06/06/2017
நண்பர் - யோகப் பயிற்சிகளைச் செய்வதால் நாடி, நரம்புகள் வலுவடையும், உடல் பலமடையும், முதுமை காலத்தில் ஓரளவு ஆரோக்யமாக இருக்கலாம் என்பதெல்லாம் சரி, ஆனால் தற்பொழுதைய மாசு படிந்த கால சூழலில் ஏற்படும் கொடிய நோய்களை யோகாவால் சீர் செய்து விட முடியும் என்று நம்புகிறீர்களா ?
பதில் - கொடிய நோய்கள் என்று எடுத்துக் கொண்டால் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள், ஒழுக்கக் குறைவால் ஏற்படும் நோய்கள், கர்ம பலனால் ஏற்படும் நோய்கள் என்று மூன்று வகைகளாகக் கொள்ளலாம். நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை யோகப் பயிற்சி செய்வதால் வராமல் தடுக்கவும் முடியும், ஏற்கனவே வந்திருந்தால் குணப்படுத்தவும் முடியும். ஒழுக்கக் குறைவால் ஏற்படும் எயிட்ஸ் போன்ற நோய்களை யோகப் பயிற்சிகளால் குணப்படுத்த முடியாது. அதே சமயம் மருத்துவத்தோடு, யோகப் பயிற்சிகளையும் செய்து நோயின் தாக்கத்தை சற்று மட்டுப்படுத்தலாம். புகைத்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களால் ஏற்படும் நோய்களுக்கு, நோயின் கடுமைக்கேற்ப தீர்வு அமையும். யோகப் பயிற்சிகளோடு சேர்த்து தியானப் பயிற்சியையும் முறையாகக் கடைபிடித்து வருபவர்கள் கர்ம பலன்களில் இருந்தும் விடுபட வாய்ப்பிருக்கிறது. யோகா, தியானம் செய்பவர்கள் பெரும்பாலும் தீய வழிகளில் செல்ல மாட்டார்கள்.
முதலில் யோக சாதனங்களை எதற்காக வடிவமைத்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். இதில் கூட இரண்டு விதமான கருத்துகள் உண்டு. ஒன்று, ஜீவன் மீண்டும் மீண்டும் பிறந்து, இறந்து பல பிறவிகளைக் கடந்து தன் மூலமான பரம்பொருளை அடைகின்றது என்ற நிலையை மாற்றி இந்தப் பிறவியோடு அதை நிறைவு செய்து விட வேண்டும் அதாவது பிறப்பிறப்பை கடந்து விட வேண்டும் என்பதற்காக வடிவமைக்கப்பட்டதே யோக சாதனங்கள். அதற்கு இந்த உடலை நல்ல ஆரோக்கியமுடையதாகவும், நீண்ட நாள் உயிர் வாழக் கூடியதாகவும் வைத்துக் கொள்ளுதல் அவசியம். எனவே மனப் பயிற்சிகளோடு உடலை வலிமையாக்கிக் கொள்ளும் உத்திகளும் யோக சாதனங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. உலகையே உருவாக்கி, இயக்கி, அழிக்கும் அளவு வலிமை பெற்ற வல்லமையான சக்தியோடு கொண்டு போய் நம் உயிரை இணைப்பதற்கு நம் உடலும், மனமும் வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். இரண்டாவது மறுபிறவி நம்பிக்கை என்கிற இல்லாதவர்களது கோட்பாடு என்னவென்றால், உடல் மற்றும் மனநலம் மூலமாக ஆற்றல் உள்ளவர்களாகத் திகழ்ந்து மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதற்கு யோக சாதனங்கள் அவசியம் என்பது. அதாவது யோக சாதனங்கள் மூலம் அனைத்து பிரபஞ்ச இயற்கை சக்திகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் இரு பிரிவினருக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
உடல் மட்டும் வலிமையாக இருந்து மனவலிமை இல்லாமல் போனால் யாதொரு பயனுமில்லை. உடல் வலிமை இல்லாவிடினும் மனோபலம் மூலம் எந்த காரியத்தையும் சாதித்து விடலாமே என்று கேட்டால், உண்மைதான் ஆனால் உயிர் நீண்ட நாள் நிலைக்காதல்லவா ? எனவே மனிதன் நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய் ஞானம் பெறுவதற்கு உடல் மற்றும் மனோபலம் அவசியமாகும். அந்த அடிப்படையில் யோக சாதனங்கள் மூலம் எல்லையற்ற வல்லமை உடைய பிரபஞ்ச சக்தியின் ஆற்றல்களையெல்லாம் நாம் பயன்படுத்திக் கொள்ளும் பொழுது நம் உடலில் நோய் தடுப்பாற்றல் பெருகுகிறது. அது எவ்வாறு என்று பார்ப்போம். மனிதனுடைய உடலில் நோய் தடுப்பாற்றலைத் தரவல்ல நிணநீர் மண்டலமும், தடுப்பாற்றலைத் தரும் பொருட்களை உருவாக்கும் மண்ணீரலும், தடுப்பாற்றலைத் தரும் பல்வேறு சுரப்பு நீர்களும் உண்டு. நோய்களை உருவாக்கும் கிருமிகள் உடலுக்குள் நுழைந்து விடும் பொழுது, நிணநீர் சுரப்பிகள் எதிர்ப்புத் திறன் கொண்ட பொருட்களை(anti bodies) உருவாக்கி அழித்து விடுகின்றன. மண்ணீரலும் தன் பங்கிற்கு இந்தப் பணியை மிகச் சிறப்பாகச் செய்கிறது.
