16/12/2022
அற்ப நுளம்பு, ஆளையே சாகடிக்கும்.
Dr PM Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல மருத்துவர்.
👉டெங்கு புதிசாக வந்த நோயா?
👍பண்டைய சீன மருத்துவ குறிப்புகளில் கூட நுளம்புகள் மூலம் பரவும் காய்ச்சல்களின் வகைகள் குறித்தும் அவை ஏற்படுத்தும் தீவிர உடம்பு வலி குறித்தும் பதிவுகள் காணப்படுகின்றன. எனினும் 1778ல் ஸ்பெயினில் பரவிய தீவிர உடல் வலியுடன் கூடிய ஒரு வகை காய்ச்சலே “டெங்கு” என முதன் முதலாக அழைக்கப்பட்டது. ஆபிரிக்க ஸ்வாஹிலி மொழியில் கை கால்களை முறிக்கும் கெட்ட ஆவி எனும் பொருள் கொண்ட “கா டிங்கா பெப்போ” (Swahili phrase "Ka-dinga pepo" - cramp-like seizure caused by an evil spirit) என்ற வார்த்தையில் இருந்தே இந்த “டெங்கு” எனும் வார்த்தை பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. அதிக உடல் வலியை உண்டாக்குவதால் “எலும்பை நொறுக்கும் காய்ச்சல்” (Bone Breaking Fever) என்ற பெயரும் பழைய மருத்துவ நூல்களிலே பாவிக்கப்பட்டிருக்கிறது. அதுபோல, நீயில்லாமல் நான் இல்லை என்பது போல் நுளம்பு இல்லாமல் டெங்கு இல்லை.
👉டெங்கு நோய் அறிகுறிகள் எவை?
👍கெட்ட ஆவி என்ற பெயருக்கு ஏற்றாற் போலவே அதிக காய்ச்சல், அதிக உடல் நோவு, வயிற்று வலி, உடல் சோர்வு, பசியின்மை, எந்நேரமும் அலட்டிக் கொண்டிருத்தல் போன்றவை தான் டெங்கு நோயின் அறிகுறிகள். இரத்தக்கசிவு, குறைவான அளவு சிறுநீர் வெளியேறுதல், தலை சுற்று, மயக்கம் போன்றவை இந் நோயின் ஆபத்தான சுட்டிகள்.
👉ஏன் எனது பக்கத்து கட்டிலில் இருந்த பிள்ளைக்கு டெங்கு வந்து உடனே சுகமாகிவிட்டது. எனது பிள்ளை இப்போதும் HDU லே இருக்கிறது?
👍 A,B,C,D அல்லது 1,2,3,4 என நான்கு வகை டெங்கு வைரஸ்கள் இது வரைக்கும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. ஒரு வகை டெங்கு வைரஸ் தாக்கிய பின் அடுத்த வகை தாக்கினால், அந்த முறை அதிக பாதிப்பை ஏற்படுத்தும், உயிராபத்தை ஏற்படுத்தும் நோயாக உருவெடுப்பது தான் இதன் விசேடமாக இருக்கிறது. இதுவே வெவ்வேறு பிரதேசங்களில் காலத்துக்கு காலம் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது. ஆகவே முதலாவது தரம் சாதரணமாக டெங்கு வந்து சுகமானவர்கள் இரண்டாம் தரமும் டெங்கு வரும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது கட்டாயமாக இருக்கிறது. என்ன தான் பிசாசாக இருந்தாலும் அநேகம் பேருக்கு இது கொரோனாவை போல சாதாரண வைரஸ் காய்ச்சலாக வந்து தானாகவே சரியாகி விடும். சில நேரம் மட்டுமே உயிரை காவு கொள்ளும். அதிலும் குறிப்பாக தீவிர நோயாக உருவெடுப்பதும் உயிர்ப் பலி கேட்பதும் சிறுவர்களையும் கர்ப்பிணிகளையும் தான்.
👉டெங்கு வந்தால் கட்டாயம் ஏன் வோர்டிலே அட்மிட்டாக வேண்டும்?
👍டெங்கு நோய் காலங்களில் வைத்தியர்களின் மொபைல் எப்போதும் அலறிக்கொண்டே இருக்கும். வாட்டுகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். ஒரு கட்டிலை இருவர், சில வேளைகளில் மூவர் ஷயார் பண்ணிக்கொண்டிருப்பர். ஒரே கட்டிலில் கெசல்வத்தை சுமதியின் ஐந்தாவது பிள்ளையும், சின்னமென் கார்டன் Mrs Diana வின் ஒரே ஒரு பிள்ளையும் ஒன்றாய் இருக்கும் சம தர்மத்தை இங்கே காணக் கிடைக்கும்.
