03/04/2022
இளவயதில் ஏற்படும் ஹார்ட் அட்டாக்? ஒரு விரிவான அலசல் !!
இதை நான் ஏன் இன்று எழுதுகிறேன் என்றால், முகநூல் அல்லது செய்தித்தாள் என்று தினமும் எதை எடுத்தாலும், இளவயதில் ஹார்ட் அட்டாக் வந்து வாலிபர் மரணம் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 'Rest in Peace' என்று அனுதாபத்தை செலுத்திவிட்டு கணத்த மனதுடன் கடந்தாலும் கூட, இதை படிக்கும் போதெல்லாம் நமக்கும் இப்படி ஏற்பட்டு விடுமோ என்ற பயம் நிச்சயம் அனைவருக்கும் ஏற்படும்.
அதை பற்றி விரிவாக பார்க்கவே இந்த பதிவு !!
நம் அனைவருக்கும் தெரியும்; உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கு ரத்தத்தையும் ஆக்சிஜனையும் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டிய பணி இதயத்துக்கு உண்டு என்று !
அந்த இதயம் செயல்பட அதற்கும் ரத்தம் தேவை அல்லவா ?? அதற்கு ரத்தத்தை அளிக்கும் ரத்த நாளங்களை நாம் Coronary Artery என்கிறோம். இவற்றில் அடைப்பு ஏற்பட்டு ரத்தம் செல்வது பாதித்தால் உண்டாவது தான் 'ஹார்ட் அட்டாக்'.
அனைவருக்கும் புரியும் படி எழுத வேண்டும் என்பதால், ஆழ்ந்த அறிவியலுக்குள் நான் செல்ல விரும்ப வில்லை. புரியும் படி கூறுகிறேன்.
இதயத்துக்கு ரத்தத்தை அளிக்கும் Coronary Artery-யில் 'Endothelium' என்ற பகுதி உள்ளது. இந்த Endothelium என்பது ரத்த நாளங்களின் பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகிறது.
ஏதோ ஓர் Risk Factor மூலமாக இந்த Endothelium பகுதியில் காயம் ஏற்பட்டால் அதற்கு மருந்து பூச LDL என்னும் கொழுப்பு அங்கே செல்கிறது. இது சும்மா இல்லாமல், Macrophage எனப்படும் ஒன்றை கூட்டிக்கொண்டு Foamy cell ஆக மாறி இருக்கும் பிரச்சனையை பெரிதாக்கி விடுகிறது. இதன் மூலம் Atherosclerotic Plaque எனும் காய வடு உருவாகும்.
நம்மில் பலர் கொலஸ்ட்ரால் என்றாலே கெட்டது என்ற புரிதலை வைத்திருப்போம். அது தவறு; உடலில் பல ஹார்மோன்கள், செல்களின் கட்டமைப்பு, Enzyme உற்பத்தி, காயத்திற்கு மருந்து பூசுவது என்று நிறைய பிரதான பணிகள் இந்த கொலஸ்ட்ராலுக்கு உண்டு.
சரி, விஷயத்துக்கு வருவோம்.
நான் கூறினேன் அல்லவா, Endothelial damage., இது பலருக்கு 20 வயதிலேயே கூட ஆரம்பித்து விடுகிறது.
டாக்டர்... அப்போ இந்த Endothelial damage வந்தாலே ஹார்ட் அட்டாக் வருமா ??
கிடையாது. இந்த Endothelial damage 20-30% ஏற்படும் போது Angina என்னும் நெஞ்சு வலி ஏற்படும். அதாவது, நடக்கும் போது நெஞ்சு வலிப்பது, படி ஏறும் போது நெஞ்சு வலிப்பது போன்றவை ஏற்படும்.
மக்கள் அதை Acidity என்று தாமாகவே புரிந்து கொண்டு சோடா வாங்கி குடிப்பது போன்ற சுய மருத்துவம் செய்து கொள்வர்.
நாளாக நாளாக, இந்த Endothelial damage பெரிதாகி அங்கு கால்சியம் படிந்து ஒரு கட்டத்தில் உடையும். அப்போது தான் நமக்கு Thrombus எனப்படும் ரத்தக்கட்டு உருவாகி, இதயத்துக்கு ரத்தம் போகாமல், இதயம் செயலிழந்து ஹார்ட் அட்டாக் உண்டாகும்.
சரி டாக்டர், இப்போ இது ஏன் உண்டாகிறது? இதை எப்படி தடுக்க முடியும்??
நான் மேலே கூறினேன் அல்லவா 'Risk Factors' என்று !! அவை என்ன என்று காணலாம்.
1.வயது (இதை நாம் ஒன்றும் செய்ய முடியாது)
2. புகை பிடித்தல்
3. மது அருந்துதல்
4. அதிக அளவு மாவுச்சத்து மற்றும் Refined Carbohydrate கொண்ட பேக்கரி உணவுகள் உட்கொள்வது
5. அதிக மாவுச்சத்து உட்கொண்டால் அதனால் ஏற்படும் நீரிழிவு (Diabetes)
6. உடல் பருமன்
7.Stress (மன அழுத்தம்)
8. உயர் ரத்த அழுத்தம்
இவற்றை நாம் கட்டுப்படுத்தினாலே போதும்., நம்மால் ஹார்ட் அட்டாகில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும்.
சரி டாக்டர். ஆனால், இது எதுவும் இல்லாத உடலை பிட்டாக கொண்டுள்ள நடிகர்களுக்கு கூட ஹார்ட் அட்டாக் வருகிறதே? என்ன காரணம்.
அது தான், 'மரபணு கோளாறு' (Genetic Dysfunction)
தற்போதைய ஆய்வு முடிவுகள் கண்டறிந்துள்ளது என்னவென்றால், இயற்கையிலேயே ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாட்டு மக்களை விட இந்தியர்களுக்கு Coronary ரத்தநாளங்களின் size சிறிதாக உள்ளது என்பதுவே. அதனால், இந்தியர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் மிக அதிகம் என்கிறார்கள்.
எனவே, உங்களுக்கு மரபணு கோளாறு இருந்தால் ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு அதிகம். அதற்காக, மரபணு மீது பழியை போடக்கூடாது. ஏனென்றால் அது ஒருசிலருக்கு நடப்பதே.
நான் மேலே கூறிய உணவு பழக்க மாற்றம், புகையை விடுவது, மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியாக தூங்குவது என உங்களை நீங்கள் பார்த்துக்கொண்டால் ஹார்ட் அட்டாக் நிகழும் வாய்ப்புகள் மிக குறைவு.
அதே போன்று, தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி செய்யவும். இதன் மூலம் உங்களுடைய Cardiac Health மேம்படும்.
உன் வாழ்க்கை உன் கையில்.
நன்றி ♥️
Dr.Aravindha Raj.