24/06/2020
அரக்கன் அழித்த அரக்கர்கள்
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.
உலகப்பொதுமறை தான் இப்படி சொல்கிறது. வரம்பை மீறினோம் மீள வழியறியாது நிற்கிறோம். நாங்கள் நம்பும் இறைவா இவ்வுலகை காப்பாற்று, ஒவ்வொரு உயிரையும் காப்பாற்று ,உன்னையன்றி இனி எங்களுக்கு கதியில்லை என பிரார்த்தனையுடன் துவங்குகிறேன் . ஒவ்வொரு முறை செய்தித்தாளை திறக்கும் போதும் நம் எல்லோர் மனமும் இந்நோயின் தாக்கம் குறைந்திருக்கவேண்டுமே ,யாராவது மருந்து கண்டுபிடித்திருக்க வேண்டுமே என கலக்கத்துடன் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இது ஆன்மீக தேசம்.. இறை நம்பிக்கையுடன் கூடிய மனவலிமையால் வெல்வோம் , நம்பிக்கையோடிருப்போம். பூகம்பம், ஆழிப்பேரலை ,பெருவெள்ளம் என எவ்வளவோ பார்த்த தலைமுறை நாம் இதையும் கடந்து செல்வோம்.
உலகே கொரோனாவை அரக்கன் என வர்ணிக்கும் வேளையில் இந்த அரக்கன் அழித்த சில அரக்கர்களை பார்ப்போம். இதனால் ஏற்பட்ட உளவியல் மாற்றங்கள் . நமக்கு நம்பிக்கையூட்டுகின்றன. அதை நினைத்து நம்மை கொஞ்சம் ஆற்றி கொள்வோம். அல்லவை நூறு அதில் நல்லவையும் அடக்கம் . நல்லவற்றை பார்ப்போம் .
குடி அழிந்தால் குடி வாழும்.
ஒரு உளவியலாளராக நான் உண்மையில் நிம்மதியடையும் காரணம் இந்த கொரோனா அழித்த முதல் அரக்கன் குடி நோய் . ஆம் , அது இந்த சமூகத்தை சத்தமில்லாமல் அழித்த பெரும் தொற்று நோய். எந்த கெட்ட பழக்கமுமில்லாதிருந்தோரையும் நண்பரகள் ,உடன் வேலை செய்தோர் மூலம் தொற்றிக்கொண்ட நோய். ஒரு உளவியலாளர் ஆற்றுப்படுத்தலின் போது அழகூடாதென்பது மரபு. குடி நோயாளியின் மனைவியும் பிள்ளைகளும் கவுன்சிலிங்கில் கதறும் போது மனம் உடைந்து விடும். தெய்வமே இதற்க்கு ஒரு முடிவு தந்தது போல் இந்த காலம் அமைந்துள்ளது. இடியே விழுந்தாலும் “குடிமகனாகவே” வாழ்வேன் என்னும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். குடிக்காமலிருந்த இந்த நாட்கள் பலருக்கு இந்நோயிலிருந்து மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை தந்திருக்கும் . போதை பொருட்களையும் , சிகரெட் உபயோகித்தவர்களையும் இந்த சூழ்நிலை கொஞ்சமேனும் மாற்றியிருக்கும். கண்டிப்பாக இதனால் சில மன பாதிப்புகள் எரிச்சல் ,அதீத கோபம் , வாக்கு வாதங்கள் , உணவில் நாட்டமின்மை, மறதி, சில உடல் நல பாதிப்புகள் ஏன் குடும்ப வன்முறை கூட அதிகரித்திருக்கும். இதனை வித்ட்ராவல் சிம்ப்டம் என உளவியல் சொல்கிறது. கொஞ்ச காலம் தான் இவை நீடித்திருக்கும் அப்புறம் இந்த சுபாவங்கள் எல்லாம் வலுவிழந்து உங்கள் சுய சுபாவம் படிப்படியாக மேலோங்கி நீங்கள் இந்த உலகின் அற்புத தகப்பனாக, அருமை கணவனாக , விலைமதிப்பில்லா உறவாக மாறி உங்கள் குடும்பத்தை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த போகிறீர்கள் .. முடிந்தால் பிறகு ஒரு உளவியல் வழிகாட்டுதல் எடுத்துக்கொள்ளுங்கள் . உங்கள் மாற்றம் இந்த தேசத்தின் வரலாற்றை மாற்றும்.
