Nalam Hospital

Nalam Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nalam Hospital, Hospital, Palladam Road, T. kottampatti, Pollachi.

17/07/2025

கால்களில் முள் தைத்து விட்டாலோ
ஆணி பாய்ந்து விட்டாலோ
விபத்து ஏற்பட்டு லேசான காயம் முதல் பெரிய ரத்தக் காயங்கள் ஏற்படும் போது

விவரம் தெரிந்த பெரியவர்களும் உற்றார் உறவினரும்
"அந்த செப்டிக் ஊசிய போட்டுட்டு வந்துரு"
என்றும்
"டிடி ஊசி போட்டாச்சா?" என்றும் வாஞ்சையுடன் விசாரிப்பதைப் பார்க்க முடியும்.

லேசான ரத்தக் காயம் ஏற்பட்டாலும்
டிடி ஊசி போட வேண்டும் சரி..
எதற்காக அந்த செப்டிக் / டிடி ஊசி போடப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?

வாங்க பார்ப்போம்...

800 கோடி ஹோமோசேப்பியன்ஸ் ( நவீன மனிதர்கள்) இப்புவியில் மூன்று லட்சம் வருடங்களாக வாழ்கிறோம்.
ஆனால்
உலகம் தோன்றிய காலந்தொட்டு
முன் தோன்றிய முதல் மூத்தகுடிகள்
யாரென்று பார்த்தால்
நுண்ணியிரிகளான
பாக்டீரியா
வைரஸ்
பூஞ்சை ஆகியன என்பது ஹோமோசேப்பியன்களாகிய நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.

பாக்டீரியாக்களில்
நல்லவர்களும் உண்டு
தீயவர்களும் உண்டு.

மனிதர்களுக்கு பேலியோலித்திக் காலம் தொட்டு தீது விளைவித்து வரும் பாக்டீரியாக்களை வகுத்தால் அதில்
முக்கியமானவையாக
"க்ளாஸ்ட்ரீடியம்" எனும் இந்தக் குடும்பம் வரும்.

க்ளாஸ்ட்ரீடியம் பெர்ஃப்ரிஞ்சன்ஸ்
க்ளாஸ்ட்ரீடியம் டெஃபிசில்
க்ளாஸ்ட்ரீடியம் பாட்டுலினம்
என இந்த பரம்பரையின் வகையறாக்கள் நமக்கு தீது மட்டுமே செய்து பழக்கப்பட்டவை.

அவற்றுள் முக்கியமான வகையறா தான்
"க்ளாஸ்ட்ரீடியம் டெட்டானி"
( Clostridium tetani)
இந்த வகை பாக்டீரியாக்கள்
நமது உடலுக்குள் புகுந்து நோய் உண்டாக்கும் போது
கடுமையான தசை இறுக்கத்தை ஏற்படுத்தி
தசைகளை முறுக்குவதால் "டெட்டானஸ்- தசை முறுக்கும் நோய்" என்று பெயரிடப்பட்டன.

தமிழில் இந்த நோய்க்கு
"இரண ஜன்னி" என்று பெயரிடப்பட்டுள்ளது

இரணம் = புண் / காயம்

ஆம்.. ஒரு காயமோ புண்ணோ ஏற்பட்ட பிறகு வரும் ஜன்னி = ஜுரம் = காய்ச்சல்
என்பதால் இந்த காரணப்பெயர் வந்தது.

க்ளாஸ்ட்ரீடியம் டெட்டானி பாக்டீரியா
உலகமெங்கும் கல் - மண் - புல் - முள் என்று சகலத்திலும் வியாபித்து இருக்கிறது.

வெளியுலகில் இருக்கும் போது
அதன் வித்திகளாக ( SPORES)
அமைதியாக உயிரற்றவை போன்று இருக்கும்.

மனிதர்கள்/விலங்குகளில் உடலுக்குள் சென்று தோதான வாகான சூழல் ஏற்பட்டதும் மீண்டும் உயிர்பெற்று
பல்கிப்பெருகி டெட்டானஸ் நோயை உண்டாக்கும்.

டெட்டானஸ் நோய் ஏற்பட்டவர்களுக்கு
நரம்பு மண்டல பாதிப்பு ஏற்பட்டு
தசைகள் அனைத்தும் இறுக்கமடைகின்றன.

குறிப்பாக
தாடை இறுகக் கட்டிக் கொள்ளும். இதை "பூட்டப்பட்ட தாடை" என்று கூறுகிறோம்.
இதனால் எதையும் உண்ணவோ பருகவோ முடியாது.

நெஞ்சுப் பகுதி தசைகள் இறுக்கம் கண்டால் மூச்சு விட முடியாது.

இன்னும் நோய் தீவிரம் அடையும் போது
கழுத்து - முதுகு பகுதி தசைகள் அனைத்தும் ஒரு சேர தீவிரமாக இறுகிக்கொள்ள
வில் போல நோயாளி வளைந்து படுக்கையில் கிடப்பார்.

இத்தகைய கொடுமையான பிணியைச் சந்தித்து முறையான தீவிர உயர் சிகிச்சை வழங்காமல் விட்டால் மரணம் தழுவுவது திண்ணம்.

