05/04/2024
நலம் நாடுவோம் -
கோடைக்காலத்தை எதிர்கொள்வது எப்படி?
கோடைகாலம் தொடங்கும் போதே வெப்பத்தையும் உணர தொடங்கிவிடுவோம். கடுமையான கோடையை தவிர்க்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் முக்கிய தீர்வுகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்
கோடைக்காலம் என்றில்லை, அதிக வெப்பம் நிலவும் காலங்களில் உண்டாகும் முதன்மையான பிரச்சினை உடலின் நீர்சத்து குறைதல்,(Dehydration) .இதன் முக்கிய அறிகுறிகள்
அதிக தண்ணீர் தாகம்,
வறண்ட தோல்,
உதடுகளில் பிளவு,
நாக்கு வறட்சி,
பேசும்போது உளறல்,
வலிப்பு,
வயிறு வலி,
தலை வலி,
தலை சுற்றல்,
நெஞ்சு எரிச்சல்,
படபடப்பு ,சிறுநீர்த் தொற்று, அம்மை நோய், மஞ்சள்காமாலை, செரிமானப்
பிரச்னை போன்ற வயிற்றுக் கோளாறுகள், தொண்டை அழற்சி (Pharyngitis), எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.
உடலில் வெப்பம் அதிகரிப்பதால் பொதுவாகத் தலையில் கட்டி அல்லது பொடுகு ஏற்படும். ஆயுர்வேதக் கூந்தல் தைலங்கள், மருத்துவக் குணம் கொண்ட சூரணங்கள் (பொடி) ஆகியவை இதற்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
வயதானவர்களுக்கு வெயிலால் உடல் பலவீனமாகி 'ஹீட் ஸ்ட்ரோக்' (Heat Stroke) என்னும் வெப்பத்தாக்கு நோய் வரலாம். கோடைக் காலத்தில் வியர்வைச் சுரக்காமலோ, சுரந்தும் ஆவியாகாமல் இருந்தாலோ, ஹைபோதலமஸ் (Hypothalamus) சரியாக வேலை செய்யாமல் இருந்தாலோ ஹீட் ஸ்ட்ரோக் வர வாய்ப்புகள் அதிகம்.
ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகமாக வயதானவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது.
குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக நேரம் வெயிலில் இருக்கும் போது மிக எளிதாக ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.
அதே போல 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் நீர்சத்து வற்றி, ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு வரும்.
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட இணைநோய் இருக்கும் நபர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
இதுமட்டுமின்றி, வெயிலில் அதிக நேரம் வெளியே வேலை செய்யும் நபர்களுக்கும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படக்கூடும். குறிப்பாக வெயிலின் தாக்கம் உச்சபட்சமாக பகல் 11 மணி முதல் 3 மணி வரை இருக்கும்.
இந்த நேரத்தில் கடினமான வேலையை வெயிலில் நின்று பார்க்கும் நபர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, சிலருக்கு உயிரிழப்பும் ஏற்படுகிறது.
சம்மர் அசிடிட்டி (Summer Acidity) என்று தனியாக எந்த பிரச்னையும் ஏற்படாது. இது வெயிலின் தாக்கத்தால் ஏற்படுகிறது. வெயில் காலத்தில் வரும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று செரிமான கோளாறு என்று அழைக்கப்படும் சம்மர் அசிடிட்டி.
வெயில் காலத்தில் அதிக சூட்டின் காரணமாக வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகிறது. நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகளின் மூலம் வயிற்றில் உள்ள அமிலத்தன்மை அதிகமாகி, உடலில் பல அசௌகரியங்கள் ஏற்படுகிறது.
வயிற்றில் சுரக்கும் இந்த அமிலம் அதிகமாவதால், செரிமான கோளாறு, நெஞ்செரிச்சல், வாய் துர்நாற்றம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்த பாதிப்பு வெயில் காலத்தில் சிலருக்கு அதிகமாக ஏற்படுகிறது.
கோடை காலம் வந்து விட்டால் வெப்பம் காரணமாக நோய்கள் பலவும் வந்து விடுகின்றன.
