25/05/2025
… …
தைராய்டு பிரச்னை என்பது என்ன?
தைராய்டு சுரப்பி, கழுத்துப் பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும். இது சுரக்கும் ஹார்மோன்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தில் இருந்து இதயத்தின் ஆரோக்கியம் பேணுவது வரை மிகவும் முக்கியமானவை, அவசியமானவை. இந்த ஹார்மோன், இயல்புக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரந்தால், அதுதான் தைராய்டு பிரச்னை.
தைராய்டு வகைகள்!
1)ஹைப்போதைராய்டு (Hypothyroid) – தைராய்டு சுரப்பானது 0.5 mIU/ml-க்கு (milli International Units per milli litre) குறைவாக சுரப்பது.
2)ஹைப்பர்தைராய்டு (Hyperthyroid) – தைராய்டு சுரப்பானது 5 mIU/ml-க்கு அதிகமாகச் சுரப்பது.
3)ஸ்வெல்லிங் தைராய்டு (Swelling thyroid) – தைராய்டு சுரப்பி மிக மிக அதிகமாகச் சுரப்பதால், கழுத்துப் பகுதியின் ஓரிடத்தில் அல்லது முழுவதுமாக வீங்கிய நிலையில் காணப்படும்.
ஸ்கேன் அல்லது ஊசிமூலமாக கழுத்துப்பகுதியில் இருந்து நீர் எடுத்து இந்தப் பிரச்னைக்கான பரிசோதனையை மேற்கொண்டு, சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். இது மிக அரிதாக ஏற்படக்கூடிய பிரச்னை (ஹைப்போதைராய்டு மற்றும் ஹைப்பர்தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கும் கட்டி வர வாய்ப்பு உண்டு).
யார் யாருக்கெல்லாம் வரலாம்?
தாயின் கருவில் உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் எந்த வயதிலும் தைராய்டு பிரச்னை ஏற்படலாம். இது, ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு அதிகம் வர வாய்ப்பு இருக்கிறது. ஆண்களுக்கு உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி போன்றவற்றிலும்… பெண்களுக்கு உடல், மூளை வளர்ச்சி தொடங்கி பூப்படைவதில் சிக்கல், மாதவிடாய் பிரச்னைகள், கருவுறுதலில் சிக்கல் வரை, வயதாக ஆக தைராய்டின் பாதிப்பு ஆண்களைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கும்.
அறிகுறிகள்!
என்னவெல்லாம் பாதிப்புகள்?
கர்ப்பகாலத்தில் சில பெண்களுக்கு தைராய்டு சுரப்பில் மாற்றம் ஏற்படலாம். அப்போது அதற்கு முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சை எடுக்காவிட்டால், தாயை மட்டுமல்லாது உடல் எடையில் இருந்து மூளை வளர்ச்சிவரை கருவையும் பாதிக்கக்கூடும்.
பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயம் தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும். குழந்தையின் தைராய்டு சுரப்பு அதிகமாகவோ, குறைவாகவோ இருந்து, கவனித்து சிகிச்சையளிக்கத் தவறினால், குழந்தையின் உடல் வளர்ச்சியில் இருந்து மூளை வளர்ச்சி வரை அனைத்தும் பாதிக்கப்படும்.
பூப்பெய்தும் வயதில் உள்ள பெண் குழந்தைகளின் தைராய்டு சுரப்பு அப்நார்மலாக இருந்தால், அது பூப்படைவதில் சிக்கலை உண்டாக்கும்.
இளம்பெண்கள் தைராய்டால் பாதிக்கப்பட்டால், சுழற்சி மாறுவது, அதிக உதிரப்போக்கு என மாதவிடாயிலும் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
ஆண், பெண் இருபாலருக்கும் கரு உண்டாதலில் சிக்கலை ஏற்படுத்தும்.
வயதானவர்கள் தைராய்டு பிரச்னைக்கு உள்ளானால், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதயப் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளுக்கான வாய்ப்புகளுக்கு அது வாசலாக அமைந்துவிடும்.
ஏன் தைராய்டு?
ஒருவருக்கு தைராய்டு பிரச்னை ஏற்படுவதற்கான காரணம் இதுதான் என்பதை சரிவரக் கண்டுபிடிப்பது கஷ்டம். மரபு மற்றும் உடற்பருமனை பொதுக்காரணங்களாகச் சொல்லலாம் (தைராய்டு பிரச்னை ஏற்பட்டதால் உடல் எடை அதிகரித்துவிட்டதாக பலர் சொல்வார்கள். உண்மையில், உடல் எடை அதிகரித்ததால்தான் தைராய்டு பிரச்னை ஏற்பட்டிருக்கும்).