இந்தக் காலத்தில் இரவு முழுக்க நித்திரை முழிக்க வேண்டும். ஒவ்வொரு மணித்தியாலமும் பிள்ளைகளை பரிசோதிக்க வேண்டும். அவர்கள் எவ்வளவு சிறுநீர் கழிக்கிறார்கள், அவர்களது நாடித் துடிப்பு எப்படி, பிரஷர் எப்படி என்பதை நொடிக்கு ஒருமுறை அளக்க வேண்டும். ஆக மொத்தத்தில் இக்காலத்தில் தட்டான் தங்கத்தை நிறுப்பதில் காட்டுகிற கவனத்தை விட டெங்கு நோயாளிகளின் யூரினை அளப்பதில் இருக்கிற கவனம் மிக முக்கியமானது. யூரினுக்கு இருக்கின்ற மதிப்பும், ஒரு உயிருக்கு இருக்கின்ற மதிப்பும் நிறையப் பேருக்கு விளங்குவது இந்தக் காலத்தில் தான். இவைகளை வீட்டிலே இருந்து செய்ய முடியாது. ஆகவே அட்மிட் ஆவது ஒரே வழி. நல்லது.
👉டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாமா?
👍மற்ற வைரஸ் நோய்களைப் போலவே டெங்குவையும் PCR முறைப்படி கண்டறியலாம். Antigen Detection Test மூலம் காய்ச்சல் வந்த முதல் இரண்டு மூன்று நாட்களிலயே இது டெங்கு காய்ச்சல் தான் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த Rapid Test kits எல்லா இடங்களிலும் பாவனையில் உள்ளன. அது போல நோய் எதிர்ப்புப் புரதங்களான IgG, IgM Antibodies சோதனைகள் மூலம் இதை உறுதிப்படுத்தலாம். இருந்தாலும் இந்த அன்டிபொடி பரிசோதனைகளை செய்வதற்கு ஆறாம், ஏழாம் நாள் வரை காத்திருக்க வேண்டும்.
👉என்ன குளிசை, சிரப் மருந்து கொடுத்தால் டெங்கு சுகாமாகும். அதுவும் வன் சொட் என்றால் நல்லம்.?
(ரொம்ப முக்கியமான கேள்வி)
👍இதுவும் கொரோனாவைப் போல ( நம்மட நெலம டெங்குவ விளங்கபடுத்த கொரோனாவ உதாரணம் காட்ட வேண்டி இருக்கு) நோய்க்கான சிகிச்சை என்பது ஆதரவு மருத்துவம் தான் (Supportive management). இதுவரை டெங்குவை குணப்படுத்தும் மருந்தோ, தடுக்கும் வக்சீனோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை (சில வக்சீன்கள் ஆல்ரெடி முதல்கட்ட ஆய்வுகளை தாண்டிய பரீட்சார்த்த நிலையில் உள்ளன. தோ.. வந்தா பார்க்கலாம்).
அதிக காய்ச்சலை குறைப்பதும், ( நோட் த பாயின்ட், அதிக காய்ச்சலை யுவர் ஆனர்!!!) , உடலில் உள்ள நீர்ச்சத்தை அதிலும் குறிப்பாக இரத்தத்தில் உள்ள பாய்மத்தை (Plasma) குறைந்து விடாமல் பராமரிப்பதும், இரத்தக்கசிவுகளுக்கான மருத்துவமும் தான் டெங்குவிற்கு நாம் செய்ய வேண்டிய சிகிச்சை. இது தவிர வேறு எந்த சிகிச்சையும் இல்லை. இப்படி உரிய முறையில் சிறப்பான மருத்துவ பராமரிப்பு கிடைத்தால் இறப்பு நிச்சயமாக ( இன்ஷாஅல்லாஹ்) 1%க்கும் குறைவு தான். இது வரை (10வருட அனுபவம்) மத்திய, மேல், வட மேல் , கிழக்கு என நான் வேலை செய்த எல்லா யுனிட்களையும் சேர்த்துப் பார்த்தாலும், இதுவரை டெங்கினால் இறந்த குழந்தைகள் இரண்டே இரண்டு தான்.
👉அதெல்லாம் எங்களுக்கு தெரியா இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
👍டெங்கு சீசனில் எந்த காய்ச்சல் வந்தாலும் அது டெங்குக் காய்ச்சல் என்று அனுமானித்துக் கொள்வது தான் முதலாவது அடிப்படை . Until proven otherwise it's Dengue என்று எடுத்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது.
