
03/01/2024
'பஞ்ச கர்மா' சிகிச்சை எதற்காக செய்யப்படுகிறது?
உடம்பில் உள்ள நச்சுகளையும்,கழிவுகளையும் வெளியேற்றி,உடலை தூய்மைப்படுத்த செய்யப்படும் சிகிச்சை முறை இது. சிகிச்சையின் முடிவில், உடல், மனம் இரண்டும் அமைதியாகும்.
பஞ்ச கர்மா என்பது என்ன?
ஐந்து வெவ்வேறு விதமான சிகிச்சைகளை,
ஒன்றிணைத்து செய்வது பஞ்ச கர்மா. ஒரு வியாதியை சரி செய்ய, இந்த ஐந்து பஞ்ச கர்மாவையும் வைத்து சரி செய்ய வேண்டும் என்பதில்லை. நோயின் தன்மையை பொறுத்து, பஞ்ச கர்மாவில், ஒரு முறையை வைத்து, சில வியாதிகளை சரி செய்யலாம். சிலவற்றிற்கு இரண்டு, சில வகை நோய்களுக்கு மூன்று, மிக அரிதாகவே ஐந்து முறைகளையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். அனைவருக்கும் ஐந்து விதமான சிகிச்சைகளும் தேவை இருக்காது.
எந்தெந்த நோய்களுக்கு இந்த சிகிச்சை முறை பலன் தரும்?
இன்ன விதமான உடல் பிரச்னைகள், நோய்கள் என்று இல்லை. தோல் வியாதிகள், மூட்டு வாதம் ,பார்க்கின்சன்ஸ் போன்ற நரம்பியல் பிரச்னைகள் உட்பட, அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம். நோய்க்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்வது, ஆயுர்வேத மருத்துவ முறை. நீண்ட நாட்களாக இருக்கும் நோயை, முற்றிலும் சரி செய்வதற்கு சற்று தாமதமாகலாம். நோய் ஆரம்ப நிலையில் இருந்தால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
ஆரோக்கியமான நபருக்கு பஞ்ச கர்மா செய்யலாமா?
ஒவ்வொரு பருவ நிலை மாற்றத்தின் போதும், நம் உடலில் உள்ள திசுக்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மழை, வெயில், குளிர் என, வெளிப்புற சூழலில் ஏற்படும் மாற்றம், உடலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆரோக்கியமான நபர், குறிப்பிட்ட கால இடைவெளியில், இந்த சிகிச்சையை செய்து கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்; உடலை வலிமையாக்கும்; உள் உறுப்புக்களில் உள்ள நச்சுகள் நீங்கும். இந்த சிகிச்சை செய்யும் போது, வைத்தியரின் மேற்பார்வையில் மட்டுமே செய்து கொள்ள வேண்டும்.
சிகிச்சை எத்தனை நாட்கள் தேவைப்படுமோ, அத்தனை நாட்களும் உடம்பை பார்த்துக் கொள்வது மட்டுமே வேலையாக இருக்க வேண்டும். முறையான மருத்துவ கண்காணிப்பு செய்யாவிட்டால், வேறு பிரச்னைகள் வர வாய்ப்புகள் உள்ளன.
இந்த சிகிச்சை பற்றிய தவறான நம்பிக்கைகள் எவை?
பஞ்ச கர்மா சிகிச்சை என்றாலே, 'மசாஜ்' என தவறாக நினைக்கின்றனர். சிகிச்சையில், குறிப்பிட்ட சிறிய பகுதி தான் மசாஜ். பல நேரங்களில், மசாஜ் தேவையே இருக்காது. மாதக் கணக்கில் வீட்டை சுத்தம் செய்யாமல் இருந்தால், அழுக்கடைந்து, குப்பை நிறைந்து, நாற்றம் அடித்தால், துர்நாற்றம் தெரியாமல் இருக்க, ரூம் ஸ்பிரே' அடிப்பது ஒரு வழி. கொஞ்சம் சிரத்தை எடுத்து வீட்டை சுத்தம் செய்வது, நிரந்தரமான ஆரோக்கியம் தரும் இன்னொரு வழி,
நாற்றம் அடிப்பது, குப்பை இருப்பதற்கான அறிகுறி. குப்பை என்பது நோய், உடம்பில் இருக்கும் எல்லா அழுக்குகளையும், ஒரே சமயத்தில் வெளியில் எடுக்கக் கூடிய திறன், இந்த சிகிச்சைக்கு மட்டுமே உண்டு. பஞ்ச கர்மா சிகிச்சையை புரிந்து கொள்ள, உடலை பற்றி தெரிந்து கெள்ள வேண்டும். பாரம்பரிய மருத்துவ முறையில், உடலை மூன்று பாகங்களாக பிரித்து உள்ளனர். தலை முதல் நெஞ்சு வரை, நெஞ்சிலிருந்து தொப்புள் வரை, தொப்புளில் இருந்து, பாதங்கள் வரை. நெஞ்சுக்கு மேலே இருப்பது கபம். அடுத்து பித்தம். கீழ் பகுதியில் இருப்பது வாதம். இவை மூன்றும், எவ்வளவு இருக்க வேண்டுமோ, அந்த அளவு இருந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். குறைந்தாலோ அல்லது அதிகமானாலோ நோய் வருகிறது.