இரத்த நாளங்களில் ஊடுருவும் இத்தகைய நுண்ணுயிரிகளை இரத்த வெள்ளை அணுக்கள் அழித்து விடுகின்றன. இதைப் போல உடலுறுப்புகளிலும், சுரப்பிகளிலும் சுரக்கும் அமிலங்களும், சுரப்பு நீர்களும் இத்தகைய கிருமிகளை அழிப்பதில் வெவ்வேறு செய் திறன்களைப் பின்பற்றுகின்றன. இப்படி பல வகையினில் எதிர்ப்பு ஆற்றல் பெறப்பட்டாலும் தொற்று நோய்கள் ஏன் வருகின்றன என்று கேட்டால், அதற்கான காரணம், நம் உடலில் சக்திப் பற்றாக் குறை காரணமாக, நோய் தடுப்புத் திறன் குறைந்து விடுவதால்தான் வருகின்றன. யோக சாதனங்கள் மூலம் பிரபஞ்ச சக்திகளின் திணிவும், பிராண சக்தியின் திணிவும் நம் உடலில் ஏற்பட்டு விடுவதால் நோய் தடுப்புத் திறன் இயல்பாகவே பெருகி விடுகின்றது. அதாவது யோகாசனம் மற்றும் உடற் பயிற்சிகள் செய்வது மூலம், நரம்பு மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், இவைகளைச் சார்ந்து இயங்கும் நிண நீர் மண்டலம் ஆகிய யாவும் வலிமையடைந்து நோய் எதிர்ப்பாற்றல் பெருகி விடுகின்றது.
அது போலவே யோக சாதகர்கள் சாத்வீகமான உணவு முறையைக் கையாள்வதால் ஜீரணத்திற்குச் செலவாகும் அதிக சக்தி சேமிக்கப்படுகின்றது.
மேலும், மிளகு, சுக்கு, திப்பிலி, மஞ்சள், பூண்டு, வெங்காயம், துளசி, வேப்பம் பூ மற்றும் தளிர் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதிக நோய் எதிர்ப்பாற்றலைப் பெற்றுக் கொள்ளலாம். பிரத்யாகாரம், தாரணை, தியானம் போன்றவைகளால் மனதைக் கட்டுப்படுத்தும் பொழுது, மூளையும், நரம்பு மண்டலமும் பலப்பட்டு விடுவதால், இவைகளோடு தொடர்புடைய நாளமில்லா சுரப்பிகளில் சுரக்கும் சுரப்பு நீர்கள் உடலுக்கு நோய் எதிர்ப்புத் திறனை அளிக்கின்றன. இவைகளோடு கூடி நல்ல சுகாதாரமான பழக்க வழக்கங்களும், ஒழுக்கமும், பக்தியும் அமையும் பொழுது எந்த நோய்க் கிருமிகளும் சாதகனை ஒன்றும் செய்ய முடியாது. நோய் எதிர்ப்புத் திறன் மட்டுமல்ல, யோக சாதனங்கள் மூலம் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதுதான் உண்மை.
கேள்வி - தியானம், யோகாசனம், மூச்சுப் பயிற்சி போன்ற சாதனைகளை பிரம்ம முகூர்த்தத்தில்தான் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்களே ?
