Dr.அன்புச்செல்வன் திருமார்பன்

  • Home
  • India
  • Kanchipuram
  • Dr.அன்புச்செல்வன் திருமார்பன்

Dr.அன்புச்செல்வன் திருமார்பன் சர்க்கரை மருத்துவர்,மருத்துவ பேச்சா?

இன்று மாலை மருத்துவமனைக்கு ஒரு நோய்க்காக பெண் ஒருவர் வந்திருந்தார்.வழக்கமான கேள்வி சர்க்கரை இருக்கா?இருக்கு சார் மாத்திர...
29/03/2022

இன்று மாலை மருத்துவமனைக்கு ஒரு நோய்க்காக பெண் ஒருவர் வந்திருந்தார்.வழக்கமான கேள்வி

சர்க்கரை இருக்கா?

இருக்கு சார் மாத்திரை எடுக்கிறேன்.

யாரை பாக்குறீங்க என்ன மாத்திரை எடுக்குறீங்க?

ஹோமியோபதி மாத்திரை எடுக்கிறேன் சார்.

இங்கு இருக்கும் அனைத்து ஹோமியோபதி மருத்துவர்களும் ஏறக்குறைய நண்பர்கள் என்பதால்

எந்த மருத்துவரைப் பாக்குறீங்க ?

மருத்துவரைப் பார்க்கல சார் நண்பர் ஒருவர் நல்லா இருக்கும் என கொடுத்தாரு அந்த மருந்து எடுக்கிறேன்.

அதிர்ச்சியில் தலை சுற்றியது எனக்கு

சர்க்கரை பரிசோதனை செய்தால் 360mg/dl இருந்தது.

நண்பர்களே மாற்று மருத்துவ முறைகளில் சிகிச்சை எடுக்கும் விருப்பம் இருந்தால் தாராளமாக எடுங்கள். அது உங்கள் விருப்பம் உரிமை.

ஆனால் அதற்கும் தகுதிவாய்ந்த அதற்கான படிப்பைப் படித்த மருத்துவர்கள் இருக்கிறார்கள் அவர்களை பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

Dr. அன்புச்செல்வன் திருமார்பன், MBBS MD.
காஞ்சிபுரம்

21/02/2022

உலக தாய்மொழி தின வாழ்த்துக்கள் தமிழை சுவாசிக்கலாம் மற்ற மொழிகளை நேசிக்கலாம்

21/06/2021

தமிழ்ச் சித்தர்களும் பகுத்தறிவும்.
பகுதி 1

மருத்துவர் அன்புச்செல்வன் திருமார்பன். காஞ்சிபுரம்.

அண்மையில் வலதுசாரி நண்பரொருவர்

'என்ன மருத்துவரே எப்போதும் பகுத்தறிவு என்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள் எங்கள் ஆன்மீக பகுதிக்கு வந்து படித்துப் பாருங்கள்'

என்று பல்வேறு புத்தகங்களை பெயர் சொல்லி படியுங்கள் ஆன்மீகத்தை உணர்வீர்கள் என்று சொல்லிவிட்டு போனார்.

அவர் உருகி உருகி திருமந்திரத்தை பற்றி சொன்னவுடன் இதுவரைக்கும் படித்ததில்லை என்று எடுத்து படித்தேன்.

திருமூலர் கடவுளை வணங்குங்கள் என்று சொல்லி பகுத்தறிவு ஊட்டியிருக்கிறார்.

-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே
(திருமந்திரம் : -1857)

-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-++
இறைவனை படமாக/ உருவமாக வைத்து வழிபடுகின்றன ஆலயத்தில் கடவுளுக்காக எண்ணற்ற உணவுகள் படைக்கப்படுகின்றன. அந்த உணவுகள் பசியால் பாடிக் கொண்டிருக்க கூடிய மக்களை சென்று சேராது.

ஆனால் பசி என்னும் வேதனையில் வாடிக் கொண்டிருக்க கூடிய மக்களுக்கு அளிக்கக்கூடிய உணவு இறைவனைச் சென்று சேரும்.

எனவே இறைவனுக்கு நீங்கள் உணவு படைக்க விரும்பினால் பசித்து இருப்போருக்கு கொடுங்கள் என்று திருமூலர் கூறுகிறார்.