காய்ச்சல் வந்தவர்கள் யாராக இருந்தாலும், ஆணாக பெண்ணாக ஏன் அலியாக (அப்பாடா LQBTQ...WZ வரையும் சமத்துவம் கொணுத்தாச்சு) உரிய அளவில் உடம்பில் உள்ள நீர்ச்சத்தை மெய்ன்டைன் பண்ணுவது இரண்டாவது அடிப்படை. இதற்காக நான்கு மணித்தியாலத்திற்கு ஒரு தரம் குறைந்தது 10ml/kg நீராகாங்களை பிள்ளைகளுக்கு அருந்தக் கொடுப்பது கட்டாயமானது. உதாரணமாக 15kg பிள்ளை ஒன்றுக்கு 150ml நீராகாரம் (கஞ்சி/ஜீவனி/பழச்சாறு/இளநீர்/பால்) ஒவ்வொரு 4 மணித்தியாலமும் கட்டாயம் கொடுக்கப்படல் வேண்டும். அது போல ஒவ்வொரு நான்கு மணித்தியாலமும் குழந்தை சிறு நீர் கழிக்கிறதா என்பதும் அவதானிக்கப்பட வேண்டும். சாதாரணமாக 4ml/kg அளவு யூரின் (15kg பிள்ளை 60ml யூரின்) ஒவ்வொரு நான்கு மணித்தியாலங்களுக்கும் ஒரு தரம் போகிறதா என்பதும் அவதானிக்கப்பட வேண்டும்.
மேற் குறித்த இரண்டும் இல்லாத போது அல்லது இவை இரண்டையும் நடைமுறைப்படுத்த முடியாத போது வைத்தியசாலை ஒன்றில் அனுமதி பெற்றுக் கொள்வது சிறந்தது. அதன் பின் எவ்வளவு குடிக்க வேண்டும், எவ்வளவு சேலைன் ஏற்ற வேண்டும் என்பதை வைத்தியர்கள் தீர்மானிப்பார்கள். ஏனெனில் நிலமைகளை பொறுத்து, மேனேஜ்மென்ட் ப்ரொடோகல்களை பொறுத்து அது மாறுபடும்.
அது போல அதிக வாந்தி, அதிக வயிற்று வலி, தலை சுற்றல், குறைந்த அளவு சிறுநீர் வெளியேறல், மயக்கம் , இரத்தப் பரிசோதனையில் பிளேட்லட் 100- 150ஐவிட குறைவு ,போன்ற ஆபத்தான சுட்டிகள் இருந்தால் அட்மிட் ஆவது நல்லது. என்ன இருந்தாலும், இவ்வாறான அறிகுறிகள் ஏற்படும் வரை தாமதிக்காமல், முன்னேரே வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதும் மிக அவசியம். ஏனெனில் டெங்குவினால் நிகழ்ந்த மரணங்களில் பெரும்பாலானவற்றிக்கு மிக முக்கிய காரணம் தாமதமும். கவனையீனமுமே.
👉காய்ச்சலை கட்டாயம் குறைக்க வேண்டுமா?
👍 காய்ச்சல் ஏற்பட்டால் முக்கியமாக ஊன்றிக் கவனிக்க வேண்டியது இந்த காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது என்பதை தான். டெங்கினால் தான் இந்த காய்ச்சல் ஏற்பட்டது என்று தெரிந்தால் அதை குறைப்பதில் அக்கறை காட்டுவதை விட நீராகாங்களை கொடுப்பதற்கு அதிக அக்கறை காட்டினால் அந்த காய்ச்சல் தானாகவே குறைந்து விடும். சிறப்பாக இருக்கும் 101-102 °F/ 38-39°C விட காய்ச்சல் அதிகரித்தால் மாத்திரமே அதை குறைப்பதற்கு பரிசிட்டமோல் வகை மருந்துகளை பாவிக்க வேண்டும். ஏனெனில், டெங்கு விரைவாக குணமடைவதற்கு காய்ச்சலும் ஓரளவு தேவை என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. அது போல, காய்ச்சலை குறைக்கிறேன் பேர்வழி என்று வன்சொட் டாக்டர்?களால் வழங்கப்படும் வலி நிவாரணிகளும் (Brufen), அதிக டோஸ் உள்ள பரசிடமோல் வகை மருந்துகளும் சிலரது இறப்புக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. டெங்குவை தாங்கி பிடிக்க வேண்டிய ஈரலை, கிட்னியை அவை பழுதாக்கிவிடுகின்றன. காய்ச்சல் ஏன் வருகிறது, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று விளக்கம் பெற இந்த லிங்கை கிளிக் செய்து 1500ரூபா பரிசை வெற்றி கொள்ளுங்கள். https://m.facebook.com/story.php?story_fbid=409568129770369&id=394132221313960&mibextid=Nif5oz
👉கடைசியாக என்ன சொல்ல வருகிறீர்கள் டாக்டர்?
👍எதுவாக இருந்தாலும் வரு முன் காப்பதே சிறந்தது. ஆகவே சூழலை சுத்தமாக வைத்திருப்போம். டெங்கு பரவுவதை தடுப்போம். காய்ச்சல் வந்தால் காலம் தாழ்த்தாமல் உரிய வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்வோம்.