26/01/2023
இன்றைக்கு மருத்துவத்தில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது `இயன்முறை மருத்துவம்’ எனப்படும் பிசியோதெரபி (Physiotherapy). `பாட்டிக்கு முதுகுவலி. ஒரு வாரம் பிசியோதெரபி எடுத்துக்கிட்டோம். இப்போ பரவாயில்லை’ போன்ற வசனங்களை சர்வ சாதாரணமாகக் கேட்க முடிகிறது. சிற்றூர்களில்கூட `பிசியோதெரபி மையங்கள்’ (Physiotherapy Centre) முளைத்துவிட்டன.
சரி, அது என்ன பிசியோதெரபி? எலும்பு மூட்டு, தசைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டால், அவற்றைச் சரிசெய்யவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவும் சிகிச்சை. ஊசி, மருந்துகளைப் பயன்படுத்தாமல் உடற்பயிற்சி, வெப்ப சிகிச்சை, மின் சிகிச்சை, தெரபியூடிக் மசாஜ் (Therapeutic Massage)ஆகியவற்றின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் ஒரு வழிமுறை. உடலில் அடிபட்டால் காயத்தின் தீவிரத்தைக் குறைக்கவும், பாதிப்பிலிருந்து மீளவும் இது உதவும்.
Physiotherapy பிரிவுகள்
* எலும்பு மற்றும் மூட்டு (Orthopedic)
* நரம்பியல் (Neurology)
* இதயம் மற்றும் சுவாசம் (Cardio & Respiratory)
* குழந்தைகள்நலம் (Pediatrics)
* விளையாட்டு (Sports)
* மகப்பேறியல் (Obstetrics and Gynaecology)
* கை (Hand Conditions)
* சமுதாயம் (Community)
* முதியோர்நலம் (Geriatric)
* உடல் இயக்கவியல் (Biomechanics)
* மறுவாழ்வு (Rehabilitation)
எலும்பு மற்றும் மூட்டு பிசியோதெரபி (Orthopedic Physiotherapy)
இந்தப் பிரிவின் கீழ் வரும் பிரச்னைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
* எலும்பு முறிவு
* எலும்புத் தேய்மானம்
* தசை மற்றும் தசைநார்.
எலும்பு முறிவு
உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டால், எலும்பு முறிவு மருத்துவர் (Orthopedician), அறுவை சிகிச்சை அல்லது மாவுக்கட்டு(POP) போட பரிந்துரைப்பார். அதன் பிறகுதான் Physiotherapist ன் பணி தொடங்குகிறது. மாவுக்கட்டைப் பிரித்த பிறகு, தசைகளில் ஏற்படும் பிடிப்புகளைச் சரிசெய்யவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு தசைகள் இழந்த இயக்கம் மற்றும் வலிமையைத் திரும்பப் பெறவும் பிசியோதெரபி துணைபுரிகிறது.
எலும்புத் தேய்மானம்
வயோதிகம் மற்றும் அதிக இயக்கம் காரணமாக எலும்பு, மூட்டுகள் தேய்மானம் அடையும். அதனால் ஏற்படும் வலியைப் போக்கவும், தேய்மானத்தைச் சரிசெய்யவும் Physiotherapy அவசியம். இந்தச் சிகிச்சையைத் தொடர்ந்து அளித்தால்தான் பாதிக்கப்பட்ட மூட்டுகளை மீண்டும் செயல்படவைக்க முடியும்
தசை மற்றும் தசைநார்
உடலில் தசைப் பிடிப்பு, சுளுக்கு மற்றும் தசைநார் பாதிப்புகளைச் சரிசெய்யவும், வலியைக் குறைக்கவும் physiotherapyயில் சிகிச்சை (Ultrasound Therapy and Interferential Therapy (IFT)) அளிக்கப்படுகிறது. இந்த முறையில் சிகிச்சையளிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட தசை மற்றும் தசைநார்களை மீண்டும் அதே வலிமையுடன் செயல்பட வைக்கலாம்.