நமது தமிழ்நாட்டில் வீட்டில் முன்னோர்களுக்கு படைக்கப்படுகின்ற உணவு கண்டிப்பாக ஒரு ஆதரவு இல்லாதவருக்கு கொடுக்கப்படும்.

வீட்டில் நடக்கும் திருமூலரின் இச்செயல் அனைத்து இடங்களிலும் நடந்தால் பெரும்பான்மையான வறிய மக்களுக்கு உணவு கிடைக்கும் அல்லவா.

மரு.அன்புச்செல்வன் திருமார்பன்,MBBS.,MD
காஞ்சிபுரம்

தமிழ்ச் சித்தர்களும் பகுத்தறிவும் தொடரும்.

https://youtu.be/EUZgwJL_N6E
07/03/2021

https://youtu.be/EUZgwJL_N6E

Dr. Anbuchelvan Thirumarban, a leading Physician & Diabetologist practices in Life Care Hospital, Kanchipuram. With more than 2 decades of experience he is o...

06/03/2021

Dr. Anbuchelvan Thirumarban, a leading Physician & Diabetologist practices in Life Care Hospital, Kanchipuram. With more than 2 decades of experience he is o...

23/02/2021

தமிழ்முருகன். புத்தகப் பார்வை

முருகன் தமிழினத்தின் மிகப்பெரிய கடவுள் என்று நிறுவியிருக்கிறது இந்நூல்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. என்னும் வள்ளுவனின் வாக்குக்கு இணங்க சங்கப் பாடல்களில் இருந்து ஆதாரங்களை எடுத்து முருகன் தமிழ் மண்ணுக்கே சொந்தமான இறைவன் என்று மிகத் தெள்ளத் தெளிவாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர்.

சங்ககால பாடல்களில் என்ன நிகழ்ந்தது எங்கெங்கு இடைச்செருகல்கள் நிகழ்த்தப்பட்டன
எங்கே கலாச்சாரம் மாற்றப்பட்டது
என்பதை மிக அழகாக மேற்கோள்கள் கண்ணுக்கு விருந்தான அழகான படங்களோடு மிகச்சிறப்பாக படைத்திருக்கிறார்.

தமிழர்கள் என்றுமே எதையும் மிக நுணுக்கமாக அணுகி ஆராய்ந்து முடிவு எடுப்பதில் மிகுந்த திறன் கொண்டவர்கள். அவர்கள் ஆய்வு பசிக்கு இந்நூல் ஒரு நல்ல மருந்தாக இருக்கும்.

நூல் சிறியதாக இருந்தாலும் அதனுள் பொதிந்திருக்கும் கருத்து ஆதாரங்கள் மிகப்பெரியனவாக உள்ளன.

தமிழ் மண்ணின் இறைவனை வணங்க நீங்கள் ஆத்திகராகவும் இருக்கலாம் நாத்திகராகவும் இருக்கலாம்.
நம் முன்னோரைநம்குல தெய்வத்தை வணங்க நாம் யாருடைய அனுமதியும் பெற வேண்டியது இல்லை.

வரும் புத்தகக் கண்காட்சியில் வாங்க இந்நூலை நான் பரிந்துரை செய்கிறேன்.

ஆசிரியர் கவிஞர்.அறிவுமதி

என்றும் அன்புடன்,
மரு.அன்புச்செல்வன் திருமார்பன், MBBS,MD காஞ்சிபுரம்

24/01/2021

பெண்களுக்கான மிக முக்கியமான நோய் தடுப்பு ஆலோசனை

30/10/2020

தாவரங்கள் சொல்லும் வாழ்க்கை தத்துவம்

மூன்று மாதங்களுக்கு முன்னால் புடலங்காய் பீர்க்கங்காய் விதைகள் விதைத்தோம்.கொடிகள் வளர்ந்தன பந்தல் தேவைப்பட்டது, பந்தல் அமைத்தோம். கொடியும் தன்னுடைய வலை கரங்களை கொண்டு தாவித்தாவி பிடித்து மேவி மேவி வளர்ந்தன. கொடிகள் பந்தலெங்கும் பரவிக் கிடந்தன. நிழல் தரும் அளவிற்கு பெரிய தொகுப்பானது.
இந்த கொடிகள் பார்க்கும் கண்கள் வியந்துபோகும் அளவிற்கு பூக்கள் பூத்தன. பூத்த வேகத்தில் வீழ்ந்தன. அந்த மாடியில் இருக்கக்கூடிய செடிகளை கொடிகளை பூச்சிகள் ஈர்ப்பு கொண்டுவரும் அளவிற்கு சந்தர்ப்ப சூழ்நிலை இல்லை.

