25/04/2021
கசப்பான இனிப்பு நோய்!
ஆயுள் தண்டனை அல்ல!!
-Dr.S.வெங்கடாசலம்
**************************
சர்க்கரை நோய் என்பது நோயா அல்லது குறைபாடா எனும் விவாதம் மருத்துவ உலகினுள் நீண்ட காலம் நிலவி வருகிறது. குறைபாடு என்று எடுத்துக்கொண்டால் அதன் பாதிப்புகள் ஒவ்வொன்றும் ஒரு முக்கிய நோயாக உருவெடுப்பதையும், பல நோய்களைப் பிறப்பிக்கும் தாய் நோயாக (Mother Disease) சர்க்கரை நோய் அமைந்திருப்பதையும் மறுக்கமுடியாது.
சர்க்கரை நோய் (Diabetes) பழமையான நோயாகும். இந்திய மருத்துவ வரலாற்றில் 'மதுமேகம்' ( Madhu Mekha) என்றும் 'நீரிழிவு' என்றும், எகிப்தில் பாப்பிரஸ் சுவடிகளில் 'அதிமமூத்திர நோய்' (Poly Urea) என்றும் அழைக்கப்பட்டுள்ளது. சீனா, கிரீஸ் போன்ற பழங்கால நாகரிகங்களிலும் இந்நோயை நன்கு அறிந்திருந்தனர்.
தற்போது உலக அளவில் 425 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இரண்டு பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியாமல் வாழ்ந்து வருவதாகவும், நாளுக்கு நாள் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. 2018 உலகம் முழுவதும் டைப் 2 வகை சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 40.6 கோடி என்றும், இந்த எண்ணிக்கை 2030ல் 51.1 கோடியாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் 2030க்குள் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை சுமார் 10 கோடியாக உயரும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முன்பெல்லாம் பணக்காரர்களின் வியாதி என்றும், நகர்ப்புற வாசிகளின் நோய் என்றும் கருதப்பட்ட நீரிழிவு என்று கிராமப்புறங்களிலும் வேகமாக அதிகரித்து வருகிறது. உலக நீரிழிவு நோய் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பேராசிரியர் பியர் வெபர், "ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால் அவர் தனது வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளைச் சார்ந்தே உயிர் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறார்" என்கிறார்.
இதனால் மிகப் பெரும் பொருளாதார சுமை ஒவ்வொரு நீரிழிவு நோயாளியின் குடும்பத்திற்கும் ஏற்படுகிறது. இந்தியாவில் சாதாரண எளிய மக்களை இந்நோய் மீளமுடியாத பொருளாதார படுகுழியில் வீழ்த்தி வருகிறது. கோடிக்கணக்கான நீரிழிவு நோயாளிகளால் தேசத்தின் ஒட்டுமொத்த உழைப்புத் திறனும், உற்பத்தித் திறனும் பாதிக்கப்படும் என்பது தவிர்க்க முடியாதது.
இந்திய மருத்துவங்களும், ஹோமியோபதி, அக்குப்பஞ்சர் உள்ளிட்ட மாற்று மருத்துவங்களும் சர்க்கரை நோயையும், சர்க்கரை நோயின் விளைவுகளால் உருவாகும் இதர நோய்களையும் கட்டுப்படுத்தி நலமளிப்பதில் மிகச் சிறப்பான, எளிமையான தீர்வுகளை வழங்குகின்றன மாற்று மருத்துவங்களின் பார்வையில் நீரிழிவு நோயாளர்கள் தமது வாழ்வியல் மற்றும் உணவியல் நடைமுறைகளை மாற்றி அமைப்பது அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது. ஏனென்றால் இன்று காணப்படும் வாழ்வியல் காரணங்களால் தான் இந்நோய் பெருகிக் கொண்டே செல்கிறது.
நீரிழிவு நோய் என்பது HIV, Hepatitis B,C போன்ற தொற்று நோய் அல்ல என்பதால் அவற்றுக்கு தரும் முக்கியத்துவம் நீரிழிவு நோய்க்கு தரப்படவில்லை. ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளவும், Micro Vascular Diseases எனப்படும் நுண் ரத்த நாள நோய்களான கண், சிறுநீரகம் சார்ந்த நோய்கள், ஆறாத புண்கள், Macro Vascular Diseases எனப்படும் பக்கவாதம், மாரடைப்பு போன்றவற்றிலிருந்து குணமளித்து மீட்கவும் மாற்று மருத்துவங்களில் சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளன என்பது நிகழ்கால ஆராய்ச்சிகளும் சிகிச்சை அனுபவங்களும் நிரூபித்துள்ள உண்மையாகும்.