இன்னமும் எத்தனையோ தொற்று நோய் காலங்கள் வரபோகிறது என்பதிற்க்கான அறிகுறிதான் இந்நாட்கள் . அப்போது நம் குடும்பம் காக்கும் காவலர்களாக நீங்கள் நிற்க வேண்டாமா. அன்பு சகோதரர்களே, நீங்கள் எவ்வளவு முக்கியம் என உங்கள் குடும்பத்தினரிடம் கேட்டு பாருங்கள் . வேலையிலிருந்து திரும்பும் உங்கள் வாகன ஒலி ஏற்படுத்தும் நிம்மதியை, மகிழ்ச்சியை உங்கள் மனைவியிடமும் அம்மாவிடமும் அன்பு பிள்ளைகளிடமும் கேட்டு பாருங்கள். மலை போன்ற செல்வமன்றோ நீங்கள் உம் குடும்பத்திற்க்கு , நீங்கள் குடித்து விட்டு வரும்போது அவர்கள் மனம் எப்படி இருந்திருக்கும் என இப்போது நினைத்து பாருங்கள்.. அந்த பயத்தின் வலி தெரியுமா உங்களுக்கு. உங்கள் குழந்தைகளை கேட்டுப்பாருங்கள்., உங்களை அழிக்கும் அரக்கன் உங்கள் குடும்பத்தையும் இந்த சமூகத்தையும் சீரழிக்கிறதே அதை விட்டொழியுங்களேன் இனி. குடும்பத்தினரின் அருகாமை ,அன்பு இவையெல்லாம் போதையை மறக்க செய்யும் மாமருந்து. பழையதை பேசாமல் அவரது மாற்றங்களுக்கு உதவுவோம். கண்டிப்பாக சில காயங்கள் காலத்தால் மாறும். பழையவற்றையே பேசினால் அவர் மீண்டும் போதையை நாட நேரிடலாம். குடும்ப தலைவனாகிய உங்கள் பணிச்சுமை ,கடன், மனக்குறைகளை எல்லாவற்றையும் இந்த குடிதான் தற்காலிகமாக ஆற்றியது இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் கண்ணை விற்று சித்திரம் வாங்கியதை போல உங்களை அழித்துதான் இந்த கஷ்டங்களை மேற்கொள்ள வேண்டுமா, எப்படியும் இதை நீங்கள்தான் சமாளிக்க வேண்டும் அதையே நல்ல உடலுடன், திட மனதுடன் சமாளியுங்களேன். வாழட்டும் நம் குடி . நான் குலத்தை சொன்னேன்.. பாரதி சொன்னது போல்,
மனம்வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ என ஒரு சுய வசியம் செய்யுங்கள் .. மீள்வீர்கள் .நாங்கள் தேசமாய் வாழ்த்துகிறோம்
தீவான உறவுகள்
இந்த தலைமுறை உறவுகளுடன் இப்போதுதான் கொஞ்சம் நெருங்கி உறவாடுகிறது. குடும்பமாய் கதைகள் பேசி, ஒன்றாக உண்டு, தொலைபேசியில் நலம் விசாரித்து கூடுதல் சுகாதாரம், பேணி, சமூக நலனையும் கருத்தில் கொண்டு என நிறைய மாற்றங்கள். அற்புத மாற்றங்கள். வீட்டில் சும்மாதானே இருக்கிறாய் என்ற கேள்விக்கு இப்போது பலருக்கும் விடை தெரிந்திருக்கும். வீட்டுக்குள் கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவராக, ,காவலராக, ,தூய்மைப்பணியாளராக மாறிப்போயிருக்கும் குடும்பத்தலைவிகளுக்கு வேலைகளில் உதவ துவங்கியிருப்பது ஆரோக்கியமான மன மாற்றம். நம் வீட்டு இளவரசர்களும் ,இளவரசிகளும் வீட்டை சுத்தம் செய்ய பாத்திரம் கழுவ என எவ்வளவோ மாறிவிட்டார்கள் . மன்னர்களே சமையலறை நுழைந்து விட்டார்கள் . இயன்றவரை பின்னரும் தொடரட்டும்.
குடும்பத்தை பிரிக்கும் குடிப்பழக்கமாகட்டும் , வேண்டாத உறவுகளாகட்டும், போதை, மற்றும் ஆபாச பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகுதல் போன்ற எல்லாவற்றிற்கும் காரணம் ஒரே குடும்பத்திலிருந்தாலும் நாம் தனி தனி தீவுகளானதுதான். ஸ்பேஸ் தருகிறோம், பிரைவசி வேண்டும் என்று நமக்குள் நாம் போட்ட நாகரீக இடைவெளி அன்பை குறைத்தது. உறவுகளின் தேவையை புரிந்து கொள்வதில் மாபெரும் இடைவெளி ஏற்படுத்தியது. சமூக குற்றங்களை பெருக்கியது. இப்போது குடும்பத்தினர் நெருங்கியிருப்பது நல்ல மாற்றம். பிள்ளைகளை குடும்ப உறுப்பினர்களை கண்காணிக்க கூடுதலாக முடிகிறது..ஒன்றுமில்லாத விஷயத்துக்கெல்லாம் பிறந்த வீட்டுக்கு போகும் பெண்கள் வீட்டோடு இருக்கிறார்கள். வேலையை காரணம் காட்டி வீட்டுக்கு வராதவர்கள் வீடே கதியென்றிருக்கிறார்கள். பிள்ளைகளோடு கேரம் செஸ் விளையாடுகிறார்கள். பிணக்கம் வந்தாலும் வேறு வழியில்லை. வீட்டுக்குள் சண்டை வந்ததும் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே ஓட முடியாதே சீக்கிரமே சமாதானமாகிறோம்.
