15/11/2024
பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. அவையாவன: துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியனவாகும். ஆயுர்வேதம் உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தப்படுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது.
நம் அன்றாட உணவில் தினமும் கசப்பு சுவையுள்ள உணவு ஒன்றாவது எடுத்துக்கொள்ள வேண்டும். 6 விதமான சுவைகளில், இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம் போன்ற நான்கு சுவைகள் நாம் தினமும் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் இந்த துவர்ப்பு மற்றும் கசப்பு சுவையை நாம் குறைத்துகொண்டோம், அதனால் இன்று வீட்டுக்கு ஒரு சர்க்கரை நோயாளி!!!
கசப்பு என்றவுடன் அனைவரும் நினைப்பது பாகற்காய் மட்டுமே. அதனாலோ என்னவோ கசப்பு சுவையை பலரும் மறந்து விட்டோம்.
தினமும் பாகற்காய் வேண்டாம், ஒரு நாள் வெந்தய பொடி சாப்பிடலாம், வெந்தய களி சாப்பிடலாம், கருவேப்பிலை துவையல் சாப்பிடலாம், மிதுக்கன் காய், சுண்டைக்காய், சுண்டை வற்றல், மிதுக்கன் வற்றல் , நாவல் என பல உள்ளன, அதில் ஏதேனும் ஒன்று எடுத்துக் கொண்டால் போதும், கண்டிப்பாக அன்றைய தினத்தில் உங்களின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும்.
கசப்பு சுவையை மறந்தது போல துவர்ப்பு சுவையும் நம் உணவில் குறைந்து விட்டது. வாழைப்பூ, வாழைத்தண்டு வாரம் ஒரு முறை எத்தனை பேர் வீட்டில் சமைக்கிறோம்?
ஆயுர்வேதத்தில் பஞ்ச திக்தகம் என்ற மருந்து சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க பயன்படுத்துகிறோம். அது என்ன பஞ்ச திக்தகம்? அதாவது 5 விதமான கசப்பு சுவையுள்ள மூலிகை, வேம்பு, நிலவேம்பு, கருவேப்பிலை, சர்க்கரை வேம்பு, சிவனார்வேம்பு. இந்த கசப்பு சுவைக்கு, உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் அதிகம்.
அது போல ஆவாரை குடிநீரில் துவர்ப்பு சுவை உள்ளது. ஆவாரை குடிநீர், வாரம் ஒரு முறை வீட்டில் அனைவருமே குடிக்கலாமே!
ஆவாரை பூத்திருக்க சாவோரை கண்டதுண்டா? என்ற ஒற்றை வரி போதும் ஆவாரம் பூவின் நன்மையை தெரிந்துகொள்ள. அதில் உள்ள துவர்ப்பு சுவை முக்கியமாக இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும்.
இன்றைய கால கட்டத்தில் பல குழந்தைகளுக்கு கசப்பு, துவர்ப்பு சுவையே தெரிவதில்லை. நமது உடலில் வாதம், பித்தம், கபம் சமநிலையில் இருக்க அறுசுவையும் சேர்த்து உண்ண வேண்டும். மதிய உணவுடன் சுண்டை வற்றல் கண்டிப்பாக சேர்த்து எடுத்துக்கொள்ளவும்.
வாழைப்பூ, வாழைத்தண்டு, சுண்டைக்காயை நறுக்கி சமைப்பதற்கு கஷ்டபட்டதாலே, இன்று ஈசியாக சுகர் மாத்திரையை போட்டு ஒவ்வொரு நாளையும் கடக்கிறோம்.
அறு சுவைகளையும் நாம் தினசரி உணவில் சேர்ந்திருப்பதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை. காளமேகப் புலவர் பதிவில் வரும், `கரிக்காய் பொரித்தாள், கன்னிக்காய் வாட்டினாள், பரிக்காய் கூட்டினாள், அப்பக்காய் துவட்டினாள்..’ என்ற பாடலில் சொல்லப்பட்டவை வெறும் காய்கறிகள் பெயர் மட்டும் அல்ல. அந்தக்கால உணவில் துவர்ப்பான அத்தி, புளிப்பும் துவர்ப்புமான மாங்காய், துவர்ப்பும் இனிப்புமான வாழைக்கச்சல், கசப்பும் துவர்ப்புமான கத்திரிக்காய், எல்லாவற்றையும் சேர்த்துச் சமைக்கும்போது ஒரு சிட்டிகை கடல் உப்பு... என அனைத்து சுவைகளும் கலவையாக இருந்தன என்பதும் குறிப்பிடப்படுகிறது.
இனி வரும் சந்ததியினருக்கு வாழ்நாள் சுகர் மாத்திரை வேண்டாம் என்றால், தினமும் உணவில் கசப்பு , துவர்ப்பு சுவை இருக்க வேண்டும்.
அறிவோம் ஆயுர்வேதம்!
Dr.சுபா BAMS DMDPN
குளோபல் ஆயுர்வேத மருத்துவமனை,
காரைக்குடி,
9944171364