இத்தகைய கொடூரமான நோய் தற்போது
அரிதினும் அரிதாக மாறிவிட்டதற்கான முக்கிய காரணம்

இந்த ரணஜன்னிக்கு எதிரான தடுப்பூசிகள் நமது தேசிய தடுப்பூசித் திட்டத்தில் இலவச தடுப்பூசிகளாக கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதே என்றால் அதில் எந்த மிகையுமில்லை.

குழந்தை பிறந்த
ஆறாவது வாரம் (PENTAVALENT 1)
பத்தாவது வாரம் ( PENTAVALENT 2)
பதினான்காம் வாரம் ( PENTAVALENT 3) என போடப்படும்
ஐந்து நோய்களைத் தடுக்கும்
பெண்டாவேலண்ட் ஊசியில் டெட்டானஸ் தடுப்பு மருந்தும் உள்ளது.

அதற்குப் பிறகு
முதல் பூஸ்டர்
16 முதல் 24 மாதங்களிலும் ( DPT-1

இரண்டாவது பூஸ்டர்
ஐந்து முதல் ஆறு வயதிலும் (DT-2)

அதற்குப் பிறகு
10 வயதிலும் ( TdaP1)
16 வயதிலும் (Tdap2)
இந்த ரணஜன்னிக்கு எதிரான தடுப்பூசியை
அரசு இலவசமாக மக்களுக்கு வழங்கி வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு
அவர்களின் முதல் மூன்று மாத கர்ப்ப காலத்திலேயே ஒரு மாத இடைவெளி விட்டு இருமுறை டெட்டானஸ் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

காயம் ஏற்பட்டவுடன் உடனடியாக
காயம்பட்ட இடத்தை
போவிடோன் ஐயோடின் திரவத்தைக் கொண்டு சுத்தம் செய்து கல்/ மண் போன்றவற்றை நீக்கி விட்டு
உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி பெற வேண்டும்.

சாதாரண காயம் என்றோ
கல் / மண் போன்றவை பட்டு அசுத்தம் அடையாத காயம் என்றோ
முள் / ஆணி குத்தினாலும் ரத்தம் வராத காயம் என்றோ உதாசீனம் செய்யக்கூடாது.

மேற்கூறிய அனைத்துக்கும் டெட்டானஸ் ஷாட் வழங்கப்பட வேண்டும்.

டெட்டானஸ் அறிகுறிகள் தோன்றியவுடனே
தீவிர சிகிச்சைப் பிரிவு இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் அட்மிஷன் செய்யப்பட வேண்டும்.

உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி அதனுடன்
டெட்டானஸ் இம்யூனோகுளோபுளின் எனும் உடனடி முறிவு மருந்து ஆகியவை வழங்கப்படும்.
செயற்கை சுவாசக்கருவியில் பொருத்துதல். நீண்ட நாட்கள் செயற்கை சுவாசம் தேவைப்படும் தன்மை.
தசை இறுக்கத்தை சரிசெய்யும் தளர்வு மருந்துகள் என மூன்று முதல் நான்கு வாரங்கள் கடுமையான போராட்டம் நடக்கும்.

தற்போதைய சூழ்நிலையில்
செயற்கை சுவாச கருவிகள்,
தசை தளர்த்தி மருந்துகள்
டெட்டானஸ் இம்யூனோகுளோபுளின் இருப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளதால்
இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

எனினும்,
எளிதான தடுப்பூசியால் தடுக்க முடிந்த ஒரு நோய் குறித்து விழிப்புணர்வு பெறாமல்
இருப்பது தவறு.

தங்களது குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த பின்
ஆறாவது வாரம்
பத்தாவது வாரம்
பதினான்காம் வாரம்

அதற்குப் பிறகு 16 முதல் 24 மாதங்கள்

அதற்குப் பின் ஐந்து முதல் ஆறு வயதுக்குள்

அதற்குப் பின் பத்து வயதிலும்
பதினாறு வயதிலும் டெட்டானஸ் தடுப்பூசியை வழங்குவதை உறுதி செய்யவும்.

காயம் சிறிதோ பெரிதோ
உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி பெறுவதை வழக்கமாகக் கொள்ளவும்.
ஏற்கனவே டிடி ஊசியை ஐந்து வருடங்களுக்குள் போட்டிருந்தால் தேவையில்லை. எப்போது போட்டோம் என்று சந்தேகம் இருப்பின் காயத்துக்கு பின்பு டிடி தடுப்பூசி பெறுவது நல்லது. அதனால் எந்த பாதகமும் இல்லை.

டெட்டானஸ் ஏற்பட்டு மரணமடைந்த சிலருக்கு காயமுற்ற பின் டிடி ஊசி போடப்பட்டும் டெட்டானஸ் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணம்,
ஏற்கனவே முறையான பூஸ்டர் தடுப்பூசிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் பெறாமல் விட்டு, காயம் ஏற்பட்ட பின் தடுப்பூசி போட்டாலும்
அதற்குரிய எதிர்ப்பு சக்தி போதுமான அளவு வெளிப்படாமல் போவதால் டெட்டானஸ் கிருமி வென்று விடுகிறது.

