07/09/2020
அச்சம் தவிர் !
* * *
கொரோனா !
Covid - 19
*-*-*-*-*-*-*
RT- PCR என்று அறியப்படும் சோதனை மூலம் கொரோனா தொற்றை உறுதி செய்தபிறகுதான் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது முழு உண்மை அல்ல. ஏனெனில், 60- முதல் 70% நபர்களையே இந்தச் சோதனையால் கண்டுபிடிக்க இயல்கிறது. டெஸ்ட் நெகட்டிவ் என அறிவிக்கப்பட்டு நோய்த்துயர் உள்ளவர்கள் அடுத்த கட்டமாக C.T. ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பெரும் விழுக்காட்டினர் கொரோனா தொற்றுப் பாதிப்பு ஆதாரங்கள் தங்கள் நுரையீரல் படங்களில் உள்ளதை அறிந்து உரிய மருத்துவத்தை உடனடியாக மேற்கொண்டு நோய் மீண்டு நலம் பெற்றிருக்கிறார்கள்.
எல்லா நோய்களும் சோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பதில்லை.
கும்பகோணம், காஞ்சிபுரம் மற்றும் சைதாப்பேட்டை பொன்ற ஊர்களில் இடுப்பில் நெறி (Lymph Node) வீக்கம் , அல்லது ஒற்றைக் காலில் இலேசான வீக்கத்துடன் காய்ச்சல் கண்டால் அது யானைக்கால் ( Filariasis) நோய்தான் என்பது 99% உண்மையோ, அதைப் போல இன்றைய கொரோனா உலகத் தொற்றுநோய்ச் சூழலில் ஒவ்வொரு காய்ச்சலும், தொண்டை அழற்சியும், கடுமையான உடல் வலியும் கொண்ட கூட்டு அறிகுறிகள் கொரொனாதான் என்று யூகித்து மருத்துவத்தைப் பரிந்துரைப்பதில் எவ்விதத் தவறுமில்லை. ஆராய்ச்சியாளர்களின் பதிவுகளுக்குப் பாதகம் விளைவிக்குமேயொழிய மனிதநலம் பேணும் முதல் நடவடிக்கையாகவே அது அமையும்.
நோய் கண்ட எல்லோருக்கும் மணம் அறியும் தன்மையில் பாதிப்பு ஏற்படுவதில்லை. அடிக்கடி சளி பிடித்து நாசிச் சவ்வுகள் தடித்தவர்கள் வாசனை இழப்பை உணர்வதில்லை. மிக மென்மையான நாசிச் சவ்வு உள்ளவர்கள் வாசனை இழப்பைக் கொரோனா தொற்றில் உணர்ந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.
எனவே, இக்காலகட்டத்தில் காய்ச்சல் என்றாலே அது கொரோனாவாய் இருக்க வாய்ப்புகளே மிகுதி என்று நம்பி முதல் நாள் தொடங்கியே பல மருத்துவர்கள் மருந்துகள் அளிக்கத் தொடங்கி நலம் பேணுகின்றனர்.
மருந்துகள்தான் இல்லையே என்ற வியப்பு இயல்பான ஒரு ஏளனத்துடன் பலருக்கு ஏற்படலாம். உண்மை. ஆனால், வைரசின் மேல்பூச்சைத் தொட்டு அழிக்க மருந்துகள் இல்லையே தவிர அவை நம் நாசி, தொண்டை, சுவாசக் குழல் ஆகிவற்றின் மேல் பூச்சை அணுகிப் படிந்து வளர்வதைக் கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளன.
தற்போது பயன்பாட்டில் உள்ள அசித்ரோமைசின் அல்லது டாக்சிசைக்ளின், விட்டமின் சி, சிங்க், விட்டமின் D, பேராசிட்டமால், நீராவி வேது பிடித்தல், மஞ்சள் கலந்த மிதச்சூடுள்ள பால் ஆகியவை இந்த ஒரு வேலையைக் கச்சிதமாகச் செய்து 95% விழுக்காட்டினரை நோயிலிருந்து நலம் பெறச் செய்கின்றன.
எஞ்சிய 5% பேருக்கு மட்டுமே அடுத்த நிலை உயர்முறை மருத்துவம் தேவைப்படுகிறது.
மக்கள் தொகை மிகுதியும், வறுமையும் மிக்க ஒரு நாட்டில் மக்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள அரசு அனுமதிக்கவேண்டும்.
அச்சமூட்டித் தடுக்கக் கூடாது.
காய்ச்சல் கண்டு சோதனை முடிவு வருவதற்குள் மருந்து உட்கொள்ளுதல் நோயை வளரவைக்கும் என்பதும் ஒரு மூடநம்பிக்கை.
உயர்நிலை மருத்துவத் தேவைகளான வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், பிளாஸ்மா செலுத்துதல் போன்றவற்றிக்கே நோய் பற்றிய அழுத்தமான RT PCR, C.T. Scan , Blood Culture போன்ற ஆதாரங்கள் அவசியம்.
உடலில் ஏற்கனவே பிற நாள்பட்ட நோயுள்ளவர்களும் உரிய மருத்துவர்களின் மேற்பார்வையிலும், ஆலோசனைகளிலும் நலம் மீள நல்வாய்ப்புகள் ஏராளம்.
பலருக்கு ஏழுநாள் தொடர் சிகிட்சையில் சிறந்த பலன் கிட்டியிருக்கிறது. சிறு, சிறு பின் விளைவுகளுக்கும் தனிமைப்படுத்தப்படும் எஞ்சிய இரு வாரங்கள் வீட்டிலிருந்தே உட்கொள்ளும்படியான பல மருந்துகள் உள்ளன.
எனவே, அச்சம் தவிர்ப்போம். நோய் அறிகுறி தென்பட்டால் உடனே தனிமைப்படுத்திக்கொண்டு அடுத்தவர் எவர்க்கும் நோய் பரவாமல் தடுப்போம்.
முகக் கவசம், கை கழுவுதல், மக்கள் கூடுமிடங்களை இயன்றவரை தவிர்த்தல், அல்லது பாதுகாப்பான ஓர் இடவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றை இன்னும் சில மாதங்களுக்கு நம் வாழ்க்கை முறையாக்குவோம்.
எல்லாம் கடந்து போகும் ! நலமே விளைக !