18/04/2024
"எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்" என்பதுபோல முகம்தான் ஒவ்வோரு தனிநபரின் அடையாளமாகும்.
அந்த அடையாளத்தில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துவது முகப்பருவே.
முகப்பரு ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்கள்...
• உடலுக்கு தேவைக்கு குறைவான அளவு தண்ணீர் பருகுவதால், உடலில் நீர்ச்சத்து குறைவதால் தோலின் நீர்ப்பதம் குறையும்போது முகப்பருக்கள் உண்டாகிறது.
• பதின்பருவத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் அதிகளவில் ஏற்படுகிறது.
• முகத்தில் அதிக நேரம் சூரிய ஒளி நேரடியாக படுதல்.
• அதிகமான வேதிப்பொருட்கள் கலப்புள்ள அழகியல் சாதனங்கள், சோப்புகள் பயன்படுத்துவது.
• மன அழுத்தம், தூக்கமின்மை, அதிகமான செல்போன், கனிணியை முகத்தின் அருகில் வைத்து பயன்படுத்துதல்.
• வலி நிவாரணி மருந்துகள், ஹார்மோன் மாத்திரைகள், ஸ்டிராய்டு மருந்துகளை அடிக்கடி அதிகமாக உட்கொள்ளுவது,
முகப்பரு யாருக்கெல்லாம் உண்டாகும்...
• பதின்பருவ ஆண்கள், பெண்கள்.
• முகத்தில் எண்ணெய்பசை சுரப்பு அதிகமுள்ளவர்கள்,
• ஹார்மோன் மற்றும் மாதவிடாய் பிரச்சினை உள்ள பெண்கள்,
• அடிக்கடி அழகியல் சாதனங்களை மாற்றி மாற்றி உபயோகித்தல்,
• அதிகநேரம் வெயில் மற்றும் தூசியில் அலைபவர்கள்,செரிமானம், மலச்சிக்கல் பிரச்சினைகள் உள்ளவர்கள்.
முகப்பருவிருந்து தற்காப்பு மற்றும் எளிய சிகிட்சை முறைகள்...
தோலுக்கு மிகச்சிறந்த ஊட்டச்சத்து வியர்வையாகும்.
அதிகமாக வியர்க்கும்பொழுது தோலிலுள்ள நுண்துளைகள் வரிவடைவதால் தோல் புத்துணர்வு பெறும், மேலும் உடலின் வெப்பம் குறையும், பித்தம் சமநிலைப்படுத்தப்படும்.
அதிகமாக தண்ணீர், நீர்ச்சத்துள்ள பழங்கள், பச்சைக்காய்கறிகள் உண்பதால் உடலில் நீர்ச்சத்தின் அளவு சமநிலையில் இருக்கும். இதனால் வியர்வை அதிகமாக சுரப்பதால், உடலின் மேற்பரப்பில் உண்டாகும் எண்ணெய்பசை வெளியேற்றப்படுவதால் தோல் பொலிவு பெறும்.
• வேதிப்பொருட்கள் கலப்பு குறைவாக உள்ள (அ) முற்றிலும் இயற்கையான அழகியல் பொருட்களை உபயோகப்படுத்துவது முகப்பருவை கட்டுப்படுத்தும்.
• அடிக்கடி முகம் கழுவுவது முகப்பருவிலிருந்து தற்காக்க சிறந்த வழியாகும்.
• "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பதற்கேற்ப செரிமான மண்டலத்தை சீராக வைத்திருப்பதன்மூலம் மகப்பொலிவை பாதுகாக்கலாம்.
• சீரான இடைவெளியில் உடலில் பேதி (ம) வாந்தி போன்ற நச்சுநீக்க( Detoxification) செயல்முறைகளுக்கு சித்த மருத்துவ மருந்துகள் மூலம் செரிமான மண்டலத்தை தூய்மையாக்கி தோலுக்கு சீரான இரத்த ஓட்டத்தை அளித்து தோலை பொலிவுடன் வைத்திருக்கும்.