இது போன்ற சூழ்நிலையை கருத்தில்
கொண்டு தயவு கூர்ந்து
நமது பிள்ளைகளுக்கு அவர்கள் பிறந்த
முதல் வருட தடுப்பூசிகளை சிறப்பாக சரியாக வழங்கும் நாம்..

அவர்களின் ஐந்தாவது வயது (DT) , பத்தாவது வயது, பதினாறாம் வயது அதற்குப் பிறகு பத்து வருடம் ஒருமுறை டெட்டானஸ் தடுப்பூசிகளையும் சரியாக வழங்கிடுவோம் என்று உறுதி ஏற்போம்

டெட்டானஸை முற்றிலுமாக ஒழிப்போம்

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர் .

13/07/2025

சமீபத்தில் நண்பர் ஒருவர்
இதை ஒத்த சந்தேகம் கேட்டிருந்தார்
மாஸ்டர் ஹெல்த் செக் அப் முடித்து விட்டு
சிறுநீரக செயல்பாடு குறைபாடு இருக்கவே
நெஃப்ராலஜிஸ்ட் ( சிறுநீரக சிறப்பு நிபுணர்) அவரை அதிகப்படியாக நீர் அருந்த வேண்டாம் என்றும் தினம் பருகும் நீரைக் கட்டுப்பாடுடன் பருக அறிவுறுத்தியிருக்கிறார்.

அதற்கடுத்து குடல் நோய் சிறப்பு நிபுணரின் ஆலோசனையை அவர் மலச்சிக்கலுக்காக பெறும் போது அதிகமாக நீர் அருந்துங்கள் என்றும் அதன் மூலம் மலச்சிக்கல் குணமாகும் என்று அவர் அறிவுரை பகிர்ந்ததாகப் பதிவு செய்து

மருத்துவர்களுக்குள் ஏன் இந்த முரண்
ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு மாதிரி நேர் எதிர் அறிவுரைகளைக் கொடுத்தால்
நோயர்கள் குழப்பமடைய மாட்டார்களா?
என்று நியாயமான கேள்வியை எழுப்பியிருந்தார்.

இதே போன்று பல இடங்களில் சிக்கல் ஏற்படும்...

உடல் எடை குறைப்பு / நீரிழிவு நோய் சிறப்பு நிபுணர்
தினசரி நான்கு கிலோமீட்டர் நடப்பது உடல் எடை குறைப்பதற்கு நல்லது என்று கூறியிருப்பார்

ஆனால் எலும்பியல் சிறப்பு நிபுணர்
மூட்டுத் தேய்மானம் காரணமாக அதிகம் நடக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியிருப்பார்.

பொது மருத்துவர் - விட்டமின் டி பெறுவதற்கு வெயிலில் சற்று நேரம் நிற்பது நல்லது என்றிருப்பார்.

தோல் மருத்துவத்துக்கு சிகிச்சை செல்லும் போது தோல் மருத்துவர் - வெயில் மேலே படுவதால் அலர்ஜி வருகிறது எனவே நேரடி வெயிலை தவிர்க்கவும் என்பார்.

இத்தகைய "முரண்கள்" மருத்துவ சிகிச்சையில்
இயல்பானவையே
இயற்கையானவையே.

இவற்றை இனங்கண்டு களைவது
என்பது மிகவும் எளிதானது.

இதற்கு மருத்துவ அறிவில் நுண்புலம் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதோ மேற்கூறிய மூன்று நிகழ்வுகளிலும் எப்படி தெளிவு பெற வேண்டும் என்று கூறுகிறேன்

பொதுவாக
மருத்துவத் துறையைப் பொருத்தவரை

எம்பிபிஎஸ் பயின்ற மருத்துவர்களுக்கு அவர்கள் பயிலும் போது கூறப்படும் விஷயம்
" உங்களுக்கு மருத்துவத் துறை சார்ந்த அனைத்தைப் பற்றியும் அடிப்படை அறிவு இருக்க வேண்டும்"(SOMETHING ABOUT EVERYTHING) "

எம்டி / எம்எஸ் (MD/MS) பட்டமேற்படிப்புகளில் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதைப் பற்றி அக்குவேறு ஆணிவேராகப் படித்து பட்டம் பெறுகிறோம்.
இது அந்தத் துறை பற்றி அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும் என்ற நிலையில் வருகிறது ( EVERYTHING ABOUT SOMETHING)"

எம்சிஹெச்/ டி எம் உள்ளிட்ட சிறப்பு பட்டமேற்படிப்பு பயின்றவர்கள்
குறிப்பிட்ட துறையில் உள்ள ஒரு குறிப்பிட்ட அம்சத்தைப் பற்றி இன்னும் ஆழமாக அறிவர். இது ( EVERYTHING ABOUT SOMEINTHING INSIDE THAT SOMETHING )

எனவே,
சிறப்பு பட்ட மேற்படிப்பு பயின்ற மருத்துவர்
"சிறுநீரகம்" குறித்து மட்டுமே அறிவுரை கூறுவார். அதற்குக் காரணம்
அவர் தொடர்ந்து சிறுநீரகங்கள் சார்ந்த நோய்கள் , நோயாளிகளைச் சந்தித்து அனுபவத்தையும் அறிவையும் வளர்த்துக் கொள்கிறார்.

