21/04/2026
⭕️ECZEMA (எக்ஸிமா)இது வெறும் வறண்ட அல்லது உணர்திறன் கொண்ட (Sensitive) சருமம் மட்டுமல்ல.
🔸️இது உடலின் உட்புற மற்றும் வெளிப்புறச் சூழலில் ஏற்படும் மாற்றங்களால் உண்டாகும் ஒரு வகை நீண்ட கால தோல் அழற்சி (Dermatitis) ஆகும். இது அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதிக்கக்கூடியது.
🔸️எக்ஸிமா உள்ள பலருக்கு தொடர்ச்சியான அரிப்பு, தோல் வலி, தூக்கமின்மை மற்றும் ஒருவித சங்கடமான உணர்வு ஏற்படுகிறது.
🔸️இது பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே தொடங்குகிறது, ஆனால் முதிர்வயது வரை நீடிக்கலாம் அல்லது வாழ்க்கையின் பிற்பகுதியிலும் தோன்றலாம்.
❗️எக்ஸிமாவின் (Eczema) அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடலாம்.
⭕️பொதுவான அறிகுறிகள் (Common Symptoms)
1️⃣கடுமையான அரிப்பு (Intense Itching): இதுவே எக்ஸிமாவின் முதன்மை அறிகுறி. குறிப்பாக இரவு நேரங்களில் அரிப்பு மிக அதிகமாக இருக்கும்.
2️⃣சிவப்பு/கபில தடிப்புகள் (Red to Brownish Patches): கைகள், கால்கள், கணுக்கால், மணிக்கட்டு, கழுத்து மற்றும் முழங்கால்களின் உட்பகுதிகளில் சிவப்பு அல்லது சாம்பல் நிறத்தில் தடிப்புகள் ஏற்படும்.
3️⃣உலர்ந்த மற்றும் செதில் போன்ற தோல் (Dry, Scaly Skin): தோல் அதிக வறட்சியுடன் காணப்படும். சில நேரங்களில் மீன் செதில்கள் போல தோல் உரியலாம்.
4️⃣சிறிய கொப்புளங்கள் (Small Bumps): தோலில் சிறிய கொப்புளங்கள் தோன்றி, அரிக்கும் போது அதிலிருந்து நீர் வடியலாம்.
5️⃣தடித்த தோல் (Thickened Skin): நீண்ட நாட்களாக அரிப்பு இருக்கும் இடத்தில் தோல் தடித்து, பட்டை போல (Leathery skin) மாறக்கூடும்.
6️⃣வீக்கம் (Swelling): சொறிவதால் அந்த இடம் சிவந்து வீக்கமடையலாம்.
❗️சில வேளைகளில் சாதாரணமாக இருக்கும் ,சில நேரங்களில் , தோலில் கொப்புளங்கள் ஏற்படலாம், வெடிப்புகள் உண்டாகலாம் அல்லது நீர் வடியலாம். இது 'Flare-ups' எனப்படும் சுழற்சி முறையில் வரும்; அதாவது, சில காலத்திற்கு இதன் அறிகுறிகள் மிகவும் தீவிரமாக இருக்கும், பிறகு தானாகவே குறைந்துவிடும்.
‼️இது ஒரு தொற்று நோய் அல்ல (ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவாது), இருப்பினும் இது உடல் ரீதியான அசௌகரியத்தைத் தருவது மட்டுமல்லாமல், மன நலத்தையும் பாதிக்கக்கூடியது.😒
⭕️எக்ஸிமா (Eczema) ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இது பொதுவாக ஒரு காரணியால் மட்டும் வருவதில்லை, மாறாக உங்கள் உடலின் எதிர்ப்பு சக்தி மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவையால் ஏற்படுகிறது.
