04/01/2024
டெங்கு காய்ச்சல்
தற்போது நாட்டின் எல்லா பாகங்களிலும் பயத்தை ஏற்படுத்தி பரவிக் கொண்டிருக்கும் உயிராபத்து நோயாக டெங்கு நோய் உள்ளது. இந்த டெங்கு நோய் பற்றிய சில முக்கியமான விடயங்களை தெரிந்து கொள்வதினால் அதன் ஆபத்திலிருந்து தப்பிக்க கூடியதாக இருக்கும்.
டெங்கு காய்ச்சலானது டெங்கு எனும் வைரஸினால் ஏற்படுகின்றது.
டெங்கு நோய் தொற்று இருக்கும் நோயாளி ஒருவரின் இரத்தத்தில் உள்ள டெங்கு வைரஸை,ஏடிஸ் எனும் நுளம்புகளானது( Aedes mosquito) உறிஞ்சு எடுத்து பின் இன்னொருவருக்கு கடிக்கும்போது அதனால் உட்செலுத்தப்படும் அதன் உமிழ்நீர் வழியாகவே இந்த டெங்கு வைரஸ் தொற்று ஏற்படுகின்றது. இந்த டெங்கு வைரஸானது எமது இரத்தத்தினை உறைவதற்கு உதவிடும் குருதிசிறுதட்டுகளை ( platelets) தாக்கி உடைப்பதனால் அவற்றின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைவதானாலேயே உயிராபத்தை ஏற்படுத்துகின்றன. குருதிசிறுதட்டுகள் குறைவதனால் முக்கியமாக இரண்டு வகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன . ஒன்று இரத்தம் உறையும் தன்மை குறைவதால் ஏற்படும் இரத்தக் கசிவுகள் மற்றும் அதன் பாரதூரமான பாதிப்புக்கள்,மற்றையது இரத்தத்தின் பிரசாரண அமுக்கத்தை தீர்மானிக்கும் குருதிசிறுதட்டுகளின் எண்ணிக்கையின் அளவி்ல் ஏற்படும் குறைபாடு( reduce blood somatic pressure) குருதி மயிர்த்துளைக்குழாய்களில் உள்ள நீரானது கலத்திடை வெளிகளுக்குள் செல்வதால் ஏற்படும் பாரதூரமான பாதிப்புகளே உயிர் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
டெங்கு ஒரு வைரஸ் என்பதால் ,வைரஸ் காய்ச்சலின் போது ஏற்படும் அறிகுறிகளான கடுமையான காய்ச்சல் தலையிடி தொண்டைநோவு கண்நோவு இருமல் சளி உடல்நோவு...என ஆரம்பத்தில் பல அறிகுறிகள் ஏற்படலாம். ஆகவே ஆரம்ப கட்டத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சலா அல்லது வேறு வைரஸ் காய்ச்சலா என வேறுபடுத்தி அறியமுடியாது இருக்கும்.
டெங்கு காய்ச்சலின் தாக்க தன்மையை அதன் இரண்டு நிலைகளாக பார்க்கலாம்.
1) டெங்கு காய்ச்சல் நிலை..( Dengue Fever )
காய்ச்சல் தொடங்கி ஓரிரு தினங்கள் வரையான காலப்பகுதி. இதன்போது மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த நிலையில் இரத்தத்தில் குருதிசிறுதட்டுகளின் எண்ணிக்கையை பரிசோதித்து உறுதிபடுத்திட முடியாது.
2) டெங்கு இரத்தகசிவு காய்ச்சல் நிலை (Dengue haemorrhagic Fever) அல்லது டெங்கு அதிர்ச்சி நிலை (Dengue shock syndrome)
அதாவது காய்ச்சல் தொடங்கி அனேகமாக 48 மணிநேரங்களின் பின்னரான நிலை. இதுவே பாரதூரமான நிலை. இந்த நிலையின் போது சில நேரங்களில் பெரிதாக காய்ச்சல் இல்லாமல் இருக்கலாம் அல்லது மெல்லிய காய்ச்சல்( low grade fever )இருக்கலாம் ஆனால் இந்த நிலையில் உடல் களைப்பு இயலாத நிலை வயிற்றுநோ அதீத வியர்வை மயக்கம் என்பன நாளாக நாளாக ஏற்படலாம்.ஆதனால் இந்த நிலையின் ஆரம்ப கட்டத்தில் இரத்த மாதிரியில் குருதிசிறுதட்டுகளின் எண்ணிக்கையை பரிசோதிப்பதன் மூலமாக சில நேரங்களில் டெங்கு காய்ச்சலை உறுதிபடுத்திட அல்லது எண்ணிக்கையின் அடிப்படையில் சந்தேகப்பட மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் குருதிசிறுதட்டுகளின் எண்ணிக்கையை பரிசோதித்து தீர்க்கமானிக்க கூடியதாக இருக்கும்.
எப்போது காய்ச்சல் வந்தாலும் எமக்கு சந்தேகமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் காய்ச்சல் ஏற்பட்டு 48 மணித்தியாளங்களின் பின்னராக இரத்தினை பரிசோதித்து பார்த்து அதனை ஒரு வைத்தியரிடம் காண்பிப்பதன் மூலமாக ஆரம்ப கட்ட நிலையி்ல் டெங்குவை கண்டறிந்து வைத்திய சாலையில் அனுமதித்தால்,டெங்குவால் ஏற்படும் உயிரிழப்பை இலகுவாக தடுக்கலாம். ஆனால் இங்கு பல டெங்கு உயிரிழப்பானது மிகவும் பிந்தைய நிலையில் கண்டறிவதாலும் அதாவது டெங்கு அதிர்ச்சி நிலையில் அனுமதிப்பதுவுமே காரணமாக அமைகின்றன.
சில வசதியான நிலைகளில் டெங்கு வைரஸ் தொற்றினை உறுதிபடுத்திட Dengue antigen பரிசோதனைகள் மேற்கொள்ள பட்டாலும் சாதாரண மக்களால் அவற்றினை இலகுவாக செய்ய முடியாத நிலை உள்ளது.
நுளம்பு பெருகும் இடங்களை அழித்து அகற்றுவதுடன் அப்படிப்பட்ட இடங்களை ஏற்படுத்தாமல் தவிர்ப்பதும் ஒவ்வொருவருக்கும் உள்ள முக்கிய பொறுப்பாக உள்ளது.
டெங்கு காய்ச்சல் பற்றிய பல விடயங்கள் இருந்த போதிலும் முக்கியமான ஒருசில விடயங்களை மட்டுமே இங்கு பதிவிட முடிந்தது.
மற்றவர்களுக்கு வந்தால் வெறும் செய்தியாக இருக்கும் இவ்வாறான முக்கியமான விடயங்கள் எமக்கு வந்தால் கடினமாக இருக்கும் என்பதனை மனதில் வைத்து செயற்படுவது முக்கியமாகிறது.