09/01/2021
சர்வம் ஹார்மோன் மயம்!
சர்வம் ஹார்மோன் மயம்!
நம் உடலிலிருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளிலிருந்து உருவாகும் ஒரு சிறப்பு வேதிப்பொருள், ஹார்மோன். இது ஒரு தூதுவரைப்போலச் செயல்பட்டு நம் உடலின் பெரும்பாலான இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. நமக்கு ஏற்படும் பசி உணர்வில் ஆரம்பித்து கோபம், பதற்றம், மூட் ஸ்விங்ஸ் மற்றும் இனப்பெருக்கம் வரையிலான அத்தனை நிகழ்வுகளுக்கும் முக்கியக் காரணமாக இருக்கிறது. இ
``நம் உடல் சீராக இயங்க ஹார்மோன்களின் சுரப்பு அவசியம். ஹார்மோன்கள் தேவையான அளவு சுரந்தால், எந்தப் பிரச்னையுமில்லை. ஆனால், குறிப்பிட்ட அளவைவிட அதிகமாகச் சுரந்தாலோ அல்லது குறைவாகச் சுரந்தாலோ நம் உடல் இயக்கத்தில் பாதிப்புகள் ஏற்படும். அதைத்தான் `ஹார்மோனல் இம்பேலன்ஸ்’ என்கிறோம்.
மூளையின் அடிப்பகுதியில் பட்டாணி அளவில் காணப்படும் நாளமில்லாச் சுரப்பியின் பெயர் பிட்யூட்டரி. இந்தச் சுரப்பி `மாஸ்டர் கிளாண்ட்’ (Master Gland) என்று அழைக்கப்படுகிறது. காரணம், இந்த பிட்யூட்டரியிலிருந்துதான் பல்வேறு ஹார்மோன்கள் உற்பத்தியாகி, உடலின் பல பாகங்களையும் சென்றடைகின்றன. அதுமட்டுமல்ல, இந்த பிட்யூட்டரியின் உதவியுடன் மற்ற நாளமில்லாச் சுரப்பிகள் தூண்டப்பட்டு அவற்றிலிருந்தும் ஹார்மோன்கள் உற்பத்தியாகின்றன.
`புரோலாக்டின்’ (Prolactin) என்ற ஹார்மோன் பிட்யூட்டரியிலிருந்தே உற்பத்தியாகிறது. இது அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும்போது மார்புக் காம்புகளில் பால் சுரக்க ஆரம்பிக்கும்; மாதவிடாய் நின்றுவிடும்; கருவுறுதலில் பிரச்னைகள் ஏற்படும். ஆண்களுக்கு இந்த புரோலாக்டின் அளவுக்கு அதிகமாகச் சுரந்தால் அவர்களின் விரைப்பைகள் பாதிக்கப்பட்டு, மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
மேலும் இந்த பிட்யூட்டரி, தைராய்டு சுரப்பியைத் தூண்டி தைராய்டு ஹார்மோன்களை உற்பத்திசெய்ய உதவும். சில நேரங்களில் பிட்யூட்டரி தன் வேலையைச் சரியாகச் செய்யாதபட்சத்தில் தைராய்டு பிரச்னைகள் ஏற்படலாம். இதை `செகண்டரி ஹைப்போ தைராய்டு’ என்போம். ஆனால், மிக அரிதாகவே இந்த நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
கழுத்தின் முன்பகுதியில் வண்ணத்துப்பூச்சி வடிவிலுள்ள ஒரு சுரப்பிதான் தைராய்டு. அது குறித்துப் பார்ப்பதற்கு முன்னர், தைராய்டு சுரப்பியின் அருகே இருக்கும் `பாரா தைராய்டு’ பற்றிப் பார்ப்போம். பாரா தைராய்டில் மொத்தம் நான்கு சுரப்பிகள் இருக்கின்றன. நம் உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் திறன் இந்த பாரா தைராய்டு ஹார்மோன்களுக்கு இருக்கிறது.
