23/05/2025
ஒற்றுமையே எங்களது பலம்
நூறு ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பலமான தொழிற்சங்கங்கமாகிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஒற்றுமை, சக்தி, சிறந்த தலைமைத்துவம், கிளைச் சங்கங்களுக்கிடையிலான உறுதியான பிணைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நிலைத்திருக்கிறது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகரால் தற்போது இடம்பெற்று வரும் அதிகார துஷ்பிரயோகங்கள், அடக்குமுறைகள், ஊழல்கள் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுக்க முற்படும் வைத்தியர்கள் மிரட்டல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களது ஒற்றுமையை குழப்பும் வகையில் பெரிய சதித்திட்டங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த மாதிரியான பயமுறுத்தல்கள், வைத்தியர்களின் சுதந்திரமான பணிசெயல்பாடுகளையும், நோயாளிகளுக்கான சேவைகளையும் பாதிக்கும் என்பதை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உணர்ந்துள்ளது.
வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக பக்கச்சார்பற்ற விசாரணையை நாடும் வைத்தியர்களுக்கு, வைத்தியசாலையில் உள்ள சில ஊழியர்கள், முகப்புத்தகத்தில் உருவாக்கப்பட்ட போலி கணக்குகள் மற்றும் அனாமதேய தொலைபேசி அழைப்புகள் மூலமாக மிரட்டப்படுவது, இன்று இங்கே வைத்தியர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களைக் காட்டும் வெளிப்படையான சாட்சியாகும்.
இந்த நேரத்தில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீதான சுயாதீனமான, பக்கச்சார்பற்ற விசாரணையை வலியுறுத்தி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்த அமைதியான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் 100க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் பங்குபற்றுதலுடன் 2025.05.22 ம் திகதி வியாழக்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது.
பல அச்சுறுத்தல்களையும் தாண்டி நியாயத்திற்காக 50க்கும் மேற்பட்ட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களுடன், கல்முனை மற்றும் அம்பாறை சுகாதார மாவட்டங்களிலுள்ள சகோதர கிளைச் சங்கங்களிலும் இருந்து வந்த வைத்தியர்கள் இணைந்து இந்த அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வெற்றிகரமான ஆர்ப்பாட்டம், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களுக்காக முழு நாடும் துணை நிற்கிறது என்பதை விளக்கும் ஒரு வரலாற்று நிகழ்வாக அமைந்தது.
விசாரணை சாமதம் – நீதி எங்கே?
2021 ஆம் ஆண்டு, தற்போதைய வைத்திய அத்தியட்சகர் மீது நிதி முறைகேடு குறித்த புகார்கள் சுகாதார அமைச்சுக்கு அனுப்பப்பட்டன. அதற்குப் பிறகு மூன்றாண்டுகள் கடந்தும், அந்த விசாரணைகள் முடிவுபெறவில்லை. விசாரணைகள் முடிவடையாமல் அதே நபர், 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டார்.
பொதுச் சேவை ஆணைக்குழு பலமுறை விசாரணைகளை விரைவுபடுத்தி விசாரணை அறிக்கையை தருமாறு சுகாதார அமைச்சிடம் கோரியிருந்த போதிலும், இதுவரை விசாரணை முடிவுகள் வெளியிடப்படவோ, தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவோ இல்லை.
இந்த அதிகாரி மீண்டும் இங்கு நியமிக்கப்பட்ட பிறகு, நிர்வாக சீர்கேடுகள், பழிவாங்கல் நடவடிக்கைகள் உள்ளிட்ட முறைமையற்ற செயல்கள் நடைபெற்றுள்ளதாக வைத்தியர்கள் புகார் கூறியுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்ட போதும், இதுவரை எந்தவிதமான நேர்மையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில், தற்போது உள்ள வைத்திய அத்தியட்சகரை இடமாற்றம் செய்து, அவரது தலையீடு இல்லாமல் சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை உடனடியாக ஆரம்பிக்குமாறு வைத்தியர்கள் வலியுறுத்துகிறார்கள்.