Dr SS Jayendhiran ENT

Dr SS Jayendhiran ENT Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr SS Jayendhiran ENT, Doctor, Vadamalayan Hospital, Dindigul.

Consultant ENT Head and neck surgeon
Vadamalayan Hospitals
Dindigul
Tamilnadu
Trained in prestigious Banaras Hindu University Varanasi
Former resident doctor AIIMS New Delhi
DNB Otorhinolaryngology from National board of examinations New Delhi

16/03/2025

காதில் இருந்து சீழ் வடிகிறதா? அலட்சியம் வேண்டாம்

Dr ஜெயேந்திரன் சுப்ரமணியம்
MS DNB ENT
வடமலையான் மருத்துவமனை
திண்டுக்கல்

காதில் இருந்து எது வடிந்தாலும் அதை மிக அவசரமான, மிக முக்கியமான பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

காதின் உட்புறத்தில் ஏற்படும்
பாதிப்புகளால் காதில் இருந்து சீழ் வடிதல், கடுமையான காதுவலி , காது வீங்கிப் போதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த பாதிப்புகள் பொதுவாக சிறிய வயது குழந்தைகளுக்கு, அடிக்கடி அதிகமாக காணப்படும் பிரச்சினைகளாகும். பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினைகள் வருவதுண்டு.

காதிலிருந்து அழுக்கு நிறத்தில் நீர் வேகமாக வெளியே வடிவது

மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் கெட்டியாக மெதுவாக வெளியே சீழ் வடிவது

காதில் இயற்கையாக ஊறும் மெழுகு, அதிகமாகி வெளியே வடிவது

காதிலிருந்து ரத்தம் வெளியே வடிவது

இவையெல்லாம் காதின் உட்புறத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், காயங்கள் மற்றும் தொற்று நோயினால் தான் வருகின்றன.

பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளால், நடுக்காதில் ஏற்படும் நோய்களால் தான் காதில் பிரச்சினையே ஏற்படுகிறது. காதிலிருந்து வடியும் சீழ் திரவமானது, காதிற்குள்ளே ஏற்படும் நோய் காரணமாகவே ஏற்படுகிறது. குழந்தைப் பருவத்தில் காதில் சீழ் வடிவதை அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் சரியாக கவனித்திருந்தால் , அந்தக் குழந்தையின் பள்ளி ஆசிரியர்கள் சரியாக கவனித்திருந்தால், வயதான பின்பும் காதில் சீழ் வர வாய்ப்யே இல்லாமல் போயிருக்கும்.

நோயினால் காது ஐவ்வின் பின்புறம் சீழ் பிடிக்க ஆரம்பித்து, சீழ் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து அதிகமாகி, காது ஐவ்வை வெடித்துக் கிழித்துக் கொண்டு, வெளியே வடிவதுண்டு. காது ஐவ்வு சுமார் 1 சென்டிமீட்டர் விட்டம் உள்ளது.
ஒரு வெங்காயத்தின் மேல் தோலை விட மிகவும் மெல்லிய, மிகவும் மென்மையான, ஆனால் அதே சமயம் மிக மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். அதை ஆயுள் முழுக்க பத்திரமாக பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

காதில் எது வடிந்தாலும் அதை மிக அவசரமான, மிக முக்கியமான பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும். விளையாட்டாக, கவனமில்லாமல் , அக்கறையில்லாமல் இருக்க வேண்டாம்.

காதில் குச்சி, பேப்பர் , கோழி இறகு, பென்சில், பட்ஸ் போன்றவைகளை விட்டு, சுத்தம் பண்ணுகிறேன் என்று சொல்லிக் கொண்டு குடைவது கூடாது. இவ்வாறு செய்பவர்கள், வெளியிலுள்ள கெட்ட கிருமிகளை காதிற்குள்ளே கொண்டுபோய் விடுகிறார்கள்.

குழந்தைகள் காதிற்குள் கம்பி, பட்டன் , மணி, உணவுத்துண்டுகள் போன்றவற்றை யாரும் பார்க்காத நேரத்தில் மிகச் சாதாரணமாக போட்டு விடுவதுண்டு. மிக அதிக கவனம் தேவை.

சிறிய வயதில் ஏற்படும் காது பிரச்சினையை அந்த சமயத்திலேயே ஒழுங்கான, முறையான, சரியான சிகிச்சையை எடுத்திருந்தால், பெரியவர்களான பின்பு காது பிரச்சினை வர வாய்ப்பு மிக மிகக் குறைவு.

காது பிரச்சினை உள்ளவர்கள், தேங்காயெண்ணையில் முக்கி பிழிந்த, நன்கு இறுக்கமாக சுருட்டிய பஞ்சை காதுகளில் வைத்துக் கொண்டுதான் குளிக்க வேண்டும். குளிர்காலங்களிலும், குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும் போதும் , காதில் கண்டிப்பாக பஞ்சை வைத்துக் கொள்ள வேண்டும். காதுகளை மூடிய மாதிரி கழுத்தைச் சுற்றி துண்டை சுற்றிக் கொள்ள வேண்டும்.

காதில் கடுமையான வலி, வீக்கம், சீழ் வடிதல் போன்ற பிரச்சினைகள் ஆரம்பித்தால், அவர்களாகவே வைத்தியம் செய்து கொள்வதை நிறுத்திவிட்டு, காது மூக்கு தொண்டை சிகிச்சை நிபுணரைப் பார்த்து உரிய சிகிச்சை பெறவேண்டும். அலட்சியமாக இருக்க வேண்டாம்.

13/02/2025

மூக்கில் ரத்தம் வடிவது ஏன்?

Dr Jayendiran Subramaniam
MS DNB ENT
Vadamalayan Hospital
Dindigul

மூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கிலிருந்து திடீரென்று ரத்தம் வடிவதுண்டு. நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்தத் தொல்லை அதிகமாகக் காணப்படும். இதை ஆங்கிலத்தில் ‘எபிஸ்டேக்சிஸ்' (Epistaxis ) என்று அழைக்கிறார்கள்.

சுவாசத்துக்கும் வாசனைக்கும்தான் மூக்கு படைக்கப்பட்டுள்ளது என்று நினைக்க வேண்டாம் . மூக்கு ஒரு ஏர்கண்டிஷனர் மாதிரி. வெளியிலிருந்து வருகிற குளிர்ந்த காற்றையோ, சூடான காற்றையோ நம் உடலுக்குத் தேவையான வெப்பநிலைக்கு மாற்றி அனுப்ப வேண்டியதும் மூக்கின் வேலைதான்.

