
05/08/2025
காத்தான்குடி குருதிக் கொடையாளர்கள் சம்மேளத்தின் காரியாலயம் திறப்பு மற்றும் தாதியர்கள் கௌரவிப்பு நிகழ்வு!
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இரத்த வங்கியின் கீழ் கடந்த 8 ஆண்டுகளாக சிறப்பாக செயலாற்றி வரும் குருதிக் கொடையாளர்கள் சம்மேளனம், தனது நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் உத்தியோகபூர்வ காரியாலயத்தை திறந்துவைக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வும், தாதியர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று (05) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம். ஜாபிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லடி 243வது இராணுவ படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரதீப் கலுபாஹன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வின்போது, சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ காரியாலயம் வைத்தியசாலைக்குள் திறந்து வைக்கப்பட்டது.
மேலும், இரத்தவங்கி பிரிவில் சுமார் 5 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி, இடமாற்றம் பெறும் தாதி உத்தியோகத்தர் திலினி அவர்களுக்கு கௌரவம் வழங்கும் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.
அத்துடன், புதிதாக இணைந்த மூன்று தாதி உத்தியோகத்தர்களை வரவேற்கும் நிகழ்வும், நீண்ட காலமாக பணியாற்றும் தாதி உத்தியோகத்தர் ஜனனி அவர்களுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றன.
இலாப நோக்கமின்றி செயல்பட்டு வரும் குருதிக் கொடையாளர்கள் சம்மேளனத்தின் சமூக சேவைகளுக்காக, பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பெறும் நோக்கில் "ஊண்டியல் அறிமுக நிகழ்வும்" இதே சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில், இரத்த வங்கிக்குப் பொறுப்பான வைத்தியர் நித்தியாந்தி, தாதியர்கள், வைத்தியசாலை நிர்வாகத்தினர் மற்றும் சம்மேளன உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த வருடம், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியால் 1512 பெயரிடமிருந்து இரத்தம் சேகரிக்கப்பட்டது.
இவ்வருடம் 2000 கொடையாளர்களிடமிருந்து இரத்தம் சேகரிப்பதற்கான வேலை திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்து வருகிறது.