பாரா தைராய்டு ஹார்மோனில் சுரப்பு குறைந்தால், உடலில் கால்சியத்தின் அளவு குறைவதுடன் கைகால்களில் வலி மற்றும் எலும்புகளில் பலவீனம் ஏற்படும். இவ்வளவு ஏன்... பாரா தைராய்டு சுரப்பு குறைந்தால், வலிப்பு ஏற்படும் அபாயம்கூட இருக்கிறது. பாரா தைராய்டு ஹார்மோன் சுரப்பு அதிகமானால் உடலில் கடுமையான வலி ஏற்படும். மனஅழுத்தம், மலச்சிக்கல், சிறுநீரகத்தில் கல், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
அடுத்ததாக தைராய்டு. நம் உடலில் தைராய்டின் அளவு குறைந்தால் அது `ஹைப்போ தைராய்டு’ எனப்படும். தைராய்டின் அளவு அதிகமானால் அது `ஹைப்பர் தைராய்டு’ என்று அழைக்கப்படும்.
ஹைப்போ தைராய்டு ஒருவருக்கு இருந்தால், முடி உதிரும், மலச்சிக்கல் உண்டாகும். சரும வறட்சி, உடல் அரிப்பு ஏற்படும். மாதவிடாய்க் கோளாறு ஏற்படும்.
ஹைப்பர் தைராய்டு இருந்தால், உடல் எடை குறையும். தனது உடல் எடையிலிருந்து திடீரென 20 முதல் 25 கிலோவரை எடை இழக்கும் நிலை ஏற்படும். அடிக்கடி மலம் கழிப்பது, படபடப்பு, பதற்றம், தூக்கமின்மை போன்றவை ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகள். ஆனாலும் தைராய்டு பிரச்னைகளை அறிந்துகொள்ள ரத்தப் பரிசோதனை செய்யவேண்டியது அவசியம்.
நம் உடல் சீராக இயங்க உதவிசெய்பவை ஸ்டீராய்டு ஹார்மோன்கள். இவை வேதிக் கூட்டமைப்புகளால் உருவாக்கப்பட்டவை. `கார்டிசால்’ என்ற ஸ்டீராய்டு ஹார்மோன் அவற்றுள் மிக முக்கியமானது. கார்டிசால் ஹார்மோனின் அளவு குறையும்போது ரத்தஅழுத்தம் குறைதல், வாந்தி, உடல் எடை குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதுவே கார்டிசால் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும்போது உடல் எடை அதிகரிப்பது, உயர் ரத்தஅழுத்தம், முகம் உப்புதல், சருமம் அதன் இறுக்கத் தன்மையை இழத்தல் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
அடுத்ததாக கணையத்தில் சுரக்கும் `இன்சுலின்’ ஹார்மோன். நம் உடலில் குளூகோஸின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இன்சுலின் பெரிதும் உதவிசெய்யும். ஆனால், இன்சுலின் குறைவாகச் சுரந்தால் சர்க்கரைநோய் உண்டாகும். இதற்கு `டைப்-1 டயாபடிஸ்’ என்று பெயர். சிலருக்கு உடலில் `இன்சுலின்’ ஹார்மோன் சுரக்கும். ஆனால், அது சரியாக வேலை செய்யாது. இதனாலும் சர்க்கரைநோய் உண்டாகும். இதற்கு `டைப்-2 டயாபடிஸ்’ என்று பெயர். இன்சுலின் சுரப்பு குறைந்தால் அளவுக்கு அதிகமான தாகம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, உடல் எடை குறைவது போன்ற பிரச்னைகள் உண்டாகும். அதேபோல் இன்சுலின் சுரப்பு அளவு அதிகமானால் அடிக்கடி கடுமையான தாழ்நிலை சர்க்கரை (Low Sugar) பிரச்னை உண்டாகும். இதற்கு `ஹைப்போகிளைசீமியா’ (Hypoglycemia) என்று பெயர்.
செக்ஸ் ஹார்மோன்கள் ஒரு பார்வை!