மூக்கு பார்ப்பதற்குத்தான் பலமானதுபோல் தோன்றுகிறதே தவிர. உள்ளுக்குள் அது மிக மென்மையானது. வெளிப் பக்கம் தெரிகிற மூக்கின் இரு பக்கங்களிலும் துவாரங்கள் உள்ளன. இந்தப் புறநாசித் துவாரத்தில் விரல் விட்டால் குகை மாதிரி உள்ளே போகிறதல்லவா? அந்தப் பகுதிக்கு ‘மூக்குப் பெட்டகம்' (Nasal box) என்று பெயர். இதன் ஆரம்பப் பகுதியில், முகத்தின் பல பகுதிகளிலிருந்து மிக நுண்ணிய ரத்தக் குழாய்கள் வந்து சேருகின்றன.

இப்பகுதிக்கு ‘லிட்டில்ஸ் ஏரியா ' (Little’s area) என்று பெயர். இது ஒரு தொட்டாற்சிணுங்கி பகுதி. இது லேசாகச் சீண்டப்பட்டால்கூட, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டிவிடும். இதை ‘சில்லுமூக்கு' என்று பொதுவாகச் சொல்வார்கள். மூக்கிலிருந்து ரத்தம் வடிவதற்கு 80 சதவீதக் காரணம் இந்தப் பகுதியில் உண்டாகும் கோளாறுதான்; மீதி 20 சதவீதம்தான் மூக்கின் மேற்பகுதியிலும் உடலின் பிற பகுதிகளிலும் ஏற்படுகிற காரணங்களாகும்.

குழந்தைகளிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போது பார்த்தாலும் மூக்கில் விரலை நுழைத்துக் குடைந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் குச்சி, பேனா, பென்சில் என்று ஏதாவது ஒரு பொருளை மூக்கில் நுழைத்துக் குடைவார்கள். இதன் விளைவாக, லிட்டில்ஸ் ஏரியாவில் புண் உண்டாகி, ரத்தக் கசிவு ஏற்படும்.

சிலருக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். மூக்கில் சளி ஒழுகும். அப்போது மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத்தன்மை காணப்படும். அப்போது மூக்கிலிருந்து ரத்தம் வடியும். அல்லது மூக்கிலிருந்து சளியை வெளியேற்ற மூக்கைப் பலமாகச் சிந்துவார்கள். இதனாலும் ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்தம் வரலாம்.

குழந்தைகளுக்கு மூக்கில் ‘நீர்க்கோப்புச் சதை' (Nasal Polyp) வளர்வதுண்டு. தவிர, மூக்கும் தொண்டையும் இணைகிற பகுதியில் ‘அண்ணச்சதை' (Adenoid) வீங்குவதும் உண்டு. இந்த இரண்டு காரணங்களால், மூக்கு அடைத்துக்கொள்ளும். அடைப்பை விலக்கக் குழந்தைகள் அடிக்கடி மூக்கைக் குடைவார்கள் அல்லது சிந்துவார்கள். விளைவு, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டும்.

குழந்தைகள் விளையாட்டாகக் குச்சி, பேப்பர் துண்டு, ரப்பர் துண்டு, பஞ்சு, பயறு, பொத்தான், நிலக் கடலை, பருத்தி விதை, ஆமணக்கு விதை, வேப்பமுத்து, பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை மூக்கில் திணித்துக் கொள்வார்கள். இவை மூக்கினுள்ளே ஊறி, புடைத்து, புண் ஏற்படுத்தும். அப்போது அப்புண்ணிலிருந்து ரத்தம் கசியும்.

படிக்கிற இடம், வேலை செய்கிற இடம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் நிலவுகிற தட்பவெப்பம் காரணமாகவும் மூக்கிலிருந்து ரத்தம் வடியும். மூக்குக்கு மிகுந்த குளிர்ச்சியும் ஆகாது; மிகுந்த வெப்பமும் ஆகாது. குளிர்காலங்களில் குளிர்ந்த காற்றைச் சுவாசித்தால், மூக்கில் ரத்தம் வடியும்.

கோடையில் வெப்பம் மிகுந்த காற்றைச் சுவாசிக்க நேரிட்டாலும் இதே பிரச்சினைதான். மூக்கின் உட்பகுதிகள் இந்த வெப்பத்தால் உலர்ந்து, அங்குள்ள சவ்வுகளில் விரிசல் ஏற்படும். இதன் காரணமாக மூக்கில் ரத்தம் வடியும். ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட பள்ளி அறைகளில் படிக்கிற குழந்தைகளுக்கு அதிக வெப்பம் காரணமாக, மூக்கில் ரத்தம் வடியும் வாய்ப்பு அதிகம்.

ஒவ்வாமை, ,மூக்குச்சளி, மூக்குத்தண்டு வளைவு, காசநோய், கல்லீரல் நோய்,, இதயநோய், பூஞ்சைகாளான் நோய், புற்றுநோய் கட்டி, ‘ஹீமோபிலியா' போன்ற ரத்த உறைதல் கோளாறுகள், சைனஸ் பிரச்சினை, டைபாய்டு காய்ச்சல், டெங்கு காய்ச்சல், வைட்டமின் சி, கே சத்துக்குறைவு, ரத்தசோகை, பரம்பரை ரத்தக் கோளாறுகள், கபாலக் கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்பிரின் போன்ற மருந்துகள், மது அருந்துவது போன்ற காரணங்களாலும் மூக்கு வழியாக ரத்தம் வடியலாம்.

அடிக்கடி மூக்கில் ரத்தம் வடிபவர்களும், நடுத்தர வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு மூக்கில் ரத்தம் வந்தால், `இது சாதாரண சில்லுமூக்குத் தொல்லைதான்’ என்று அலட்சியமாக இருக்காமல் காலத்தோடு காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

காரணம், இவர்களுக்குச் சாதாரணக் காரணங்களைவிட உயர் ரத்த அழுத்தம், ரத்தப் புற்றுநோய், புற்றுநோய் கட்டி ஆகிய மூன்று காரணங்களால் மூக்கில் ரத்தம் வடிவது உண்டு. இவற்றுக்கான முறையான சிகிச்சையை நோயின் ஆரம்ப நிலையிலேயே பெற்றுவிட்டால்தான், ஆரோக்கியத்துக்கு ஆபத்து வருவதும் தடுக்கப்படும்.

என்ன பரிசோதனை?

வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன், மூக்குப் பகுதியை, சி.டி. ஸ்கேன், எண்டாஸ்கோப்பி எடுத்துப் பார்த்தால் மூக்கில் ரத்தம் வடிவதற்குக் காரணம் தெரிந்துவிடும். அதைத் தொடர்ந்து அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால், முழு நிவாரணம் கிடைக்கும்.

என்ன முதலுதவி செய்வது?

