11/02/2024
குழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும் - ஓர் உளவியல் பார்வை
'குழந்தைகளை வளரவிடுங்கள் வளர்க்காதீர்கள்- எதிர்கால சந்ததியை சிறப்பக வடிவமைப்போம்'
இன்றைய சூழ்நிலையில் வீட்டிலிருந்து கடந்தகால, நிகழ்கால, எதிர்கால சிந்தனைகளோடு காணப்டும் இவ்வேளை, எமது எதிர்கால சந்ததிகளான பிள்ளைகளின் வளர்ப்பில் பெற்றோரும், சமூகத்தவரும் விட்ட தவறுகளை மீட்டிப்பார்த்து சரி செய்ய ஓர் வாய்ப்பினன பெற்றுள்ளோம். ஒவ்வொருவரும் குழந்தைகளும் ஒவ்வவொரு நோக்கத்திற்காகப் படைக்கப்பட்வர்கள் ஆளுமைப்ப பண்புகளாலும் வேறுபட்வர்கள்.குழந்தை வளர்ப்பில் நாம் பல இடங்களில் பிழைவிடுகின்றோம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள் வேண்டும்.
இன்றைய பெற்றோர்கள் என் பிள்ளை 'டொக்ராக' வருவான், 'இஞ்சினியரா' வருவான் என்று முன் கூட்டியே தீர்மானித்து விடுகின்றனர். ஆரம்பத்தில் குழந்தைகளின் பால் வேறுபாட்டை அறிந்து அதன் ஆடைகளின் நிறங்களை தீர்மானித்த காலம் கடந்து, கருவிலே உள்ள பிள்ளை மருத்துவ, விஞ்ஞான, கணித அறிவுடன் வர வேண்டும் என்றும் கர்ப்பிணிகள் குடும்பத்தையும் கவனிப்புக்களை விடுத்து கனவுலகில் இருக்கும் வரை வெளிவராமல் அறியாத குழந்தை புதிய உலகில் எதுவிதமான வேறுபாடுகளும் இன்றி ஓர் அழுத்தத்துடன் பிரவேசிப்பதுடன் அதன் ஆளுமை பெரும் பங்கு பெற்றோரால் தீர்மானிக்கப்படுகின்றது.
இந்தப் போக்குப் பிள்ளை மூன்று வயதை அடையும் போதே முன்பள்ளிக்கு அனுப்புதல், முன்பள்ளியில் பெற்றோரைப் பிரிந்து பிள்ளை அழுதபடி தனித்திருந்து சிந்திக்கின்றது. பெற்றோரின் அன்பு அரவணைப்பு தேவைப்படும் கால கட்டங்களில் அதற்கு அறிவு வழங்கப்படுவது குழந்தை உள்ளத்தை மிகவும் பாதிக்கின்றது. சில வேலைக்கு செல்லும் பெற்றோர் பிள்ளைகளை காப்பகங்களில் விடுதல், போதிய தாய்பாலூட்டல் இன்மை என்பனவும் குழந்தைதைகளின் ஆளுமையைப் பாதிக்கின்றது.
பெற்றோர்கள் தமது நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகளின் மேல் திணிக்கின்ற தன்மை மிகவும் ஆபத்தானது "நான் வைத்தியராக வர ஆசைப்பட்டேன் முடியவில்லை" எனது பிள்ளையாவது வர வேண்டும் என்ற எண்ணமும், "எனது அயல் வீட்டுக்காரனின் பிள்ளை போன்று எனது பிள்ளையும் கற்க வேண்டும்" என்ற சிந்தனை பெற்றோர்கள் தேவையற்றதும். அதிகமானதுமான எதிர்பார்ப்பினை பிள்ளைகள் மீது வைப்பதற்கு காரணமாகின்றது.
இதனால் பிள்ளைகள் தமது பெற்றோரின் விரும்பங்களை நிறைவேற்ற தவறுமிடத்து அல்லது முடியாமல் போகுமிடத்து அவர்கள், தாம் தமது பெற்றோரின் நம்பிக்கைக்கு பாத்திரமற்றவர்களாகவும், அதனை இழந்தனர்களாகவும், மனதுடைகின்றனர். தன்னுடைய பிள்ளையின் திறன் என்ன? அவனால் எதனை சிறப்பாக செய்ய முடியுமென கண்டறிந்து ஊக்கப்படுத்தும் பெற்றோர்கள் இத் தவறினை செய்வதில்லை. ஏனையவர்கள் அனைத்திலும் சிறப்பாக இருக்க வேண்டும் எனக் கூறி பிள்ளையின் திறமைக்கு அப்பாற்பட்ட வேலையைக் கொடுக்கின்றனர் அதனை செய்து முடிக்குப்படி அவர்களிடம் எதிர்பார்க்கின்றனர்.