மிக முக்கியமான காரணங்கள்:
1️⃣ மரபணு காரணங்கள் (Genetics)❗️
உங்கள் குடும்பத்தில் (பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்கள்) யாருக்காவது எக்ஸிமா, ஆஸ்துமா (Asthma) ஒவ்வாமை நாசியழற்சி (Allergic Rhinitis /Hay fever-தும்மல்) ,உணவு ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் இருந்தால், உங்களுக்கு எக்ஸிமா வர அதிக வாய்ப்பு உள்ளது. சிலருக்குத் தோலைப் பாதுகாக்கும் பிலாக்ரின் (Filaggrin) என்ற புரதம் குறைவாக இருப்பது ஒரு காரணமாகும்.
2️⃣பலவீனமான தோல் பாதுகாப்புஅடுக்கு❗️
ஆரோக்கியமான தோல் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, கிருமிகளிடமிருந்து பாதுகாக்கும். ஆனால் எக்ஸிமா உள்ளவர்களுக்கு இந்த "பாதுகாப்பு சுவர்" பலவீனமாக இருக்கும். இதனால் தோல் விரைவில் வறண்டு, வெளிப்புறத் தூசிகள் மற்றும் கிருமிகள் எளிதில் உள்ளே நுழைந்து எரிச்சலை உண்டாக்குகின்றன.
3️⃣நோய் எதிர்ப்பு மண்டலத்தின் (Immune System) அதிகப்படியான எதிர்வினை ❗️
உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் மிகவும் உணர்திறன் கொண்டதாக மாறும் போது, அது சிறிய தூசு அல்லது சவர்க்காரம் போன்ற சாதாரண பொருட்களையும் "எதிரி" என்று நினைத்துத் தாக்குகிறது. இதனால் தோலில் வீக்கம் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது.
4️⃣சுற்றுச்சூழல் தூண்டிகள் (Environmental Triggers)❗️
சுற்றுப்புறத்தில் உள்ள சில பொருட்கள் எக்ஸிமாவைத் திடீரெனத் தூண்டலாம்:
▪️இரசாயனங்கள்: சவர்க்காரம், சலவைத்தூள், ஷாம்பு மற்றும் நறுமண திரவியங்கள் (Perfumes).
▪️ஒவ்வாமை காரணிகள்: காற்றில் உள்ள மகரந்தம், தூசுப் பூச்சிகள் (Dust mites), மற்றும் செல்லப்பிராணிகளின் முடி.
▪️வானிலை: அதிகப்படியான வெப்பம், வியர்வை அல்லது குளிர்கால வறட்சி.
5️⃣. உணவு ஒவ்வாமை (Food Allergies)❗️
சிலருக்குச் சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்ளும் போது எக்ஸிமா தீவிரமடையலாம்:
▪️பால் மற்றும் பால் பொருட்கள்.
▪️முட்டை.
▪️சோயா பொருட்கள்.
▪️nuts (முந்திரி, வேர்க்கடலை போன்றவை) மற்றும் கோதுமை.
❗️ஆனால், எக்ஸிமா உள்ள அனைவருக்கும் உணவு ஒவ்வாமை இருப்பதில்லை. எனவே, தேவையற்ற உணவுத் தடையைத் தவிர்க்க, ஒரு குறிப்பிட்ட உணவைத் தவிர்த்துப் பார்க்கும் முறையை (Elimination diet) மருத்துவரின் ஆலோசனையின் கீழ் செய்ய வேண்டும்.
6️⃣ மன அழுத்தம் (Stress)❗️
மன அழுத்தம் நேரடியாக எக்ஸிமாவை உண்டாக்குவதில்லை, ஆனால் ஏற்கனவே இருப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகும் போது அரிப்பு மற்றும் பாதிப்பு இருமடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
⭕️எக்ஸிமாவின் சில பொதுவான வகைகள்
🔸️Atopic Dermatitis: இது எக்ஸிமாவின் மிகவும் பொதுவான ஒரு வகை. எக்ஸிமா உள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு இருப்பது இந்த ஏரோபிக் டேர்மரைரிஸ் தான்.குடும்பத்தில் யாருக்காவது ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை இருந்தால் இது வர வாய்ப்பு அதிகம்.
