27/08/2022
ஒரு நாளைக்கு உலகில் 21,000 மனிதர்கள் கேன்சரால் இறக்கிறார்கள் என ஒரு புள்ளி விபரம் சொல்கிறது.
கொஞ்சம் கேன்சரைப் பற்றி பேசுவோமா?
Dr. V. Hariharan, MBBS, MD., Diet Consultant, Coimbatore.
கேன்சர் நோயாளிகள் ஏன் உடல் எடை இழக்கிறார்கள்? இதுவே கேன்சர் ககெக்சியா எனப்படும். நாம் சாப்பிடும் இட்லி, தோசை, சப்பாத்தி, ரைஸ், பழங்கள் குடலில் செரிமானமாகி, குளுக்கோஸ் எனும் சர்க்கரையாக மாறுகிறது. நம் உடல் ஒரு மாலிக்யூல் குளுக்கோசை ஆக்சிஜன் வைத்து எரித்து 32ATP எனும் சக்தியை பெறுகிறது. இதுவே கேன்சர் செல், ஆக்சிஜனை பயன்படுத்தாமல் anerobic glycolysis எனும் வேறு வழியாக 2 ATP மட்டுமே உற்பத்தி செய்கிறது. அதனால் நார்மல் வளர்ச்சிக்கு இதற்கு பதினாறு மடங்கு எக்ஸ்ட்ரா க்ளுக்கோஸ் தேவைப்படுகிறது. அதனால், உடலின் க்ளுக்கோசை இது இழுத்துக்கொள்வதால், உடலுக்கு உணவில்லாமல், உடலில் உள்ள தசைகள் உருகி, அது கேன்சர் செல்களுக்கு எனர்ஜி தருவதால், உடல் எடை குறைகிறது.
இப்போது கேன்சருக்கு எரிபொருள் க்ளுக்கோஸ் என்பதை அறிந்தோம். இந்த anerobic glycolysis எனும் மேட்டரை 1931ம் வருடமே ஜெர்மன் விஞ்ஜானி ஓட்டோ வார்பர்க் சொல்லி, நோபல் பரிசு பெற்றார்.
கேன்சர் வருவது முன்னெப்போதையும் விட இன்று மிக அதிகம் உள்ளதை மறுக்க முடியாது. சும்மா சிகரெட் குடிப்பது, புகையிலை, குட்கா பயன்படுத்துவது போன்றவை மட்டுமே கேன்சர் வரக்காரணம் இல்லை. சுற்றும் முற்றும் பார்க்க வேண்டும். தினமும் நாம் சாப்பிடும் காய்கறி, தானியம், மற்றும் இதர உணவு பொருட்களில் இல்லாத நச்சுகளா? பூச்சி மருந்து, களைக்கொல்லி, செயற்கை உரம் இல்லா ஒரு உணவாவது உங்கள் மேஜைக்கு வருகிறதா? கிடையாது. அவை ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். செல்போன், அலைகற்றைகளில் ரேடியேஷன் இல்லை, அதனால் கேன்சர் வராது என இன்று வரை நிருபிக்கப்படவில்லை. நல்ல பெரிய சிவப்பான ஆப்பிள் தான் சாப்பிடுவேன், பெரிய பாகற்காய் தான் வாங்குவேன், நாட்டு தக்காளி அழுகும், மட்டும் சின்னதாக நிறைய விதைகளுடன் இருக்கும், அதனால் பெரிய தக்காளி தான் வாங்குவேன் என நீங்கள் இன்று வாங்கும் காய்கறிகளில் பாதி GM காய்கறிகள். அவை glyphosate எனும் கெமிக்கல் இருந்தால் ஒழிய உங்களுக்கு கிடைக்காது எனத் தெரியுமா? அதுமட்டுமில்லாமல், மேலே சொன்னது போல க்ளுக்கோஸ் தான் கேன்சர் செல் வளர ஒரே ஆதாரம்.