இதற்காக பிள்ளையின் நண்பர்களுடன் மற்ற சகோதரர்களுடன் ஒப்பிடுகின்றனர். "அவனைப் பார் அவன் நன்றாகச் செய்கின்றான் பரிசு வாங்குகின்றான்" உன்னால் ஏன் முடியவில்லை? என உரத்த சத்தமாக சில கடின வார்த்தைகளையும் பாவித்து வருகின்றனர்.சில சமயம் அடிக்கவும் செய்கின்றனர். இத்தகைய செயற்பாடுகள் பிள்ளைகள் தனது நண்பர்களை ஏன் சகோதரர்களைக் கூட வெறுக்கவும் எதிரியாகவும் தூண்டுதலாகின்றது. இத்தகைய செயற்பாடுகள் பெற்றோரால் தொடரப்படும் போது பிள்ளைகள் மற்றவர்களுடன் சேர விருப்பமற்றவர்களாகவும், வெறுப்பினை காட்டும் மனப்பான்மைக்கும் மாற்றப்படுவார்கள. பெற்றோர் பிள்ளைக்கு அறிவுரை கூறும் போது அவர்களின் சூழ்நிலை அறிந்து அன்பாகக் கூற வேண்டும். சில பெற்றோர்கள் வீட்டில் ஆசிரியர்கள்; அதிபர்கள், பொலிஸ் போன்றும் மாறிவிடுகின்றனர்.ஆனால் பெற்றோர் வீட்டில் அந்த வகிபங்கை எடுத்துக் கொள்வது சிறுவர்கள் பாடசாலைச் சூழலை வெறுக்கக் காரணமாகின்றது.
பிள்ளையை விளையாட விடாமல் எல்லா நேரங்களிலும் வீட்டிலும் கற்பித்தல் முதலாம்; ஆண்டு கற்பிக்கும் போதே மேலதிக வகுப்புக்களுக்கு விடுவதும், அதிகரித்த வீட்டுப்பாடங்களை பிள்ளைக்கு வழங்குவதும் இன்றை காலக் கற்றல் முறை பாடத்திட்டங்கள் இன்னமும் இதற்கு காரணம் ஆகலாம். ஆனால் பெற்றோர் தமது பிள்ளையை உணர்ந்து அவனது இயல்பினை அறிந்து கற்பிக்க வேண்டும். வீட்டிலும் பலமணிநேரங்கள் கற்பிக்கும் போது எருமை, சனியன், நாயே, மூதேவி, மூஞ்சையைபார், ஏன் பிறந்தாய்?, உயிரை வாங்காதே என்றும் மற்றவர்களுடன் ஒப்பிடுதல் முட்டாள்; மூளை இல்லாதவன் என இன்னும் பல வார்த்தை பிரயோகங்களை கடினமாக மேற்கொள்ளுதல் என்பனவும் கட்டாயப்படுத்தி பாடங்களை சொல்லி கொடுப்பதும் பிள்ளையின் கற்றலை ஆர்வத்தை பாதிப்பதுடன் குற்ற மனப்பணான்மையுடையவானகவும்,தாழ்வு மனப்பான்மையுடையவானகவும் வளர்வதுடன் எதிர்காலத்தில் அவனது ஆளுமையையும் பாதிக்கின்றது.
பெற்றோர் தமது பிள்ளையின் நண்பனின் பெற்றோர்களுடன் கதைத்தல் அவர்களின் தனிப்பட்ட போட்டி, எனது பிள்ளை உனது பிள்ளை என்ற போட்டி பெற்றோரின் கௌரவம், கல்வி நிலை என்பன பிள்ளையின் மீது கற்றல் சுமையாக திசைதிருப்பப்படுகின்றது. சில பெற்றோர் பகை உணர்வுகளை வார்த்தையை பிள்ளையில் காண்பித்தல். உதாரணமாக அவனைப்போல வந்தியோ? அவனைவிட புள்ளி குறைவாக எடுத்தாயோ?; என்ன நடக்கும் பார்? என கண்டிப்பாக கூறுதல், பிள்ளைக்கு சகோதரங்களுடன், சக நண்பர்களுடன்,சமூகத்துடனும்பயம்; கோபம் பழிஉணர்வு மற்றும் தாக்க வேண்டும் என்ற வன்போக்கான எண்ணப்பாடுகள் சிறுவயதிலேயே மறைமுகமாக பெற்றோரால் விதைக்கப்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
காலையிலே பாடசாலைக்கு செல்ல பிள்ளை ஆயத்தமானதும் பெற்றோர் பாட புத்தகம் கவனம் ,தண்ணீர் போத்தல், சாப்பாட்டுப் பெட்டி கவனம் உடுப்பை ஊத்தையாக்காதே, அவனை போல் (நண்பனை) போன்று ஒழுங்காக செய், பென்சில் துலைத்தால் அடிப்பேன், நான் சிரமப்பட்டு வாங்கித்தருகிறேன் என பல வார்த்தைகளை செய்யாதே ,செய்யாதே என எதிர்மறையாக பட்டியல் இட்டபடி வாசலில் 'போய்ட்டு வருகிறேன் அம்மா' செல்லும் வரை 'கவனம் கவனம்'; என கூறி அனுப்பிவைத்து இரவிரவாக பாடம் சொல்லி கொடுத்து காலையில் புத்திமதிகளை கூறி அக்கறையாக அனுப்பிவைப்தாக நம்புகின்றனர்.