எலும்பு மற்றும் தசைநார் பிரச்னைகள் வராமல் தடுக்க...
* எலும்புத் தேய்மானத்தைத் தவிர்க்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். சூரிய வெளிச்சத்தில் உடல்படும்படி நடக்க வேண்டும்.
* உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
* கீழே விழுந்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.
நரம்பியல் பிசியோதெரபி (Neuro Physiotherapy)
* பிறவி சார்ந்த நரம்பியல் பிரச்னைகள் (Congenital Disorders)
* விபத்தால் ஏற்படும் நரம்பியல் பிரச்னைகள்
* மூப்பு காரணமாக ஏற்படும் நரம்பியல் பிரச்னைகள் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சை.
நரம்பு சார்ந்து ஏற்படும் நோய்கள்
மூளை முடக்குவாதம், தசைநார் தேய்வு (Muscular Dystrophy) போன்ற நரம்பு தொடர்பான பிரச்னைகள் பிறவியிலேயே ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மூளைக்குச் சரிவர ரத்தம் செல்லாவிட்டால், `C.V.A’ எனப்படும்
Cerebrovascular Accident ஏற்படும். இதன் தொடர்ச்சியாக பக்கவாதம் ஏற்படும்.
விபத்து மற்றும் காசநோயால் தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்படும்போது, இரண்டு கால்களும் செயலிழந்துவிடும்; உடலிலிருக்கும் குறிப்பிட்ட சில நரம்புகள் பாதிக்கப்படும் அபாயமும் இருக்கிறது. அப்படி பாதிக்கப்படும் சூழலில் முகப் பக்கவாதம் ஏற்படும். மூப்படைவதால் நரம்புத் தளர்ச்சி, நரம்புத் தேய்மானம் போன்றவை ஏற்பட்டு, `டிமென்ஷியா (Dementia) எனப்படும் ஞாபகமறதி, அல்சீமர் (Alzheimer’s Disease) மற்றும் பார்கின்சன் நோய் (Parkinson’s Disease) போன்றவை ஏற்படும்.
சிகிச்சைகள்
* சமநிலைப் பயிற்சி (Balance Training)
* நடைத்திறன் பயிற்சி (Gait Training)
* ஒருங்கிணைப்புப் பயிற்சி (Co-Ordination Training)
நரம்பு சார்ந்த நோய்கள் ஏற்படும்போது, நோய் பாதிப்பின் நிலையைப் பொறுத்து உடற்பயிற்சிகள் மூலமாகவும், சாதனங்கள் உதவியுடனும் தொடர் சிகிச்சையளிக்கப்படும். வலுவிழந்த தசைகளையும் நரம்புகளையும் மீண்டும் வலுவடையவைப்பது, அவற்றின் செயல்திறனை அதிகரிக்கச் செய்வது ஆகியவைதான் பிசியோதெரபியின் முக்கிய வேலை. நரம்பு சார்ந்த பாதிப்புகள் முதியோருக்கு வராமலிருக்க சுடோகு, செஸ், குறுக்கெழுத்து போன்ற விளையாட்டுகளை விளையாடுவதுடன், மூளையை எப்போதும் ஏதாவதொரு செயலில் ஈடுபடுத்த வேண்டும். இந்த முறைக்குப் பெயர் `பிரெய்ன் ஜிம்’ (Brain Gym). மூளையின் நினைவுத்திறனை அதிகப்படுத்த நமக்கு நாமே கேள்விகளைக் கேட்டு, பதிலளிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாகச் செய்வதன் மூலம் ஞாபகமறதியிலிருந்து விடுபடலாம்.
இதயம் மற்றும் சுவாச பிசியோதெரபி (Cardio Respiratory Physiotherapy)
கார்டியோ ரெஸ்பிரேட்டரி துறையில், பிசியோதெரபியின் பங்கு இன்றியமையாதது. இதை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
* ஆஸ்துமா, எம்பைசீமா (Emphysema) போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் மூச்சுவிட சிரமப்படுவார்கள். அவர்களுக்கு இருமல் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் அவர்களுக்கு மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சிகளைப் பயிற்றுவித்து, அவர்களது பலவீனமான தோள்பட்டை மற்றும் தசைகளை வலுப்படுத்தி, அறுவை சிகிச்சை செய்யாமலேயே மூச்சுவிடும் திறனை மேம்படுத்துவார்கள்.