பாதிக்கப்பட்ட நபரை லேசாகத் தலையைக் குனிந்துகொண்டு உட்காரச் சொல்லுங்கள். வாயைத் திறந்து மூச்சுவிடச் சொல்லுங்கள்.

இப்போது மூக்கின் இரண்டு துவாரங்களையும் உங்கள் பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல்களால் அழுத்தமாகப் பிடித்துக்கொள்ளுங்கள். இவ்வாறு பத்து நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாகப் பிடித்துக்கொள்ள, ரத்தம் வடிவது நின்றுவிடும்.

மூக்கைப் பிடித்திருப்பதால், வாய் வழியாக ரத்தம் வர வாய்ப்புள்ளது. பயப்பட வேண்டாம். வாயிலிருக்கும் ரத்தத்தைத் துப்பச் சொல்லுங்கள்.

இந்த முயற்சியில் ரத்தம் நிற்கவில்லை என்றால், குளிர்ந்த நீரில் பருத்தித் துணியை முக்கி எடுத்துப் பிழிந்துகொண்டு, மூக்கின்மேல் பத்து நிமிடம் வைக்கவும்.

ஐஸ் கட்டி கைவசமிருந்தால், அதையும் மூக்கின் மீதும் மூக்கின் இரண்டு பக்கங்களிலும் வைக்கலாம்.

இத்தனை முயற்சிகளிலும் ரத்தக் கசிவு நிற்கவில்லை என்றால், அது மூக்கின் மேற்பகுதியிலிருந்துதான் வருகிறது என்று அர்த்தம். அதற்கு ரத்தக் குழாயைப் பொசுக்கி ரத்தக் கசிவை நிறுத்த வேண்டும். இதற்கு காது மூக்கு தொண்டை மருத்துவர் உதவியை நாட வேண்டும்.

என்ன செய்யக் கூடாது?

மூக்கிலிருந்து ரத்தம் கசியும்போது எந்தக் காரணத்தைக்கொண்டும் மூக்கைச் சிந்தக்கூடாது.

விரலை நுழைத்து மூக்கை அடைக்கக் கூடாது.

மூக்கிலிருந்து ரத்தம் வடியும்போது, தலையை நிமிர்த்தக் கூடாது. காரணம், மூக்கிலிருந்து ரத்தம் தொண்டைக்குச் சென்று குமட்டலை ஏற்படுத்தும். வாந்தி வரலாம். சமயங்களில் புரையேறி, இருமல் வந்து சேரும்.

மருத்துவர் சொல்லாமல் எந்த ஒரு மூக்கு சொட்டு மருந்தையும் மூக்கில் விடாதீர்கள்.

தடுப்பது எப்படி?

குளிக்கும்போது தினமும் மூக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.

தேவையில்லாமல் மூக்கைக் குடையும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

மூக்குக்குள் குச்சி, ரப்பர் போன்ற பொருட்களை நுழைத்து விளையாடக் கூடாது.

மிகவும் குளிர்ந்த நீரைக் குடிக்கக் கூடாது. மிகக் குளிர்ச்சியான உணவுப் பொருட்களைச் சாப்பிடக் கூடாது.

அதிக வெப்பச் சூழல் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.

ஒவ்வாமை நோய் உள்ளவர்கள், அதற்குரிய சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

அடிக்கடி மூக்கடைப்பு ஏற்பட்டால், அலட்சியமாக இருக்கக் கூடாது. காரணம் அறிந்து, சிகிச்சை பெற வேண்டும்.

குளிர் காலங்களில் மூக்கடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க, மருத்துவர் யோசனைப்படி மட்டும் மூக்கு சொட்டு மருந்து விடலாம்.

அடிக்கடி மூக்கிலிருந்து ரத்தம் வடிந்தால், உயர் ரத்த அழுத்தம் உள்ளதா என்று சோதித்துக்கொள்ளவும்.

15/01/2025

காதில் இரைச்சல் ஏற்படுவது ஏன்?

Dr ஜெயேந்திரன் சுப்ரமணியம்
காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்
வடமலையான் மருத்துவமனை
திண்டுக்கல்

டின்னிடஸ் (Tinnitus) அதாவது காதிரைச்சல் என்பது தற்போது பலரை பாதித்து வரும் காது தொடர்பான ஒரு கோளாறு ஆகும். காதிரைச்சல் என்றால் என்ன மற்றும் அதனால் காது கேளாமை போன்ற பிற நோய்கள் ஏற்படுமா என்பது போன்ற தகவல்களை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

காதில் ஏதோ பெல் அடிப்பது போன்ற ஒலி அவ்வப்போது கேட்பது இயல்பான ஒன்று தான். இதனை நாம் அனைவருமே என்றாவது ஒரு நாள் அனுபவித்திருப்போம். ஆனால், இதே போன்ற உரத்த ஒலி எப்போதும் உங்கள் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது என்றால் அது சற்று கவனிக்கப் பட வேண்டிய விஷயம் ஆகும். அதனால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

காதிரைச்சல் என்றால் என்ன?

காதிரைச்சல் என்பது நம்மை சுற்றி எந்த ஒரு சத்தமும் இல்லாதபோதிலும் நம் காதினுள் கேட்கும் ஒரு விதமான சத்தம் ஆகும். இந்த சத்தமானது மணி அடிப்பது, சங்கு ஊதுவது, சைரன் ஒலி, பறவைகளின் சத்தம், விசில் அடிப்பது, கடல் அலையின் சத்தம், என எந்த விதமாக வேண்டுமானாலும் இருக்கலாம். காதிரைச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் தனது காதுகளில் பெல் அடிப்பது போன்ற ஒலி, கிளிக் என்ற ஒலி, தேனீக்கள் சத்தமிடுவது போன்ற ஒலிகளைக் கூட கேட்கலாம். இந்த சத்தத்தின் அளவானது குறைவாகவோ பலமாகவோ இருக்கலாம். இது பிறருக்கு கேட்காது. இது ஆரம்ப காலத்தில் ஒருவரை பாதிக்காது என்றாலும் கூட, அதனை சரியாக கவனித்து குறிப்பிட்ட நேரத்தில் அதற்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் அது ஒருவரின் வாழ்க்கை தரத்தை மோசமாக்கிவிடும்.

காதிரைச்சல் ஏற்பட காரணங்கள் என்ன?

