24/01/2018
பதின் பருவ மேலாண்மை என்றால் என்ன?
குழந்தைகளாய் இருக்கும் வரை அப்பா அம்மா என்றாலே அடங்கிப் போய் அன்பாய் பழகியவர்கள் எல்லாம் இந்த பதின் பருவத்தை தொட்டு விட்டாலே போதும், புது புது பிரச்சனைகள் பல தலை தூக்கி விடுகின்றன. “உன்னைப் பெத்ததுக்கு ஒரு தென்னைமரத்த நட்டு வச்சிருந்தா இளநீராவது கிடைக்கும். இப்படித் தண்டமா உட்கார்ந்திருக்கியே” எனப் பல நேரங்களில் பதின் பருவத்தினருக்கு அர்ச்சனைகள் கிடைக்கும். அவர்களின் நடவடிக்கைகளும் சில நேரங்களில், அப்படித்தான் அமைந்துவிடும். ஆனால் மன அழுத்த நோயாலும் இது போன்ற மாற்றங்கள் வரும் என்பதை மறந்துவிடக்கூடாது. இப்படி பலதரப்பட்ட பதின் பருவ பிரச்சனைகள் இருந்தாலும், மிக அதிகமாய் ஆலோசனை மையத்திற்கு வருபவை எவை தெரியுமா?
1. படிப்பில் வீக்:
ஐந்தாம் வகுப்பு வரைக்கும் அவ்வளவு சூப்பரா படிச்ச பிள்ளை தான், என்னனே தெரியல, வர வர படிப்புல ரொம்வ வீக்காயிட்டே போய், மார்க்கெல்லாம் சொல்லிக்கிறா மாதிரியே இல்லை” என்ற புகாருடன் வரும் பெற்றோர்களின் எண்ணிக்கை தான் மிக அதிகம். குழந்தையை அழைத்து விசாரித்தால், “எவ்வளவு படிச்சாலும் மறந்து போயிடுது” என்கி றார்கள், அல்லது, “புக்கை திறந்தாலே, பகல் கனவா வருது” என்கிறார்கள். பரிசோதித்து பார்த்தால் அநேக குழந்தைகள் புத்திசாலிகளாகவே இருந்தாலும், வெறுமனே மக் அடித்து, அர்த்தமே புரியாமல் படிக்கும் பாணி தெரிய வரும்.
2. ஓவர் டென்ஷன்:
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பொதுவாய் எல்லா பதின் பருவக்கார்களை பற்றியும் வரும் அடுத்த புகார், “முன் கோபம்”. அது வரை சொல் பேச்சை கேட்டு, அமைதியாய் வளைய வந்த பிள்ளைகள், பருவ வயதை தொட்ட உடனே, “எல்லாம் எனக்கு தெரியும், நீங்க ஒண்ணும் சொல்லவேண்டாம்” . என்று பெற்றோரையே எதிர்த்து பேசி விடுகிறார்கள். சரி பிள்ளை தான் ஏதோ மனநிலையில் ஏடா கூடமாக பேசுகிறதே, நாமாவது கொஞ்சம் விட்டு கொடுத்து போவோமே என்கிற விவஸ்த்தையில்லாமல் பெற்றோர், “உன்னை எவ்வளவு கஷ்டப் பட்டு, பெத்து வளர்த்து, இவ்வளவு பெரியா ஆளாக்கினேன், என்னையே நீ….” என்று லெக்சர் அடிக்க ஆரம்பித்து விட, பொறுத்து பொறுத்து பார்த்து விட்டு, “உங்களை யாரு பெக்க சொன்னா ?” என்று பொறிந்து விடுகிறார்கள் பிள்ளைகள்.
இந்த வயதில் இளைஞர்களின் ரத்தத்தில் எக்கசெக்க ஹார்மோன்கள் பிரவாகமாய் சுரக்கின்றன. அதனால், தொட்டதிற்கெல்லாம் டென்ஷன், எரிச்சல், மூட் அவுட் என்று இள ரத்தம் எப்போதுமே ஒரு சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். எதையும் சகித்துக் கொள்ளும் தன்மை, பொறுத்துபோகும் பக்குவம், அடங்கி போகும் லாவகம் எதுவுமே இந்த வயதில் ஏற்படுவதில்லை.