இராம் மனோகர் - யோக சாதனைகள் அனைத்தும் மனதைப் பக்குவப்படுத்துவதற்காகத்தான் என்பது அகத்தியர் வாக்கு. மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா, வாயுவை உயர்த்த வேண்டா, வாசியை நிறுத்த வேண்டா என்று சொல்கிறார். அதாவது இந்தப் பயிற்சிகள் அனைத்தும் மனதைச் செம்மைப்படுத்துவதற்காகத்தான். மனம் செம்மையடைந்து விட்டால் இவை ஒன்றும் தேவையில்லை. அதே சமயம் நம் மனதிற்கும் பிராணனுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. நம் உடலில் பிராணன் நாடிகள் வழியாகவே இயங்குகிறது. இடகலை, பிங்கலை நாடிகளின் இயக்கத்தைப் பொருத்தே நமது மனதின் இயக்கமும் அமைகிறது. இரண்டு நாடிகளும் இயைந்து செயல்பட்டால்தான் மனம் விழிப்புடன் இருக்கிறது. அவை அளவுக்கு மீறி செயல்பட்டால் மனம் அலை பாயத் தொடங்குகிறது. அவை மெதுவாக இயங்கினால் மனம் மந்த நிலைக்குச் செல்கிறது. இரு நாடிகளும் செயல்படவே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்பொழுது என்னவாகும் ? மனம் ஆழ்ந்த தூக்க நிலைக்குச் சென்று விடும். அப்பொழுது கனவு வந்து விட்டால், அவை இரண்டும் மீண்டும் இயங்க ஆரம்பித்து விடும்.
நமது உடலைப் பொருத்த வரை உடலின் சில பகுதிகள் தன்னிச்சை செயல், அனிச்சை செயல் நரம்பு மண்டலங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஒரு சில உறுப்புகள் இரண்டினாலும் இயக்கப்படுகின்றன. அவற்றில் நுரையீரல் ஒன்றாகும். நுரையீரலின் இயக்கம் அனிச்சையாகச் செயல்பட்டாலும் நம்மால் அதைக் கட்டுப்படுத்த முடியும். மூச்சைக் கட்டுப்படுத்தும் பொழுது அனிச்சை நரம்பு மண்டலம் நமது கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகின்றது. இதனால் இடகலை, பிங்கலை நாடிகளை நாம் கட்டுப்படுத்த முடியும். இதனால் பிராணனை நாம் வசப்படுத்தலாம். பிராணனை வசப்படுத்தி சம்ஸ்காரங்களைக் கட்டுப்படுத்தி, எண்ணங்களைக் குறைத்து, மனதை அமைதியான நிலையில் வைத்திருக்க முடியும். நம் உடலில் இரத்த அழுத்தம், வெப்ப நிலை, உண்ட உணவு செரிமானமாகி சக்தியாக மாறுவது, தூக்கம் போன்ற எல்லாம் ஒரு சுழற்சி முறையில் நடை பெறுகின்றது. இதில் தினசரி சுழற்சி, மாத சுழற்சி என்றெல்லாம் உண்டு. நமக்கு மட்டுமல்ல, தாவரங்கள் விலங்குகளுக்குள்ளும் இந்த சுழற்சி இயக்கம் உண்டு.
நம்மைப் பொருத்த வரை இந்த சுழற்சிகள் மனதை வெகுவாக பாதிக்கின்றன. சிலர் காலையில் சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நேரம் செல்லச் செல்ல அவர்கள் மனம் மந்தமடைந்து விடும். சிலர் மதியத்திலிருந்து நள்ளிரவு வரையிலும் நல்ல சுறுசுறுப்பாக இயங்குவார்கள். இப்படிப்பட்ட சுழற்சிகள் நம் மனதை வெகுவாக பாதிப்பதைக் குறித்து ஆராய்ந்த சித்தர் பெருமக்கள் இந்த சுழற்சிகளுக்கும், பிராணனின் இயக்கத்திற்கும், இடகலை, பிங்கலை நாடிகளின் செயல்பாட்டிற்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தார்கள். மேலும் சந்தியா வேளைகளில் இந்த நாடிகள் இயைந்து செயல்படுவதையும், இதனால் அந்த வேளைகளில் மனம் இயல்பாகவே அமைதியாக விளங்குவதையும் கண்டறிந்தனர். அதனால்தான் காலையிலும், மாலையிலும் இந்த சாதனங்களைச் செய்யுங்கள் என்று சொன்னார்கள். மனம் அமைதியாக இருப்பதால் தியானத்திற்கு உகந்த காலங்களாக காலையும், மாலையும் சொல்லப்பட்டது. மேலும், பிராணாயாமத்தின் மூலமாகவும் இந்த இரண்டு நாடிகளையும் கட்டுப்படுத்தி இயைந்து செயல்படச் செய்ய முடியும்.