காதிரைச்சல் ஒரு நோய் அல்ல, காது கோளாறு சார்ந்த ஒரு அறிகுறி என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். காது அல்லது காது சம்மந்தப்பட்ட நரம்புகளில் ஏதேனும் சிக்கல்கள் எழும் போது காதிரைச்சல் ஏற்படலாம். காதிரைச்சலை ஏற்படுத்தும் பிற பிரச்சனைகள்

வயது: பொதுவாக வயதானவர்கள், அதாவது 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

காதில் அதிகப்படியான மெழுகு சேர்தல்: அதிகப்படியாக காதுகளில் மெழுகு சேரும் போது, அது சில நேரங்களில் காது கால்வாயை அடைத்து, தற்காலிக காதிரைச்சல் மற்றும் செவிப்புலன் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

அயல் பொருட்கள் காதில் சிக்கி இருத்தல்: இயர் பட்ஸ் மற்றும் பென்சில் டிப் போன்ற அயல் பொருட்கள் காதை சுத்தம் செய்யும் போது காதுக்குள் நுழைய நேரலாம். இந்த பொருட்கள் உள்ளே நுழைந்தால் காதுகுழாயை அது சேதப்படுத்தி விடும், அதோடு இது காதிரைச்சலுக்கு வழிவகுக்கும்.

மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கு அடைப்பு: இந்த நிலைமைகள் காதிரைச்சல் மற்றும் காது வலியை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.
இவையெல்லாமே தற்காலிகமாகக் காது இரைச்சலை உண்டாக்குபவை.

காது கேளாமைக்கு வழிவகுக்கும் பலமான சத்தம்: தொடர்ச்சியான அல்லது திடீரென்று பலத்த சத்தத்தின் வெளிப்பாடு காரணமாக மூளைக்கு ஒலி அலைகளை கடத்துவதற்கு பொறுப்பாக செயல்படும் உள் காதுகளின் சென்சிடிவ் செல்கள் சேதமடைந்து விடுகின்றன. இது இறுதியில் காதிரைச்சலை ஏற்படுத்தும். பொதுவாக, தொழிற்சாலைகள், கட்டுமானத் தளங்கள் அல்லது இசைக் கலைஞர்கள் போன்ற அதிக சத்தம் நிலவும் வகையிலான சூழலில் பணிபுரிபவர்கள் சரியான பாதுகாப்பு இல்லாமல் பணிபுரிந்தால் காதிரைச்சலுக்கு உள்ளாக நேரிடலாம்.

மெனியர்ஸ் நோய்(Meniere's Disease) : இது ஒரு வகையான நாள்பட்ட காது தொடர்பான கோளாறு ஆகும். இது காது கேளாமை, சமநிலை சிக்கல்கலள் மற்றும் காதிரைச்சலை ஏற்படுத்துகிறது.

டெம்போரோமாண்டிபுலர் மூட்டு கோளாறுகள் (TMJ): தாடை மூட்டுகளில் அல்லது மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டால், அது காதில் தொடர்ச்சியான சத்தம் கேட்பதற்கு காரணமாக அமையும்.

வாஸ்குலர் நோய்கள்: தலை மற்றும் கழுத்தில் இரத்தத்தை கொண்டு செல்லும் இரத்த நாளங்களில் ஏற்படும் குறைபாடு காதுகளில் ஒரு விதமான தாளம் கொண்ட துடிப்பு ஒலிகளை ஏற்படுத்தும்.

வெஸ்டிபுலர் ஸ்க்வான்னோமா(Vestibular Schwannoma) : இது ஒரு புற்றுநோய் அல்லாத கட்டி ஆகும். இது மூளையுடன் உள் காதில் இணைக்கப்பட்ட நரம்புகளை பாதிக்கிறது. அதன் காரணமாக காதிரைச்சல் மற்றும் சமநிலை சிக்கல்கள் ஏற்படலாம்.

மருந்துகள்: பொதுவாக தொடர்ந்து மருந்துகள் உட்கொள்வதால் பல பக்க விளைவுகள் நேரலாம். மேலும், ஒரு சில நேரங்களில் பக்க விளைவுகளில் ஒன்றாக காதிரைச்சல் இருக்கலாம்.
எடுத்துக்காட்டாகக் காசநோய், மலேரியா, மன நோய், புற்றுநோய், இதயநோய் போன்றவற்றுக்குத் தரப்படுகிற சில மாத்திரை, மருந்து, ஊசிகள் இம்மாதிரியான பக்கவிளைவைக் கொண்டுள்ளன.

என்ன சிகிச்சை?

ஆடியோகிராம், HRCT ஸ்கேன், MRI /MRA ஸ்கேன், போன்ற பரிசோதனைகள் காது இரைச்சலுக்குக் காரணம் கண்டறிந்து சிகிச்சை பெற உதவும்.

காது இரைச்சல் உள்ளவர்களின் காதுக்குள் அந்த இரைச்சலுக்குச் சவால்விடும் வகையில் அதிக டெசிபல் உள்ள மற்றொரு ஒலியைச் செலுத்தினால், இரைச்சலின் கொடுமையை உணரவிடாமல் அது தடுத்துவிடும். இதற்கு ‘மறையொலி தொழில்நுட்பம்’ (Masking technique) என்று பெயர். இயர்போன்மாதிரி ‘மறையொலிக் கருவி’யை (Masker) காதில் பொருத்தி, இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

காது இரைச்சலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்காதை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் அறுவை சிகிச்சையும் (Labyrinthectomy) நடைமுறையில் உள்ளது. காது இரைச்சலுக்கு டி.ஆர்.டி. (TRT – Tinnitus retraining therapy), டி.எம்.எஸ். (TMS - Transcranial Magnetic Stimulation) எனும் சிகிச்சைகள் இப்போது பிரபலமாகிவருகின்றன.

11/12/2024

தொண்டையை பாதுகாப்போம்

Dr ஜெயேந்திரன் சுப்ரமணியம்
MS DNB ENT
வடமலையான் மருத்துவமனை
திண்டுக்கல்

குரல் பாதிப்பு

ஆசிரியர்கள், பாடகர்கள், சொற்பொழிவாளர்கள் போன்றவர்களுக்கு அவர்களின் தொழிலையே பெரும் கேள்விக்குறி ஆக்கிவிடுவது, அவர்களின் குரல் பாதிப்புதான். மோஸ்ட் யூஸ், ஓவர் யூஸ், அப்யூஸ் என மூன்று காரணங்களால் குரலில் பாதிப்பு ஏற்படுகிறது. உதாரணத்துக்கு அதிக வருடமாக ஆசிரியைப் பணியில் இருப்பவருக்கு தங்கள் குரல் ஆண் குரலாக மாறலாம். அதிகம் கத்தி கத்தி, தொண்டை சோர்வுற்று 'குரல் நாண் மொட்டுக்கள்’ அடிபட்டு, தேய்ந்து போகலாம். நோய்த் தொற்று ஏற்படலாம். இதற்கு அறுவைசிகிச்சை செய்தால் திரும்பவும் வர வாய்ப்புகள் அதிகம்.