"குடல்" சார்ந்த பட்டமேற்படிப்பு பயின்றவர்
அதற்குரிய அறிவுரைகளை அவர் சார்ந்த உறுப்பு சார்ந்த அறிவுரையை வழங்குவது சரியானதே.

நுண்ணோக்கி கொண்டு ஒரு விஷயத்தைப் பார்ப்பதற்கும்

தொலைநோக்கி கொண்டு ஒரு விஷயத்தைப் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் இது.

நுண்ணோக்கி கொண்டு பார்க்கும் போது
அருகில் உள்ள நுண் பொருளும் பெரிதாகத் தெரியும்

தொலைநோக்கி தூரத்தில் உள்ள பொருளை அருகில் காட்டும்.

இப்போது
முதல் நிகழ்வுக்கு வருவோம்

சிறுநீரக செயல்பாடு குறைகிறது
என்பதால் நீர் குறைத்து அருந்த வேண்டும் என்று சிறுநீரக சிறப்பு நிபுணர்

மலச்சிக்கல் காரணமாக நீரை அதிகமாக அருந்தலாம் என்கிறார் குடல்நோய் சிறப்பு நிபுணர்.

இருவரும் இருவேறு எதிர் எதிர் கருத்துகளைக் கூறியிருந்தாலும்
நோயாளி எளிதில் இந்த விஷயத்தில் அறிவார்ந்த ஒரு முடிவுக்கு வர முடியும்.

அதாவது உள்ளுறுப்புகளில் முக்கியமானதாக இருக்கும் சிறுநீரகம் சுமை தாங்க இயலாமல் இருக்கிறது எனவே நாம் சிறுநீரக நிபுணர் கூறிய அறிவுரையை ஏற்க வேண்டும்.

குடல் நோய் நிபுணரிடம் இதனை எடுத்துக் கூறி , சிறுநீரக மருத்துவர் நீர் அதிகம் அருந்தக் கூடாது என்று கூறியிருக்கிறார் என்பதை எடுத்துக் கூறினால்
மலச்சிக்கலுக்குரிய அடுத்த சிகிச்சைகளை பரிந்துரைப்பார்.

ஒரு மருத்துவர் நன்றாக நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள் என்று கூறினால்
எலும்பு மருத்துவர் மூட்டுத் தேய்மானம் இருப்பதைக் கூறியிருப்பதை எடுத்துக் கூறி தன்னை நடக்கக் கூடாது என்று அவர் அறிவுரை கூறியிருப்பதை எடுத்துக் கூறி மாற்று சிகிச்சையைப் பெற வேண்டும்.

வெயிலில் நின்றால் விட்டமின் டி கிடைக்கும் என்பது பொதுவான அறிவுரை
ஆனால் தான் வெயிலில் இருந்தால் அலர்ஜி வருவதும் அதற்கு சரும நோய் நிபுணர் வெயிலில் நிற்கக் வேண்டாம் என்று அறிவுறுத்தியிருப்பதை
மருத்துவரிடம் கூறினால் விட்டமின் டி சப்லிமெண்ட்ஸ் வழங்குவார்

என்னைப் பொருத்தவரை
அந்தந்த உறுப்புகள்
அந்தந்த உடல் இயக்க மண்டலங்களுக்கான சிறப்பு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் வழங்கும் சிகிச்சை முறைகளை
ஒருங்கிணைத்து ஒன்றுடன் மற்றொன்று
முரண்படாமல் தங்களின் சந்தேகங்களை கேட்டறிந்து சிகிச்சை பெறுவது
நோயரின் பொறுப்பாகும்.

அதை நோயர் சரிவரச் செய்ய இயலாமல் இருக்கும் நிலையில், மருத்துவத் துறையில் அனைத்து துறைகள் பற்றியும் அடிப்படை ஞானம் கொண்ட
குடும்ப நல மருத்துவர்
இத்தகைய பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் தரும் சிகிச்சையை ஒருங்கிணைத்து ஒன்றுக்கொன்று முரண்படாத கடைபிடிக்கத்தக்க அறிவுரைகளை வழங்கும் பணியைச் செய்யலாம்.

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர் .

Food matters!!
18/06/2025

Food matters!!

14/04/2025
தற்சமயம் சீனாவில் பரவி வரும் ஹெச் எம் பி வி எனும் வைரஸ் தொற்று குறித்து அனைவரும் அச்சத்துடன் பகிர்ந்து வருவதைக் காண முடி...
03/01/2025

தற்சமயம் சீனாவில்
பரவி வரும் ஹெச் எம் பி வி எனும் வைரஸ் தொற்று குறித்து அனைவரும் அச்சத்துடன் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது.

2019இல் சீனாவின் வூஹான் நகரில் இருந்து புதிய கொரோனா வைரஸ் 2019 உருவெடுத்து உலகம் முழுவதும் பரவி அதற்கடுத்த இரண்டு ஆண்டுகள் பெருந்தொற்றாக மாறி உலகை ஆட்டுவித்தது.
பல லட்சம் உயிர்கள் இறக்கக் காரணமாகவும் அமைந்தது.