இதயம் மற்றும் மார்புப் பகுதியில் பெரிய அளவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது இதயம், நுரையீரலின் செயல்திறனை மேம்படுத்துவதில் பிசியோதெரபியின் பங்கு மகத்தானது. அறுவை சிகிச்சை முடிந்ததும், மார்புப் பகுதியில் சளி கட்டக் கூடாது. இதய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருடன் இணைந்து Physiotherapist செயல்பட்டு மார்புச்சளியைத் தொடர்ந்து வெளியேற்றுவார். அறுவை சிகிச்சை முடிந்ததும், நடை பழக்கவும் (Gait
Training), பலவீனமான தசைகளை வலுவூட்டவும் பயிற்சியளிப்பார்.
குழந்தைகளுக்கான பிசியோதெரபி (Pediatrics Physiotherapy)
* பிறவிக் குறைபாடுகள் (Congenital)
* வளரும் பருவத்தில் குழந்தைக்கு ஏற்படும் பிரச்னைகள் ஆகியவற்றுக்கான சிகிச்சை இது.
சில குழந்தைகளுக்குப் பிறவியிலேயே ஏற்படும் நோய், மூளை முடக்குவாதம். இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இயல்பான மனப் பக்குவமும் மூளை வளர்ச்சியும் இருக்காது. அவர்களின் உடல் தசைகள் பலவீனமடைந்து காணப்படும். இத்தகைய குழந்தைகளுக்கு `நியூரோ டெவலப்மென்ட் தெரபி’ (Nuero Development Therapy), `மோட்டார் ரீலேர்னிங் புரோகிராம் மற்றும் போபாத் டெக்னிக்’ (Motor Relearning Program and Bobath Technique) போன்ற பயிற்சிகளை அளித்தால், அவர்களுடைய பலவீனமான தசைகள் வலுப்படும். இந்தப் பயிற்சிகளின் மூலம் அவர்களை நிற்க, நடக்கவைக்க முடியும்.
குழந்தைகள் விபத்துக்குள்ளாகும்போது அவர்களின் உடல் தசைகளும் எலும்புகளும் கடுமையாக பாதிக்கப்படும். அதிலிருந்து அவர்கள் மீளவும், நோய் பாதிப்புகள் மற்றும் `ஹெமிப்லெஜிக் ஸ்ட்ரோக்’ (Hemiplegic Stroke) போன்ற பாதிப்புகளிலிருந்து மீளவும் பிசியோதெரபி கைகொடுக்கும். வளரும் வயதில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளின் வாழ்க்கைத்திறனை மேம்படுத்த பிசியோதெரபி உதவும்
குறிப்பு: மாறிவிட்ட வாழ்க்கைமுறை, சிறு வயதில் ஓடியாடி விளையாடாமல் ஒரே இடத்தில் இருப்பது போன்றவற்றால் குழந்தைகளுக்கு அதிகளவில் `ஜுவைனைல் டயாபடிஸ்’ (Juvenile Diabetes), `ஜுவைனைல் ஒபிசிட்டி’ (Juvenile Obesity) போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த பாதிப்புகள் ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால், குழந்தைகள் `ஜங்க் ஃபுட்ஸ்’ (Junk Foods) அதிகம் உண்பதைத் தவிர்த்துவிட்டு, சத்தான காய்கறிகளை உண்ண வேண்டும். அதேபோல் செல்போன்களில் நேரத்தைச் செலவிடுவதற்கு பதில், ஓடியாடி விளையாட வேண்டும்.
