நகரம் வளர்வதை தொலைநோக்கோடு சிந்தித்து செயல்படுத்த வேண்டியது முக்கியம்.
கலைஞர் குடிசை மாற்று வாரியம் தொடங்கிய போதும், ரேஷன் கடை தொடங்கிய போதும், கை ரிக்ஷாவை ஒழிக்க நினைத்தபோதும், உழவர் சந்தை - சமத்துவபுரம் - டைடல் பார்க் போன்றவற்றைத் தொடங்கிய போதும் அதனால் ஏற்படும் நன்மையை அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் காலத்தில் பலரும் நம்பிக்கை இல்லாமல் தான் எதிர்கொண்டார்கள்.
கலைஞர் காலத்தை கடந்து யோசிப்பவராக இருந்தார். அதனால்தான் ஒரு பக்கம் டைடல் பார்க், இன்னொரு பக்கம் சமத்துவபுரம் என்று அவரால் யோசிக்க முடிந்தது. ரயில் பாதை சந்திப்பு, ஆறுகள் கடக்க வேண்டிய பாதையில் மட்டும்தான் பாலங்கள் காட்டுகிற நடைமுறை இருந்த காலத்தில் இரண்டு சாலைகள் சந்திக்கிற இடத்தில் பாலம் கட்ட வேண்டும் என்று யோசித்தவர் கலைஞர். சென்னையின் அண்ணா மேம்பாலம் அப்படி உருவாக்கப்பட்டதுதான். அப்போதும் அங்கே எதற்கு பாலம் என்று கேட்டவர்கள் இருந்தார்கள். இப்போது பொன்விழா கண்டிருக்கும் அண்ணா மேம்பாலத்தைத் தவிர்த்துவிட்டு சென்னையை நினைத்துப் பார்க்க முடியுமா?
தமிழகத்துக்கு புதிய அடையாளங்களை உருவாக்குவதில் கலைஞர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் சாதாரணமானவை அல்ல. பாலர் திரையரங்கை கலைவாணர் அரங்கம் என்று மாற்றினார். கடற்கரையில் அண்ணாவுக்கு நினைவிடம் எழுப்ப வேண்டும் என்று அவர் நினைத்ததுகூட ஒரு மகத்தான சாதனைதான். சென்னை பல்கலைக்கழகத்திற்கு எதிரே நடமாடும் பல்கலைக்கழகமாக இருந்த அண்ணாவுக்கு நினைவிடம் எழுப்பினார். கன்னியாகுமரியில் கடலின் பாறையில் விவேகானந்தருக்கு ஒரு மண்டபம் இருக்கிறது. அதை விவேகானந்தர் பாறை என்றுதான் அழைத்து வந்தார்கள். இப்போது அந்த இடத்தை அய்யன் திருவள்ளுவர் சிலை என்று உச்சரிக்க தொடங்கி இருக்கிறார்கள். எழிலகம், குறளகம், வள்ளுவர் கோட்டம், சீரணி அரங்கம், தொல்காப்பிய பூங்கா, அறிவாலயம், அன்பகம், பூம்புகார், அண்ணா நூலகம் என அவர் ஏற்படுத்திய அடையாளங்கள் தமிழருக்கான அடையாளங்கள், தமிழுக்கான அடையாளங்கள். ஏறத்தாழ 20 ஆண்டுகள்தான் அவர் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தார். அதற்குள் அவர் செய்த சாதனைகள், சமூகத் திட்டங்கள், பெண்களுக்கான உரிமைகள், சொத்துரிமை, கல்வி சமத்துவம், எழுப்பிய கல்விக் கூடங்கள், உருவாக்கிய பஞ்சாயத்துகள், மாநில உரிமைக்கான போர்க் கொடிகள் போன்ற அனைத்துமே இன்றும் கூட இந்திய அளவில் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகின்றன.