ஏலம், கிராம்பு, மருதம் பட்டை, வெந்தயம், சீந்தில், வேம்பு, ஆவாரை, நாவல், சிறியாநங்கை போன்ற இயற்கை பொருட்கள், மூலிகைகள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன என பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் அறிய முடிந்துள்ளது. பனாரஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றுள்ள மூலிகைகள் குறித்த ஆய்வுகளின் மூலம் அமுக்கரா, வில்வம், துளசி, சீந்தில், கரிசாலை, கடுகு, ரோகினி போன்றவை நீரிழிவு நோயை முறியடிப்பதற்கு பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளன. இவை அதிக அளவு சர்க்கரையைக் கட்டுப்படுத்துமேயொழிய தேவையான அளவை விடக் குறைக்காது. சிறுகுறிஞ்சான் பாகற்காய் போன்றவை நேரடியாக ரத்த சர்க்கரையை குறைக்கக்கூடிய ஆற்றல் உள்ளவை ஆகும்.
நீரிழிவு துயரை வெல்வதற்கு உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, மருந்து என்ற மும்முனைத் தாக்குதல் முயற்சிகள் மிக அவசியம். 60% நோயாளிகள் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் நீரிழிவின் தாக்குதலை முறியடிக்க முடியும். இதர நீரிழிவு நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அவசியம்.
இன்சுலின் சுரப்புக் குறைவினால் தான் சர்க்கரை நோய் ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. ஹைதராபாத்தில் உள்ள தேசிய உணவு கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விட்டமின் டி உடலில் போதுமான அளவு இருக்குமானால் இன்சுலின் அதிகரித்து சர்க்கரை நோய் குணமடைகிறது எனக் கூறுகின்றனர்.
"63 சர்க்கரை நோயாளர்களுக்கு அவர்கள் வழக்கமாக உண்ணும் மாத்திரைகளோடு வைட்டமின் டி மருந்து ஊசி மூலம் ஒரே ஒரு முறை மட்டும் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பின் நான்கு வாரங்கள் கழித்து அவர்களைப் பரிசோதித்துப் பார்த்த போது அனைவருக்குமே முன்பை விட நீரழிவு நோய் பன்மடங்கு குறைந்து காணப்பட்டது. இதே மாதிரியான மற்றொரு ஆய்வில், ஆரம்ப நிலையிலிருக்கும் நீரிழிவு நோயாளருக்கு வைட்டமின் டி மாத்திரை வழங்கப்பட்டு வந்தது. அவர்களுக்கும் 4 வாரங்கள் கழித்து நீரிழிவு முழுமையாக குணமடைந்து விட்டது. வைட்டமின் டி சத்து ரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவை அதிகரிப்பதால் அது இன்சுலின் சுரப்பை அதிகமாக்குகிறது. இதன் காரணமாக நீரழிவு தடுக்கப்படுகிறது. விட்டமின் டி இயற்கை நிலையில் மாலை நேர வெயில், பால், முட்டை, வெண்ணெய், மீன் மற்றும் மீன் எண்ணெய் மூலம் கிடைக்கின்றது. இவைகளை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்" எனக் கூறுகின்றனர்.
நீரிழிவு நோயாளிகளின் உடல் அமைப்பு, மன அமைப்பு மற்றும் பாதிப்புகளின் தன்மைகளுக்கு ஏற்ப ஆய்வு செய்து ஹோமியோபதியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நீரிழிவு சார்ந்த பல்வேறு குணம் குறிகளுக்கு பக்க விளைவுகள் இல்லாமல் பயன்படக்கூடிய சிறந்த ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. அவற்றில் ஒரு சில... "சைஸிஜியம், செபலாண்டிரா, ஜிம்னமா, அர்ஜெண்டம் நைட்ரிகம், அசிட்டிக் ஆசிட், லாக்டிக் ஆசிட், யுரேனியம் நைட்ரிகம், நேட்ரம் சல்ப், ரஸ் ஆரோமேட். ஹோமியோபதி மருந்துகள் இயற்கையான வழிமுறையில் நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தி சர்க்கரைநோயை வெல்வதற்கு உறுதுணை புரிகின்றன.
*****************************