விளையாட்டு பிசியோதெரபி (Sports Physiotherapy)
விளையாட்டு வீரர்களுக்குத் தசை மற்றும் தசைநார்க் காயங்கள் ஏற்பட அதிகளவு வாய்ப்பிருக்கிறது. அண்மைக்காலமாக, கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கு ஏற்படும் பிரச்னைகளைக் களைய, `OnField’ , 'OffField’ என இரண்டுவிதமான Physiotherapyகள் இருக்கின்றன.
விளையாட்டு வீரர்களுக்கு மைதானத்தில் காயம் ஏற்படும்போது உடனடியாக முதலுதவியளித்து, அவர்களைத் தயார்படுத்தி, விளையாட வைப்பது `On field Treatment.’ மைதானத்தில் காயம்பட்ட வீரருக்குச் சிகிச்சையளித்து, அந்தக் காயத்தை முழுமையாக ஆறச்செய்து, இழந்த தசை மற்றும் தசைநார்களின் வலிமையை மீண்டும் பெறவைப்பது `OffField Treatment.’
விளையாட்டு வீரர்கள் தகுந்த Physiotherapistன் துணையுடன் `வார்ம் அப்’ (Warm Up) மற்றும் `கூல் டவுண்’ (Cool Down) பயிற்சிகளைச் செய்வார்கள். ஆனால், பொழுதுபோக்குக்காக விளையாடுபவர்கள் அப்படிச் செய்வதில்லை. அதனால் திடீரென்று கடினமான விளையாட்டுகளை விளையாடும்போது, கால் தசைநார்கள் பாதிக்கப்படலாம். அவை குணமாக நீண்ட நாள்கள் ஆகும். எனவே, அவர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்கவேண்டியது அவசியம்.
மகப்பேறியல் பிசியோதெரபி (Obs tetrics and Gynaecology Physiotherapy)
அண்மைக்காலமாக வளர்ந்துவரும் துறை இது. பிரசவத்துக்கு முன்னரும், பிரசவத்துக்குப் பின்னரும் கடைப்பிடிக்கவேண்டிய இந்தப் பயிற்சிகள் Physiotherapistடால் சொல்லித் தரப்படும். கருவுற்ற பெண், சுகப்பிரசவம் காண எந்தெந்தப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், எப்படிப்பட்ட வாழ்க்கைமுறையை மேற்கொள்ள வேண்டும் போன்ற வழிமுறைகளைப் பயிற்றுவிப்பது `ப்ரீநேட்டல் கேர்’ (Prenatal Care) என்னும் பிசியோதெரபி. பிரசவத்துக்குப் பிறகு இடுப்புப் பகுதியில் தசைகள் தளர்ந்துவிடும். சிலருக்கு முதுகுவலி ஏற்படும். தளர்ந்த தசைகளை இயல்புநிலைக்கு மாற்றி, வலியைப் போக்கும் உடற்பயிற்சிகள், உடல் எடையைக் கட்டுக்குள்வைத்திருப்பது, தாய்ப்பால் கொடுக்கும் முறை என பிரசவத்துக்குப் பிறகு செய்யவேண்டிய பயிற்சிகளை அளிப்பது `போஸ்ட்நேட்டல் கேர்’ (Postnatal Care) சிகிச்சை.
பெண்கள் தங்களது வயிற்றுப் பகுதித் தசைகள் (Abdominal Muscles) மற்றும் முதுகுத்தண்டுவட தசைகளை (Back Muscles) வலுவாக வைத்திருக்கவேண்டியது அவசியம். இது கருவுற்ற காலத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
கைகளுக்கான பிசியோதெரபி (Hand Physiotherapy)
இந்தத் துறை பற்றி பலருக்கும் தெரியாது. ஆனால், மிகவும் இன்றியமையாத துறை. தொழிற்சாலை விபத்துகளில் கைகள் நசுங்குவது, சாலை விபத்துகளில் கையில் கடுமையாகக் காயம் ஏற்படுவது போன்ற சூழலில் தொழில்முறை மருத்துவர் அல்லது அறுவை சிகிச்சை நிபுணர் தகுந்து சிகிச்சையளித்து கட்டுப் போடுவார். பிறகு பிசியோதெரபிஸ்ட் அளிக்கும் தொடர் பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள்தாம் அந்தத் தசை மற்றும் நரம்புகளை மீண்டும் வலிமையாக்கி, அடிபட்ட கையை மீண்டும் பழையபடி செயல்படவைக்கும். தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் `PPE’ (Personal Protective Equipment) எனப்படும் தற்காப்புச் சாதனங்களுடன் பணிபுரிய வேண்டும். சிலருக்கு கை விரல்களில் முடக்குவாதம் ஏற்பட்டிருக்கும். முடக்குவாதம் வந்தவர்களால் விரல்களை அசைக்க முடியாது. கல் உப்பை வெந்நீரில் போட்டு, கையை அதில் நனைத்து, பஞ்சு போன்ற பந்தை கைக்குள் வைத்து நன்றாக அமுக்க வேண்டும். தினமும் இதுபோல இரண்டு தடவை செய்தால், கை விரல்களின் அசைவுகள் மேம்படும்.
