18/09/2024
இன்னும் ஐந்து , பத்து ஆண்டுகளில், எங்கள் பள்ளி தான் அகண்ட அறைகளைக் கொண்டது, இதனால் உங்கள் குழந்தைகளுக்கு முதல் பெஞ்சில் அமர்ந்து படிக்கும் வாய்ப்பை வழங்குகிறோம். எனவே எங்கள் பள்ளியை தேர்ந்தெடுங்கள் என்று விளம்பரம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சாட்சாத் அந்த பரம்பொருளான மொபைல் போனின் கிருபையால், ஒரு வகுப்பில் 100 பிள்ளைகள் என்றால் 50 பிள்ளைகளுக்கு மூக்கு கண்ணாடி போட்டால்தான் தூரத்தில் இருக்கும் கரும் பலகையின் எழுத்துக்கள் தெரியக் கூடும். இதற்கு கணித பாடத்திற்கு, உடற்பயிற்சி பாடக் காலத்தை கடன் வாங்கும் பள்ளிகளும் காரணமா கிறார்கள். ஏற்கனவே தாய்வான், சிங்கப்பூர், சைனா போன்ற நாடுகளில் மதிய உணவு இடைவேளையில் வகுப்பறைகளை பூட்டி வைப்பது உறுதியாக பின்பற்றப்படுகிறது. ஏனென்றால் சூரிய ஒளி நம் மீது பட்டால், கண்பார்வையை குறைக்கும், மைனஸ் பவர் குறையும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அதிகமாக 2 மணி நேரம், குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் என்று வெயிலில் நிற்க தேவை இல்லை. சாதாரணமாக கூட்டு விளையாட்டு, தோட்ட பராமரிப்பு, ஓட்ட பந்தயம், ஷட்டில் காக், பூப்பந்து என்று ஏதாவது ஒரு மகிழ்ச்சி கொடுக்கும் செயலை செய்வதே போதுமான நன்மை கொடுக்கும். இதெல்லாம் ஏற்கனவே கிடைக்கும் கிராமப்புறங்களில் கூட, மயோபியா என்னும் மைனஸ் பவர் அதிகரித்து வருவது உள்ளபடியே சிகிச்சையின் தேவையையும் சேர்த்து வலியுறுத்துகிறது. ஒரு வருடத்திற்குள்,ஒரு பள்ளி மாணவருக்கு இருந்த -2.50 என்ற பவரில் இருந்து -3.25 என்று கிட்டத்தட்ட 1 பவர் கூடியிருந்தால் அவருக்கு குறைந்த அளவு அட்ரோபின் (low dose atropine) சொட்டு மருந்து, 1 சொட்டு ஒவ்வொரு இரவும் என்று இரண்டு வருடங்களாவது தொடர வேண்டும். இது 95% கண்பவர் அதிகரிப்பதை குறைப்பதாக ஏராளமாக நிரூபிக்கப்பட்டு இருந்தாலும். தற்போது நமது தமிழ்நாட்டில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையிலும் 150 குழந்தைகளுக்கு மருந்து கொடுத்ததில், 80 குழந்தைகளுக்கு தொடர்ந்து பெற்றோர்கள் கவனத்துடன் மருந்தை கொடுத்து வருகிறார்கள். Atropine என்பது புதிய மருந்தல்ல, ஏற்கனவே 3000 வருடங்களாக ஏதோ ஒரு வடிவத்தில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதன் செலவு 40 நாட்களுக்கு , ரூபாய் 200 தொடுகிறது. ஆனாலும் இதில் விடுபட்ட சரி பாதியான 70 குழந்தைகளுக்கு, பெற்றோரின் பொருளாதாரம் உட்பட பல்வேறு காரணங்களால் சிகிச்சை கிடைக்கவில்லை. மேலும் இந்த மருந்து ஐந்திலிருந்து பத்து வயதுக்குள்ளேயே மைனஸ் வருபவர்களுக்கும், - 3 என்ற அளவை விட