🔸️Contact Dermatitis: ஏதாவது ஒரு குறிப்பிட்ட பொருள் (உதாரணமாக: சவர்க்காரம், வாசனை திரவியங்கள், நிக்கல் நகைகள் அல்லது இரசாயனங்கள்.) தோலில் படுவதால் ஏற்படும் ஒவ்வாமை.அந்தப் பொருள் பட்ட இடம் மட்டும் சிவந்து, வீங்கி அல்லது அரிப்புடன் காணப்படும்.
❗️வேலையின் காரணமாக அடிக்கடி இரசாயனங்கள் அல்லது தண்ணீரைப் பயன்படுத்துபவர்களுக்கு contact dermatitis வர வாய்ப்பு அதிகம்:
▪️தாதிமார் மற்றும் மருத்துவர்கள் (அடிக்கடி கை கழுவுவதால்).
▪️சிகையலங்கார நிபுணர்கள் (Hairdressers - இரசாயனங்கள் பயன்படுத்துவதால்).
▪️தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சலவை செய்பவர்கள்.
▪️கட்டுமானத் தொழிலாளர்கள் (சீமெந்து மற்றும் இதர பொருட்கள்.
🔸️ Seborrheic Dermatitis: எண்ணெய் சுரப்பிகள் அதிகம் உள்ள இடங்களில் இது வரும்.தலை மற்றும் முகத்தில் பொடுகு போன்ற செதில்கள் ஏற்படுவது.
‼️ஒவ்வொரு வகை எக்ஸிமாவிற்கும் சிகிச்சை முறைகள் மாறுபடும். எனவே, உங்கள் தோலில் உள்ள தழும்புகள் எந்த வகையைச் சேர்ந்தது என்பதை அறிய ஒரு பொது/தோல் மருத்துவரை (Dermatologist) அணுகுவது நல்லது.
⭕️இதற்கு நிரந்தரத் தீர்வு உண்டா?
▪️தற்போது வரை எக்ஸிமாவிற்கு நிரந்தரமாக குணப்படுத்தும் மருந்து இல்லை. ஆனால் நல்ல செய்தி என்னவென்றால் இதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.❗️
▪️பலர் தங்களைத் தூண்டும் காரணிகளைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதன் மூலமும், பாதிப்பு தொடங்கும் போதே தகுந்த சிகிச்சை அளிப்பதன் மூலமும், சருமத்தைப் பாதுகாப்பதன் மூலமும் இதனைச் சிறப்பாக கட்டுப்படுத்த கற்றுக் கொள்கிறார்கள்.
❗️உங்கள் எக்ஸிமாவைத் தூண்டும் ஒவ்வாமைப் பொருட்கள் (Allergens) மற்றும் எரிச்சலூட்டும் பொருட்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். (உதாரணம்: சீமெந்து, சவர்க்காரம், துணி துவைக்கும் தூள், வாசனை திரவியங்கள், தோல் (Leather) பொருட்கள், இறப்பர்).
⭕️எக்ஸிமா நோயைக் குணப்படுத்தப் பல்வேறு மருத்துவ முறைகள் உள்ளன. இது நீண்ட காலத்திற்கு வரக்கூடிய ஒரு பாதிப்பு என்பதால், இதை முழுமையாகக் கட்டுப்படுத்தத் தொடர்ச்சியான பராமரிப்பு அவசியம்.
1️⃣ தினசரி சருமப் பராமரிப்பு (Home Care)
இதுவே சிகிச்சையின் அடிப்படை.
தோலை வறட்சியடையாமல் வைத்திருப்பதே முதல் இலக்கு.
☑️தினமும் குளியுங்கள். குளிப்பதற்கு பேபி சோப் (Baby soaps) அல்லது மருத்துவர் பரிந்துரைக்கும் , சவர்க்காரத்திற்கு மாற்றாக உள்ள மென்மையான திரவங்களை மட்டுமே பயன்படுத்தவும்.