குரல் வளப் பயிற்சி, பேச்சுப் பயிற்சிதான் நல்ல பலனைத் தரும்.

டான்சில்

இது தொண்டையில் ஏற்படும் பிரச்னை. நுண்கிருமி தாக்குதலால் தொண்டைச் சதையில் சீழ் கோத்துக் காய்ச்சல், தொண்டை வலி ஏற்படும். தொற்று பரவும்போது டான்சில்ஸ் வீங்கும். இதனால் எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். தக்க சமயத்தில் சிகிச்சை பெற்றால் மருந்துகளால் சரிசெய்துவிடமுடியும். டான்சில் முற்றிய நிலையில், சீழ் பிடித்து செப்டிக் ஆன புரையேறிய திசுக்களை அறுவை சிகிச்சை செய்து எடுக்கவேண்டியிருக்கும்.

குரல்வளை நாண் பாதிப்பு

குரல் கரகரப்பு, இருமல், மூச்சுத் திணறல் ஆகியவை குரல்வளை நோயின் அறிகுறிகள்.

குரல் நாண் பாதிக்கப்பட்டால் குரல் நாண் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். இந்தச் சிகிச்சைக்குப் பின் பேச்சுப் பயிற்சி அளிப்பதன் மூலம் நல்ல குரலைப் பெற முடியும்.

குறட்டை

ஈ.என்.டி. தொடர்பான பிரச்னைதான் இது. மூக்கு முதல் தொண்டை வரை இதன் பாதிப்பு இருக்கும். மூக்கடைப்புதான் இதற்கு முக்கிய காரணம். மூச்சு உள்ளே போய் வெளியே வருவது தடைப்படுகிறது. இந்த அதிர்வினால் உள்நாக்கும் தடிக்கும்.

பலரும் குறட்டையை நோயாக நினைப்பதில்லை. லேசான அளவில் குறட்டை விடும்போது பிரச்னையில்லை. ஆனால், குறட்டையின் அளவு அதிகரிக்கும்போது அது ஒரு நோயாகி விடும்.

அதிக உடல் எடை, கழுத்துப் பகுதியில் அதிக சதை, சைனஸ் தொல்லை, மூக்கு, உள் நாக்கு, தொண்டைப் பகுதியில் பிரச்னை, மது பழக்கம் உள்ளவர்களுக்கும் குறட்டைப் பிரச்னை ஏற்படும்.

குறட்டையால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பகலில் எப்பவும் தூக்கம் வரும். மதியம் , வண்டி ஓட்டும்போதுகூட தூக்கம் வரும். பேசிக்கொண்டே இருக்கும்போது தூங்கிவிடுவார்கள். சிலசமயம் இரவு தூக்கத்தில் மூச்சுவிடவும் மறப்பது உண்டு. இதனால் தூங்கக்கூட பயப்படுவார்கள். இதனால் தூக்கம் கெடலாம்.

இதைப் போக்க உடல் எடையைக் குறைக்கவேண்டும். மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளைப் பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் சிகிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்துவிடலாம். சுவாச அடைப்பைச் சரி செய்துவிட்டால் ஆரோக்கியமான, ஆழ்ந்த தூக்கத்தையும் தெளிவான மனநிலையையும் உற்சாகத்தையும் பெறலாம்.

தொண்டையைப் பாதுகாக்க வழிகள்

அதிக சூடு, குளிர்ந்த பானங்களைத் தவிர்க்கவேண்டும்.

• தினமும் தூங்கும்போது சூடான பாலில் மஞ்சள்ள், மிளகுத் தூள் சேர்த்து அருந்தலாம்.

• சப்தமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

• சிகரெட், பான்பராக், பாக்கு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

• புகைபிடிக்கும் நபர்களின் அருகில் நிற்பதும் தொண்டையை பாதிக்கும்.

• தொடர்ந்து பேசும்நிலை ஏற்பட்டால், இடையிடையே தண்ணீர் குடிக்க வேண்டும்.

• தொண்டையில் சளி இருந்தால், கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்து அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும். தொண்டைக்கு இதம் அளித்து சளி வெளியேற உதவும்.

14/07/2024

சைனஸ் தொந்தரவிலிருந்து விடுபடுவது எப்படி?

Dr ஜெயேந்திரன் சுப்ரமணியம்
காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்
வடமலையான் மருத்துவமனை
திண்டுக்கல்

நம் மூக்கைச் சுற்றி நான்கு ஜோடி காற்றுப் பைகள் உள்ளன. இதற்குப் பெயர்தான் சைனஸ். மூக்கின் உட்புறமாகப் புருவத்துக்கு மேலே நெற்றியில் உள்ள சைனஸ் - ஃபிரான்டல் சைனஸ். மூக்குக்கு இரு புறமும் கன்னத்தில் உள்ள சைனஸ் - மேக்ஸிலரி சைனஸ். கண்ணுக்கும் மூக்குக்கும் நடுவில் உள்ளது - எத்மாய்டு சைனஸ். கண்களுக்குப் பின்புறம் மூளையை ஒட்டி உள்ள சைனஸ் - ஸ்பீனாய்டு சைனஸ். இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டாலும் பிரச்சினைதான்.

நாம் சுவாசிக்கும் காற்றைத் தேவையான வெப்பத்தில் நுரையீரலுக்குள் அனுப்பும் முக்கியமான வேலையை இந்த சைனஸ் காற்றுப் பைகள் செய்கின்றன. சாதாரணமாக சைனஸ் அறைகளிலிருந்து சிறிதளவு திரவம் சுரந்து, மூக்குக்கு வரும். மூக்கில் ‘மியூகஸ் மெம்பரேன்’ எனும் சளிச் சவ்வு இருக்கிறது. சைனஸ் திரவம் இதை ஈரப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இதன் பலனால், வெளிக்காற்று வெப்பத்துடன் நுழைந்தாலும், அது ஈரப்படுத்தப்பட்டு நுரையீரலுக்குள் அனுப்பப்படுகிறது. இந்த சைனஸ் அறைகளின் திரவ வடிகால்கள் அடைபட்டு, அங்குத் திரவம் தேங்கும்போது சைனஸ் பிரச்சினை (Sinusitis) ஏற்படுகிறது.

மூக்கின் ஈரப்பதத்துக்காக உற்பத்தியாகிற mucus படலம் மூக்குக்கு வராமல், உள்ளேயே காற்று இருக்கும் இடத்தில் அடைத்துக்கொண்டு அதனால் நீர் கோத்தால் அதுதான் சைனஸ் பிரச்னையாக மாறுகிறது. இதன் விளைவாக தலையின் கனம் கூடுதல், தலைவலி, கண் வலி, மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

சாதாரணமாக சளி பிடித்தால் கூட சைனஸில் நீர் கோத்துக்கொள்ளும். இதனால் மூக்கைச் சுற்றியுள்ள இலகுவான தசைகள் வீங்கிக்கொள்ளும். இதன் காரணமாகத்தான் சளி பிடித்தால் தலைவலி ஏற்படுகிறது.