பவர் ஏறிக்கொண்டே செல்பவர்களுக்கும் மிகுந்த 96% பயனளிப்பதாக, மீண்டும் அரவிந்த் மருத்துவமனை மூலம் செய்யப்பட்ட இந்த ஆய்வுகள் உறுதி செய்கின்றன. MCL என்ற MYOPIA CONTROL LENSES பொருத்தப்பட்ட கண்ணாடிகளும் உதவிகரமாக இருக்கின்றன. இவை 7000 ரூபாய்( -1 to -3) முதல் தொடங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.LOW DOSE ATROPINE மற்றும் MYOPIA CONTROL LENSES என்கின்ற சிகிச்சையை, கடந்த இரண்டு வருடங்களாக, நமது கிளினிக்கிலும் தொடர்ந்து கொடுத்து வருகிறேன். இதில் பாதி அளவு பெற்றோர்கள், தினம் ஒரு சொட்டு என்பது தங்கள் பிள்ளைகளின் வருங்காலத்தில் பவர் ஏறாமலும், மேலும் retinal detachment, cataract , glaucoma, macular degeneration ஆகிய அதிக பவரால் வரும் கண்ணின் நரம்பு மற்றும் கண்புரை நோய்களை பாதியாக குறைக்கும் என்பதை உணர்ந்து கொடுத்து வருகின்றனர். அரவிந்த் கண் மருத்துவமனையிலும் தொடர்ந்து எங்களைப் போலவே இந்த மருந்துகளை பயன்படுத்த சொல்லி பெற்றோர்களை போன் மூலம் அழைத்தபடி உள்ளனர். இதனால் நாம் மட்டும் கரடியாக கத்திக் கொண்டிருக்கிறோமோ என்ற ஐயப்பாடு நீங்கியது. இந்த மருந்து என்பது குழந்தைகளுக்கு உகந்ததா, இதை அவர்களால் தொடர்ந்து உபயோகிக்க முடிகிறதா என்று கண் மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர்கள் கண்காணிப்பில் தான் வழங்குவார்கள். மேலும் சில குழந்தைகளுக்கு சாதாரண கண்ணாடி என்பதே பவரை அதிகரிக்கும் பிரச்சனை உண்டு பண்ணுவதால், அவர்களுக்கு MCL என்பதை கண் மருத்துவர்கள் பரிந்துரை செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். இதனோடே நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்.
1. ஒரு மணி நேர சூரிய ஒளி உடலில் பரவுவது.
2. மொபைல் போன்களில் இருந்து டிவி அல்லது லேப்டாப் ஆகியவற்றை இணைத்து பயன்படுத்துவது.
3. ஒவ்வொரு 20 நிமிட படிப்பு அல்லது வேலைக்குப் பிறகு ஒரு ரவுண்டு நடந்து விட்டு வந்த தொடர்வது. பொழுதுபோக்குக்காக ரிலீஸ் பார்ப்பவர்களுக்கும் இது உபயோகப்படும்.
4. தூங்குவதற்கு எட்டு மணி நேரத்தை ஒதுக்குவது, ஒரு மணி நேரம் முன்பாக டிஜிட்டல் டிவைஸ்களை தவிர்ப்பது.
5. உட்கார்ந்து படிக்கும் போது முதுகு, கைகள் கழுத்து, கணினி அல்லது புத்தகம் என்பது நேராக இருப்பது.
6. படுத்துக்கொண்டே இருட்டில் மொபைலை பார்ப்பதை விட நம் கண்ணை நாமே குத்திக் கொள்ளலாம்.
இதையெல்லாம் செய்வதற்கு நல்ல உடல் பலமும், தெளிவான மனதும் வேண்டும். தேவையில்லாத கவலைகளை மனதில் இருந்து அகற்றி, செல்போன் என்பதை கவலைகளுக்கு மருந்தாக உபயோகப்படுத்தாமல் இருந்தால் எல்லாம் நலமே.
Dr. சரயு காயத்திரி ,
கண் மருத்துவர்,
திருவண்ணாமலை.