ஆனால் பிள்ளை இரவு மேலதிகமாக கற்கும் போதே கல்வியை சுமையாக சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றான். காலையில் அயர்ந்து தூங்கும் அவனை “எழும்பு பாடசாலைக்கு நேரமாகிறது” என்று கூறியதும். அவனுக்கு மேலும் வெறுப்பு ஏற்படுகின்றது. தொடர்ந்து பெற்றோர் கூறும் “செய்யாதே, கவனம் என திரும்பத் திரும்ப கூறும் வார்தைகள் அவர்களை எரிச்சலடைய செய்து? ஏன் செய்தால் தான் என்ன? எதற்காக அம்மா ஒவ்வொரு நாளும் இப்படி சொல்லுகின்றா? என மனநிலை சிந்திக்கவும் தூண்டுவாதால், குழப்பமான மனநிலையே அவர்களுக்கு காணப்படும்.மேலும் சில பிள்ளை அம்மா தண்டிப்பார் என்பதனால் தனது பொருட்களை நண்பர்களுடன் பகிராமல் நண்பர்கள் எடுத்து விடுவார்கள் என்பதனால் அவர்களுடன் பழகாமலும்; தனித்தும் சமூகமயப்படாத ஓர் ஆளுமையை தமதாக்கிக் கொள்ள தலைப்படுகின்றனர்.
பிள்ளைகளிடம் தொடர்ந்து ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களை செய்! எனக் கூறுவதோ செய்யாதே! எனக் கூறுவதோ பிள்ளையை நெருங்கீட்டுக்கு உள்ளாக்குவதுடன் தவறான, தர்க்கரீயற்ற சிந்தனையை தூண்டிவிடும்.பென்சில் தொலைந்துவிட்டது 'அம்மா அடிப்பா'; என பயந்து நண்பனின் பென்சிலை திருடி தனதாக்கி கொள்ளும் நடத்தைகள் உருவாகும். பிள்ளைகள் பெற்றோர்களுக்கு 'ஆசிரியர் தன்னை பாராட்டினால் பிடிக்கும்' என அறிந்த பிள்ளை, ஆசிரியர் தன்னை பாராட்டியதாக பெற்றோரிடம் பொய் கூறுதல், பாடப்புத்தகங்களில் மற்றவரை பார்த்து எழுதல்,; பெறாமைப்படுதல், தனது பொருள்களில் மட்டும் அதிக கவனம் செலுத்துதல்; மற்றவர்களை மதிக்காமல் நடத்தல்; தனக்கு மட்டும் வேண்டும் மற்றவர்களுக்கு கிடைக்க கூடாது போன்ற விரும்பத்தகாத நடத்தைகளை வெளிப்படுத்துவார். இத்தன்மை தொடரும் போது பிள்ளை அதனது எதிர்கால நல்ல ஆளுமையில் பாதகமாக விளைவுகளை உள்வாங்குகின்றான் என்பதை பெற்றோர் விளங்கிக் கொள்ள வேண்டும்.
சில பெற்றோர் பிள்ளையின் அனைத்து வேலைகளையும் தாமே செய்தல் வளர்ந்தபின்னும் உணவூட்டல், குளிப்பாட்டுதல், வீட்டுப்பாடங்களை செய்து கொடுத்தல், தனிமையில் விடுதலைத் தவிர்த்தல்; நண்பர்களுடன் பழக தடை விதித்தல்; சில பொருட்களை தூக்கவே விளையாடவோ தடைசெய்தல், நான் பிள்ளையை பாதுகாக்கின்றேன் என்ற உணர்வில் அவர்களது இயல்பான நடத்தைகளை கட்டுப்படுத்தி பிள்ளையின் சிந்தனை ஆற்றல், கற்பனா சக்தி ஆக்கத்திறன் என்பவற்றுடன் தனித்து இயங்கும் ஆளுமையை மழுங்கடித்து தங்கியிருக்கும் ஆளுமைக்கு வித்திட்டு வளர்கின்றனர்.