☑️Moisturizers(சரும ஈரப்பதம் பேணும் களிம்பு): குளித்து முடித்த சில நிமிடங்களுக்குள் வாசனை இல்லாத 'Moisturizing Cream' அல்லது 'Ointment' தடவுங்கள். இது தோலின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும். ஒரு நாளைக்கு 2-3 முறை தடவலாம்.
▪️நகங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, நகங்களை குட்டையாக வெட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
❗️உங்கள் வேலை அல்லது அன்றாட வாழ்க்கையில் எரிச்சலூட்டும் பொருட்களைத் தவிர்க்க முடியாவிட்டால், சுத்தமான கையுறைகளை (Gloves), காலுறைகளை அணியுங்கள். இத்தகைய பொருட்களுடனான தொடர்பை நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். வேலை முடிந்ததும் கைகளை நீரால் கழுவி, அதன் பிறகு Moisturizers தடவவும்.
2️⃣மருத்துவ சிகிச்சைகள்
அரிப்பு மற்றும் வீக்கம் அதிகமாக இருக்கும்போது மருத்துவர்கள் கீழ்க்கண்ட மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள்.
◾️ஸ்டீரொய்ட் கிரீம்கள் (Corticosteroid Creams): இவை அழற்சியையும் அரிப்பையும் விரைவாகக் குறைக்கும்.
‼️இவை பல்வேறு வீரியங்களில் கிடைக்கின்றன. எனவே, மருத்துவர் பரிந்துரைத்த அளவு மற்றும் கால அளவைப் பின்பற்றுவது மிக முக்கியம். குறைந்த அளவு பயன்படுத்தினால் பலன் இருக்காது, அதிகப்படியாகப் பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் ஏற்படும்.(குறிப்பு: இவற்றை மருத்துவர் ஆலோசனையின்றி நீண்ட காலம் பயன்படுத்தக் கூடாது).
◾️Antihistamines: இரவு நேர அரிப்பைக் குறைத்து, நிம்மதியான உறக்கத்திற்கு இவை உதவும்.
◾️நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (Antibiotics): சொறிவதால் புண் ஏற்பட்டு தொற்று (Infection) உண்டாகியிருந்தால், கிரீம்கள் அல்லது மாத்திரைகள் தேவைப்படும்.
◾️Condy’s washes: இது லேசான இளஞ்சிவப்பு நிறக் கரைசலாக மாற்றப்பட்டு (நீர்த்த நிலையில்) பயன்படுத்தப்பட வேண்டும்.
◾️பாதிப்பு தீவிரமாக இருந்தால் வேறு மருந்துகளும் (Prednisolone ,Azathioprine) மருத்துவரின் ஆலோசனையின் கீழ் வழங்கப்படும்
◾️Phototherapy: கடுமையான எக்ஸிமா உள்ளவர்களுக்குப் புற ஊதா கதிர்களைப் (UV light) பயன்படுத்திச் சிகிச்சை அளிக்கப்படும்.
❗️கால்களில் உள்ள இரத்த நாளங்கள் (நரம்புகள்) வீங்குவதால், இரத்தம் சரியாக இதயத்திற்குச் செல்லாமல் கால்களிலேயே தேங்கும். இதனால் ஏற்படுவது இரண்டாம் நிலை எக்ஸிமா -Stasis Dermatitis எனப்படும்.
அறிகுறிகள்: கணுக்கால் பகுதியில் தோல் கருப்பாக மாறுதல், அரிப்பு மற்றும் வீக்கம்.உங்களுடைய எக்ஸிமா, இரத்த நாள வீக்கத்தால் (Varicosities) ஏற்பட்டிருந்தால், மேலதிக சிகிச்சைக்காக நீங்கள் பரிந்துரைக்கப்படலாம்.
‼️தொடர்ச்சியான பராமரிப்பு இருந்தால், எக்ஸிமா அடிக்கடி வருவதைத் தடுக்கவும், அதன் தீவிரத்தைக் குறைக்கவும் முடியும்.