பிட்யூட்டரியிலிருந்து `லூட்டினைஸிங் ஹார்மோன்’ (LH - Luteinizing Hormone) மற்றும் `ஃபாலிக்கிள் ஸ்டிமுலேடிங் ஹார்மோன்’ (FSH - Follicle - Stimulating Hormone) போன்றவை உற்பத்தியாகின்றன. இவை இரண்டும் செக்ஸ் ஹார்மோன்கள். இவை பெண்களின் கர்ப்பப்பை மற்றும் சினைப்பைகளில் செயல்புரிந்து ஈஸ்ட்ரோஜெனைச் சுரக்கவைக்கும். ஆண்களுக்கு இந்த இரண்டு ஹார்மோன்களும் விதைப்பைகளில் செயல்புரிந்து டெஸ்டோஸ்டீரானைச் சுரக்கவைக்கும். இந்த ஈஸ்ட்ரோஜென், டெஸ்டோஸ்டீரான் போன்றவைதான் ஆண், பெண் இனப்பெருக்கத்துக்குக் காரணமாக இருக்கின்றன.
ஈஸ்ட்ரோஜென் குறையும்போது முறையற்ற மாதவிலக்கு அல்லது பெண்கள் வயதுக்கு வராமல் இருப்பது போன்ற பிரச்னைகள் உண்டாகும். அதே நேரத்தில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது சினைப்பையில் கட்டி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் அளவு அதிகரிக்கும்போது முகப்பரு, சருமத்தில் எண்ணெய் வழிதல், புராஸ்டேட் சுரப்பியில் வீக்கம், விந்தணு உற்பத்தி குறைவது, விரை வீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.’’
நேரில் செல்வதே உத்தமம்!
பொதுவாக, ஒரு நபர் ஹார்மோன் சார்ந்த பிரச்னையில் இருக்கிறார் என்றால், அவருக்கு எல்லா ஹார்மோன் பரிசோதனைகளும் செய்யப்படுவதில்லை. அப்படிச் செய்தால் பணம் அதிகம் செலவாகும். அதற்கு பதிலாக `எண்டோகிரைனாலஜிஸ்ட்’ எனப்படும் ஹார்மோன் சிறப்பு மருத்துவர் முதலில் சம்பந்தப்பட்ட நபரைப் பரிசோதனை செய்வார். அப்போது பாதிக்கப்பட்ட நபரிடம் உடல் ஆரோக்கியம் பற்றிக் கேட்டறிவது, உடல் பரிசோதனை செய்வதன் மூலம் நோயாளிக்கு என்ன பிரச்னை, அவர் எத்தகைய ஹார்மோன் இம்பேலன்ஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அனுமானித்துவிடுவார். அதன் பிறகு அதை உறுதிப்படுத்தத் தேவையான ஹார்மோன் பரிசோதனை செய்யப்படும். தேவைப்பட்டால், ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும். இதுதான் சரியான அணுகுமுறை.
இன்றைய நாகரிக உலகில் சிலர் வேறு மாதிரியான வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். தங்களுக்கு ஹார்மோன் இம்பேலன்ஸ் பிரச்னை இருப்பதாக நினைத்தால், மருத்துவரிடம் தொலைபேசியில் பேசி, அவர் சொல்லும் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து, முடிவுகளை மருத்துவருக்கு வாட்ஸ்அப் செய்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறான அணுகுமுறை. ஏனென்றால், பாதிக்கப்பட்ட நபரை நேரில் பார்த்து அவரிடம் பேசும்போது, அவர்கள் வெளிப்படுத்தும் தகவல்கள் மற்றும் உணர்வுகளை மருத்துவர் உற்று நோக்க வேண்டியது அவசியம். அதை வைத்துத்தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவரால் உறுதிசெய்ய முடியும். எனவே, இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை நேரில் அணுகவேண்டியது அவசியம்.
முறையான பரிசோதனைகள் மூலம் ஹார்மோன் பிரச்னை இருப்பது மருத்துவரால் உறுதிசெய்யப்பட்டால், ஹார்மோன் குறைவுக்கு மருந்துகள் மூலமாகவும், ஹார்மோன் அதிகமானால் அறுவை சிகிச்சை மற்றும் குறிப்பிட்ட ஹார்மோனுக்கு எதிராகச் செயல்படும் வேறு ஒரு ஹார்மோனை உடலில் செலுத்துவது போன்றவற்றின் மூலம் தீர்வுகள் காணப்படும்.
For more details contact us ☎️