22/02/2016
உடல் நலம் உங்கள் கையில்! - சிகிச்சையின் எளிமை
பகுதி - 03 துணைகளின் சேர்க்கை
நம் உடலின் இயக்கத்தைத் தீர்மானிக்கிற உள்ளுறுப்புக்கள் ஐந்தோடும் அறிமுகம் ஆகிவிட்டோம். இந்த ஐந்து உறுப்புக்களே பிற உடல் உள்ளுறுப்பு, வெளியுறுப்புக்களின் இயல்பையும் கட்டுப்படுத்துகின்றன.
அக்குபங்சர் அடிப்படையாகக் கூறும் இதே ஐந்து உறுப்புக்களை சித்த மருத்துவம் ராஜ உறுப்புக்கள் என்று அழைக்கிறது. ராஜ உறுப்புக்கள் ஐந்தின் பலமே உடல் ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது. உடலில் அமைந்துள்ள சிறு உறுப்புக்கள் அனைத்தின் இயக்கத்தையும் இந்த ராஜ உறுப்புக்களே சீர்படுத்துக்கின்றன.
நாம் இங்கே கற்றுக் கொண்டிருக்கின்ற அனைத்தும் தொன்மையான புரிதல்கள். இவற்றை நவீன விஞ்ஞான அறிவைக் கொண்டு எடை போட முயல வேண்டாம். ஏனெனில், விஞ்ஞானம் என்பது இன்னும் வளர வேண்டிய வளர்ந்து கொண்டிருக்கிற குழந்தை. விஞ்ஞானம் இப்போது தான் சில அக்குபங்சர் புள்ளிகளையும், அதன் சக்தி நாளங்களையும் அறிந்து கொண்டிருக்கிறது. அக்குபங்சர் அறிவியலை நவீன கருவிகள் அறிய வேண்டுமானால் இன்னும் அவை வளர வேண்டியிருக்கிறது.
5000 வருட பாரம்பரியத்தை 200 வருட குழந்தை அறிய முயல்வது கடினமானது தானே?
காலமும் பொறுமையும் கொண்டு நவீனம் வளர நாமும் உதவுவோம்.
எனவே, இங்கே நாம் அறிந்து வருகிறவற்றை ஒப்பிட்டுப் பார்த்தீர்களானால் அடிப்படையான உடலின் இயல்பை அறிய முடியாது. நம்முடைய பாடங்களின் வாயிலாக சிந்தனையின் மூலமாக இந்தப் பாரம்பரிய அறிவு உங்களுக்கு விளங்கத் துவங்கி விட்டால் நவீன மருத்துவத்தின் அத்தனை கூறுகளையும் உங்களால் பிரித்தறிய முடியும்.
ஒப்பீடு இன்றி நமக்குக் கற்பிக்கப்பட்டவற்றை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு நம் அறிதலை தொடரலாம்.
இதயம், மண்ணிரல், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய முக்கிய உள்ளுறுப்புக்களையும் அவற்றின் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் புற உறுப்புக்களையும் பார்த்தோம்.
முகத்தில் துவங்கி இப்போது அகத்திற்கு வந்து விட்டோம். நாம் அறிந்த முக்கிய உறுப்புக்கள் ஐந்தும் குளிர்ச்சியானவைகளாகும் இவற்றின் துணை உறுப்புக்களாக மேலும் ஐந்து உறுப்புக்கள் அமைந்துள்ளன. இந்த துணை உறுப்புக்கள் வெப்பமானவைகள் ஆகும்.
குளிர்ச்சியான முக்கிய உறுப்புக்களோடு, வெப்பமான துணை உறுப்புக்களும் இணைந்து ஒரு ஆரோக்கியச் சுற்றை உருவாக்குகிறது. துணை உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முக்கிய உறுப்பின் பணிகளில் உதவும் தன்மையோடு ஜோடி, ஜோடியாக அமைந்துள்ளன. உள்ளுறுப்புக்களையும் அவற்றின் துணை உறுப்புக்களையும் காண்போம்.