3. ஓவர் கூச்சம்:
”விருந்தினர் வந்தால் ஒரு வணக்கம் சொல்வதில்லை, கடைக்கு போனால், எல்லாரும் பார்க்குறாங்க, நான் இந்த பையை தூக்கிட்டு வந்தா சிரிப்பாங்க, மத்தவங்க முன்னாடி என்னை பத்தி ஏன் சொன்னேனு எல்லாரும் போன பிறகு திட்டுறது…” இப்படியாக, பதின் பருவ சிறுசுகளின் வெட்க உணர்வை பற்றி நிறைய புகார்கள் வருவதுண்டு. என்ன செய்வது, இந்த வயதில் நேரும் உடல் மாற்றங்கள் இவர்களை பிறர் எதிரில் கூசி போக செய்கிறது. போக போக இந்த கூச்சமெல்லாம் குறைந்து, முதிர்ச்சி வர வர தன்னம்பிக்கையும் தானே அதிகரித்து, “ஆமா, நான் இப்படி தான், எனக்கு என்னை பிடிச்சிருக்கு, வேறு யாருடைய அபிப்ராயமும் எனக்கு முக்கியமில்லை” என்று சுயமதிப்புக் கொள்ளவும் இவர்களால் முடிகிறது. அதுவரை இந்த வெட்கத்தை பெரிதுப்படுத்தாமல் விட்டாலே, தானாய் தெளிந்து விடுகிறார்கள்.
4. சமவயதினரின் அபிப்ராயம்:
பதின் பருவத்தினருக்கு தங்கள் சம வயதுக்காரர்களின் அபிப்ராயம் மிக முக்கியம் என்று தோன்றுகிறது. இந்த சமவயதுக்காரர்கள் என்ன செய்கிறார்கள், என்ன சொல்கிறார்கள், எப்படி விஷயங்களை அனுகுகிறார்கள் என்பதையெல்லாம் மும்முரமாக நோட்டம் விட்டு, அதை போலவே தானும் இருந்தால் தான் தன்னை “செட்டில் சேர்த்துக் கொள்வார்கள்” என்று அரும்பாடுபட்டு, கலந்து விட முயல்கிறார்கள். “உன் தோழர்கள்/தோழிகள் சொன்னாதான் கேட்பியா? நான் சொன்னா கேட்க மாட்டியா?” என்று பெரியவர்கள் தலை பாடாய் அடித்துக் கொண்டாலும் இளையவர்களின் இந்த பழக்கத்தை மாற்ற முடியாது. இதற்கு ஒரே வழி, உங்கள் குழந்தையின் நண்பர்களை பரிச்சையப் படுத்திக்கொள்ளுங்கள். எந்த மாதிரி நண்பர்களுடன் பழக்கம் என்பதை நேரடியாக கண்காணித்தால் தானே, அவர்கள் போக்கு எப்படி என்பதை நீங்கள் சதா கண்காணிக்க முடியும்.
5. வயதிற்கு வருதல்:
பெண்களூக்காவது பரவாயில்லை, ஒன்றாக செய்கிறோம் பேர்வழி என்று ஏரியா பெண்கள் எல்லாம் கூடி, தங்கள் வயதிற்கு வருதல் அனுபவத்தை பற்றி பேசி பகிர்ந்துக்கொள்கிறார்கள், அதனால் பெண்களுக்கு தங்கள் வயதிற்கு வரும் சமாசாரம் பற்றி தெளிவு ஏற்படிகிறது. பாவம், ஆண் குழந்தைகளுக்கு இந்த அதிர்ஷ்டம் இருப்பதில்லை. இவன் வயதிற்கு வந்தால், அம்போ என்று அப்படியே விடபடுகிறான். என்ன ஏது என்று சொல்லித்தர நாதியே இருப்பதில்லை. விளைவு, விந்து வெளியேறும் அறிகுறியை இவன் ஏதோ பெரிய விபரீதம் என்று எண்ணி கலவரம் கொள்கிறான்..