சமுதாயத்துக்கான பிசியோதெரபி (Community Physiotherapy)
ஒரு நோயோ அல்லது குறைபாடோ வரும் முன்னரே போதுமான விழிப்புஉணர்வை ஏற்படுத்தி முன்னெச்சரிக்கைப் பயிற்சியளிப்பதுதான் இந்தச் சிகிச்சையின் நோக்கம். கிராமப்புறங்களில் என்ன நோய் என்று தெரியாமலேயே, தங்களுக்குத் தெரிந்த சிகிச்சையைச் சிலர் செய்துகொள்வார்கள். அவர்களுக்குப் போதிய விழிப்புஉணர்வு மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்துவதே சமுதாயம் சார்ந்த பிசியோதெரபி.
முதியோருக்கான பிசியோதெரபி (Geriatric Physiotherapy)
முதுமையால் ஏற்படும் நோய்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் தொடர்பான பிசியோதெரபிப் பிரிவு இது. வயதானோருக்கு இதயம், சுவாசம், தசை, மூட்டு மற்றும் நரம்பு சார்ந்த பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அந்தப் பிரச்னைகள் மற்றும் நோய்களிலிருந்து காத்துக்கொள்ளவும், அவற்றிலிருந்து விடுபடவும் இந்தச் சிகிச்சை தரப்படும்.
வயது மூப்பு காரணமாக ஞாபகமறதி, கவனச் சிதைவு, கண் பாதிப்புகள், பார்வைத்திறன் குறைவதால் நடக்கும் திறன் பாதிப்பு, மூட்டுத் தேய்மானம், முதுகுத்தண்டுவட பாதிப்பு, ஆண்களுக்கு புரோஸ்டேட் (Prostate) புற்றுநோய், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் போன்றவை ஏற்படும். இந்த நோய்களின் தாக்கத்தைக் குறைக்க, வயதானவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும்.
முதியோரை கஷ்டப்படுத்தாமல், அவர்களால் செய்ய முடிந்த சிறு சிறு உடற்பயிற்சிகளைக்கொண்டு அவர்களின் செயல்திறன் மேம்படுத்தப்படும். படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு படுக்கைப்புண் ஏற்படாதபடி சிகிச்சையளிக்கப்படும். சுவாசப்பயிற்சி தருவதன் மூலம் சுவாசத்தை மேம்படுத்தலாம்; பயன்படுத்தப்படாத தசைகள் செயலிழக்காமல் தவிர்க்க, போதுமான அசைவுகள் அளிக்கப்படும். மேலும் அவர்களை முழு கவனத்துடன் நடக்கவைக்கவும் கீழே விழாமல் இருக்கவும் போதுமான பயிற்சிகள் அளிக்கப்படும். இதனால், முதியோரின் வாழ்க்கைமுறை மேம்படுத்தப்படும்.