காசநோய்க்கு எடுத்துக்கொள்ளும் சில மருந்துகள் மற்றும் லித்தியம் போன்ற டிரக் எடுத்துக்கொள்வதும் தைராய்டு பிரச்னை ஏற்படுவதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
தைராய்டு டெஸ்ட்!
ஒருவரின் ரத்தப் பரிசோத னையிலேயே, அவருக்கு தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதைக் கண்டறிந்துவிடலாம். இதைக் கட்டாயப் பரிசோதனையாகக் கொண்டு, 1 – 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்துகொள்வது அவசியம். தைராய்டு பரிசோதனையைப் பொறுத்தவரையில் TSH (Thyroid Stimulating Hormone), T3, T4 போன்ற சோதனை முறைகள் உள்ளன. இதில் T3, T4 சோதனைகளின் முடிவுகள் இடத்துக்கு ஏற்ப மாறக்கூடும். எனவே, TSH சோதனை முறை சிறந்தது. இதனை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் எடுப்பது நல்லது (கட்டாயம் கிடையாது. T3, T4 பரிசோதனைகளை, வெறும் வயிற்றில்தான் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்).
இன்று கர்ப்பிணிப் பெண்களுக்கான பரிசோதனையில் தைராய்டு முதன்மையாக மேற்கொள்ளப் படுவது வரவேற்கத்தக்கது. இதனால் தாயை மட்டுமின்றி, பிறக்கப்போகும் குழந்தையையும் தைராய்டு பாதிப்பில் இருந்து காக்கமுடியும்.
மருந்து, உணவு, சிகிச்சை!
பரிசோதனையில் தைராய்டு சுரப்பானது இயல்பைவிட அதிகமாக அல்லது குறைவாக இருந்தால், அதற்காக மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை அவர் குறிப்பிடும் கால அளவுவரை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். எடுக்காமல் விட்டாலோ, இடையில் நிறுத்தினாலோ பாதிப்புகள் நிச்சயம்.
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டுக்கு உப்பில் உள்ள அயோடின் நேரடியாகத் துணைபுரியவல்லது. தைராய்டு ஹார்மோன்களின் அளவு சரியான விகிதத்தில் இருக்க ஒருவர் தினமும் 1 – 2 டீஸ்பூன் அயோடின் உப்பை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனை உணவு கொதிக்கும்போதோ, வேகவைக் கும்போதோ பயன்படுத்துவதற்குப் பதிலாக, அதை அடுப்பில் இருந்து இறக்கும்போது அல்லது இறக்கிய பிறகு கலந்து சாப்பிடுவது நல்லது.
கடல் உணவான மீன்போன்றவற்றிலும் தைராய்டு சுரப் பியின் சீரான செயல்பாட்டுக்குத் தேவையான அயோடின் உள்ளது.
தைராய்டு பாதிப்புக்கு உள்ளான பெண் கருவுறும்போது, கர்ப்பகாலம் முழுமைக்குமான தைராய்டு சிகிச்சையை மிக முக்கியத்துவம்கொடுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வராமல் தடுக்க!
ஏற்கெனவே சொன்னது போல, தைராய்டு பிரச்னைக்கு இதுதான் காரணம் என்று உறுதியிட்டுச் சொல்ல முடியாது என்றாலும், கீழ்காணும் விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பதன் மூலம் அதைத் தவிர்க்கலாம்.
உடலுக்குத் தேவையான சரிவிகித உணவை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தரமான அயோடின் உப்பை தினமும் 1 – 2 டீஸ்பூன் சேர்த்துக்கொள்ள வேண்டும்..
மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை அடிக்கடி சேர்க்கலாம்.
உயரத்துக்கு ஏற்றவாறு உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
தேவையான உறக்கம், மிதமான உடற்பயிற்சி என ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்.
1 – 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிச்சயமாக தைராய்டு பரிசோதனை செய்துகொள்ளவும்.
“மொத்தத்தில், தைராய்டு கொடிய நோய் இல்லை. ஆனால், காலம் கடத்தாத சிகிச்சை அவசியம். ஒருவேளை தவறினால், அதன் விளைவுகளை, குறிப்பாகப் பெண்கள் அதிகமாகச் சந்திக்கவேண்டிவரும். தைராய்டு பற்றிய விழிப்பு உணர்வும் துரித செயல்பாடும் இணையும்போது… விரட்டலாம் அந்தப் பிரச்னையை எளிதாக!’’
– ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டவல்லவை