சாதாரணமான சளித்தொந்தரவால் ஏற்படும் சைனஸ் பிரச்னை நிரந்தரமானதல்ல. இதனை வீட்டிலேயே குணப்படுத்த முடியும். ஆவி பிடிப்பதன் மூலம் இப்பிரச்னையை வீட்டிலேயே சரி செய்யலாம். வெறும் தண்ணீரைக் கொதிக்கவைத்து இறக்கி ஆவி பிடித்தாலே போதும்.

10 பேர் சைனஸ் தொந்தரவு என்று வந்தார்கள் என்றால் அவர்களில் 8 பேருக்கு சைனஸ் பிரச்னை இருக்காது. சுவாச ரீதியாக ஒவ்வாமை (அலர்ஜி) அவர்களுக்கு இருக்கும். அதன் விளைவாக அவர்கள் தொடர்ச்சியாக தும்மல் ஏற்படுவது போன்ற காரணங்களால் சைனஸ் பிரச்னைக்கு ஆளாகியிருப்பார்கள். ஒவ்வாமையை ஏற்படுத்தும் தூசி, புகை, வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றை தவிர்க்கச் சொல்லிவிட்டு ஒவ்வாமைக்கான சிகிச்சையை அளித்தால், இவர்களுக்கு சைனஸ் பிரச்னை தானாக சரியாகிவிடும்.

முதலில் எது சைனஸ் என்கிற புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். சளி பிடித்து சற்றே முகம் வீங்கி விட்டாலோ, மூக்கிலிருந்து நீர் வடிந்தாலோ நீங்களாகவே உங்களுக்கு சைனஸ் பிரச்னை இருப்பதாக நினைத்துக் கொள்ளக்கூடாது. சிலர் மருத்துவரைச் சந்திக்க வரும் முன்னர் அவர்களாகவே முடிவு செய்து எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்துக்கொண்டு வருவார்கள். அது தேவையே இல்லை. மருத்துவரை அணுகிய பிறகு மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி நடந்தாலே போதும் இப்பிரச்னையை குணப்படுத்தி விட முடியும்.

சைனஸ் பிரச்னை இரண்டு வகைப்படும். ஒன்று, ‘அக்யூட் ரியோ சைனஸைட்டீஸ்’ எனப்படும், இரண்டு வாரங்கள் மட்டுமே நீடிக்கும் குறுகிய கால சைனஸ். மற்றொன்று, ‘கிரானிக் ரியோ சைனஸைட்டீஸ்’ எனப்படும் 10 முதல் 12 வாரங்கள் நீடிக்கும் நீண்ட கால சைனஸ்.

சைனசிடிஸ் அறிகுறிகள் என்ன?

கன்னம், நெற்றிப் பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.

தலையைக் கீழே கவிழ்த்தால், தாங்க முடியாத தலைவலி இருக்கும்.

அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறும், சிலருக்கு சளி சிந்தும்போது, ரத்தமும் சேர்ந்து வரும். சளி, கடுமையான நாற்றத்துடன் இருக்கும்.

மூக்கைத் தொட்டாலே, கடுமையான வலி ஏற்படும்.

இரவு நேரத்தில் இருமல் வரும். காலையில் எழுந்தவுடன் தொடர்ச்சியாகத் தும்மல் வரும்.

பல் வலி, காது வலி ஏற்படும். வாசனை, சுவை உணர்வு குறையும்.

காய்ச்சல் வரலாம், உடல் சோர்வாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாது.

காற்றில் பரவும் இன்ஃப்ளூயன்ஸா (influenza) வைரஸ் மூலமாக சளி பிடிக்கிறது.
சரியாகப் பராமரிக்கப்படாத நீச்சல் குளங்களில் ஃபங்கஸ் இருக்கும். அவை மூக்கின் உள் பகுதியான மியூக்கோஸ் தோல் அடுக்குக்குள் புகுந்து சைனஸை உருவாக்கலாம்.
சிலருக்கு மூக்குத் துவார தடுப்புத் தண்டு, பிறவியிலிருந்தே வளைந்து இருக்கும். இதனால் ஒரு துவாரம் பெரிதாகவும், மற்றொரு துவாரம் சிறிதாகவும் இருக்கும். இதனால் சைனஸ் தாக்கும்போது இவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.

உண்மையான சைனஸ் பிரச்னை என்பது நாள்பட்ட வியாதியாக தொடர்ந்து வருவது. அவர்களுக்கு தொடக்கத்தில் மருந்து, மாத்திரைகள் கொடுப்போம். அதன் வழியாகவே அப்பிரச்னையை குணப்படுத்தி விடலாம். சிலருக்கு மருந்து, மாத்திரைகளால் சைனஸ் குணமாகவில்லையெனில் என்டாஸ்கோபிக் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

சைனஸைட்டீஸ் தொந்தரவை தடுக்கும் வழிகள்:

கதவு தாழ்ப்பாள், கைப்பிடிகள் , கிரில் கம்பிகள் ஆகியவற்றில் வைத்த கையால் உடனே முகத்தைத் துடைக்கும்போதோ, மூக்கில் படும்போதோ தூசுகள் உள்ளே போக வாய்ப்புள்ளது. எனவே, கையை அவ்வப்போது சுத்தமாகக் கழுவ வேண்டும்.

பனிக்காலத்தில் அதிகாலை, இரவு வேளைகளில் வெளியே செல்வதைக் குறைத்துக்கொள்ளவும்.

பொதுவாக , குளிர்காலங்களில் பாக்டீரியாத் தொற்று அதிகமாக இருக்கும். காலை நடைப்பயிற்சி செல்லும்போது முகத்தில் மஃப்ளர் கட்டிக்கொண்டு செல்வது நல்லது.

அசுத்தமான நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம். குளிர்பானம் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.

சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் முடிந்தவரை ஏசியைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் வந்தால், அதனை வாரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் தூசு படியாமல் இருக்கும்.

மூக்குப்பொடி போடுவதையும்,புகை பிடிப்பதையும் அறவே தவிர்க்க வேண்டும்.மியூக்கோஸ் படலத்தை சிகரெட் புகை எளிதில் பாதிக்கும். அரிப்பு, எரிச்சல் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு எளிதில் சைனஸ் தொற்று பரவும். முறையான உடற்பயிற்சி, அதிக காய்கறி மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் சைனஸ் பிரச்னையைத் தடுக்கலாம்.