மூன்றில் ஒரு பகுதி இந்தியர்களுக்கும் உலகவாசிகளுக்கும் metabolic syndrome எனும் வியாதி உள்ளது. உங்களுக்கு தொப்பை லைட்டாக உள்ளதா. கண்டிப்பாக இந்தப்பிரச்சினை இருக்கலாம். metabolic syndrome என்றால் கார்போஹைட்ரேட் ஒவ்வாமை எனலாம். கேன்சர் வந்த 75% மக்களுக்கு மெட்டபாலிக் சிண்ட்ரோம் இருக்கிறதாம். அது செல்லில் எனர்ஜி உற்பத்தி செய்யும் மைட்டோகாண்டிரியா எனும் பகுதியை பாதிக்கிறது என்கிறார்கள். அதனாலும் கேன்சர் வரலாம்.
2000மாம் ஆண்டு தான் பேலியோ டயட் பற்றி லொரைன் கார்டைன் எனும் அமெரிக்கர் புத்தகம் எழுதுகிறார். அதன் பின்பு பேலியோ டயட் மீட்சி அடைகிறது. கார்போஹைட்ரேட் உணவில் இருந்து வரும் க்ளுக்கோஸ் எவ்வாறு சுகர், பிரஷர், PCOD, உடற்பருமனை ஏற்படுத்துகிறது, மாவுச்சத்தை தவிர்ப்பதன் மூலம், எப்படி இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம் என அவர் அலசுகிறார். க்ளுக்கோஸ்-கேன்சர் செல் என்ற கோட்பாடை பார்த்த ஆராய்ச்சியாளர்கள் கண்ணில், மேலே உள்ள மேட்டர் படவே, எலிகளை பிடித்து கேன்சர்-பேலியோ ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கிறார்கள்-2007ல். இன்று பேலியோ-கேன்சர் ஆராய்ச்சிகள் பதினைந்தாம் ஆண்டில் உள்ளது.
மருத்துவர் தாமஸ் சிக்ஃபிரைட் அவர்கள் கிளையோபிலாஸ்டோமா மல்டிபார்மே (இந்த கேன்சர் தான் brain tumor என எண்பதுகளில் தமிழ் படங்களில் வந்து சக்கை போடு போட்டது) எனும் கொடிய கேன்சரின் செல்களை எடுத்து எலிகளின் மூளைக்குள் செலுத்தி, பேலியோ டயட் உணவுகள் தந்து பார்க்கிறார். சில எலிகள் இறந்தாலும், பல எலிகளுக்கு நல்ல பலன் இருந்தது. வாழ்நாள் நீடித்தது, சில எலிகள் முற்றிலும் குணமடைந்தன.
எலிகளில் ஆராய்ச்சி செய்தால் ஒரு பயல் ஒத்துக்கொள்ள மாட்டான். மனிதர்களில் பேலியோ டயட் கேன்சருக்கு ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளதா? நிறைய செய்யப்பட்டுள்ளது. சில முழு ஆராய்ச்சிகள் இருந்தாலும், முக்கால்வாசி anecdotal அல்லது கேஸ் ரிப்போர்ட்டுகளே. அதாவது, "சார், என் மாமா கேன்சர் வந்து பேலியோ டயட் எடுத்து முற்றிலும் குனமாயிட்டார்" எனும் வாய்வழி தகவல்கள், மற்றும், "நான் ஒரு டாக்டர். என் பேஷண்டுக்கு பேலியோ டயட் எடுத்து கேன்சர் குணமாயிட்டு" என மருத்துவ ஏடுகளில் சொல்வது நிறைய உள்ளது. இன்னும் பல ஆராய்ச்சிகள் வேண்டும். ஆனால் செய்வது கஷ்டம். கேன்சர் என்றாலே இறப்பு சீக்கிரம் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களின் மருந்துகள் நிறுத்தி விட்டு டயட் மட்டும் தந்து பார்க்கிறேன் என்றால், யார் தான் ஒத்துக்கொள்வர்? நடைமுறை சாத்தியம் மிகக்குறைவே.