6. சுய இன்பம்:
என்ன முயன்றாலும் பருவ வயது வந்ததுமே பாலுணர்வும் தலை தூக்கிவிடும். நூறு ஆண்டுகளுக்கு முன் என்றால் இந்த பருவம் வந்த உடனே திருமணம் என்று ஒன்றை நடத்தி, ஒரு கலவியல் துணையை பெற்றோரே ஏற்பாடு பண்ணித் தந்திருப்பார்கள், தாபம் தோன்றும் போதெல்லாம் தாம்பத்தியம் கொள்ள ஏதுவாக இருந்துருக்கும். ஆனால் இப்போதோ, வயதிற்கு வந்து பல வருடங்கள் கழித்து தான் திருமணம் என்று நிலைப்பாடுகள் மாறிவிட்டன. இதை பற்றி எல்லாம் சட்டையே செய்யாமல் இயற்க்கை இன்னமும் அதே பதிமூன்று – பதினேழு வயதிற்குள் எல்லோரையும் வயதிற்கு வர வைக்க, கூடவே தோன்றும் உடல் ரீதியான தேவைகளை எப்படி சமாளிப்பது என்று யாருமே சொல்லி தராத போதெல்லாம் தன்னை தானே சாந்தப் படுத்திக் கொள்ளும் டெக்னிக்கை அநேகமாக எல்லா பதின் பருவத்தினர்களும் சுயமாகவே தெரிந்துக் கொள்கிறார்கள். ஆனால் இது ஒரு பெரிய குற்றம் என்று சிலருக்கு தோன்றுவ தால், கவலை பட ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், மனிதர்கள் உட்பட, எல்லா ஜீவராசிகளிலும் தகுந்த துணை இல்லாத போது சுய இன்பம் கொள்வது என்பது இயல்பான ஒரு நடவடிக்கையே. இதே வேலையாய் இருக்காமல், விளையாட்டு, படிப்பு, பாட்டு, கூத்து, கேளி, கும்மாளம் என்று வேறு பல வழிகளிலும் சுகம் காணும் தன்மையை வளர்த்துக் கொண்டால், இன்பம் கொள்ளை கொள்ளையாகுமே!
7. முதல் காதல்:
மூளை சுரக்கும் ஹார்மோன்கள் ஏற்கனவே எதிர்பாலின கவர்ச்சியை தூண்டிவிட, கூடவே ஊடகங்களும், அதன் ஊக்கத்தால் நண்பர்களும் ”சூப்பரா இருக்கும் செய்து பார்”, என்று காதலை பெரிதும் சிபாரிசு செய்ய, கேட்க வேண்டுமா! காதல் என்கிற போதை இளமனதுகளை ஈர்க்க ஆரம்பித்துவிடுகிறது. இதனால் பதறும் தாய்மார்கள் பலர்.
8. மூட் அவுட்:
பதின் பருவத்தினர் பலரும் அடிக்கடி மனநிலை மாற்றங்களுக்கு உள்ளாவதால், திடீர் கோவம், திடீர் அழுகை, திடீர், “என்னை கண்டாலே யாருக்கு பிடிக்கல!” மாதிரியான உணர்ச்சி வெடிப்புக்கள் ஏற்படுகின்றன. மூளையின் நரம்புகள் இந்த வயதில் அதிகமாக வளருவதால் அடிக்கடி சிக்கலாகி விடுவதாலும், புதிதாய் ரத்ததில் ஓடும் ஹார்மோன்கள் இன்னும் ஒருனிலைபடாததாலும் இந்த வயதுக்காரர்களுக்கு அடிக்கடி இப்படி மூட் அவுட் ஆவது சகஜம். பெண் குழந்தைகள் “என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டேன்றாங்க!” என்று புலம்பி அழுவதும், ஆண்கள் “என்னை கவனிக்கிறதே இல்லை” என்றி எரிந்து விழுவதும் உங்கள் மேல் உள்ள கோபத்தினால் அல்ல, ரசாயண மாற்றத்தினால் மட்டுமே.
