14/05/2022
சித்தர் மருந்து-இது
சிவனார் அருளிய அருமருந்து
அண்ட சராசரமாய் அனுக்க ஆற்றலாம்
அறிய இயலா அகத்திய ஞானத்து
அம்ச அணுவியல் ஆன்ம அறிவியல்
வம்சம் தழைக்க தரணியிலே தங்கியதே
தேரையன் தெளிவாய் தேர்ந்தெடுத்த
தீக்கணக்கு திருப்பானை தனைதீண்ட
முந்தை முனிவராம் எந்தை முன்னோர்
முடிவுறுத்த மூலியெல்லாம் முறையிட்டு
முக்காலம் மூப்பறுக்க அப்பன் அருளால்
நூற்றெட்டு பட்டைகளை நூதனமாய் இட்டேனே
இனிய காலை தொட்டு நல்மதியம் நாசூக்காய்
நாடினேன் நரன் காணா கானக மூலிநூறை
முத்தாப்பாய் முணுமுணுத்தேன் மூலந்திரம் தனை
தயவாய் வந்தார் தன்வந்தரி நம்வசமாய்
நங்வங் யங்சிங் மங்கெனவே மந்தரித்தேன்
மகிமையுடனே மகிழ்ந்திட்டார் பிறைமதி மகாதேவன்
இரசவாதி ரசனை போகன் போதித்தான் பொறுமையுடை
இசைபாடி விசைநடந்தேன் விந்தைவேர் கொணர
பாழ் உடலை பாதுகாக்க பைந்தமிழ் மருந்துண்டு
பதறாதீர் மானுடரே பக்குவமாய் செய்திட்டேன்
பாங்கான வனப்பூக்கள் வகையாக சேகரிக்க
சேனம் அமர் புரவியுடன் புலிப்பாணி
அருள்கூர்ந்தார்
அன்றைதினம் ஆகாயம் அதிரடியாய் இடிஇடிக்க இன்பமென்னவே இலைகட்கெலாம்.....
மாறி மாறி மாரி பெய்ய மனம்நிறைந்தேன் மாலை நேரத்தே....
மாசறு சித்தன் சிவவாக்கியன் ஆக்கிட்டான்
அறிவுப் பொழுதாய் அந்திப் பொழுதை
இதோ இங்கே இல்லத்து முன்பே
இனியசீடன் இணையுடனே இருட்டிரவில்
இயல்பாய்செய்தேன் வர்மத் தைலம் வாழ்வாங்கு
வாழி வாழி வர்மக்கலை வையத்துள் தனிச்சிறப்பாய்......