17/04/2022
வேப்பம் பூ.
வருஷ பொறப்பு அதுவுமா கசப்பான்னு கேட்காதீங்க.
"கசப்பு மருந்து "
என்கிற சொல்லாடல் மூலம் கசப்பு என்பது நம்மை பாதுகாக்கும் சுவை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
காக்கும் தன்மை கொண்ட பூ என்பதால் தான் என்னவோ பாண்டிய நாட்டின் அரசியான மதுரை மீனாட்சி அம்மன் வேப்பம் பூ மாலை சூடி சித்திரை திருவிழா காலங்களில் நமக்கு காட்சி தருகிறார் போல.
ஸ்வீட் எடு கொண்டாடு தான் கேள்விப் பட்டிருப்போம்.
ஆனால் கசப்பு சுவை தான் சரியான மற்றும் பாதுகாப்பான உணவை தேர்ந்தெடுக்க நமக்கு உதவுகிறது என்றால் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கும்.
குறிப்பிட்ட சில உணவு வகைகள் குறிப்பிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கும்.
உதாரணமாக திருவாதிரை களி, விநாயகர் சதுர்த்தி மோதகம், கார்த்திகை பொரியும் இலை கொழுக்கட்டையும், கிருஷ்ண ஜெயந்தி சீடையும் அவலும்.
அப்படி ஒரு சிறப்பு உணவு தான் சித்திரை முதல் நாள் செய்யப்படும் வேப்பம் பூ ரசமும், பச்சடியும்.
பழந்தமிழரின் தினசரி உணவுகள், பண்டிகை கால உணவுகள் என்பது தங்கள் வசிப்பிடத்தில் விளைந்தவையாகவோ, இல்லை என்றால் அந்த பருவகாலத்தில் இயற்கையாகவே அதிகமாக கிடைக்கும் பொருளை கொண்டு செய்யப்பட்ட ஒன்றாகவே இருந்தது. இப்படி தேர்ந்தெடுத்து உண்டதால் தான் ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்து இருக்கிறார்கள்.
ஒரு ஆண்டின் 12 மாதங்களும் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என 6 காலங்களாக பிரிக்க பட்டுள்ளது நம் எல்லோருக்கும் தெரியும்.
குறிப்பிட்ட காலங்களில் ஏற்படும் பருவ நிலை மாறுதலுக்கு ஏற்ப நம் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். இம்மாற்றங்கள் சில சமயங்களில் நோய் நிலையாக மாறிவிடும் வாய்ப்புகளும் உண்டு.
இப்படி மாறுதல் அடையும் உடல் நிலையை சீராக வைக்க அக் காலங்களில் இயற்கையாகவே அதிகமாக விளையும் மூலிகைகளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை நம்மால் எளிதில் சரிசெய்ய முடியும்.
உதாரணமாக வெயில் காலங்களில் அதிக அளவில் கிடைக்கும் பதநீர் நுங்கு.
அதுபோல தான் வேப்பம் பூவும். பங்குனி மாதத்தில் அதிக அளவில் பூத்து குலுங்கும் வேப்பம் பூவை சித்திரை மாதத்தில் வரும் நோய்களை தடுக்கும் வகையில் பயன்படுத்த முடியும்.
இது தான் சித்திரை முதல் நாள் வேப்பம் பூ ரசமும், உகாதி தின வேப்பம் பூ பச்சடியும் செய்ய காரணம்.
இளவேனில் காலத்தில் ஆரம்பிக்கும் வெயிலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து உச்சம் பெறும். அதிகரிக்கும் வெப்பம் காரணமாக நம் உடலின் வெப்பமும் அதிகரிக்கும். மேலும் இக்காலத்தில் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் கொஞ்சம் குறைந்தே இருக்கும் என்பதால் நோய் கிருமிகளின் தாக்குதலுக்கும் எளிதில் உள்ளாவோம் என்பதால் அதை தடுக்கும் நோக்கிலே பங்குனி, சித்திரை விழாக்கள் கொண்டாடப்பட்டன.
சித்த மருத்துவம் பித்தம் அதிகரித்து வரும் மயக்கம், மூர்ச்சை ஆகியவற்றுக்கு வேப்பம் பூவை பயன்படுத்தலாம் என்கிறது. அதேபோல் வயிற்றின் கிருமிகளை நீக்கவும், செரிமான கோளாறுகளை நீக்கவும் பயன்படுத்தலாம் என்கிறது.
வேப்பம் பூவில் 57 சதவீதம் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளது.
சித்திரையில் ஆரம்பிக்கும் வெயில் காலத்தில் சூரியனில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனுடன் வாகன புகை, புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்துவது என எல்லாம் சேரும் போது நம் உடலில் free radicles அதிகளவில் உற்பத்தி ஆகும். இந்த free radicles மூலம் தோலில் வெடிப்பு, நிறம் மாறல், கருப்பு புள்ளிகள் உருவாதல் முதல் உடலில் பல பாதிப்புகள் உருவாகும்.
Free radicles மூலம் வரும் பாதிப்புகளை Anti oxidant நிறைந்த வேப்பம் பூ நன்றாக குறைக்கும். மேலும் அதிகரித்த உடல் வெப்பத்தை குறைக்கும் தன்மையும் வேப்பம் பூவிற்கு உண்டு என்பதால் இரட்டை நன்மை கிடைக்கும்.
Anti oxidant நிறைந்த மூலிகைகள் எத்தனையோ இருக்கும் போது ஏன் வேப்பம் பூவை பயன்படுத்த வேண்டும் ? என்று கேட்கலாம்.
குறிப்பிட்ட காலத்தில் அதிகளவில் விளையும் ஒரு பூ அந்த பூவும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகளை கொல்லும் தன்மை கொண்டது, எளிதில் கிடைக்கும் எனும் போது வேப்பம் பூவை விட்டு விட்டு வேறு தேடி ஏன் அலைய வேண்டும்.. ?
"உணவே மருந்து மருந்தே உணவு"
நன்றி.
Dr.சுவாமிநாதன், MD(Siddha)
☘️☘️☘️