அப்போதிருந்து
நம் அனைவருக்கும்

சீனா என்றாலோ
சீனாவில் சுவாசப் பாதை தொற்றுப் பரவல் நிகழும் எக்ஸ் தள காணொளிகள் வருடா வருடம் நவம்பர் டிசம்பர் மாதங்களில் பரவும். பிறகு அடங்கும்.

இது கொரோனா தொற்று மீது நம் அனைவருக்கும் இருக்கும் போஸ்ட் ட்ரமாடிக் ஸ்ட்ரெஸ் டிசார்டர் ஆகும். அதாவது
மீண்டும் ஒருமுறை கொரோனா போன்ற தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் பதட்டம் நமக்குள் வந்து விடும்.

இதனால் சீனா குறித்து எந்த செய்தி வந்தாலும் அது வைரல் ஆகிவிடுகிறது.

சரி வாருங்கள்
இப்போதைய ஹெச் எம் பி வி விஷயத்துக்கு வருவோம்.

ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் என்பது மனிதர்களுக்குப் புதிய வைரஸ் அன்று.
இது 2019 ஆம் ஆண்டின் இறுதியில் பரவத் துவங்கிய புதிய கொரோனா வைரஸ் போன்று மனிதர்களுக்குப் புதிய வைரஸ் அன்று.

ஏற்கனவே பல பத்து ஆண்டுகளாக நம்மிடையே இந்த வைரஸ் சுற்றி சுற்றி தொற்றுகளை ஏற்படுத்தி வரும் வைரஸ் தான் என்பதால் நம்மில் பெரும்பான்மையினருக்கு இந்தத் தொற்றுக்கு எதிரான சிறிய அளவு எதிர்ப்பு சக்தியேனும் இருக்கும்.


பல பத்து வருடங்கள் நமது மனிதர்களிடையே சுற்றில் இருந்தாலும்
இந்த வைரஸ் 2001 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் ஆய்வகத்தில் தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

கொரோனா போன்றே இதுவும் ஒரு ஆர் என் ஏ வைரஸ் ஆகும்.
நியூமோ வைரிடே எனும் சுவாசப்பாதையைத் தாக்கும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது.

இது தற்போது வரை
இரண்டு வகைகளாக உருமாற்றம் அடைந்துள்ளது

ஏ மற்றும் பி வகை.

இந்த வைரஸ் - குளிர்காலங்களில் பரவும்
பல்வேறு வகை சுவாசப்பாதை தொற்றுகளான

- ஆர் எஸ் வி
- இன்ஃப்ளூயன்சா வைரஸ்
- ரைனோ வைரஸ்
- அடினோ வைரஸ்
- பேரா இன்ஃப்ளூயன்சா வைரஸ்
- கொரோனா வைரஸ்
ஆகிய பல வைரஸ்களுள் ஒன்று தான்.
இது பெரும்பான்மை மக்களுக்கு தனிப்பட்ட அச்சுறுத்தல் தரக்கூடிய பெரிய பிரச்சனைக்குரிய வைரஸ் அன்று.

இந்த வைரஸ் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் வயதினர்
- ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர்.

வீசிங் மற்றும் வலிப்பு உள்ள குழந்தைகளுக்கு அதிகம் இந்தத் தொற்று ஏற்படுகிறது.

பெரும்பான்மையினருக்கு
சாதாரண சுவாசப்பாதை தொற்றாகக் கடந்து செல்லும்.

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள்
வீசிங் இருக்கும் குழந்தைகள் ஆகியோருக்கு நுரையீரலில் தீவிர தொற்று ஏற்படலாம்.

- முதியோர்கள்
- புற்றுநோய்க்கு சிகிச்சை எடுப்பவர்கள்
- எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பெற்றவர்கள்
- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்
- எதிர்ப்பு சக்தி குன்றியோர்
ஆகியோருக்கு சற்று தீவிரத்துடன் தொற்று வெளிப்படலாம்.

இந்தியாவைப் பொருத்தவரை
இந்தத் தொற்றுப் பரவல்
- குளிர் காலங்களில் அதிகம் நிகழ்கிறது.

சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில்
கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றில் ஐந்து வயதை நிறைவு செய்தோரில்
4% ஹெச்.எம்.பி.வி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே சென்னைக்கும் தமிழ்நாட்டுக்கும் இந்தத் தொற்று புதிதன்று.

அறிகுறிகளைப் பொருத்தவரை

காய்ச்சல்
சளி இருமல்
மூக்கு ஒழுகுதல்
மூக்கடைப்பு
போன்ற சாதாரண அறிகுறிகள் மட்டுமே வந்து நோய் குணமடையும்

எனினும்
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும்
முதியவர்களுக்கும் ஏற்கனவே ஹைரிஸ்க் என்று குறிப்பிடப்பட்டவர்களுக்கும்
- நியூமோனியா தீவிரமான நுரையீரல் தொற்று நிலை ஏற்படும்

இதன் அறிகுறிகள்
- மூச்சுத் திணறல்
- மூச்சு விடுவதில் சிரமம்
- நடக்கும் போது தலை சுற்றல்
- உள்ளங்கை பாதம் நீல நிறத்தில் மாறுதல்
- குழந்தைகளின் நெஞ்சுப் பகுதி உள்ளிளுத்து மூச்சு விடுதல்
- குழந்தை மூச்சு விடும் போது குறட்டை போன்ற சத்தம் கேட்பது
போன்றவை அபாய அறிகுறிகளாகும்.

சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில்
எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களிடையே
வைரஸினால் உண்டான நுரையீரல் தொற்றுக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆன நோயாளிகளுள் 8.5% ஹெச்எம்பிவி தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.
அவர்களுள் 80% பேருக்கு வீசிங் இருந்தது.
12% பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

இந்தத் தொற்று ஏனைய சுவாசப்பாதை தொற்றுகள் போலவே

இருமுவது
தும்முவது மூலம் சளித்துகள்கள் காற்றில் பறந்து அதை நுகருபவர்களுக்குப் பரவுகிறது.

கண்ட இடங்களில் கை வைப்பதன் மூலம் கையில் தொற்று பட்டு அதை மூக்கிலும் வாயிலும் வைப்பதன் மூலம் பரவுகிறது.

எனவே,
பொதுவாக குளிர் காலங்களில்
வெளியே செல்லும் போது
முகக்கவசம் அணிந்து செல்லுவது நல்லது.

கைகளை அடிக்கடி சோப் போட்டுக் கழுவுவது நல்லது.

கைகளை கண்ட இடங்களில் வைக்காமல் இருப்பது இன்னும் நல்லது.

இந்த வைரஸ் தொற்றுக்கு எதிரான பிரத்யேக முறிவு மருந்து இல்லாவிடினும்
ரிபாவிரின் எனும் வைரஸ் கொல்லி மருந்து சிறப்பாக வேலை செய்கிறது.

தீவிரமான அளவு மரணங்களை விளைவிக்கக்கூடியதாக இல்லை என்பதால்
இதற்கென பிரத்யேக தடுப்பூசி இதுவரை கண்டறியப்படவில்லை.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில்
இந்த வைரஸ் ஏனைய சுவாசப் பாதை வைரஸ்கள் போன்றே அதன் நோய் தன்மையில் உள்ளது.

கொரோனா போன்ற பெருந்தொற்று நிலையை இந்த வைரஸ் உண்டாக்கும் வாய்ப்பு இப்போதைக்கு மிக மிகக் குறைவு.

எனவே இந்த வைரஸ் விசித்திரமானது என்றோ
பயங்கரமானது என்றோ அச்சம் கொள்ளத் தேவையில்லை.

இதுவும் கடந்து போகும்.

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

Scrub typhus:தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுப் பதிவு ஸ்க்ரப் டைஃபஸ் என்...
01/08/2024

Scrub typhus:

தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுப் பதிவு


ஸ்க்ரப் டைஃபஸ் என்பது ஒருவகை ஒட்டுண்ணிக் கடியால் பரவும் காய்ச்சலாகும்.

ஓரியன்சியா சுட்சுகாமுஷி எனும் பாக்டீரியா டிக் மைட்ஸ் எனும் உன்னிகளில் தொற்றை ஏற்படுத்துகின்றது.

தொற்றுக்குள்ளான உன்னிகள் மனிதர்களைக் கடிக்கும் போது நமக்கும் தொற்று பரவுகிறது.

உன்னிகளில் இந்த பாக்டீரியாக்கள் வாழ்ந்து வருகின்றன.
பாதிக்கப்பட்ட உன்னிகள் மனிதனைக் கடிக்கும் போது மனிதனுக்குப் பரவுகிறது.

மனிதனன்றி
பூனை, நாய், எலி போன்ற மனிதனிடம் நெருங்கி வாழும் விலங்குகளிடமும் இந்த பாக்டீரியா தொற்று ஏற்படுத்துகிறது.

இந்தத் தொற்று மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு
வேறு வழிகளில் பரவுவதில்லை. எனவே இது தொற்று நோய் இல்லை.

இவ்வாறு உன்னிக் கடி பட்டதில் இருந்து பதினான்கு நாட்களில்

காய்ச்சல்
குளிர் நடுக்கம்
உடல் சோர்வு
உடல் வலி
தலைவலி
இருமல்
நெறிகட்டிக் கொள்ளுதல் போன்றவை ஏற்படும்

கவனிக்காமல் விட்டால்
இரண்டாவது வாரம்

- பிதற்றல் நிலை
- நியூமோனியா
- குழப்ப நிலை
- கோமா
- திடீர் சுவாச செயலிழப்பு
- மஞ்சள் காமாலை
- மூளைக் காய்ச்சல் ஏற்படலாம்

கல்லீரல் , சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உறுப்புகள் செயலிழந்து மரணமடைவதற்கான வாய்ப்பு - 30% என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மேற்சொன்ன அறிகுறிகளுடன்
கூடவே
உன்னி கடித்த இடம் சிவந்து சிகரெட்டில் சுட்டது போன்ற நீள்வட்டமான புண் உருவாகும். பிறகு அந்தப் புண் கருப்பு நிறத்தில் உலரும். இதை "எஸ்கர்" என்போம்.