கொடிகளும் செடிகளும் தேனீக்களுக்காக காத்திருந்தன
அந்த நாளும் வந்தது தேனீக்கள் பூக்களெங்கும் நடனமாடின.

சில நாட்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பிஞ்சுகள் தென்பட ஆரம்பித்தன வாரத்திற்கு ஒரு பிஞ்சு பெரிதாகும் அறுவடையாகும் கறிக்கு உதவும்.

என்னடா இது இத்தனை நாள் இந்த கொடி வளர்த்தோம் நமக்குப் பிரயோஜனம் இல்லையே கொடி வளர்த்தது தேவையில்லாத விஷயமோ ! என்று நினைத்த தருணத்தில் கொடிகள் எங்கும் பிஞ்சுகள் தென்பட ஆரம்பித்தன.அவை எங்களால் பயன்படுத்த முடியாத அளவிற்கு இருந்தன.நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்தோம்.

இந்த அளவிற்கு காய்கறிகளை உற்பத்தி செய்ய அந்த செடிகளுக்கு கொடிகளுக்கு இத்தனை காலம் தேவைப்பட்டது. காத்திருந்த நாங்களும் அறுவடையை பலமாகச் செய்தோம் அதிகமாகச் செய்தோம்.

இலவச இணைப்பாக இதுவரை நாங்கள் பார்த்திராத பறவைகள் பார்வையாளர்களாக வந்தன.

வாழ்க்கையும் இது போலத்தான் தன்னுடைய நேரம் வரும்வரை தன் முன்னேற்றத்திற்கான அடித்தளமிடும் வேலையும் அதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளவும் மனிதன் தனது நேரத்தை பெருமளவில் செலவழிக்க வேண்டும் விளைவு மிக நன்றாக இருக்கும்.

ஆனால் இன்று சில இளைஞர்கள் படித்தவுடன் வேலை வேண்டும் வேலை கிடைத்தவுடன் அதிகப்படியான சம்பளம் வேண்டும் தொழில் ஆரம்பித்தவுடன் வெற்றி வேண்டும் வெற்றி உடனடியாக பணத்தை குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அடித்தளத்தை மறந்துவிடுகிறார்கள் வெகு சீக்கிரமே உதிர்ந்து விடுகிறார்கள்.

வாழ்க்கையின் தத்துவத்தை இயற்கை என்றுமே நமக்கு உணர்த்திக் கொண்டே தான் இருக்கின்றது. செடிகளும் கொடிகளும் இந்த தத்துவத்தை இன்னும் வலியுறுத்திக் கூறுகின்றன.

தகுந்த அடித்தளம் இல்லாத வெற்றி வேகமாக மேல் நோக்கி வரும் ஒற்றைச்சுவர் போன்றது. விழுந்தால் நொறுங்கிவிடும்.

பொறுமையான வெற்றி பிரமிடு போன்றது.
தவறி விழுந்தாலும் அடுத்தபடி உன்னை தாங்கும்.

விழித்திரு!
பொறுத்திரு!
வென்றிடு!

மரு.அன்புச்செல்வன் திருமார்பன், காஞ்சிபுரம்.

தமிழ்நாட்டில் இறங்கும்போது கேட்கின்ற முதல் குரலே நன்றாக இருக்கிறதே !      இது பராசக்தி திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவா...
16/06/2020

தமிழ்நாட்டில் இறங்கும்போது கேட்கின்ற முதல் குரலே நன்றாக இருக்கிறதே !

இது பராசக்தி திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ்நாட்டுக்கு வரும்போது பிச்சைக்காரர்கள் யாசகம் கேட்பதை பார்த்துவிட்டு பேசுகின்ற முதல் வசனமாக இருக்கும்.

இந்த வசனங்களை சிறிய வயதில் தொலைக்காட்சிகளில் பார்த்ததுண்டு.1980களில் எங்கள் தெருவில் காலைவேளையில் ஒரு பிச்சை எடுக்கும் ஒரு பெண்ணும் இராப்பிச்சையாக பெரியவரும் வழக்கமாக வருவார்கள்.