9. ஆக்ரோஷம்:
“முன்னாடியெல்லாம் அவன் உண்டு அவன் வேலை உண்டுனு இருந்த பையன்தான். பெரியவங்கன்னா அவ்வளவு மரியாதையா இருந்த பிள்ளை, இப்ப எல்லாம், நீ சொன்னா, நான் கேட்கணூமானு எதிர்த்து பேசுறான். அடிக்க கைய ஓங்குனா, பதிலுக்கு அடிக்க வர்றான். நேத்து ஏதோ திட்டினேனு ரிமோட்டை தூக்கி எரிஞ்சதுல அது உடைஞ்சே போச்சு. எங்கிருந்து தான் அவனுக்கு இவ்வளவு ஆத்திரம் வருதோ?”
ஆண் குழந்தை வயதிற்கு வருவதே டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோனின் சுரத்தலால் தான். இந்த ஆக்ரோஷம் ததும்ப அரம்பித்து விடும், உடல் பலம் அதிகரித்து விடும், எதிலுமே வேகம், வீரம், அவசரம் என்கிற போக்கு ஏற்படும். பழக பழக டெஸ்டோஸ்டீரானின் இந்த தன்மையை எப்படி சாமார்தியமாய் கையாள்வது என்பதை இவர்கள் காலப்போக்கில் கற்றுக்கொள்வார்கள்.
10. தீயவை பழகுதல்:
குழந்தை பருவம் போய் வாலிய வயதை அடையபோகும் எக்களிப்பில், எதை எதையோ பரிட்சை செய்து பார்க்க தோன்றும் இள மனம். புகை, மது, மாது, பிற போதை வஸ்துக்கள் என்று களவும் கற்றுமறக்க முயலும் வயது இது தான். இந்த போதை வஸ்துக்கள் கூட ஒரு வகையில் மனிதர்களை தரம் பிரித்து யார் தோதானவர்கள் என்று சோதித்து பார்க்கும் ஒரு பரீட்சை தான்.
என்ன இருந்தாலும் பதின் பருவம் என்பது காற்றாற்று வெள்ளம் மாதிரி ஹார்மோன்கள் எந்த பதப்படுத்தலும் இன்றி பச்சையாய் ஓடும் வயது. இந்த வெள்ளத்தை எப்படி அணைக்கட்டி அமோக விளைச்சலுக்கு ஆட்படுத்துவது என்று சொல்லித்தர யாரவது தேவை. ஒரு நண்பராய், ஒரு தோள் தரும் ஆதரவாளராய் இருந்தாலே போதும். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
கீழே உள்ள அறிகுறிகளில் ஏதேனும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் காணப்பட்டால் அது மன அழுத்த நோயாக இருக்கலாம். உடனே மன நல மருத்துவரை அணுகவும்.
# வழக்கத்துக்கு மாறான மந்தத்தன்மை.
# சுறுசுறுப்பு இல்லாமல் அதிகச் சோர்வுடன் காணப்படுவது.
# முன்பு ஆர்வமாக இருந்த எந்த விஷயத்திலும், தற்போது ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கியிருப்பது.
# தூக்கமின்மை அல்லது எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருப்பது.
# பசியின்மை மற்றும் உடல் எடை குறைவு
# காரணமே இல்லாமல் தற்கொலைக்கு முயற்சி செய்யும் எண்ணங்கள் ஏற்படுவது.
# தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்.
# தான் எதற்கும் உதவாதவன், வாழத் தகுதியற்றவன் என்ற எண்ணம்.
# அதீதக் குற்ற உணர்ச்சி.
# எரிச்சல் தன்மை, கோபம்.
# படிப்பில் பின்தங்குதல், பள்ளியைப் புறக்கணித்தல்.
# காரணமில்லாமல் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவது.
# புதிதாக ஏற்படும் போதைப்பழக்கம்.
# அதிகக் கவனக் குறைவு, ஞாபக மறதி.