இந்த எஸ்கர்
நமது உடலில் கதகதப்பும் வேர்வை சுரப்பும் ஒருங்கே இருக்கும்
கழுத்து , கக்கம், அக்குள் ஆகிய இடங்களில் தென்படலாம்.

தொப்புளுக்குக் கீழே இந்தப் புண் இருக்கலாம்

பெண்களைப் பொருத்தவரை
மார்பகங்களிலும் மார்பகங்களுக்கு கீழ் உள்ள பகுதியிலும் இந்தப் புண் இருக்கலாம்.

இந்த பாக்டீரியா தொற்றுக்கு உள்ளானதும்
சிகிச்சை அளிக்காமல் கடத்தும் நாட்களில்

உடல் முழுவதும் உள்ள ரத்த நாளங்களில் தீவிர அழற்சி நிலை தோன்றும்.

ரத்த நாளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அழற்சி

ரத்த நாளங்களில் கசிவு

இதன் விளைவாக முக்கிய உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகும்.

எனவே மருத்துவரை சந்திப்பதிலும் சிகிச்சை எடுப்பதிலும் காலதாமதம் இருத்தல் கூடாது.

வயது முதிர்ந்தோர்,
ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பவர்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு கொண்டவர்கள்,
கூடவே இதய/ சிறுநீரக/கல்லீரல் சார்ந்த இணை நோய்களைக் கொண்டிருப்பவர்கள் ஆகியிருக்கு இந்தத் தொற்று ஏற்படும் போது தீவிரத்தன்மையுடன் வெளிப்படும் வாய்ப்பு உண்டு.

நமது உடலில் கூட
ஈரப்பதமும் வெப்பமும் இருக்கும் பகுதிகளான அக்குள், கக்கம் ஆகிய பகுதிகளில் தான் முதலில் கடித்துப் புண் ஏற்படுத்துகிறது.

ஒருவருக்கு காய்ச்சல் அடிக்கும் போது
வேறெந்த அறிகுறிகளும் இல்லாமல்

தீவிரக் காய்ச்சல்
அதீத தலைவலி
அதீத உடல் சோர்வு
இருப்பின்

உடலில் எங்காவது சிகரெட்டால் வைத்து சுட்டது போன்ற வட்ட வடிவ புண் இருக்கிறதா? அல்லது கருப்பு நிறத்தில் வட்ட வடிவில் காய்ந்த புண் இருக்கிறதா? என்பதைப் பார்த்து அதையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இந்த ஓரியன்சியா சுட்சுகாமுஷி பாக்டீரியா - உடல் முழுவதும் உள்ள ரத்த நாளங்களைத் தாக்கி அழற்சி ஏற்படுத்தும் என்பதால் விரைவாகக் கண்டறிந்து அதற்குரிய ஆண்டிபயாடிக் சிகிச்சை அளித்திட வேண்டும்.

டாக்சிசைக்ளின் - அசித்ரோமைசின் - க்ளோராம்ஃபெனிகால் ஆகிய ஆண்டிபயாடிக்குகள் இந்த பாக்டீரியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகின்றன.

எவ்வாறு இந்தத் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வது?

- இந்த உன்னிகளிடம் இருந்து கடிபடாமல் இருப்பதே முதல் தற்காப்பு நடவடிக்கை
- நமது வீடுகளில் உபயோகப்படுத்தும் தலையணை மற்றும் படுக்கை விரிப்புகளை சரியாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.
- உன்னிகள் வளராதவாறு உன்னிக் கொல்லி மருந்துகளை நமது வீட்டைச் சுற்றி உள்ள பகுதிகளில் தெளித்து வர வேண்டும். ஆனால் அது பிராக்டிகலாக சாத்தியமற்றது.
- வனாந்திரங்களுக்கு ட்ரெக்கிங் , ஹாக்கிங் , டூர் செல்வீர்கள் என்றால் கொசு விரட்டி உன்னி விரட்டிக் களிம்புகளை தேய்த்துக் கொள்ள வேண்டும்.

காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால்
எப்போதும் இந்த ஸ்க்ரப் டைஃபஸ் நியாபகமும் நம் அனைவருக்கும் இருக்க வேண்டும்

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
சிவகங்கை

21/07/2024

சந்திப்புரா வைரஸ்:

தற்போது நமது நாட்டின்
குஜராத் மாநிலத்தில்
சந்திபுரா மூளைக்காய்ச்சல் அபாயகரமான அளவில் குழந்தைகளிடையே பரவி வருகிறது.

இதுவரை இந்தத் தொற்றுக்கு உள்ளான 29 குழந்தைகளில் 15 குழந்தைகள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலைமையின் தீவிரம் கருதி
நாம் அனைவரும் இந்தத் தொற்று குறித்தும் அதன் அறிகுறிகள், பரவும் விதம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிந்து வைத்திருப்பது கட்டாயமாகிறது.

மகாராஷ்ட்ரா மாநிலம் சந்திப்புரா எனும் கிராமத்தில் முதல் முறையாக இந்த வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டமையால் "சந்திப்புரா வைரஸ்" என்று அழைக்கப்படுகிறது.