பெரும்பாலான தகாத உறவுகள் மறைப்பை மீறி தலை காட்ட துவங்கி குடும்பத்தால் கண்டிக்கப்படுகிறது. டெலி கவுன்சிலிங்கில் இது தான் இன்றய ட்ரெண்ட். பாலியல் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது. நாட்டில் கற்பழிப்புகள் முன்போல் இல்லை. கடைத்தெருவில் பெண்களை கண்டாலும் தள்ளியே நிற்கிறார்கள். கண்ராவி காதலால் பொதுவிடங்கள், கடற்கரைகள் அழுக்காவதேயில்லை. கொரோனாவுக்கு ஒரு ஜே. இது நிரந்தரமென தொடரட்டும்.
ஆரோக்கிய மாற்றம்
சாதாரண சளி காய்ச்சல் தான் பயப்படத்தேவையில்லை என்ற மருத்துவர்கள் இன்று யாரை பார்த்தாலும் சளி காய்ச்சல் இருக்கிறதா என முதலில் என்று கேட்கும் காலத்தில் மற்ற சாதாரண உடல் நலக்குறைவுகளெல்லாம் எங்கே போயின. குழந்தைகள் தும்மினாலே நகரின் பிரபல மருத்துவரிடம் அப்பாய்ன்மெண்ட் வாங்கின நிலை மாறி கை வைத்தியம் பார்த்து அதில் சுகமும் அடைகிறோம் அது அவ்வளவு பாதுகாப்பானதல்ல என்றாலும் மறுப்பதற்கில்லை வேறு வழி இல்லை . ஆனால் சின்ன சின்ன உபத்திரவங்களுக்கெல்லாம் உயிர் பயமெடுத்து மருத்துவ மனை ஓடும் நிலையிலிருந்து கொஞ்சம் மனம் மாறியிருக்கிறோம் . ஒன்றும் ஆகாது என நம்பிக்கையூட்டிக்கொள்கிறோம். மொத்தத்தில் இந்த பயத்தையெல்லாம் மாற்றிக்கொள்ள ஆன்மீகத்தில் அதிக ஆர்வமாகியுள்ளோம் .இது ஆரோக்கிய மாற்றம்.
இனிவரும் நாட்களில் மனிதனை தீயவற்றிலிருந்து காக்கும், மன பலத்தை பெருக்கும் ஒரே ஆயுதம் ஆன்மீகமாகத்தானிருக்கப்போகிறது. அறிவியல் எதுவரை உதவும் என்பதை நம் தலைமுறை மிகச்சரியாக புரிந்துகொண்டுவிட்டது. இறை நம்பிக்கையின் அவசியம் மத வேறுபாடின்றி பெருக துவங்கி விட்டது .அவரவர் தெய்வத்தை அடுத்தவரை காயப்படுத்தாமல் வணங்கினால் அவரவர் பலன் அவரவர்க்கு. பக்தி பெருகினால் பாவம் குறையும். மனிதம் பெருகும். வன்முறை மறையும். இன்றைக்கு மதம் ,ஜாதி, இனம், வசதி எல்லாவற்றாலும் வேறுபட்டாலும் கொரோனா பாதித்தவர் , பாதிக்காதவர் என்ற இரு வரிசைகளில் ஒன்றில்தான் நின்று கொண்டிருக்கிறோம். நாளைக்கே எல்லோரும் ஒரு வரிசையில் நிற்க நேரிடலாம் .அன்றைக்கு தனி மனிதர்களாக நாம் தான் ஒருவரையொருவர் காப்பாற்ற வேண்டும் . ஆறுதல் சொல்லிக்கொள்ள வேண்டும் . மத வேறுபாடின்றி எல்லோருக்காகவும் எல்லோரும் இறைவனை வேண்டிக்கொள்கிறோம் . இந்த அன்பும் அக்கறையும் பெருகட்டும் ,நிலைக்கட்டும். நம் நேர்மறை எண்ணங்களும் பிரார்த்தனையும் நாம் இழந்த வாழ்வை மீட்டு தரட்டும். கடவுள் கருணையால் நாம் மேற்கொள்ளும் கடைசி பெருந்துயராய் இதுவே இருக்கட்டும். மீள்வோம் தேசமே கலங்காதிரு. அன்புடன் தோள்கொடுத்திரு. உயிர் பயம் வரும் போது மனிதம் மறவாதிரு.