உள்ளுறுப்பு - துணை உறுப்பு
இதயம் - சிறுகுடல்
மண்ணிரல் - இரைப்பை
நுரையீரல் - பெருங்குடல்
சிறுநீரகம் - சிறுநீர்ப்பை
கல்லீரல் - பித்தப்பை .
.. இந்த ஐந்து ஜோடி உறுப்புக்களும் எந்த அடிப்படையில் இணைந்துள்ளன? என்பதை நாம் பார்க்கும் முன்னர் இவற்றின் பொதுவான வேலை என்ன என்பதை அறியலாம். ஒவ்வொரு உள்ளுறுப்பின் அடிப்படை வேலையாக இருப்பது ஒன்றே ஒன்றுதான். தனக்குள் வருபவற்றிலிருந்து சக்தியை கிரகித்துக் கொண்டு, எஞ்சியதை வெளியேற்றுவதே எல்லா உறுப்புக்களின் பிரதான பணியாகும்.
நாம் மேற்கண்ட ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடும் இந்த அடிப்படையில் அமைந்துள்ளதா என்பதை உதாரணத்திற்காகப் பார்ப்போம்.
# தனக்குள் வரும் இரத்தத்தை மடை மாற்றி அழுத்தம் கொடுத்து வெளியேற்றுகிறது இதயம்.
# தனக்குள் வரும் உணவை அரைத்து சக்தியை பெற்றுக் கொண்டு, உணவுக் கூழை வெளியேற்றுகிறது இரைப்பை.
# இரைப்பையிலிருந்து பெற்ற உணவுக்கூழை செரித்து சத்துக்களைப் பெற்றுக் கொண்டு எஞ்சியதை வெளியேற்றுகிறது சிறுகுடல்.
# சிறுகுடலிலிருந்து வந்த உணவு மிச்சத்தில் எஞ்சிய சக்தியை உறிஞ்சி விட்டு, மலமாக வெளியே தள்ளுகிறது. பெருங்குடல்.
# தனக்கு இரைப்பையிலிருந்து கிடைத்த உணவின் சக்தியை, தேவைக்கு தகுந்து பிரித்தனுப்புகிறது மண்ணிரல்.
# சுவாசம் மூலமாக உள்ளே வந்த காற்றிலுள்ள ஆற்றலை பிரித்தெடுத்துக் கொண்டு, மிஞ்சிய அசுத்தக் காற்றை வெளியே அனுப்புகிறது நுரையீரல்.
# தனக்குள் வந்த இரத்தத்திலுள்ள ரசாயனங்களை, நச்சுத்தன்மையை அகற்றி விட்டு, சுத்தமான இரத்தத்தை வெளியேற்றுகிறது கல்லீரல்.
# கல்லீரலில் இருந்து வந்த பித்த நீரைச் சேமித்து, தேவைக்கேற்ப செரிமானத்திற்கு உதவுகிறது பித்தப்பை.
# இரத்தத்தில் கலந்துள்ள கழிவுப்பொருட்களை பிரித்தெடுத்து வெளியேற்றுகிறது சிறுநீரகம்.
# சிறுநீரகத்திலிருந்து வரும் கழிவுகளிலிருந்து எஞ்சியுள்ள சக்தியை எடுத்துக் கொண்டு, சிறுநீரை வெளியேற்றுகிறது சிறுநீர்ப்பை.
.. நாம் பார்த்த பத்து உள்ளுறுப்புக்கள் மட்டுமல்ல உடலில் அமைந்துள்ள எல்லா உறுப்புக்களின் வேலையுமே இது ஒன்று தான்.
சக்தியை கிரகிப்பதும் எஞ்சியதை வெளியேற்றுவதும் ஆன வேலையை மட்டுமே உடல் பிரதானமாகச் செய்கிறது.