உடல் இயக்கவியல் (Biomechanics)
நம் உடலின் ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பிட்ட தசைத் தொகுதி காரணமாக இருக்கிறது. அந்தத் தசைகளை எப்படி வலிமையடையச் செய்வது, மேம்படுத்துவது என்பது குறித்த பிசியோதெரபி இது. ஒரு செயலை எப்படிச் செய்தால் எளிமையாகவும் சிறப்பாகவும் செய்ய முடியும் என்று இந்த முறையில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. தசை அசையும் திறனை மேம்படுத்துவது, உடல் அமைப்பைத் தக்கவைத்துக்கொள்ள உதவுது ஆகியவைதான் இந்தச் சிகிச்சையின் நோக்கம். இதன் மூலம் வலி இல்லாமல் ஒரு செயலை எளிதாகவும் சிறப்பாகவும் செய்ய முடியும். இந்தத் துறையில் வளர்ந்துவரும் ஒரு பிரிவுதான் `பணிச் சூழலியல்’ (Ergonomics). பணியிடங்களில் ஒரு வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் ஒரு வழிமுறை. மூப்படைவதற்கு முன்னரே பணிச்சூழல் காரணமாக முதுகுவலி, மூட்டுவலி, கழுத்துவலி போன்றவை பலருக்கும் ஏற்படுகின்றன. நம்மை வருத்திக்கொள்ளாமல் எப்படி வேலை செய்வது என்று கற்றுக்கொடுக்கிறது இந்த சிகிச்சை முறை.
மறுவாழ்வு பிசியோதெரபி (Rehabilitation Physiotherapy)
பிறவி ஊனமுற்றோர், விபத்து மூலம் உடல் உறுப்புகளை இழந்தவர்கள், உடல் அசைவுக் குறைபாடு உள்ளவர்களின் மறுவாழ்வுக்காக அளிக்கப்படும் சிகிச்சை இது. உதாரணமாக, விபத்தில் காலிழந்த ஒருவருக்குச் செயற்கைக் கால் பொருத்தி, அதன் மூலம் அவர் இயல்பாக நடக்கவும், அதை அவரது வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றவும் போதுமான பயிற்சி அளிப்பதுதான் இந்த பிசியோதெரபியின் முக்கியப் பணி.
பிசியோதெரபி சாதனங்கள்
வெப்ப சாதனங்கள் (Thermal Based Equipments)
பாதிக்கப்பட்ட தசைகளுக்கு கருவிகள் மூலம் வெப்பம் செலுத்தப்படும். அந்த வெப்பத்தால் ரத்த ஓட்டம் அதிகமாகும். இதனால் வலி குறைந்து, தசைகளின் இயக்கம் சீராகும்.
* ஷார்ட்வேவ் டயாதெர்மி (Shortwave Diathermy)
* மைக்ரோவேவ் டயாதெர்மி (Microwave Diathermy)
* இன்ஃப்ராரெட் ரேடியேஷன் (Infrared Radiation)
* அல்ட்ரா சவுண்ட் (Ultrasound)
* க்ரையோதெரபி (Cryotherapy)
* வாக்ஸ் தெரபி (Wax Therapy)
* ஹைட்ரோ கொலேட்டர் தெரபி (Hydro Collator Therapy)
போட்டோகெமிக்கல் சாதனங்கள் (Photochemical Based Equipments)
வலி இருக்கும் தசைகள் மற்றும் தசைநார்களுக்குள் லேசர் மற்றும் அகச்சிவப்புக் கதிர்களைச் செலுத்தி செய்யப்படும் தெரபி இது. இந்தக் கதிர்கள் சருமநோய்களைச் சரிசெய்யவும் பயன்படுத்தப்படுகின்றன.
* லேசர் தெரபி (Laser Therapy)
* அகச்சிவப்புக் கதிர் தெரபி (UVR Therapy)
மின் சாதனங்கள் (Electric Current Based Equipment)
கீழ்க்கண்ட கருவிகள் மூலம் மின்சாரத்தைச் செலுத்தும்போது தசைகள் சுருங்கி விரியும். இதனால் அந்த இடத்தில் ரத்த ஓட்டம் அதிகமாகி வலி குறையும்.