சில பெற்றோர் பிள்ளை குழந்தை அவனை தண்டிக்காதே எதை செய்தாலும் செய்யட்டும் அவன் குழந்தை என கூறி தவறுகளுக்கு தட்டிகொடுத்து, அதிக செல்லமும் ஆதிக்கமும் கொடுக்கின்றனர்.இவர்கள் பிள்ளைகள் துன்பப்படக் கூடாது,கவலைப்பட கூடாது தனது பிள்ளைக்கு அதிக நன்மை செய்வதாகவும் நினைத்து கொள்கின்றனர்.
இத்தன்மை பிள்ளைகள் எது சரி ? எது தவறு? அறியமுடியாதவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் எது சரி ? எது தவறு? உணர்ந்து தண்டனைக்கும், பாராட்டுக்களுக்கும் முகம்; கொடுக்கவும் எதிர்கால சமூகத்தை எதிர்கொள்ளும் பக்குவ நிலையை கல்வியாலும் இதர செயற்பாடுகளாலும் சிறப்புற்று தனித்தன்மை உணர்ந்தவனாக உலகிற்க்கு விடப்பட வேண்டும்.
தன் விருப்பத்திற்கு விடப்படும் பிள்ளை சமூக விரோத ஆளுமைகளை கற்றுக் கொள்ள அதிக வாய்ப்புக்கள் உண்டு. ஆகவே கண்டிப்பும் சுதந்திரமும் அதன் அளவிற்கே இருக்க வேண்டும். இவ்வாறு பிள்ளைகளை அதிக சுதந்திரமாக விடும் பெற்றோர் பிள்ளைகள் எதிர்த்து பேசும் போது கவலைப்படுபவர்களாகவும் ; "பிள்ளைக்கு நான் என்ன செய்யவில்லை அவன் இப்படி மரியாதையற்று பேசுகின்றானே" என்றும் கவலைப்படுபவர்களாகவும் காணப்படுவர்.
சிறுபராயம் என்பது தனிமனிதனின் ஆளுமையில் பொரும்பங்கு வகிக்கின்றது மூளையின் சிறப்பான விருத்திக்கு ஏதுவான காலமாக சிறு பராயம் காணப்படுவதனால், இப் பருவத்தில் பிள்ளைக்கு வெறுமனே கல்வியை மட்டுமே கற்றுக் கொடுப்பது என்பது பொருத்தமானதன்று. இப்பராயத்தில் பிள்ளைகள் சிந்தனையை தூண்டும் ஆற்றலை வளர்க்கும் விளையாட்டுக்கள் செயற்பாடுகள் என்பவற்றில் ஈடுபடுத்துவது முக்கியமானதாகும்.
முன்மாதிரியான பெற்றோர்களிடமிருந்து அன்பு, விட்டுக்கொடுத்தல்; கீழ்ப்படிவு மற்றும் பிறருக்கு உதவுதல், போன்ற பல நற்பண்புகளையும் போதித்து தன்னம்பிக்கையும்; ஆர்வமும் உள்ளவர்களாகவும் தன்னையும் பிறரையும் உணர்ந்து தனக்கும் பிறருக்கும் நன்மை பயப்பவனாக ஒழுக்கம் உள்வனாகவும் வளர்த்தெடுக்க வேண்டும்.
இத்தகைய பிள்ளைகள் எதிர்காலத்தில் தனது தனிமனித வாழ்வை மகிழ்வுள்ளதாகவும் சுதந்திரமானதாகவும் இலகுவாக மாற்றி அமைத்து கொள்கின்றனர்.மறுதலையாக அதிக ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்கு மத்தியில் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஒதுக்கப்பட்டவராகவும், மற்றவர்களால் விரும்பபடாதவராகவும், உள்ளத்தில் குறைவுள்ளவர்களாகவும்,விமர்சனங்களை தாங்கமுடியாதவர்களாயும்,மனஅமைதியற்று வாழ வேண்டிய நிலைக்கு ஆளாகின்றான்.
தனிமனிதனின் ஆளுமையில் சிறப்பும் செழிப்பும் காணப்பட வேண்டுமாயின் அவர்களது சிறுபராயம் ஆரோக்கியமாகவும், வினைத்திறனுள்ளதாகவும் அமைக்கப்பட வேண்டும்; "எல்லாம் விதி "என காலத்தின் மீதும் ,சிறுவர்கள் தானே என அவர்கள் போக்கிலேயே அல்லாமலும் எமது அதீத கட்டுப்பாட்டில் அல்லாமலும் அன்புடனும் அரவணைப்புடனும், பொறுத்தமான முறையில் தவறை திருத்தி உலகை உணர்த்தி வளர்க்கும் போது ஒரு பிள்ளை பிற்காலத்தில் உள நலமுள்ளவனாக மட்டும் அல்ல ஆளுமையில் சமூகநலம் உள்ளவனாகவும் வளர்வான் என்பதில் ஜயம் இல்லை.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும் தீயவனாவதும்.............................?