ஐந்து ராஜ உறுப்புக்களுக்கு உடலின் அனைத்து வகை இயக்கங்களிலும் பங்குண்டு. அவற்றின் முக்கியமான பணிகளை நாம் பின்னர் அறியலாம்.
துணை உறுப்புக்களான சிறுகுடல், இரைப்பை, பெருங்குடல், சிறுநீர்ப்பை, பித்தப்பை ...ஆகியவை 'பை' வடிவ உறுப்புக்களாகும்.
இவற்றில் இரைப்பை, சிறுகுடல் நேரடியாக உணவோடும், பெருங்குடல், சிறுநீர்ப்பை நேரடியாக கழிவுகளோடும், பித்தப்பை சேமிப்பு பையாகவும் தொடர்போடு அமைந்துள்ளன. துணை உறுப்புக்களின் ஒரே ஒரு வேலை சக்தி உட்கிரகிப்பும், கழிவு வெளியேற்றமும் ஆகும்.
ராஜ உறுப்புக்களின் பணிகளில் இத்துணை உறுப்புக்கள் பங்கேற்பனவாக உள்ளன.
உடலில் இன்னும் சில உறுப்புக்கள் இருக்கின்றன என்றாலும் இந்த 10 உறுப்புக்களை மட்டுமே கூறுகிறீர்களே? என்று நீங்கள் நினைக்கலாம்.
நாம் உடலின் அரசனாக கற்பனை செய்து கொண்டிருக்கும் மூளை (Brain) கூட முக்கியமான உறுப்பில்லை எனலாம். ஏனெனில், ஐந்து ராஜ உறுப்புக்களின் பிரதிபலிப்பு பகுதியாகவும், ஆளுகைக்குட்பட்ட பகுதியாகவுமே மூளை அமைந்துள்ளது.
ராஜ உறுப்புக்களின் பணிகளில் உதவுவதற்கான தொடர்பாகவே மூளை செயல்படுகிறது.
உதாரணமாக, "மது அருந்தியவருடைய சிறுமூளை பாதிக்கப்படுவதால் அவர் நினைவு தடுமாறுகிறது" என்று கூறப்படுகிறது. ஒருவர் மது அருந்தினால் கல்லீரல் தான் பாதிப்படைகிறது. கல்லீரலின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மூளையின் ஒரு பகுதியில் கல்லீரலின் பாதிப்பு பிரதிபலிக்கிறது. நினைவு தடுமாற்றம் கல்லீரலில் இருந்துதான் சிறுமூளைக்குச் செல்கிறது.
இவ்வாறு, ஐந்து உறுப்புக்களின் ஒருங்கிணைந்த பிரதிபலிப்பு பகுதியாகத்தான் மூளை இருக்கிறது. மூளையின் கட்டுப்பாட்டில் இவ்வுறுப்புக்கள் இல்லை என்பதை நாம் சிந்தித்து உணர வேண்டும்.
உடலின் இயக்கத்திற்குக் காரணமான ஐந்து உறுப்புக்களையும், அவற்றில் துணை வெளிப்புற உறுப்புக்கள் எவை எவை என்பதையும் நாம் அறிந்துள்ளோம்.
உள்ளுறுப்பு - துணை உறுப்பு - புற உறுப்பு
இதயம் - சிறுகுடல் - நாக்கு
மண்ணிரல் - இரைப்பை - உதடுகள்
நுரையீரல் - பெருங்குடல் - மூக்கு
சிறுநீரகம் - சிறுநீர்ப்பை - காதுகள்
கல்லீரல் - பித்தப்பை - கண்கள்
உள்ளுறுப்பு மற்றும் துணை உறுப்பிற்கு இடையிலான தொடர்பு என்ன என்பதையும், இவ்வுறுப்புக்களுக் கிடையில் சக்தி பரிமாற்றம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் இனி அறியலாம்.
தொடரும்...