கோடை காலத்தில், வெயிலின் பாதிப்பில் இருந்து விடுபட குளிர்பானங்களை மக்கள் அதிகம் நாடுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து கவர்ச்சியான விளம்பரங்களுடன் வினியோகிக்கும் குளிர் பானங்கள் பலரையும் சுண்டி இழுக்கின்றன. அவைகள் சூட்டைத் தணிப்பதற்குப் பதில், மோசமான எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்
தட்பவெப்ப நிலை மாறியவுடனேயே உடலின் செயல்பாடுகளுக்கு ஏற்ப உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
நாள் முழுவதும் அதிகத் தண்ணீர் அருந்துங்கள். அது உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவும். ரத்தத்தில் சிவப்பணுகள் சத்துகளைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவும். குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் குளிர்ந்த நீரைவிட, பானையில் கிடைக்கும் குளிர்ந்த நீரைக் குடிப்பது நல்லது.
காய்கறிகளில் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி, முட்டைகோஸ், சர்க்கரைவள்ளி கிழங்கு, பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடலாம். இதேபோல நெய், பால், தயிர், மோர், புழுங்கல் அரிசி சாதம், சோள மாவு போன்றவையும் கோடைக்கேற்ற உணவு வகைகள்தான்.
இளநீர், மோர், சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை அதிகமாகக் குடிக்கலாம்.
தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை, பலா பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ, பழச்சாறுகளையோ அடிக்கடி உட்கொள்ளுங்கள்.
இட்லி, இடியாப்பம், தயிர் சாதம், மோர் சாதம், கம்பங்கூழ், அகத்திக்கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, காரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, வெங்காயப் பச்சடி, தக்காளி கூட்டு முதலியவை சிறந்த கோடை உணவுகளை சேர்த்து கொள்ளலாம்.
மாலை வேளைகளில் வெள்ளரி சாலட், தர்ப்பூசணி, தக்காளி சூப், காய்கறி சூப் போன்றவற்றைச் சாப்பிடலாம். கேப்பைக் கூழில் தயிர்விட்டுச் சாப்பிட்டால், உடலின் வெப்பம் உடனே தணியும்.
சூடான, காரமான, மசாலா கலந்த உணவு வகைகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணிவரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.
மிகக் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது.
கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகள், செரிமானத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். எனவே, முடிந்தவரை அவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.
* டீ, காபி அடிக்கடி குடிப்பதைத் தவிர்க்கவேண்டும். அவற்றிலுள்ள கஃபைன் நீர் வறட்சியை ஏற்படுத்தும். மேலும் அதிக கஃபைன் சேரும்போது, அல்சர், நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்றவை ஏற்படலாம். கோடைக்காலத்தில் குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது.
* சாலையோரங்களில் சுகாதாரமற்ற நிலையில் விற்கப்படும் உணவுகள், புரூட்ஸ் சாலட்டுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தவுடனே சிறுநீர் கழித்துவிட வேண்டும். சிறுநீரை அடக்குவது சிறுநீரகக் கற்கள் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வழிவகுக்கும்.
* அடர் நிறத்திலான ஆடைகள், இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவேண்டும்.
* ஐஸ் வாட்டர் குடிப்பது உடலுக்குக் கேடு விளைவிக்கும். குறிப்பாக, ஐஸ்கிரீமைத் தவிர்க்க வேண்டும். ஃப்ரிட்ஜில் வைத்த தண்ணீரையும் தவிர்க்க வேண்டும். இது தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் காற்று வழியாகப் பாக்டீரியாக்கள் பரவி தொண்டையில் தொற்று (Pahargnagitis) ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு தொண்டையில் ஏற்படும் தொற்று இதய வால்வு நோய்களை உண்டாக்கலாம். எனவே தொண்டையில் தொற்று ஏற்பட்டவருக்குக் காய்ச்சல், சருமத்தின் வழியாக ரத்தப்போக்கு,சிலருக்கு உடலில் உஷ்ணத் தன்மை அதிகரிப்பதால் மூக்கில் ரத்தம் வடிதல், மூலம்,ஆசன வாயில் எரிச்சல் போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. இத்தகைய சூழலில் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.
இது ரத்தச் சிவப்பணுக்களைக் குறைப்பதுடன் இதயச் செயலிழப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இவற்றை முறையாகப் பின்பற்றினாலே கோடைக்காலத்தில் வரக்கூடிய நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
Dr.D.S. ஆன்றனி மில்லஸ், BAMS,
தேவசகாயம் வைத்தியசாலை,
(சித்தா - ஆயுர்வேதா ஆய்வகம்)
நடுத்தேரி,திங்கள்நகர்,Mob: 9894395022