24/02/2026
நோன்பு மாதம் ஒரு அற்புதம் ... வீட்டிலும், சுற்றத்திலும், பள்ளியிலும் ஏன் முழு ஊரிலும் ஒரே பரபரப்பு. அனைவரின் மனதிலும் ஏதோ ஒரு சந்தோசம்.. எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் இந்த சந்தோசம் அடாது மனதில் ஒட்டிக் கொண்டு தான் இருக்கும். நோன்பு வந்து விட்டாலே, எடையைக் குறைப்பதற்கு ஆலோசனை பெறுபவர்களும் மிக அதிகம், அதனால் எனது நாட்களும் அசைவதற்கு நேரமின்றி கடந்து விடுவதுண்டு. ஒவ்வொரு வருடமும் இதே நிலைமை தான் என்றாலும் இந்த முறை ஆலோசனை வழங்கும் போது ஒரு விடயம் எனது மனதை உறுத்திக் கொண்டே இருந்தது, இந்த விடயம் குறித்து கட்டாயம் பதிவிட வேண்டும் என்றும் தோன்றியது, அது தான் ஷஹர் நேர சாப்பாடு...
நோன்பு கால ஆலோசனையின் போது நான் எப்போதும் கேட்கின்ற ஒரு கேள்வி "நீங்க வழமையா சஹருக்கு என்ன சாப்பிடுற?" ....
இந்தக் கேள்விக்கு பெரும்பாலானோர் அளிக்கும் பதில்...
"ஷஹர்ல சாப்பிட ஏலா சேர்... பெரும்பாலும் பனிஸ் உம் டீயும் (Bun & Tea) அல்லது பிளேன்டியோட ஏதாவது பேக்கரி ஐட்டம் மட்டும் தான் சாப்பிடுற".. இந்தப் பதில் அனேகமானோரிடம் இருந்து கிடைக்கப் பெற்றது தான் எனக்கு ஆச்சரியம்
சரி...... இந்தப் பழக்கம் சரியா? தவறா என்பதை சிறிது ஆராய்ந்து பார்ப்போமா?
- பேக்கரிகளில் பயன்படுத்தப்படுகின்ற கோதுமை மா (Refined Wheat flour) விரைவில் செமித்து விடும்... பால் தேனீர் ஒரு நல்ல தூண்டலை தந்தாலும் அது நீண்ட நேரத்திற்கு சக்தியை உடலுக்கு விநியோகிப்பதில்லை ... இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடும் போது இரத்தத்தில் விரைவாக சீனி அதிகரிக்கின்ற போதும் சில மணித்தியாலங்களின் பின் சீனியின் அளவு படிப்படியாகக் குறைய மத்தியானம் ஆகும் போது சோர்வு, இப்தாரை நெருங்கும் போது கடும் பசி, சிலருக்கு தலைவலி கூட ஏற்படலாம்.
தேயிலை (Plain tea), கோப்பி (Black coffee), டீ (Milk Tea), பால் கோப்பி (Milk Coffee) போன்றன கோதுமை மா உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிடுவது, சில வேளை இப்தாரில் மிஞ்சிய சோட் ஈட்ஸ்கள்/ பொரித்த உணவுகளை மேலதிகமாக இவற்றுடன் சேர்த்துக் கொள்ளுவது, இவற்றை சாப்பிட்டு சஹர் செய்த பின்பு தூங்குவது போன்ற காரணங்களினால் நெஞ்செரிச்சல், சாப்பாடு செமிக்காத மாதிரி தோன்றுதல், வயிறு ஊதுதல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படலாம். ஏற்கனவே கெஸ்ட்ரைடிஸ் / அல்சரினால் பாதிக்கப்ட்டவர்களுக்கும்
தூக்கமின்மை, அதிக மன உளைச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் போதும் இவ்வுணவுகளால் மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புண்டு.
நான் இதைத்தானே சாப்பிடுகிறேன்? எனக்கு ஒரு பிரச்சினையும் ஏற்பட்டதில்லையே? என்று நீங்கள் சொன்னால்... இந்தக் கேள்விக்கு நாம் இரண்டு வழியில் பதில் தரலாம். ஒன்று -அறிகுறிகள் இல்லையென்றால் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அர்த்தமல்ல, சில மாற்றங்கள் படிப்படியானவை. இரண்டாவது - இது மருத்துவ ரீதியில் ஒரு சமநிலையான உணவு இல்லை, சமநிலை உணவுகளை உட்கொள்வதே நமது ஆரோக்கியத்திற்கு சிறந்தது ஆகும்
சரி... அப்படியானால் ஷஹருக்கு நாம் எவ்வாறு சாப்பிட வேண்டும்?
ஷஹர் உணவுகளில் சரியான காபோவைதரேற்றுக்கள் (சோறு, பிட்டு, இடியப்பம் போன்ற மாப்பொருள் உணவுகள்) சரியான அளவில் எடுப்பதோடு அதிக மரக்கறிகளையும் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். புரத உணவுகள் (மீன், முட்டை, கோழி, இறைச்சி, கருவாடு, பருப்பு, சோயா) வழமையை விட சற்று அதிகமாக எடுத்துக் கொள்வது சிறந்தது. இவ்வாறு எடுக்கும் போது இரத்தத்தில் சீனி சீராக பேணப்படுவதோடு நன்கு சாப்பிட்ட திருப்தியும் ஏற்படுகின்றது. அத்தோடு போதுமான அளவு நீர் அருந்துவது மிக மிக அவசியமாகும். மேலும் ஒரு டீ / தயிர் / யோகட் சேர்த்துக் கொள்வதிலும் பிரச்சினை இல்லை.
ஒவ்வொரு உடலும் தனித்துவமானது. சில பழக்கங்கள் நமக்கு தற்போது பிரச்சினையை தராவிட்டாலும் பிழையான உணவு முறைகள் பின்னாளில் பிரச்சினையை தரவாய்ப்புள்ளது. எனவே எப்போதும் ஆரோக்கியமான சமநிலை உணவுகளில் கவனம் செலுத்துவோம். இது எமது உடலை ஆரோக்கியமாக வைத்திடவும், சோர்வைக் குறைத்து நோன்பை நோற்றிடவும் உதவி செய்யும்
சஹரைப் பற்றி கதைத்து விட்டோம். அடுத்த பதிவில் இப்தாரைப் பற்றி கதைப்போம். உங்கள் கருத்துக்கள் என்ன... Comment இல் பதிவிடுங்கள்.
Share செய்வது நோன்பில் பலருக்கும் உதவியாக இருக்கும், எனவே Share செய்து விடுங்கள்
M.S. Shamil Fowzath
Clinical Nutritionist