29/12/2023
தமிழ் மருத்துவ கழக நூல்கள் - 2023
மனிதகுலம் மாண்புடன் செழித்து வாழ, இம்மண்ணில் தோன்றிய அரும்பெரும் அறிவு செல்வர்களாகிய சித்தர் பெருமக்கள் நல்கிய நலவாழ்வுக் கருத்துக்களை காலந்தொட்டு, பல்வேறு சான்றோர் பெருமக்கள், ஓலைச்சுவடிகளை நூல்களாக்கி, சமூகத்திற்கு வழங்கி வந்துள்ளனர். சித்தர்களுள் தலைமைச் சித்தராகப் போற்றப்படும் அகத்தியர் பிறந்த மார்கழித் திங்கள் ஆயில்யம் நட்சத்திரத் திருநாளில் தமிழ் மருத்துவ கழகம் ஆண்டுதோறும் நூல்களை வெளியிட்டு வருகிறது.
ஆட்சியாளர்களும், ஆன்றோர்களும் ஆற்றிய அவ்வரும்பணிகள் இன்னும் கூடுதலாக வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அந்தவகையில்; மாணவப் பருவந்தொட்டு, மருத்துவப் பயிற்சிக்காலங்கள், அறிவுத்தாகம் கொண்ட வானம்பாடியாய் பறந்து திரிந்த காலத்தில் பல்வேறு புதையல்களை, பழந்தமிழ் நூல்களாக, மூத்தோர்களிடமிருந்து கிடைப்பெற்றவைகள்இன்று நடைமுறை அச்சுகளில் இல்லை. அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாய், காலத்திற்கு ஏற்ப பதம் பிரித்து, பொருள் உரைத்து, செம்பதிப்பு நூல்களாக முனைந்ததன் விளைவே இந்த நூல்களாகும்.
"ஊர்வசி வைத்திய சிட்கா எனும் வைத்திய நூல்"
விண்ணுலக தேவதையாக பேசப்படும் ஊர்வசி எனும் மங்கை நல்லாள் பெயரில் உருவாகப்பட்ட “வைத்தியசிட்கா” எனும் நூல் பல அரிய மருத்துவ முறைகளை கொண்டதாகும்.
சூரணம், இளகம், குளிகை, எண்ணெய் என பல வெற்றி காண்ட மருந்துகளைக் கொண்ட இந்நூல், தலைமுறைகள் தொடர்ந்தால், சவாலான பல நோய்களுக்கு தீர்வுகாணும் மருத்துவ நூலாயுதமாக அமைந்துள்ளது. தொற்றுநோய் தொடங்கி, உலகை அச்சுறுத்தும் புற்றுநோய் வரை பல நோய்களுக்கான தீர்வினை தரும் இந்நூலை, பதம் பிரித்து, எளிதில் பயன்படுத்தும் வண்ணம் சீர்செய்து, செம்மைபதிப்பாக “ஊர்வசி வைத்திய சிட்கா எனும் வைத்திய நூல்” என வெளியிடுவதின் மூலம் தமிழ் மருத்துவக் கழகம் கடப்பாற்றி தமிழ் மருத்துவ தொண்டினை தொடர்கிறது.
"வைத்தியத்திருப்புகழ்"
அருணகிரிநாதர், பைந்தமிழுக்கு அருளிய திருப்புகழை நாம் அறிவோம். இதேபோன்றே இசைத்தமிழ் சந்தம் மற்றும் தாளங்களோடு, மூலிகைகளையும், மருந்துகளை நம் முன்னோர் செந்தமிழ் பாக்களாக இயற்றி உள்ளதே வைத்தியத்திருப்புகழ் எனும் இந்நூல்.
"மருத்துவத்தனிப்பாடல்"
மருந்துகள் மட்டுமின்றி, கால ஒழுக்கத்தையும் தனிப்பாடல்களாக இருந்தவற்றின் தொகுப்பே “மருத்துவத்தனிப்பாடல்” எனும் இந்நூல்.
பழனியில் வாழ்ந்த முகமது அப்துல்லா சாயுபு எனும் பெருமகனார், பழனி திருக்கோயிலார் துணையேறி ஏற்கனவே வெளியிட்ட இந்நூலை, தமிழ் குலம் நலம் பேண செம்பதிப்பாய் வெளியிடுவதில் மகிழ்கிறோம்.
தமிழ் கூறும் நல்லுலகம், இந்நூல்களை ஏற்று மக்கள் நலம் பேணும் என்ற நம்பிக்கையுடன்.
மருத்துவர்.தெ.வேலாயுதம்,
தலைவர் – தமிழ் மருத்துவ கழகம்.