02/06/2023
#கற்ப_அவிழ்தம் சித்த மருத்துவ மாத இதழில் வாசகர்களின் ஐயங்களுக்கு நமது மருத்துவர் அருண் B.S.M.S.,அவர்கள் பதில் அளித்து வருகிறார்கள் அதில் ஒரு கேள்வியும், பதிலும்.
கேள்வி: டாக்டர் எனக்கு ஒரு சந்தேகம், போன மாதம் ஒரு கேள்விக்கான பதிலில் விருந்தும் மருந்தும் மூன்று நாள் தான் என்று குறிப்பிட்டிருந்தீர்கள் ,நாங்களாக மருந்து எடுத்துக் கொள்வது மூன்று நாட்களுக்கு என்று புரிந்து கொண்டேன். தங்கள் விளக்கம் தேவைப்படுகிறது.
பதில் : சரியான புரிதல் தான். தகவல்கள் நிரம்பிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரின் உள்ளங்கைக்குள்ளேயும் தகவல்கள் வந்து குவிந்து விடுகிறது. அதுவும் மருத்துவத் தகவல்கள் ஏராளம். தமக்கு வந்திருக்கும் மருத்துவத் தகவல்கள் உண்மை என்றே படித்தவர் முதல் பாமரர் வரை நம்பும் போக்கு பரவலாகக் காணப்படுகிறது. பத்து நாளில் இதனைச் செய்தால் உடற்பருமனைக் குறைக்கலாம், மூன்று மணி நேரத்தில் கல்லீரலைச் சுத்தம் செய்யலாம், ஐந்து நாளில் சிறுநீரக செயல் இழப்பைச் சரியாக்கலாம், என்பது போன்ற கவனத்தை ஈர்க்கும் வகையில் தலைப்பிட்டு வரும் தகவல்கள் அனைத்தும் விளம்பரத்திற்காகவும், வணிக நோக்கத்திற்காகவும் தான் என்பதை உணராமல் விட்டில் பூச்சிகள் போல விழுந்து உழல்பவர் பலர். நமக்கு வரும் நோய்களுக்கு நாமே மருத்துவம் செய்து கொள்ளக்கூடாதா என்கிற உங்களது எண்ணவோட்டம் புரிகிறது. நமக்கு நாமே மருத்துவம் செய்து கொள்வதற்கு ஒரு எல்லை உண்டு ! அதற்குத் தான் விருந்தும், மருந்தும் மூன்று நாள் என்ற வழக்கு மொழியைப் பயன்படுத்தினேன். நமக்கு வரும் சிறிய தொந்தரவுகளுக்கு (சளி, தலைபாரம், அரிப்பு போன்றவை) நமது குடும்ப வழக்கப்படி அல்லது நம்பகத் தன்மையான மருத்துவக்குறிப்புகளின் வழிகாட்டுதலின்படி நாமே மருத்துவம் செய்து கொள்ளலாம் தவறில்லை; பலன் இருந்தால் தொடரலாம். மூன்று நாட்கள் நாமே மருத்துவம் செய்தும் குணம் இல்லை எனில் உடனடியாக குடும்ப சித்த மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. அதே நேரத்தில் நீரிழிவு, அதிகுருதி அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, இரைப்பு, போன்ற நாட்பட்ட நோய்களுக்கு தொடக்கத்தில் இருந்தே குடும்ப சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பது இன்றியமையாதது.