01/01/2025
🔥 தத்வமஸி...!
தத் : அது (அப்பரம் பொருள்), துவம் : நீ(யாக), அஸி : இருக்கின்றாய், அல்லது 'நீ அதுவாக இருக்கின்றாய்' என்று அர்த்தம்.
மனிதனும் தெய்வமாகலாம் என்கிற வரி மிக எளிமையானது படிப்பதற்கு, ஆனால் அர்த்தம் பிரமாண்டமானது!
தெய்வம் எதுவென புரிந்தவர்களுக்கே மனிதன் எப்படி தெய்வமாக முடியும் என அறிய முடியும்!?
சரி தெய்வம் என்பது என்ன பலரும் நினைக்கிறார்கள். தெய்வம் என்றால் பிரமாண்டமான உயரம் கொண்டு வானுக்கும் பூமிக்கும் உயர்ந்து நின்று, வருவோர்க்கு கேட்பதை தரும் ஒரு பொருளாக, தலைக்கு பின்னால் ஒளி வட்டம் வைத்துக் கொண்டும், நிறைய பொன்னாபரணங்கள் அனிந்து கொண்டும், வருங்காலத்தை கணித்து கூறிக்கொண்டும் இருக்கும்!அப்படி இருக்க, மனிதன் எப்படி அப்படி ஆக முடியும் என்கிற சந்தேகம் எழும்!? பல போலி சாமிகள் கூட கிராபிக்ஸ் செய்து கொண்டு மேலே உள்ளவற்றை செய்ய படாதபாடு படுவதை கண்ணார காண்கிறோம்.
தெய்வம் என்பது ஒரு பொருள் அல்ல, அது குணம்...
தன்னை நாடி வருபவர்க்கு அவர்கள் கவலை எல்லாம் தீர்த்து விடாது மாறாக தனது ரூபத்தால் சகலமும் மாறும் கவலைப்படாதே என ஆறுதல் கூறும் குணமே, தெய்வம்...!!
ஆலயத்திற்கு வருபவர்களுக்கு எல்லாம் பொன்னும் பொருளும் வாரி வழங்குவதா தெய்வம்! நாடி வருபவர்கள் மனதில் நேர்மையை விதைத்து செல்வம் பெருகும் வழியினை காட்டுவதே தெய்வம்!!
தனது உண்டியலில் காசை கொட்டு என கேட்பது இறைமை கிடையாது!? மாறாக தன்னிடம் உள்ளதை கொண்டு மற்றொரு உயிர் பசியாற்றுவதே தெய்வம்...!
அதைக்கொடு இதைக்கொடு என ஒருபோதும் கேட்பதல்ல தெய்வம்...! தனது புன்னகையால் உலகிற்கு #அன்பு எனும் மருந்தை தந்து, சகல பிணிகளையும் போக்கி அதே உயிர்களிடத்திலிருந்து அன்பு ஒன்றை மட்டுமே காணிக்கையாகப் பெறும் நிலையே தெய்வம்....
இனி யோசித்து பாருங்கள் மனிதன் கூட தெய்வமாகலாம்...
உங்களிடம் பேச வருபவர்களிடம் அவர்கள் கவலைக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினால், நீங்கள் அந்த நொடியில் தெய்வமாகறீர்கள்!
ஒரு உயிர் உணவின்றி தவிப்பதை கண்டால், ஒரு ரொட்டி துண்டு வாங்கி தந்தால் அந்த உயிருக்கு நீங்கள் தெய்வமாகறீர்கள்!
யாருமற்ற அநாதைகளுக்கு உதவியாக நிற்கிறீர்களா நீங்கள் அந்த நபருக்கு தெய்வம்...!
யாரோ ஒருவர் உங்களிடம் அவரது நோய் நொடியினை கூறினால் சரியாகிவிடும் என ஆறுதல் மொழி கூறுகிறீர்களா நீங்களே அங்கு தெய்வம்...
நம் தேவைக்காக மற்றொரு உயிரை கொல்ல வேண்டுமா என சிந்தனை எழுகிறதா நீங்களும் அங்கு தெய்வம்!
தன் பிள்ளை விழுவதை போல் அடுத்தவர் பிள்ளை விழும் சமயம் பதறுகிறதா நெஞ்சம் அந்த அன்பு நிலையே தெய்வம்!
இந்த நிலைகளை படிப்படியாக வளர்த்து கொள்பவனே பகவான் பக்தன் எனும் அருகதை உடையவன்!
அவனே பதினெட்டாம் படி தாண்டி தத்வமஸி காண தகுதி உடையவன்...🙇🏽♂️
🙏🏼 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
மரு. சு. இளங்கோ
MD ஹோமியோ