வீட்டில் இருக்கும் மிச்ச மீதி உணவுப்பொருட்களையும் மற்ற பண்டங்களையும் எல்லா வீட்டிலும் தருவார்கள்.அப்போது 6, 7 வயது சிறுவர்களாக இருந்தபோது பெற்றோர்கள் கொடுப்பதை யாசகம் செய்பவர்களின் பாத்திரங்களில் கொண்டுபோய்க் கொடுப்பது மிக சந்தோஷமானதும் விளையாட்டானதுமான வேலையாக இருந்தது.

அதன் பிறகு இளங்கலை முதுகலை கல்லூரி வாழ்க்கையிலும் சரி சென்னையில் இருந்த போதும் சரி இப்போது காஞ்சிபுரத்தில் வந்த பிறகும் சரி கோயில் வாயில்களை தவிர்த்து வீட்டிற்கு வீடு பிச்சை எடுப்பவர்களை பார்த்ததாக எனக்கு நினைவில்லை.

இன்று காலை மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினேன் மகிழுந்தை நிறுத்திவிட்டு வீட்டின் முன் சுவரின் கதவைத் திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைய எத்தனித்தேன்.மூன்று சிறுவர்கள் மூவருக்கும் எட்டிலிருந்து பத்து வயதிருக்கும் கையில் தலா ஒரு பாத்திரம் வைத்துக்கொண்டு உணவை கேட்டார்கள்.
மருத்துவமனைக்கு செல்லும் போது பர்ஸ் கொண்டு போவதை மூன்று மாதமாக மறந்து விட்ட படியால் கைகள் பணத்தைத் தேடி அனிச்சையாக பாக்கெட்டை தடவின. என் மனம் அறிந்து மனைவி கொண்டு வந்து கொடுத்த பணத்தை கொடுத்து அனுப்பினேன்.

ஏறக்குறைய மக்களின் படிப்பறிவு அதிகரித்து தன்மான உணர்வும் சுயமரியாதையும் அதிகரித்த இந்த காலகட்டத்தில் கோரோனா கால குடும்ப வருவாய் இழப்பு இந்தப் பிள்ளைகளை அவர்கள் மனம் ஒப்பாத இந்த செயலை செய்வதற்கு தள்ளி இருப்பது என் மனதினூடே பெரும் காயத்தை உருவாக்கி இருக்கிறது.

Dr.அன்புச்செல்வன் திருமார்பன்,
காஞ்சிபுரம்.

04/06/2020

சென்னையில் ஒரு நாள்.

இன்று அலுவல் நிமித்தமாக சென்னையில் ஒரு நாளை கடக்க வேண்டியிருந்தது.
ஒரு சாதாரண ஞாயிற்றுக் கிழமையில் எந்த அளவிற்கு போக்குவரத்து இருக்குமோ அதே போக்குவரத்தை சென்னை சாலைகளில் காண முடிந்தது.

மக்களின் வழக்கமான ஆவேசமான ? வண்டி ஓட்டுதல் மறுபடி சாதாரண நிலைக்குத் திரும்பி இருக்கிறது.சாலை விதிகள் காற்றில் பறக்கின்றன.

முகக் கவசங்கள் தாடைக்கு அல்ல வாய்க்கும் நாசிக்கும்தான் என்பதை சென்னை மக்களுக்கு வீட்டுக்கு வீடு சென்று அறிவுறுத்த வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள்.

சில பேரின் கவசங்கள் பத்து பதினைந்து நாட்களாக நீடித்து உழைக்கின்றன
சில பேரின் நீல கவசங்கள் பழுப்பு நிறத்தில் இருந்தன (அவ்வளவு உபயோகம்).இந்த முக கவசம் தவறாக அணியும் முறையால் நோய் அதிகம் பரவும் என்பது மக்களுக்கு யாராவது புரிய வைத்தால் தேவலை.

ஒரு மருத்துவமனைக் வரவேற்பறையில் ஒருவர் நெற்றியில் கவசத்தை மாட்டியிருந்தார்.
முகக் கவசம் ஓய்வெடுக்கும் இடம் போலிருந்தது.

முக கவசம் ஒரு சடங்காக மாறி இருக்கிறது வழக்கம்போல் எதற்காக எவ்வாறு அணிகிறோம் என்ற காரணம் புரியாமல்.