அதனால் தான் நிறைய ஆராய்ச்சிகள், மருந்துகள், கீமோதெரபி, சர்ஜரி, ரேடியோதெரபி ஆகியவற்றுடன் பேலியோ டயட்டை ஒரு adjunctஆக தந்து ஆராய்ச்சி செய்வது. உலகில் இப்படி மருந்துகளுடன் டயட் தந்து ஆராய்ச்சி செய்தததில் பேலியோ டயட்டிற்கே முதலிடம் எனலாம்.
லோகன் ஸ்ணீட் எனும் இளைஞர். இதே கிளையோபிலாஸ்டோமா வரவே, ஆபரேஷன் செய்தார், ஏழு சைக்கிள் கீமோ எடுத்தும் மறுபடி மறுபடி கேன்சர் திரும்பி வரவே, "போதுண்டா சாமி" என எல்லா வைத்தியத்தையும் நிறுத்தி விட்டு, முழு பேலியோ மற்றும் விரதம் இருந்து, கேன்சரை முற்றிலும் இல்லாமல் ஆக்கினார். அவர் கேன்சரை வென்று ஐந்து வருடம் ஆகிறது, வருடம் நான்கு முறை செக்கப் செய்து கேன்சர் இல்லை என்பதை உறுதிபடுத்திக்கொள்கிறார். இன்று வரை டயட்டில் உள்ளார்.
இப்படியான ஒரு ஆராய்ச்சியில் பெண்களில் ஓவரி மற்றும் எண்டோமெட்ரியல் கேன்சர் இருப்பவர்களிடையே டயட் தந்து, மருந்தும் தந்து ஆராய்ச்சி செய்யப்படவே, மூன்று மாதங்களில் டயட் எடுக்காதவரை விட பேலியோ டயட் எடுத்தவரிடையே, கேன்சர் நன்கு குறைந்துள்ளதை ஒரு பேப்பர் சுட்டிக்காட்டுகிறது.
பெண்களில் நான்கு கேன்சருக்கு முக்கிய காரணம், அதிக ஈஸ்ட்ரோஜன் சுரப்பு. அதிக ஈஸ்ட்ரோஜனுக்கு பல காரணங்கள் உண்டு. பிளாஸ்டிக்கில் சூடான உணவை வைத்தல், பிரிட்ஜில் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பாலிதீன் பைகளில் உணவுப்பொருட்கள், நீரை வைத்தால், பிளாஸ்டிக்கில் உள்ள Xeno-estrogens, parabens ஆகிய கெமிக்கல்கள், உடலில் நுழைந்து, ரத்த ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகப்படுத்தும். இதெல்லாம் விட முக்கியமானது, மாவுச்சத்து ஒவ்வாமை. என் அனுபவத்தில் பலரிடம் இதைப் பார்த்திருக்கிறேன். இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி, பழங்கள் மற்றும் ஏனைய கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து உணவுகள் பலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. அது இன்சுலின் சுரப்பை அதிகமாக்கி, சிலருக்கு அதனால் அரோமடேஸ் எனும் என்சைம் தூண்டப்பட்டு, அதிக ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி நடக்கும். அதனால் மார்பக எலிக்கட்டி எனப்படும் fibroadenoma, uterine fibroids, வரலாம். மற்றும் மாதவிடாய் நீண்ட நாட்கள் இருத்தல், அந்த நேரத்தில் மிக அதிக வலி, அதிக உதிரப்போக்கு, கர்ப்பம் தரித்தலில் பிரச்சினை வருகிறது. பேலியோ டயட் எடுக்கும் போது, இவற்றில் பல ரிவர்ஸ் ஆவதை கண்டிருக்கிறேன்.
இந்த லாஜிக் படி பார்த்தால் மார்பக, கர்ப்பப்பை, ஓவரி, என்டோமெட்ரியல் புற்றுநோய்களுக்கும் பேலியோ நல்ல பயன் தரலாம் என நினைக்கிறேன்.
