21/06/2018
யானைக்கால் நோயால் 31 மில்லியன் பேர் பாதிப்பு!
இந்தியாவில் 31 மில்லியன் மக்கள் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டுக்குள் யானைக் கால் நோயை ஒழிக்க வேண்டும் என இந்தியா உறுதிமொழி எடுத்துள்ளது.
யானைக்கால் நோயை குணப்படுத்துவதற்கு ஐவர்மெக்டின் என்ற மருந்து மிக உதவியாக இருந்து வருகிறது. பார்மா நிறுவனம் மெர்க் டொனேஷன் என்ற திட்டத்தின் மூலம், இந்தாண்டு இந்தியாவுக்கு 9 மில்லியன் ஐவர்மெக்டின் மருந்துகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.
ஆனால், அதற்கு விண்ணப்பிப்பதற்கு குறுகிய காலம் மட்டுமே இருப்பதால், இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மெர்க் டொனேஷன் திட்டத்தின் கீழ் இந்தாண்டு 100 மில்லியன் ஐவர்மெக்டின் மருந்து வழங்கப்படும். அதில், இந்தியாவுக்கு 9 மில்லியன் மருந்தும், மீதமுள்ளவைகள் மற்ற நாடுகளுக்கும் வழங்கப்படும்.
குறிப்பிடப்பட்ட காலத்திற்குள், இந்தியா அந்த மருந்து வேண்டி விண்ணப்பித்தால், அந்த மருந்து டிசம்பர் மாதத்துக்குள் வந்துவிடும். குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறினால், மெர்க்கின் அடுத்த ஆண்டு நன்கொடைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்போது, 2020 ஆம் ஆண்டுக்குள் இந்த நோயை ஒழிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளில் சிறிது பின்னடைவு ஏற்படும். இந்த மருந்து வருவதற்கு நேரம் எடுக்கும் என சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொசு கடித்தல் மூலம் ஏற்படும் யானைக் கால் நோயினால் கை,கால்கள் வீங்கி காணப்படும். எந்தவொரு வேலையும் செய்ய முடியாது. நம்முடைய செயல்களை முடக்கிவிடும். தற்போது, இந்த நோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, அல்பென்டசோல் (albendazole) டைதில்கார்பாமேசைன் சிட்ரேட்( diethylcarbamazine citrate ) மற்றும் ஐவர்மெக்டின் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையில் ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது யானைக் கால் நோய் பரவுவதை கட்டுப்படுத்துகிறது. இந்த மருந்து பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மூன்று மருந்துகளும் நன்கொடை மூலம் இந்தியாவுக்கு இலவசமாக கிடைக்கிறது. இந்தியா செய்ய வேண்டிய வேலை என்னவென்றால், உரிய நேரத்தில் அந்த மருந்து வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். இந்த மருந்துகளை நன்கொடையாக வழங்க அதிக நிறுவனங்கள் உள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில், மூன்று மருந்துகளும் சேர்ந்த கூட்டுக் கலவை மருந்து யானைக்கால் நோயை கட்டுப்படுத்த உதவும் என உலக சுகாதார அமைப்பு கூறியது.
இந்த மருந்து நன்றாக வேலை செய்வதற்கு 2015 ஆம் ஆண்டு சாத்தொஷி ஒமுரா மற்றும் வில்லியம் கேம்பல் ஆகியோர் நோபல் பரிசு பெற்றனர். ஏழை நாடுகளில் இந்த மருந்தின் முக்கியத்துவத்தை அளவிட முடியாது என நோபல் குழு தெரிவித்தது. மேலே கூறப்பட்ட விஞ்ஞானிகள் இந்த மருந்தை 1970 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். இதையடுத்து, 1987 ஆம் ஆண்டு மெர்க் நிறுவனம் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து இந்த மருந்தை இலவசமாக உலக நாடுகளுக்கு அளிக்க முடிவு செய்தது. கடந்த மூன்று பத்தாண்டுகளாக, மெர்க் நிறுவனம் 2 மில்லியன் சிகிச்சைகளுக்கு இந்த மருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.
யானைக்கால் நோயை ஒழிக்க இந்தியா நிர்ணயிக்கும் இலக்கு மாறிக் கொண்டே வருகிறது. 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் யானைக் கால் நோயை ஒழிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்கடுத்து, 2017 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது . தற்போது,யானைக் கால் நோயை 2020 ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.