மிக மோசமாக உபயோகப்படுத்தப்படும் ஒரு பொருளாக முகக்கவசம் மாறியிருக்கிறது. (Most abused thing)

கண்காணிப்புக்கு யாருமில்லாத இடங்களில் பெரும்பான்மையோர் முகக் கவசம் அணிவதே இல்லை.

ஒன்றிரண்டு கடைகளுக்கு சென்றபோது கடை முதலாளிக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு வருமானம் வருமா? என்கிற கவலை.
வேலை செய்பவருக்கு சம்பளமே வருமா? என்கின்ற கவலை.

கோரோனோ நோயாளியை விட மோசமான நிலைமையில் மக்களின் பொருளாதாரம் இருக்கின்றது தெரிந்தது.

காரை நிறுத்தி குடும்பத்தில் வருமானம் இல்லை குழந்தைகளுக்கு உணவில்லை என்று உதவி கேட்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
யார் உண்மையில் தேவையில் இருக்கிறார்கள் யார் இதை ஒரு பிழைப்பாக செய்கிறார்கள் என்று வித்தியாசப்படுத்தி பார்ப்பதும் சிரமமாக இருக்கிறது.

எப்போதும் சென்னைக்கு போகும் போது விதவிதமாக உணவை விதவிதமான உணவகங்களில் சாப்பிடலாம் என்ற எண்ணம் இப்போது பாதுகாப்பாக கட்டுச்சோறு கட்டிக் கொண்டு போனால் பரவாயில்லை என்ற அளவிற்கு மாறி இருக்கிறது.

இது ஒருபக்கம் ஒரு குடும்பத்தின் செலவுகளைக் குறைத்தாலும் மறுபக்கம் பல்வேறு மக்களுக்கு மாத வருமானத்தை கொடுத்து கொண்டிருக்கின்ற தொழில்களையும் முடக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இந்த வருடத்தின் நோக்கம் உயிரோடு இருப்பதே அன்றி வருமானத்தை நோக்கி ஓடுவதல்ல என்ற பாணியில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது பெரும்பான்மையான மக்களுக்கு மிகுந்த சிரமத்துடன்.

மீண்டு வருவோம்/மீண்டும் வருவோம் என்ற நம்பிக்கையில்,

Dr.அன்புச்செல்வன் திருமார்பன்.,MD காஞ்சிபுரம்.

31/05/2020

பொன்மகள் வந்தாள்

பல குழந்தைகள்வெளியே பேசத் தயங்கும் பயப்படும் சமூகத்தில் புரையோடிப் போய் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான பிரச்சினையை தைரியமாக ஒரு திரைப்படமாக வெளியிட்ட நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்.

Child abuse-குழந்தைகள் வன்கொடுமை என்பது குடும்ப கவுரவம் , வெளியே சொன்னால் அவமானம் என்ற தடைகளால் வெளியே கசியாத மிகப்பெரியமறைக்கப்படும் மறுக்கப்படும் உண்மை.

ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் உளவியல் கல்வி,தற்காப்புக் கல்வி அவசியம்.

தனக்கு ஏற்படும் துன்பங்களையும் துயரங்களையும் சந்தேகங்களையும் மறைக்காமல் பெற்றோர் இடத்தில் சொல்ல/கேட்க வேண்டியதை வலியுறுத்த வேண்டிய அவசியமும் நமக்கு உள்ளது.

மாற்றம் அவசியம்

Dr.அன்புச்செல்வன் திருமார்பன்,MBBS,MD
காஞ்சிபுரம்

12/05/2020

செவிலியர் தின நல்வாழ்த்துக்கள்
இந்த நாளில் பொதுமக்களின் பொறுப்பு என்ன

Happy nurses day

26/04/2020

அன்பு நண்பர்களே கொரோனா நேரத்தில் மாஸ்க் உபயோகம் செய்வதைப் பற்றி ஒரு சிறிய பதிவு.

.Anbuchelvan

#காஞ்சிபுரம்

23/04/2020
2014ஆம் வருடம் டிசம்பர் மாதம் ஒரு நாள் மிகக் கடுமையான உடல் வலிமற்றும் காய்ச்சல் இருந்தது திடீரென்று மருத்துவமனைக்கு வேறு...
16/04/2020

2014ஆம் வருடம் டிசம்பர் மாதம் ஒரு நாள் மிகக் கடுமையான உடல் வலிமற்றும் காய்ச்சல் இருந்தது திடீரென்று மருத்துவமனைக்கு வேறு மருத்துவர்களை அழைக்கும் அவகாசம் இல்லாததால் நானே மாத்திரை போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை பரிசோதித்தேன்.

