18/05/2021
*கொரோனா பரிசோதனையின் முக்கியத்துவம்*
காய்ச்சல், உடல்வலி , பசியின்மை , சளி/இருமல், தொண்டையில் புண் போன்ற உணர்வு - இவைதான் கொரோனா தொற்றின் பிரதானமான அறிகுறிகள் - இவற்றில் எவை ஏற்பட்டாலும் உடனே பரிசோதனை செய்துகொள்வது நல்லது!
பலர் பரிசோதனை செய்து கொள்வதில்லை , சில நாட்களிலேயே வெளியே சென்றுவிடுகிறார்கள் . அதனால் தொற்று மற்றவர்களுக்கும் பரவுகிறது. கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் தொற்று பரவும் வேகம். பெரும்பாலோருக்கு லேசாக அல்லது மிதமாக வந்து சென்றாலும் ஓரிருவை தீவிர சிகிச்சையில் சேர்த்துவிடும். அந்த ஓரிருவர் யார் என்பதை யாராலும் கணிக்க முடியாது.
இப்போழுது பரிசோதனையின் முக்கியத்துவத்தை பட்டியலிடுகிறேன்
1. RT PCR பரிசோதனையில் CT value என்று ஒன்று இருக்கும். அது எவ்வளவு குறைவோ அந்தளவு viral load அதிகம் என கொள்ளலாம். CT value மூலம் நோயின் தன்மையை நாம் முன்கூட்டியே தீர்மானிக்க இயலும்.
2. தொற்று உறுதிபடுத்தப்பட்டால் தனிமைப்படுத்துதல் மூலம் உங்களது குடும்பத்தினரையும் மற்றவரையும் தொற்று பரவுவதிலிருந்து காக்க முடியும்.
3. தொற்று உறுதி செய்யப்பட்டால் ஒருவேளை மருத்துவமனை அனுமதி தேவைப்படின் விரைவாக கிடைக்கும் வாய்ப்பு உண்டு. சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்ட பின்னர் மருத்துவ அனுமதிக்காக பரிசோதனை செய்து அதன் முடிவுகளுக்காக காத்திருந்து பொன்னான நேரத்தை இழக்கிறார்கள்
4. தொற்று ஆரம்பத்திலிருந்து பத்து நாட்களுக்கு பின்னரும் / மாத்திரை போடாமல் காய்ச்சல் மூன்று நாட்களுக்கு இல்லை என்றாலும் நீங்கள் குணம் பெற்றவராக ஆகிவிடுவீர்கள். அடுத்த ஆறு மாதங்களுக்கு உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். ஆறு மாதங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.நீங்கள் பரிசோதனை செய்யாவிடில் இவை அனைத்திலுமே குழப்பம் நிலவும்.
5. என்னுடைய அனுபவத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே மக்கள் வீட்டில் ஓய்வு எடுக்கிறார்கள். இதிலிருந்து குணம் பெற ஓய்வு மிகவும் அவசியம்.
ஆகவே யாருக்கு தொற்று அறிகுறிகள் தென்பட்டாலும் , உடனே பரிசோதனை செய்து கொள்ளவும். ஊர் உலகமே தொற்றில் தான் இருக்கிறது எனவே நாம் தனியாகத் தெரிவோம் என்றெல்லாம் அச்சப்படத் தேவையில்லை.
*பின்குறிப்பு*
மேற்கூறப்பட்ட அறிகுறிகள் தவிர நாவில் கசப்பு, வாசனை மறைதல் , உமட்டல் , வாந்தி , வயிற்றுப்போக்கு, காமாலை , தலைசுற்றல், தோல் தடிப்பு , அறிப்பு என பல்வேறு அறிகுறிகள் தனியாகவோ ஒன்றாகவோ வர வாய்ப்பு இருக்கிறது.
அனைவருக்கும் CT scan எடுக்க வேண்டிய அவசியம் இல்லை . ஆக்ஸிஜன் அளவு 95க்கும் குறைந்தால் அது தேவைப்படலாம்.
தொற்று ஒருவருக்கு ஆரம்பித்தால் உங்கள் வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை உங்கள் வீட்டிலேயே இருக்க வைத்து , நீங்கள் தனியறையில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்கள் முகக்கவசம் அணிந்து கொள்ளட்டும். அவர்களை உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டாம். ஏனென்றால் ஏற்கெனவே வீட்டிலுள்ள மற்றவர்கள் தொற்றுக்கு expose ஆகியிருக்க வாய்ப்பு இருக்கிறது.
முக்கியமாக , வாய்ப்பு இருப்பின் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். இந்த தொற்றுக்கெதிரான பேராயுதம் தடுப்பூசி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எல்லாம்வல்ல இறைவன் உலக மக்களை இந்த நோயிலிருந்து பாதுகாப்பானாக! பாதிக்கப்பட்டவர்களுக்கு குணத்தை அளிப்பானாக!
- மரு. முகமது சுஹைல்
குழந்தைகள் நல மருத்துவர்
மேட்டுப்பாளையம்.