தொற்று ஏற்படுபவர்கள் பெரும்பாலும் பதினைந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்.

இவர்களுக்கு மூளைக்காய்ச்சல் நோயை ஏற்படுத்தும் தன்மையுடன் இருப்பதால் இந்த நோய்க்கு
"சந்திப்புரா மூளைக்காய்ச்சல்"
"சந்திப்புரா வைரஸ் மூளைக்காய்ச்சல்" என்று பெயர்

இந்தத் தொற்று பெரும்பாலும்
கிராமங்களில் பரவுவது தெரிகிறது.

இந்த சந்திப்புரா வைரஸானது
கிராமங்களில் உள்ள மண்ணால் ஆன வீடுகளில் உள்ள விரிசல்களில் புற்று கட்டி வளரும் மணல் ஈக்களின் வாய்களுக்குள் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளுக்குள் வளரும்.

இந்த மணல் ஈக்கள் மனிதர்களைக் கடிக்கும் போது அவர்களுக்கு வைரஸ் தொற்று கடத்தப்படுகிறது.

இவ்வாறாக தொற்றைப் பெற்றவரிடம் இருந்து மணல் ஈக்கள் மற்றும் சில வகை கொசுக்கள் இந்த வைரஸை ஆரோக்கியமான நபர்களுக்கு பரப்பிவிடுகின்றன.

இவ்வாறு வைரஸ் தொற்றைப் பெரும் குழந்தைகளுள் சிலருக்கு
நோயின் அறிகுறிகள் வெளிப்படும்

- அதீத காய்ச்சல்
- வலிப்பு
- குழப்ப நிலை
- வாந்தி
- வயிற்றுப் போக்கு
- தலைவலி
- மூர்ச்சை நிலை
- கோமா
ஏற்படுகிறது.


இந்த வைரஸ்
ஃப்லிபோடோமைன் எனும் மணல் ஈ வகையும் கூடவே
டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் இஜிப்டி வகை கொசுக்களாலும் பரவும் என்பதால்
ஏற்கனவே டெங்கு தொற்றுப் பரவல் உள்ள மாநிலங்கள் அலர்ட் நிலையில் இருக்க வேண்டும்.

2003 இல் நடந்த சந்திப்புரா மூளைக்காய்ச்சல் நோயில் ஆந்திர பிரதேசத்தில் 183 குழந்தைகள் மடிந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இறந்த குழந்தைகளைப் பொருத்தவரை,
மருத்துவமனையில் அட்மிட் ஆன 48 மணிநேரங்களுக்குள் மரணம் சம்பவித்திருக்கிறது.

நோய்த் தொற்று கண்டவரின் ரத்த மாதிரிகளில் இருந்து ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து வைரஸைக் கண்டறியலாம்.

நோய் நிலைக்கு ஆளானோருக்கு
சுவாசம் விடுதல்
ரத்த ஓட்டம்
நாடித்துடிப்பு
போன்றவை முறையாகப் பராமரிக்கப்பட்டு அதனுடன் நீர்ச்சத்து மற்றும் தாது உப்புகள் சரியாக இருக்குமாறு சிரை வழி திரவங்கள் வழங்கப்படும்.

எவ்வாறு இந்தத் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது?

மணல் ஈக்கள் உருவாகும் இடங்களான வீடுகளில் உள்ள விரிசல்களைப் பூசிவிட வேண்டும்

பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளித்து அவற்றைக் கொல்ல வேண்டும்

டெங்கு கொசு உற்பத்தி ஆகும் இடங்களை அழிக்க வேண்டும்.

வீட்டுக்குள்ளும் வீடுகளுக்கு வெளியேவும் நீர் சிறிதளவு கூட தேங்கி நிற்பதை தடுக்க வேண்டும்

குழந்தைகளுக்கு கை கால்களை முழுவதுமாக மறைக்குமாறு உடை அணிவிக்க வேண்டும். கொசு வலைக்குள் குழந்தைகளைப் படுக்க வைக்கலாம்.

வீட்டில் சேரும் குப்பைகளை உரிய முறையில் வெளியேற்ற வேண்டும்.

கொசு விரட்டிக் களிம்புகள், விரட்டிகள் போன்றவற்றை உபயோகித்து கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்

சந்திப்புரா வைரஸ் தொற்று பரவும் மாநிலங்களின் பரவல் இருக்கும் மாவட்டங்களில் இருந்து நமது ஊருக்கு வரும் மக்களில் இந்த அறிகுறிகள் தோன்றினாலும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நல்ல செய்தி

இதுவரை 1965, 2003 ,2009 -2011 ஆகிய காலங்களில் இந்த வைரஸ் பரவல் நிகழ்ந்துள்ளது.
எனினும் நாடு முழுவதும் பரவியதாகவோ
மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை உயிர்சேதங்களை ஏற்படுத்தியது எனவோ வரலாறு இல்லை.

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்.

Address

Palladam Road, T. Kottampatti
Pollachi
642002

Telephone

+917397164930

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nalam Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nalam Hospital:

Share

Category