மதியம் காஞ்சிபுரத்தில் ஒரு மருத்துவர்களுக்கான கூட்டத்தில் உரையாற்ற வேண்டி ஏற்கனவே ஒப்புதல் கொடுத்திருந்த காரணத்தினால் மீண்டும் ஒரு மாத்திரையைப் போட்டுக்கொண்டு காய்ச்சலை கட்டுப்படுத்ததிக் கொண்டு உரையாற்றிவிட்டு வீட்டிற்கு வந்தேன்.

முதுகு உடைந்து போவது போல் வலித்தது மனதுக்குள் ஒரு பொறி கடந்த நான்கு மாதங்களாக மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளைக் அனுமதித்து வருகிறோமே நமக்கும் டெங்கு அழையா விருந்தாளியாக வந்து விட்டதோ என்ற சந்தேகம் அப்போதே எழுந்தது.

எப்போதும் காய்ச்சல் சளிக்கு விடுமுறை எடுக்கமாட்டேன்.
ஆனால் உடல் வலியின் தீவிரம் காரணமாக விடுமுறை எடுத்துக்கொண்டு இரண்டு நாள் பொறுத்து இரத்தப் பரிசோதனை செய்த போது தான் தெரிந்தது டெங்கு உடலில் வந்து உட்கார்ந்து விட்டது என்று.

ஒரு வாரம் மிகக் கடுமையான பாதிப்பு படுத்தால் எழுந்திருக்க முடியாது சரியாக உணவு உண்ண முடியாது சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் ஒரு மயக்கத்திலேயே தான் இருந்தேன். என் சிகிச்சைக்காக வீடே
மருத்துவமனையாக மாற்றப்பட்டது.மனைவி Dr.கவிதா எனக்கும் மருத்துவரானார்.

ஒன்றரை லட்சத்திலிருந்து நான்கரை லட்சம் வரை இருக்கவேண்டிய இரத்த சிறுதட்டுக்கள் 22000என்ற அளவுக்கு குறைந்தன.

சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனைக்குப் போய் அமர்வேன் நோயாளியை பார்க்கும்போது எனக்குத் தலை சுற்றியது.

மீண்டும் ஒரு பதினைந்து நாட்கள் முழு ஓய்வு க்குப் பிறகு தான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினேன்.

இந்த நிகழ்வுக்கு நான் எந்த நோயாளியையும் பொறுப்பாக்க விரும்பியதில்லை இன்றுவரை.
இதை தொழில்சார்ந்த பாதிப்பாக மட்டுமே கருதினேன்.

இன்றும் பாதுகாப்பு உடைகளோடு இந்த கோரோனா சமயத்திலும் நோயாளிகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

ஒவ்வொரு நாள் மருத்துவமனைக்கு வரும் போதும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்லும் போதும் என் குடும்பத்தாருக்கு நோய்த்தொற்றை கொண்டு சென்று விடுவேனோ என்ற பயம் இருந்துகொண்டே இருக்கிறது.

ஆனால் என் சக மருத்துவர்கள் உயிர் இறப்புக்குப்பின் மயானத்தில் அனுமதி மறுக்கப்படுவது
உடலை கொண்டு வர சொந்த வீட்டிற்கு கொண்டு வரும் வழியில் அனுமதி மறுக்கப்படுவது
போன்ற நிகழ்வுகளைப் பார்க்கும்போது
மனதில் ஏற்படக்கூடிய வேதனை அளவிடமுடியாதது.

ஆனாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எங்கள் மருத்துவ சமூகம் உங்களுக்காக எங்கள் உயிரை பணையம் வைத்து எங்கள் கடமையை செய்து கொண்டுதான் இருப்போம்
என்றாவது ஒரு நாள் இந்த உலகம் சுயநலமற்றதாக மாறும் என்ற நம்பிக்கையில்,

மரு.அன்பு செல்வன் திருமார்பன், MBBS, MD காஞ்சிபுரம்.

Address

Kanchipuram
631502

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.அன்புச்செல்வன் திருமார்பன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category