இந்தியாவில் பல மாநில கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்றன. ஆனால் கலைஞர் தலைமையிலான ஆட்சி மாநில தலைவர் அந்தஸ்துக்கான ஆட்சி அல்ல. பீகார், ஒடிசா, உத்தர பிரதேசம், ஆந்திரா, பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அந்த மாநில கட்சிக்கான முதல்வர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மாநில உரிமைக்கான உரிமையை பேசுகிறவர்களாக இருக்கிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மாநில உரிமைக்கான ராஜமன்னார் கமிஷன், செம்மொழி அந்தஸ்துக்கான போராட்டம், பெண் உரிமைக்கான போராட்டம், தாய் மொழி கல்வி, இரு மொழிக் கொள்கை, இட ஒதுக்கீடு போன்ற பல சமூகப் பிரச்சினைகளில் நாம் எடுத்திருக்கும் அக்கறையை மற்ற மாநில முதல்வர்களின் செயல்பாடுகளில் பார்க்கவே முடியாது. தெலுங்கு, கர்நாடகா, பீகார், ஓடிசா போன்ற மாநிலங்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் இல்லை. மாறாக இந்தியைப் படிக்கிறார்கள். சமீபத்தில் பீகாரில் நிதீஷ்குமார் அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர் பிகாரி மொழியை சேர்ந்தவர். ஆனால் இந்தி படிப்பது நல்லது என்று பேசுகிறார். அப்படித்தான் ஒடிசா முதல்வரின் நடவடிக்கையும் இருக்கிறது. குஜராத் மாநிலம், இந்தி மொழியை எதிர்க்கிற, இட ஒதுக்கீட்டை, மாநில உரிமையை கோருகிற ஒரு மாநிலமாக ஒருபோதும் இருக்கவில்லை.
ரீஜினல் பார்ட்டிஸ் என்று ஆங்கிலத்திலே பொதுவாக சொன்னாலும் அவையும் தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டவைதான். அங்குள்ள ஒரு தலைவர் அங்கே ஆளுகிறார், அவ்வளவுதான். அதனால்தான் தமிழகத்தைப் பார்த்து பல மாநிலங்களில் 50, 60 ஆண்டுகள் கழித்தும் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.
தொலை நோக்குப் பார்வையில் திட்டங்களை வகுப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதே பார்வை அதனால் பயனடையப் போகிறவர்களுக்கும் இருக்க வேண்டும். இல்லையென்றால் மரம் வைக்கும்போது எதற்கு இப்போது மரம் என்று கேட்பார்கள். அது கனி தரும் காலம் வரும்போதுதான் அதன் பலனை உணரக் கூடியவர்களாக இருப்பார்கள். அதனால் கலைஞரின் திட்டங்களைப் புரிந்துகொள்ள 50 ஆண்டுகள் தேவைப் படுகிறது. உடனடி திட்டங்கள் மூலம் சோறு போடுவது, செருப்பு வழங்குவது போன்றவற்றால் மக்களை ஈர்ப்பது சுலபம். மீன் வழங்குவதைவிட மீன்பிடிக்கக் கற்றுத்தருவதுதான் நியாயமான ஆட்சியாளரின் கடமை. அதைத்தான் கலைஞர் தன் வாழ்நாள்எல்லாம் செய்தார்.
கொச்சையாக சொல்ல வேண்டுமானால் கலைஞரின் திட்டங்களைப் புரிந்துகொள்ள `வயசு பத்தாத’வர்கள் அவரை விமர்சித்தார்கள்.
அவருடைய அக்கறைக்கு ஒரு சான்று சொல்கிறேன். சிக்குன் குனியா வந்த நேரம் சித்த மருத்துவர்கள் விழா வேம்பு கஷாயத்தை அரசு பரிந்துரைக்க வேண்டும் என்றார்கள். கலைஞர் உடனே அறிவிக்கவில்லை.
கலைஞர் சித்த மருத்துவர்களை அழைத்துப் பேசினார். ``இதை குழந்தைகள் குடிக்கலாமா, கர்ப்பிணிகள் குடிக்கலாமா, முதியவர்கள் குடிக்கலாமா? எந்தெந்த வயதினர் எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும், எத்தனை நாள் அருந்த வேண்டும், பக்க விளைவு உண்டா என நூறு கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்ற பின்புதான் அதை அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தார்.
``நாங்களே யோசிக்காத சந்தேகங்களை எல்லாம் அவர் கேட்டது ஆச்சரியமாக இருந்தது’’ என்றார் அந்தக் குழுவிலே இருந்த மருத்துவர் கு. சிவராமன் அவர்கள். தான் செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டத்துக்கும் முழுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் அறிவு நாணயம் அவருக்கு இருந்தது. அதனால்தான் நீண்ட காலத் திட்டங்களுக்கு அவர் அதிக கவனம் செலுத்தினார். வயசு பத்தாத விமர்சகர்களால் ஆட்சி இழந்தபோதும் அவர் அதிகம் கவலைப்படவில்லை.