தூசு உள்ளே புகாமல் இருக்க மியூக்கோஸ் பகுதி எப்போதும் மெலிதான ஈரத் தன்மையுடன் இருக்கும். சைனஸ் பாதிக்கப்பட்டபின் வீங்கிய நிலையில் இருக்கும் மியூக்கோஸ் பகுதி வறண்டு காணப்படும். மேலும், வலி அதிகமாகும். இதனைத் தவிர்க்க வெந்நீர் ஆவியை சுவாசிக்கலாம். இதன்முலம் வீக்கம் குறையும், வறண்ட பகுதியில் ஈரப்பதம் அதிகரிக்கும்.

ஆன்டிபயாட்டிக்ஸ், பாக்டீரியல் தொற்றை மட்டுமே தடுக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வைரல் தொற்றை ஆன்டிபயாட்டிக்ஸ் மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியாது. எனவே, சைனஸ் பிரச்னைக்கு மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் அவற்றை எடுத்துக்கொள்ளக் கூடாது.

தொடர் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் கிரானைட் தயாரிக்கும் தொழிற்சாலை போன்ற, காற்றில் துகள்கள் பரவும் இடங்களுக்கு அடிக்கடி செல்வதைத் தவிர்க்க வேண்டும். போகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், சைனஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கென்று பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள மாஸ்க்கை அணிந்து செல்லவேண்டும்.

உடுத்தும் ஆடைகளில் எப்போதும் சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக, கைக்குட்டையைத் துவைத்துச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

07/05/2024

டான்சில் அழற்சி (Tonsillitis) ஏன் ஏற்படுகிறது

Dr ஜெயேந்திரன் சுப்ரமணியம்
காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்
வடமலையான் மருத்துவமனை
திண்டுக்கல்

டான்சில் என்பது தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி. தொண்டையில் சதை வீங்குவதை டான்சில் என்று மக்கள் பொதுவாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள்.

ஐஸ்கிரீம் சாப்பிட்டால் டான்சில் தொல்லை தரும் என்று தெரிந்துவைத்திருக்கிறார்கள்

ஆனால் டான்சில் என்பது ஒரு நிணநீர்ச் சுரப்பி. இது இயற்கையாகவே நம் வாய்க்குள் மூன்று இடங்களில் உள்ளது. தொண்டையில் உள்நாக்குக்கு இரண்டு புறமும் உள்ள டான்சில், நாக்குக்கு அடியில் உள்ள டான்சில், மூக்குக்குப் பின்னால் உள்ள டான்சில் என மூன்று வகைப்படும். இவை நம் சுவாசப் பாதைக்கும் உணவுப் பாதைக்கும் ஒரு பாதுகாப்பு வளையமாகச் செயல்படுகின்றன.

தொண்டை டான்சில்

நாம் உணவு சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கும்போதும் கிருமியோ, வேண்டாத உணவோ அல்லது புதிதாக ஒரு பொருளோ உடலின் உள்ளே போகும்போது, அவற்றிலிருந்து துளியளவு ‘சாம்பிள்’எடுத்து ஆராய்ந்து, அது பற்றிய தகவல்களை உடனே மூளைக்குத் தெரிவிக்கிற வேலையைத் தொண்டையில் உள்ள டான்சில்கள் செய்கின்றன. டான்சில்கள் ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை நம் உடலில் செய்கின்றன. வந்திருக்கிற கிருமிக்கு நம்முடைய உடலில் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்த இது உதவுகிறது.

டான்சில் வீங்குவது எதனால்?

சில சமயங்களில் கிருமிகளை ஆராயும்போது, அந்தக் கிருமிகள் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்குமானால், முதலில் டான்சில்கள் அந்தக் கிருமிகளால் பாதிக்கப்பட்டுவிடும்

காய்ச்சல் சளி பிடிக்க ஆரம்பிக்கும், முன்பக்கத் தொண்டை வலிப்பது இதனால்தான். டான்சில் திசுக்கள் தொடர்ந்து இந்தக் கிருமிகளோடு போராடும்போது, தொண்டையில் இரண்டு பக்கமும் உள்ள டான்சில்கள் ஒட்டுமொத்தமாக வீங்கிவிடும். இதைத்தான் ‘டான்சில் அழற்சி’ (Tonsillitis ) என்கிறோம்.

இப்படி டான்சில்கள் வீங்குவதற்குப் பொதுவான காரணம் ‘பீட்டா ஹீமோலைட்டிக் ஸ்ட்ரெப்டோகாகஸ்’எனும் பாக்டீரியா கிருமிதான். இதைத் தவிர, அடினோ வைரஸ், ஃபுளூ வைரஸ், டிப்தீரியா, பாக்டீரியா போன்ற கிருமிகளின் தாக்கத்தாலும் இப்படி ஏற்படலாம்.

யாருக்குப் பாதிப்பு அதிகம்?

பதினைந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டான்சில் பாதிப்பு அதிகம் ஏற்படும்.நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு, ஊட்டச்சத்துக் குறைந்தவர்களுக்கு, காற்றுப் போக வழியில்லாமல் மிகவும் நெருக்கமான இடங்களில் வசிப்பவர்களுக்கு, மாசடைந்த காற்றைச் சுவாசிப்பவர்களுக்கு டான்சில் வீக்கம் அதிகமாகத் தொல்லை தரும்.

ஐஸ்கிரீம், ஃபிரிட்ஜிலிருந்து உடனே எடுத்துச் சாப்பிடப்படும் பதார்த்தங்கள், குளிர்பானங்கள், குளிர்ச்சியான தட்பவெப்பநிலை போன்றவை டான்சில் வீக்கத்துக்குத் துணை செய்யும். மிகவும் குளிர்ச்சியான பொருட்களைச் சாப்பிடும்போது, அந்தப் பொருட்களின் அதீத குளிர்ச்சியானது டான்சில் ரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்துவிடும். இது டான்சில்களின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடும். அப்போது கிருமிகள் பலம் பெற்று டான்சில்களைத் தாக்கிவிடும். இதன்விளைவாக டான்சில்கள் வீங்கிவிடும்.

வீக்கத்தில் இரண்டு வகை

டான்சில் வீக்கம் இரண்டு வகைப்படும். ஒன்று, ‘திடீர் டான்சில் வீக்கம்’ (Acute Tonsillitis). மற்றொன்று, ‘நாட்பட்ட டான்சில் வீக்கம்’ (Chronic Tonsillitis) . முதலாம் வகையில் தொண்டை வலி, காய்ச்சல், தலைவலி, உடல்வலி, குமட்டல், வாந்தி, இருமல், உணவை விழுங்கும்போது வலி, காது வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். சிலருக்குக் கழுத்தில் நெரி கட்டும். இவர்களுக்கு ஆரம்பத்திலேயே தகுந்த ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை முறையாகக் கொடுத்துவிட்டால், பாதிப்பு முற்றிலும் குணமாகிவிடும்.

