17/10/2024
Canine distemper / கெனைன் டிஸ்டம்பர் /நாய்களை பாதிக்கும் நரம்பு தளர்ச்சி நோய் :
கெனைன் டிஸ்டம்பர் என்னும் நோய் பாராமிக்ஸா(parmyxo) வைரஸ் வகையால்
நாய்களை பாதிக்கும் கொடிய தொற்று நோய் ஆகும்,
இது நாய்களை தவிர நரி,ஓநாய் மற்றும் சிங்கங்களை கூட பாதிக்கும் தன்மை
என்பதால், வருடத்தில் எந்த மாதத்திலும் ஏற்படும் தன்மை உடையது.
பரவும் விதம் :
1.நோயினால் பாதிக்கப்பட்ட நாய்கள் (அ ) காட்டு விலங்குகளின் ஏரோசல் /
நீர்திவலைகள் மூலம் காற்றின் வழியே பரவுகிறது
2.நோயில் இருந்து மீண்ட நாய்கள் தொடர்ந்து நோய் கிருமியை பரப்பி கொண்டேதான் இருக்கும்
அறிகுறிகள் :
1.இரண்டு கண்களில் ஊளை தள்ளுவது
2.உணவு உட்கொள்வது குறைவு
3.காய்ச்சல்
4.வயிற்றுப்போக்கு
5.அடி வயிற்று பகுதிகளில் சிறு சிறு சீழ் கட்டிகள்
6.பாதங்களில் உள்ள தோலின் தடிமன் அதிகரிப்பது (Hard Paw disease என்றும் கூறுவர்)
7.நரம்பு மண்டலம் சார்ந்த அறிகுறிகள்
(தலைக்கு மேல் உள்ள தசைகள் துடிப்பது, உடலில் நடுக்கம், வாய் நடுக்கம்)
காய்ச்சல் இரண்டு பகுதிகளாக ஏற்படும் (Biphasic fever என்றும் அழைப்பர் ),
அதாவது முதல் நிலையில் காய்ச்சல் ஏற்பட்டு ஓரிரு நாட்களில் சரி ஆகிவிடும்,
மீண்டும் சில நாட்களில் இரண்டாவது நிலை காய்ச்சல் ஏற்படும்.
நோயின் தன்மை :
இந்த வைரஸ் உடலில் நுழைந்த உடன்
நிணநீர் மண்டலத்தை (lymphatic system )
பாதித்து, சுவாச, செரிமான மண்டலம் என்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்,
இறுதியாக மூளையில் உள்ள மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.
நரம்பு மண்டலம்தான் உடலில் அனைத்து அசைவுகளுக்கும் அடிப்படை என்பதால்
உயிரையே பாதிக்கும் தன்மை உடையது (அ ) அனைத்து இயக்கங்களையும் பாதித்து
படுக்கையில் விழ செய்யும், இறுதியாக உயிர் இழப்பை ஏற்படுத்தும்.
சிகிச்சை :(வருமுன் காப்பதே சிறந்தது)
பெரும்பாலும் வைரஸ்களால் ஏற்படும் நோய்க்கு குறிப்பிட்ட மருந்து இல்லை,
விலங்கின் உடலில் அதற்க்கான எதிர்ப்பு புரதம் (Antibody ) உற்பத்தி ஆகும் வரை,
உடல் இயக்கத்திற்கு தேவையான அடிப்படை சிகிச்சை அளிக்கப்படும்,
உதாரணமாக நுண்ணுயிர் எதிரி (antibiotic) மருந்து, நீர்சத்து சிகிச்சை (Fluid therapy ),
காய்ச்சல் குறைக்கும் மருந்து (AntiPyretic ), நரம்பு மண்டலம் சார்ந்த வலிப்பு குறைக்கும்
மருந்து (Anticonvulsants ) என்று சிகச்சை மேற்கொள்ளபட்டாலும் பெரிய முன்னேற்றம்
ஏற்படுவது இல்லை என்பதுதான் உண்மை, வருமுன் காப்பதே சிறந்தது!
தடுக்கும் முறை :
முறையான தடுப்பூசி செலுத்தி கொள்வதுதான் ஆகச்சிறந்த தடுப்பு முறை,
முதல் தடுப்பூசி 6 வது வாரத்தில் தொடங்கி,3 வார இடைவெளியில்,16 வது வாரம் வரை
செலுத்த வேண்டும். பிறகு வருடத்திற்கு ஒருமுறை தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும்.
தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்,
42 வது நாளில் முதல் தடுப்பூசி -
(DHPPI+L)
(21 நாள் இடைவெளி )
63 வது நாள் இரண்டாம் தடுப்பூசி (DHPPI+L )
(21 நாள் இடைவெளி)
84 வது நாள்-மூன்றாம் தடுப்பூசி
(DHPPI+L)
(21 நாள் இடைவெளி)
105 வது நாள் - நான்காம் தடுப்பூசி
(DHPPI+L +வெறிநாய்கடி தடுப்பூசி )
பின்பு வருடத்திற்கு ஒருமுறை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்
இம்மாதிரி முறையான தடுப்பூசி மருத்துவரிடம் முறையாக செலுத்துவது மூலம்
உங்கள் செல்லபிராணி நீண்ட ஆரோக்கியத்துடன் உங்களுடன் இருக்கும்!
-ம. சி. வைத்தீஸ்வரன், B. V. Sc.&A.H,
கால்நடை மருத்துவர்.