06/01/2025
கடந்த மாதத்தில் வந்த, 'HMP வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கியுள்ளது' என்ற தகவல் உலக நாடுகளை சற்று பீதியடைய வைத்தது. உடனடியாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களது நாடுகளில் தீவிர கண்காணிப்புகளை முடுக்கிவிட்டது.
இருந்தும், இப்போது வரை வந்த தகவல்களின் படி, இந்தியாவில் கர்நாடகாவில் 3 மாதக் குழந்தை ஒன்றும், 8 மாதக் குழந்தை ஒன்றும், குஜராத்தில் 2 மாதக் குழந்தை ஒன்றும் HMP வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
'மறுபடியும் முதல்ல இருந்தா?' என்பது மாதிரி, மீண்டும் ஒரு வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளது.
Human Metapneumovirus என்பதன் சுருக்கமே HMP வைரஸ். இது ஒரு சுவாசப்பாதையைத் தாக்கும் தொற்று நோயாகும்.
இந்த வைரஸ் உலகிற்கு புதிது அல்ல. இது கிட்டதட்ட 50 - 60 ஆண்டுகளாகவே உலகத்தில் இருந்து வருகிறது.
2001-ம் ஆண்டு, மருத்துவ ஆராய்ச்சியில் நெதர்லாந்தில் இந்த வைரஸ் முதன்முதலாக அடையாளம் காணப்பட்டது.
பொதுவாகவே, இந்த வைரஸ் குளிர்காலங்களில் அதிகம் பரவும் தன்மையுடையது.
இது ஏனைய குளிர்கால வைரஸ்களான இன்ஃபளூயன்சா, ஆர்.எஸ் வி ஆகியவற்றுடன் சேர்ந்து பரவும் தன்மை கொண்டது.
யார் யார் பாதிக்கப்படுவார்கள்?
பொதுவாக அனைவருக்கும் சாதாரண தொற்றாகவே கடந்து செல்லும். எனினும் 5 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகள், அதிலும், குறிப்பாக ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள், உடல் எடை குறைவான குழந்தைகள், பிறவிக் குறைபாடுள்ள குழந்தைகளுக்களுக்கு இந்த நோய் சற்று தீவிரத்துடன் வெளிப்படலாம். இவர்களுக்கு சரியான நேரத்தில், சரியான சிகிச்சை கொடுத்தாலே சரி செய்துவிடலாம்.
அபாய அறிகுறிகளான மூச்சுத் திணறல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவற்றை சரியாக அறிந்து சிகிச்சை வழங்க வேண்டும்.
முதியவர்கள், இதய நோயாளிகள், புற்றுநோயாளிகள், எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்தவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை செய்தவர்கள் இந்தத் தொற்றினால் பாதிக்கப்படும் போது சற்று தீவிரத்துடன் வெளிப்படலாம். இவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை.
மூச்சு திணறல், சுவாசக் கோளாறு போன்ற சுவாசம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படலாம்.
இது ஒரு தொற்று நோய். பாதிக்கப்பட்டவர்களின் இருமல், தும்மல் மூலம் பரவும். அவர்களுடைய எச்சில், சளி ஆகியவை எங்கேயாவது தெறித்திருந்தால், அதை தெரியாமல் இன்னொருவர் தொட நேரிடும்போதோ அல்லது கைகளில் படும்போதோ, இந்த நோய் தொற்று பரவும்.
குழந்தைகளை எப்படி தாக்குகிறது?
இந்த வைரஸ் உலகில் பல ஆண்டுகளாக இருந்து வருவதால், இது இந்தியாவிலும் முன்னரே இருந்திருக்கிறது. ஏன், இப்போது கூட அறிகுறிகள் இல்லாமலும், நமக்கு தெரியாமலும் இருந்து வரலாம். குளிர்கால சீதோஷண் நிலையாக இருப்பதால் குழந்தைகளுக்கு தற்போது பரவி இருக்கலாம். மற்றபடி இந்தியா இப்போது தான் ஹெச்எம்பிவி தொற்றை சந்திக்கிறது என்பது வதந்தியாகும்.
எப்படி கண்டுபிடிக்கப்படுகிறது?
RT-PCR
Nucleic Acid Amplification Test (NAAT)
Immunofluorescence or Enzyme Immunoassay
ஆகிய மூன்று முறைகள் மூலம் இந்தத் தொற்றை கண்டுபிடிக்கலாம்.
இன்னொரு கொரோனாவா இது?
HMP வைரஸ் கொரோனா மாதிரி பெருந்தொற்றாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.
கொரோனா வைரஸ் அப்போது புதிதாக கண்டிபிடிக்கப்பட்ட, உருவான வைரஸ். அதற்கான எதிர்ப்பு சக்தி அப்போது மனிதர்களிடம் இல்லை. அதனால், அந்த வைரஸ் பெருந்தொற்றாக மாறி, உலக முழுவதும் பரவியது. ஆனால், HMP வைரஸ் உலகில் பல வருடங்களாக இருந்து வரும் வைரஸாகும். இந்த வைரஸுக்கான எதிர்ப்பு சக்தியை மனிதர்களிடம் ஏற்கனவே இருக்கிறது.இது புதிய வைரஸ் அல்ல. அதனால், இப்போதைக்கு இந்த தொற்று பெரும்தொற்றாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் கிடையாது.
மேலும், இதுகுறித்து மக்கள் பயப்பட தேவையில்லை.
- அகஸ்தியம் siddha ayurvedic care -
Dr.S.Sathish