* டிரான்ஸ்குடேனியஸ் எலெக்ட்ரிகல் நெர்வ் ஸ்டிமுலேட்டர் (Transcutaneous Electrical Nerve Stimulator - TENS)
* மசில் ஸ்டிமுலேடர் (Muscle Stimulator)
* இன்டர்ஃபெரன்ஷியல் தெரபி (Interferential Therapy)
* ஃபங்ஷனல் எலெக்ட்ரிகல் ஸ்டிமுலேடர் (Functional Electrical Stimulator)
* வேக்வம் தெரபி (Vacuum Therapy).
இயந்திர சாதனங்கள் (Mechanical Based Therapy)
பாதிக்கப்பட்ட தசைகளில் சில கருவிகளின் வழியாக வெளிப்புறத்திலிருந்து விசைகளைச் செலுத்தி, உடல் பாகத்தைச் சுருங்கி விரியச் செய்யும் சிகிச்சை இது.
* இன்டர்மிட்டென்ட் செர்விகல் ட்ராக்ஷன் தெரபி (Intermittent Cervical Traction Therapy)
* இன்டர்மிட்டென்ட் பெல்விக் ட்ராக்ஷன் தெரபி (Intermittent Pelvic Traction Therapy)
* கம்ப்ரெஷன் தெரபி (Compression Therapy)
* ஹைட்ரோ தெரபி (Hydro Therapy).
பிசியோதெரபியில் லேட்டஸ்ட் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்
* ஷாக்வேவ் டயாதெர்மி (Shockwave Diathermy)
* காம்பினேஷன் வேவ் டயாதெர்மி (Combination Wave Diathermy)
* லாங்வேவ் டயாதெர்மி (Longwave Diathermy)
* மேக்னெடோ தெரபி (Magneto Therapy).
மேனுவல் சிகிச்சை (Manual Therapy)
மேனுவல் தெரபி என்பது எந்தச் சாதனமும் இல்லாமல், பிசியோதெரபிஸ்ட் தன் கைகளால் நோயாளியின் தசைகளை அசைத்துச் செய்யும் சிகிச்சை.
* ஜாயின்ட் மொபிலைசேஷன் (Joint Mobilization)
* மசில் எனர்ஜி டெக்னிக் (Muscle Energy Technique)
போலியான பிசியொதெரபிஸ்ட்டை அடையாளம் காண்பது எப்படி?
இப்போதெல்லாம் ஆறு மாதங்கள் டிப்ளமோ கோர்ஸ் முடித்துவிட்டு, தங்களை பிசியோதெரபிஸ்ட்டாகக் கூறிக்கொள்கிறார்கள். ஒரு பிசியோதெரபிஸ்ட் நான்கரை ஆண்டுகள் பட்டப் படிப்பு (B.P.T) படித்தவராக இருக்க வேண்டும். ஆறு மாதங்கள் பயிற்சிபெற்றவராக இருக்க வேண்டும். அவரது கிளினிக்கில் போதுமான அடிப்படை உபகரணங்கள் இருக்கவேண்டியது அவசியம்.
ஒரு பிசியோதெரபிஸ்ட் எந்தவிதத்திலும் மருந்தையோ அல்லது ஊசியையோ பயன்படுத்த மாட்டார்.
பிசியோதெரபியை எப்போது நிறுத்த வேண்டும்?
நமக்கு ஏற்படும் சில பிரச்னைகளுக்கு சில நாள்கள் மட்டும் கிளினிக் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். பிறகு, வீட்டில் பயிற்சிகளைச் செய்தாலே போதும். சில பிரச்னைகளுக்கு நீண்டகாலம் சிகிச்சை எடுக்கவேண்டியிருக்கும். அது முடிந்ததும், பிசியோதெரபிஸ்ட்டின் ஆலோசனைப்படி சிகிச்சையை நிறுத்திக்கொள்ளலாம்.
(ஸ்ரீநாத் ராகவன்
இயன் மருத்துவர்
விகடன் 16th Jan, 2019)
For your All Physio Consultations
ASEEZ.A.SADHIQ
HDPT,PG DIP(R)COLOMBO
PHYSIOTHERAPIST
SLMC 1351