முதல்முறையாக டான்சில்கள் வீங்கும்போது சரியானமுறையில் சிகிச்சை பெறாதவர்களுக்கும் தற்காப்பு நடவடிக்கை களை எடுக்கத் தவறியவர்களுக்கும் டான்சில் பாதிப்பு அடிக்கடி ஏற்படும். அப்போது டான்சில்களின் நோய் எதிர்ப்புச் சக்தியானது நிரந்தரமாகவே குறைந்துவிடுவதால், கிருமிகளின் பாதிப்பும் நிரந்தரமாகிவிடும். அதனால் டான்சில் வீக்கம் நீடிக்கும். இதை ‘நாட்பட்ட டான்சில் வீக்கம்’(Chronic tonsillitis) என்று சொல்கிறோம்.

தொண்டை வலி நிரந்தரமாகிவிடும். பசி குறையும். குழந்தையின் எடை குறையும். டான்சிலில் சீழ் பிடித்து வாய் நாற்றம் ஏற்படும். காதில் சீழ் வடியும். கேட்கும் திறன் குறையும். கழுத்தில் நெறிகட்டுதல் நிரந்தரமாகிவிடும். சைனஸ் தொல்லை நீடிக்கும். இதனால் தலைவலி அடிக்கடி வரும். சிறு குழந்தைகளும் குறட்டை விடும். குரல் கரகரப்பாக மாறிவிடும். மேலும், டான்சிலில் குடியிருக்கும் கிருமிகள் சில நச்சுப் பொருட்களை வெளிவிடும். இவை ரத்த ஓட்டத்தில் கலந்து சிறுநீரகம், எலும்பு மூட்டுகள், இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளை பாதிக்க வாய்ப்புள்ளது

அடினாய்டு டான்சில்

மூக்கில் உள்ள டான்சிலை ‘அடினாய்டு டான்சில்’ (Adenoid Tonsil) என்கிறோம். மூக்கு வழியாக வரும் காற்றில் உள்ள கிருமிகளை அடையாளம் காணும் வேலையை இந்த அடினாய்டு டான்சில் செய்கிறது. பிறந்த குழந்தை வளர வளர அடினாய்டு டான்சிலும் வளர்ந்துகொண்டே வரும். ஏழு வயதை நெருங்கும்போது இது சற்றுப் பெரிதாகவே காணப்படும். அப்போது பலம் வாய்ந்த கிருமிகளால் தாக்கப் படுமானால், இது வீங்கி மூக்கின் பாதையை அடைத்துவிடும். அப்போது குழந்தைகள் வாய் வழியாகச் சுவாசிக்க ஆரம்பிப்பார்கள். இப்படி வாய் வழியாகச் சுவாசிப்பதால், இவர்களுக்குப் பற்கள் துருத்திக்கொண்டு வளர ஆரம்பிக்கும். தெற்றுப் பற்கள் உண்டாகும்.

திடீர் டான்சில் வீக்கத்தை மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். நாட்பட்ட வீக்கத்துக்கு ஆபரேஷன்தான் கைகொடுக்கும். இப்போது கோப்லேசன்(Coblation ) மற்றும் ‘ரேடியோ ஃபிரீகுவன்சி அப்லேசன்’ (Radio frequency ablation) எனும் நவீன சிகிச்சையில் துளியளவு ரத்தம்கூட சிந்தாமல், வலியே இல்லாமல், மிக துல்லியமாக டான்சில்களை அகற்றமுடியும்.

அறுவை சிகிச்சை தேவையா?

டான்சில் வீக்கத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா, வேண்டாமா என பெற்றோர்கள் குழம்பிப் போகிறார்கள். , அடிக்கடி தொல்லை கொடுக்கும் டான்சில் வீக்கத்துக்கு அறுவை சிகிச்சைதான் சரியான தீர்வு.

அறுவை சிகிச்சை எப்போது தேவை

ஆண்டுக்கு மூன்று முறைக்கு மேல் டான்சில் பிரச்சினை ஏற்படுதல்

டான்சில் பாதித்த குழந்தைக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவது, அடிக்கடி வாந்தி எடுப்பது, சாப்பிட முடியாத நிலைமை, உடல் எடை குறைவது,

டான்சில் வீக்கத்தில் சீழ் பிடிப்பது,

அடிக்கடி காதுவலி, காதில் சீழ், காது கேட்பது குறைவது,

வாய்வழியாக மூச்சுவிடுவது, குறட்டை விடுவது போன்ற பிரச்சினைகள் தொடரும்போது அறுவை சிகிச்சை அவசியம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுமா?

டான்சில் அறுவை சிகிச்சைக்குப் பின் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாமல் போய்விடும் என்று பயப்படத் தேவையில்லை. காரணம், குழந்தைக்கு 5 வயதாகும் வரைதான் நோய்ப் பாதுகாப்புப் பணியில் டான்சில்கள் பிரதானமாகப் பங்களிக்கின்றன. அதற்குப் பிறகு உடலில் உள்ள மற்ற நிணநீர்ச் சுரப்பிகள் இந்தப் பாதுகாப்பு வேலையைப் பகிர்ந்துகொள்கின்றன. ஆகவே, டான்சில் களை அகற்றிவிட்டாலும் குழந்தைக்கு எப்போதும்போல் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும்.

தடுப்பது எப்படி?

இளம் சூடான தண்ணீரில் சிறிதளவு சமையல் உப்பைக் கலந்து காலையில் எழுந்ததும் ஒருமுறை, இரவில் படுக்கச் செல்லும்போது ஒருமுறை வாயைக் கொப்பளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் டான்சில் பிரச்சினை குறையும்

எப்போதும் சுத்தமான குடிநீரைக் குடிக்க வேண்டும். சுத்தமான உணவைச் சாப்பிட வேண்டும். முக்கியமாக, திறந்தவெளிக் கடைகளிலும் சாலையோரக் கடைகளிலும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்

ஐஸ்கிரீம் உள்ளிட்ட மிகவும் குளிர்ச்சியான உணவு வகைகளையும் குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும்

மிகவும் சூடான, காரமான உணவு வகைகளும் வேண்டாம்

Address

Vadamalayan Hospital
Dindigul
624004

Telephone

+919080156306

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr SS Jayendhiran ENT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr SS Jayendhiran ENT:

Share

Category