நமது பேலியோ டயட்டில் உணவில் மற்றும் உடலில் உள்ள கொழுப்பு எரிந்து கீட்டோன் எனும் சிறிய எரிபொருள் கிடைக்கிறது. இதை கேன்சர் செல்கள் உபயோகப்படுத்த முடியாது. அதனால் கேன்சர் செல்லுக்கு எளிதில் சக்திக்கான எரிபொருள் கிடைக்காது. கீட்டோன்கள் சில கேன்சர் செல்கள் வளர்ச்சிக்கு எதிரானது என சில ஆய்வுகள் சொல்கின்றன. மேலும் கேன்சருக்கான ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபியால் நார்மல் செல்கள் பாதிக்கப்படுவதை கீட்டோன்கள் நன்றாக தடுக்கிறது.
பல நாடுகளில் கேன்சர் பேஷண்டிற்கு சிறந்த உணவுமுறை எதுவென்ற ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. பல கேன்சர் பேஷண்டுகள் ஒல்லியாக இருப்பதால், பேலியோ டயட் தந்தால் ஒல்லியாகி விடுவார்களோ என்ற அச்சத்தால், பரவலாக பரிந்துரைக்கப்படுவதில்லை.
பல கேன்சர்களின் ஆரம்பிப்பதே, மேலே சொன்னது போல நார்மல் செல்களில் உள்ள மைட்டோகாண்டிரியா பாதிப்பினால் தான். அதற்கு முதன்மை காரணம் மெட்டபாலிக் சிண்ட்ரோம் எனப் பார்த்தோம். பேலியோ மெட்டபாலிக் சிண்ட்ரோமை இல்லாமல் ஆக்குகிறது, மற்றும் கீட்டோன்கள் மைட்டோகாண்டிரியா பாதிப்பை சரி செய்ய உதவும். மேலும் பேலியோவில் உள்ள காய்கறிகளில் உள்ள Phytochemicals மைட்டோகாண்டிரியா பாதிப்பை சரி செய்ய உதவும்.
கேன்சர் இருப்பவர் என்ன செய்யலாம்? உடனடியாக பேலியோ டயட் ஆரம்பிக்கலாம். அத்துடன் கேன்சர் டாக்டர் சொல்லும் மருத்துவத்தை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும். ரேடியோதெரபி, கீமோதெரபிக்கு முன் ஐந்து நாட்கள் நீர் மட்டுமே எடுக்கும் விரதம் இருக்கவும். மருத்துவமனையில் இருக்கும் போது, முடிந்த வரை பேலியோ கடைபிடிக்க முடிந்தால் செய்யவும். எடை ஒரு பிரச்சினையில்லை. கேன்சர் சரியான பின், பேலியோ டயட்டை விட்டு விட்டால், எடை பழையபடி கூடி விடும்.
இதனால் கிடைக்கும் நன்மைகள்: எட்டு சைக்கிள் கீமோவில் கிடைக்கும் பலன், டயட் பாலோயருக்கு ஆறு சைக்கிளிலேயே கிடைக்கலாம். இந்த மாதிரி நடந்துள்ளது. பல சைட் எஃபக்டுகள் சுத்தமாக இருக்காது. நல்ல எனர்ஜி இருக்கும், வேலைக்கும் செல்லலாம்.
கடைசியாக, "டாக்டர் ரெட் மீட் எடுத்தா கேன்சர் வரும்னு சொல்றாங்களே. உண்மையா" எனும் கேள்விக்கு வருவோம். இது உண்மையென்றால் காட்டில் ஒரு புலி, சிங்கம், சிறுத்தை கூட உயிருடன் இருக்காது. இந்த 1970செய்தியை, உலக சுகாதார நிறுவனமே பின்னர் மறுத்து விட்டது. எஸ்கிமோக்கள் வெறும் இறைச்சி மட்டுமே உண்கின்றனர். செத்தா விட்டார்கள்?
2013ல் வந்த இன்னொரு EPIC எனும் ஆராய்ச்சியில் நான்கரை லட்சம் பேரில் ஆராய்ந்து பார்த்ததில், "சிகப்பிறைச்சி உண்பதால் கேன்சர் வரும் என்பது தவறு" என நிருபித்துள்ளனர்.